Published:Updated:

``அம்பேத்கரை ஸ்வீட்டாக்கி குழந்தைகள்கிட்ட கொண்டுபோகணும்!" - `காலா' பாடலாசிரியர் அறிவு

தார்மிக் லீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``அம்பேத்கரை ஸ்வீட்டாக்கி குழந்தைகள்கிட்ட கொண்டுபோகணும்!" - `காலா' பாடலாசிரியர் அறிவு
``அம்பேத்கரை ஸ்வீட்டாக்கி குழந்தைகள்கிட்ட கொண்டுபோகணும்!" - `காலா' பாடலாசிரியர் அறிவு

`காலா’ படத்தில், `உரிமையை மீட்போம்' பாடலை எழுதியிருக்கும் அறிவரசு பேட்டி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``என் முழுப் பெயர் அறிவரசு. இன்ஜினீயரிங், எம்.பி.ஏ படிச்சேன். சொந்த ஊர் அரக்கோணம். `கேஸ்ட்லெஸ் கலக்டிவ்' பேண்ட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கேன். சின்ன வயசுலயிருந்தே நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிருக்கிறதுல ஆர்வமிருந்தது. கவிதைகள் எழுதுவேன். காலேஜ் சேர்ந்த பிறகு, பாடல்கள் எழுதிப் பாட ஆரம்பிச்சேன். நான் ஊர்ல பார்த்த விஷயங்களை என் பாடல்கள்ல பயன்படுத்துவேன். திடீர்னு ஒருநாள் என்னை இரஞ்சித் அண்ணா `காலா' படத்துல வொர்க் பண்ணக் கூப்பிட்டார்'' - ஆர்வமாகப் பேசத் தொடங்குகிறார், `உரிமையை மீட்போம்' பாடலை எழுதியிருக்கும் அறிவு.  

"இரஞ்சித் உங்களை அப்ரோச் பண்ணது எப்படி?''

"நண்பர் ஒருத்தர் மூலமா இரஞ்சித் அண்ணா அறிமுகம் கிடைச்சது. நான் அம்பேத்கரைப் பற்றி எழுதுவேன்னு தெரிஞ்சதும் ரஞ்சித் அண்ணாவுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருச்சு. அவரே என்னைக் கூப்பிட்டார். ஒரு ஆடிஷன் வெச்சு, `நீயே இந்தப் படத்துல பண்ணு'னு சொன்னார். ஆரம்பத்துல ரஞ்சித் அண்ணாகூட பழகுற வாய்ப்பு கிடைக்கலை. படம் பண்ண ஆரம்பிச்ச பிறகுதான் அவர்கூட பேச நிறைய வாய்ப்பு கிடைச்சது. நிறைய விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். `ரஜினி சார் படத்துல நீ வொர்க் பண்ற'ங்கிற பிரஷரை எனக்கு அவர் கொடுத்ததே இல்லை. `கேஸ்ட்லெஸ் கலக்டிவ்'ல எந்தளவு சுதந்திரம் இருந்ததோ, அதை இந்தப் படத்திலும் நான் ஃபீல் பண்ணேன். `ரிலாக்ஸா பண்ணுடா, நிறைய டைம் இருக்கு. பாட்டு ரொம்ப பாமரத் தன்மையா இருக்கணும், மக்களுக்கு எளிமையா புரியிறமாதிரி இருக்கணும்'னு மட்டும் சொன்னார். 

" 'உரிமை மீட்போம்' பாடலுக்கு வரிகள் எழுதுற உரிமையை உங்களுக்கு எப்படிக் கொடுத்தார்?''

" 'இது நிலம் சம்பந்தப்பட்ட பாட்டு, படத்துல நிலஉரிமை மீட்டலுக்கான போர்ஷன் இருக்கு, அதுல போராடுறவங்க அதைக் கொண்டாட்டமா பார்க்கணும், அப்படி ஒரு பாட்டு எழுது'னு இரஞ்சித் அண்ணா சொன்னார். நான் தாராவியை நேரடியா பார்த்தது இல்லை. அங்கே இருக்கிற என் நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னப்போ, எனக்கு மூணு நாள் மைண்ட் பிளாங்க்கா இருந்துச்சு. `சின்ன வயசுல ரஜினி சார் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இப்போ அவர் நடிக்கிற படத்துக்கு பாட்டு எழுதப்போறோம்'னு நினைச்சப்போ ரொம்ப சந்தோஷமாவும், நல்லா வொர்க் பண்ணனும்ங்கிற ஆர்வமும் தானா வந்திடுச்சு."

"வரிகளைப் படிச்சிட்டு இரஞ்சித் என்ன சொன்னார்?''

