Published:Updated:

''செல்வமும் நீங்களும் செகண்ட் பார்ட்லயாவது சேருவீங்களான்னு கேட்குறாங்க!'' - 'திருமதி செல்வம்' அபிதா

கு.ஆனந்தராஜ்

"கிளைமாக்ஸ்ல நான் இறந்துபோய் கீழ கிடக்கிற காட்சி. இரவுத் தொடங்கி காலையில வரைக்கும் அந்தக் காட்சியை எடுத்தாங்க. கழுத்துல பெரிய மாலைகள் இருந்துச்சு. ரொம்ப சிரமமா இருந்துச்சு. ஒருகட்டத்துல நல்லா அசந்துபோய் தூங்கிட்டேன்."

''செல்வமும் நீங்களும் செகண்ட் பார்ட்லயாவது சேருவீங்களான்னு கேட்குறாங்க!'' - 'திருமதி செல்வம்' அபிதா
''செல்வமும் நீங்களும் செகண்ட் பார்ட்லயாவது சேருவீங்களான்னு கேட்குறாங்க!'' - 'திருமதி செல்வம்' அபிதா

" 'திருமதி செல்வம்' மாதிரியான ஒரு சீரியல் இனி எனக்குக் கிடைக்கிறது கஷ்டம். அந்த சீரியலின் கதையும் இயக்கமும், வெற்றிக்குக் காரணமா அமைந்திருந்தது. அந்த சீரியல் டீமை ரொம்ப மிஸ் பண்றேன்" என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் நடிகை அபிதா. சன் டிவி 'திருமதி செல்வம்' சீரியலின் நாயகியாக நடித்தவர்.

" 'திருமதி செல்வம்' சீரியலின் ஹிட் தாக்கத்திலிருந்து வெளியே வந்துட்டீங்களா?"

"அப்போ எனக்கு வரன் பார்த்துட்டு இருந்தாங்க. நடிக்கிற ஆர்வம் இல்லாம இருந்தேன். 'திருமதி செல்வம்' இயக்குநர் குமரன் சார், எங்கிட்ட கதைசொல்ல வீட்டுக்கு வந்தார். என்னை செலக்ட் பண்ணக்கூடாதுனு, அவர் வரும்போது தலை மற்றும் முகத்துல எண்ணெய் வடியிற தோற்றத்துல இருந்தேன். கதைப் பிடிச்சுப்போச்சு. அவர்கிட்ட, 'சீரியல்ல காஸ்டியூமெல்லாம் எப்படி சார் இருக்கும்?'னு கேட்டேன். 'இப்போ நீங்க இருக்கிற மாதிரியான எதார்த்தமான தோற்றம்தான். ஓவர் மேக்கப் எல்லாம் இருக்காது'னு சொன்னார். ஒப்புகிட்டு நடிக்க ஆரம்பிச்சேன். முதல்ல மதியத்தில்தான் அந்த சீரியல் ஒளிபரப்பாச்சு. நல்ல வரவேற்பு கிடைக்கவே, பிறகு இரவு ஸ்லாட்டுல ஒளிபரப்பாக ஆரம்பிச்சுது. பெரிய ஹிட்டாகி, பல மொழிகள்லயும் ரீ-மேக் செய்யப்பட்டுச்சு. இப்போகூட எங்க போனாலும் 'அர்ச்சனா'னு என் கேரக்டர் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாங்க. அந்தக் கேரக்டரைப் பத்தியே கேட்கிறாங்க. டெலிஃபிலீம்ல நடிக்க சமீபத்துல திருச்சிக்குப் போயிருந்தேன். 'க்ளைமாக்ஸ்ல செல்வம்கூட சேருவீங்கனு நினைச்சோம். ஆனா, அது நடக்கலை. செகண்ட் பார்ட்லயாவது நீங்க இருவரும் ஜோடி சேருவீங்களா?'னு சிலர் கேட்டாங்க. சரியா என்னால பதில்கூட சொல்ல முடியலை."

"அந்த சீரியல் மூலம் ஏதாச்சும் சென்டிமென்ட் இருக்கிறதா?"

"அந்தச் சீரியல்ல நடிச்சுகிட்டு இருந்தப்போதான், எனக்குக் கல்யாணம் ஆச்சு. நிஜத்துல ஏழு மாசக் கர்ப்பமா இருந்தேன். அப்போ கதையில், என் மாமியார்கிட்ட கோபப்பட்டு பேசக்கூடிய காட்சிகள் நிறைய வரும். 'குழந்தை வெளிய வந்ததும் உன்னை மாதிரியே வாயாடியா இருக்கும் பாரு'னு உடன் நடிச்சவங்க சொல்லுவாங்க. அது உண்மைனு இப்போ புரியுது (சிரிக்கிறார்)." 

" 'சேது' படத்துல நடிச்ச நினைவுகள் பற்றி..."

"கேரக்டர் ரோல்கள்ல பல படங்கள்ல நடிச்சிருந்த நிலையில, ஹீரோயினா எனக்கு முதல்படம், 'சேது'. இயக்குநர் பாலா சார் ஓர் ஆர்டிஸ்டோட திறமையை முழுமையா வெளிக்கொண்டுவந்திடுவார். சின்னச் சின்ன விஷயங்களைக்கூடச் சரியா இருக்கும்படி பார்த்து சரி பண்ணச் சொல்லுவார். அவர் சொல்லிக்கொடுத்ததைப் பல முறை நடிச்சுப் பார்த்துட்டு, நடிக்கச் சொல்வார். நம்ம சொல்ற சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸையும் ஏத்துப்பார். கிளைமாக்ஸ்ல நான் இறந்துபோய் கீழ கிடக்கிற காட்சி. இரவுத் தொடங்கி காலையில வரைக்கும் அந்தக் காட்சியை எடுத்தாங்க. கழுத்துல பெரிய மாலைகள் இருந்துச்சு. ரொம்ப சிரமமா இருந்துச்சு. ஒருகட்டத்துல நல்லா அசந்துபோய் தூங்கிட்டேன். 'ஷூட்டிங் முடிஞ்சுது; பேக் அப்'னு சொன்னதும்தான் எழுந்திச்சேன். உடம்பெல்லாம் பயங்கர வலி. 'சாவித்ரி மாதிரி ஹோம்லியான தோற்றத்துல நல்லா நடிச்சே'னு பாலா சார் பாராட்டினார்." 

"விக்ரமை பிறகு மீட் பண்ணியதுண்டா?"

" ஒருமுறை ஓர் அவார்டு ஃபங்ஷன்ல அவரை மீட் பண்ணினேன்.அதுக்குப் பிறகு இன்னும் மீட் பண்ணலை. பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகள்ல கலந்துக்க மாட்டேன். சூழ்நிலை அமைந்தால், அவரை மீட் பண்ணி 'சேது' படத்துல நடிச்ச நினைவுகளைப் பத்தி ஷேர் பண்ணுவேன்."

"சினிமாவுல பெரிய பிரேக் கிடைக்கலைனு வருத்தம் இருக்கா?"

"ஆரம்பத்துல இருந்துச்சு. அப்புறம் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சதும் இதுவே கம்ஃபோர்டபிளா ஆகிடுச்சு. அவுட்டோர் இருக்காது. காலையில போனா, ஈவுனிங் வீட்டுக்கு வந்திடலாம். ரெகுலரா பல வருஷம் வொர்க் இருக்கும். மக்கள்கிட்ட நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். அதனால எனக்கு சீரியலே ரொம்பவே பிடிச்சுப்போச்சு. சினிமா வாய்ப்புகள் வந்தா அதிலும் நிச்சயம் நடிப்பேன். கேரளாவில் வசிக்கிறேன். கணவரின் பிசினஸூக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன். அல்சா, அன்சிலானு ரெண்டு பொண்ணுங்க. இப்போ ஒரு தமிழ்ப் படத்துல கமிட் ஆகியிருக்கேன்."