"பாட்டு எழுதிக் கொடுத்த பிறகு சில மாற்றங்களைச் சொன்னார் இரஞ்சித் அண்ணா. பொதுவாவே அவர்கிட்ட பேசும்போது பாட்டுல எது எது இருக்கணும், பாட்டோட அழகியல், எளிமைனு நிறைய விஷயங்களைச் சொல்வார். அந்த இடத்துலதான் எனக்கு அவரோட எளிமை ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சது. அவரை மீட் பண்றதுக்கு முன்னாடியே எனக்கு  இரஞ்சித் அண்ணாவையும், அவர் படங்கள்ல பேசுற அரசியலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.'' 

``பாடல் வரிகள்ல இருக்கிற புரட்சிகரமான சிந்தனைகள் எப்படிப் பிறந்தது?" 

``காலேஜ் படிக்கும்போது படிக்கிறதைத் தாண்டி சமூகம் சார்ந்த நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். அப்பா, அம்மா ரெண்டுபேரும் ஆசிரியர். அதனால, அவங்க மூலமா நிறைய புத்தகங்கள் படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. தமிழும், தமிழர்கள் சார்ந்த பார்வையும் எனக்கு அதிகமாக ஆரம்பிச்சது. எங்க வீட்டுல டி.வியெல்லாம் கிடையாது. நிறைய புத்தகங்கள்தான் இருக்கும். அதையெல்லாம் படிச்ச பிறகுதான் நாமளும் ஒரு படைப்பாளி ஆகணும்ங்கிற எண்ணம் வந்தது. தாத்தா, பாட்டிகிட்ட நிறைய விஷயங்களைப் பேசுவேன். அந்தக் காலத்துல அவங்க என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தாங்கனு தெரிஞ்சுகிட்டு, இப்போ நான் வாழ்ற வாழ்க்கையையும் அவங்க  வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒட்டுமொத்தமா பார்த்தா, கல்விதான் பெரிய விஷயமா இருக்கு. நம்மை ஒரு மரியாதையோட பார்க்க கல்வி ரொம்ப முக்கியம்னு உணர ஆரம்பிச்சேன். நிறைய படிச்சேன், இப்போவரைக்கும் படிச்சுக்கிட்டு இருக்கேன்!" 

``இயக்குநர் ரஞ்சித்தை இவ்வளவு பிடிக்க என்ன காரணம்?" 

``வெளியே இருந்து சாதரண ஆளா பார்க்கும்போது சமூகத்தைப் பார்த்து நானும் குறை சொல்லிக்கிட்டுதான் இருந்தேன். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் பேண்ட்டுக்குள்ளே வந்து, இரஞ்சித் அண்ணா மாதிரியான பெரிய இயக்குநர்களோட பழகும்போதுதான் சமூகத்துல நம்மளோட பங்களிப்பு கண்டிப்பா இருக்கணும்ங்கிற எண்ணம் வந்தது. வெளியில இருந்து பார்த்து, 'இது சரியில்லை'னு சொல்றதுக்கும், உள்ள இருந்து, 'இதுதான் பிரச்னை'னு சொல்றதுக்கும் இடையில நான் இருக்கேன். உரிமைக்கான குரல் எல்லோர்கிட்டேயும் இருக்கணும். சமூகத்தின் மீதான அக்கறை இரஞ்சித் அண்ணாவைப் பார்த்ததுக்கு அப்புறம் அதிகமாச்சு. முக்கியமா, அம்பேத்கரை ரொம்ப ஸ்வீட்டா என்கிட்ட கொண்டுவந்து சேர்த்தார். நான், அம்பேத்கரை இன்னும் ஸ்வீட்டாக்கி பாடல்கள் வழியா அதைக் குழந்தைகள்கிட்ட எடுத்துட்டு போகலாம்னு இருக்கேன்.'' 

``உங்க தாத்தா பாட்டிகிட்ட நிறைய பேசியிருக்கீங்க. அப்போ இருந்த சாதியம், இப்போ எப்படி மாறியிருக்கு?" 

``பொருளாதரமும் கல்வியும் நம்மகிட்ட வர ஆரம்பிச்சதும், உணவு, உடைனு நம்ம வாழ்க்கைச் சூழல்ல மாறுதல் வருது. 'என் புள்ள நல்லா படிக்கிறான், பெரிய இடத்துல வேலை பார்க்கிறான். இனி, தெருவுல தைரியமா நடப்பேன்டா'னு தாத்தா என்கிட்ட சொல்வார். இன்னொரு பக்கம் ஆணவக்கொலை அது இதுனு ரொம்ப மோசமாவும் போயிட்டு இருக்கு. படிச்சவங்க சிலபேர் எனக்கு சாதியே வேண்டாம், சாதியற்றவனா வாழ்ந்துக்கிறேன்னு நகர்ந்துக்கிட்டிருக்காங்க. அதுல இருந்து ஒருத்தர்தான் தலைவனா வரணும். அப்போதான், சமூகமும் சமத்துவமும் நல்ல வழிக்குப் போகும், சாதியும் ஒழியும்.'' 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு