Published:Updated:

சுட்ட படம்

சுட்ட படம்
பிரீமியம் ஸ்டோரி
சுட்ட படம்

ஞானப்பழம்

சுட்ட படம்

ஞானப்பழம்

Published:Updated:
சுட்ட படம்
பிரீமியம் ஸ்டோரி
சுட்ட படம்

ந்த வாரம் சுட்டபடத்தில் நாம் பார்க்கப் போவது, 1984-ல் வெளியான `எனக்குள் ஒருவன்'. கமல் - எஸ்.பி.முத்துராமன் என்ற ஹிட் காம்பினேஷன், ஷோபனா, ஸ்ரீப்ரியா, சத்யராஜ், மனோரமா, வி.கே.ராமசாமி... என மிகப்பெரிய ஸ்டார் பட்டாளம் எல்லாம் இருந்தும் என்ன செய்ய? படம் 1975-ல் வெளியான `The Reincarnation of Peter Proud' என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி ஆச்சே!

சுட்ட படம்

ஹாலிவுட் படத்தின் கதையைப் பார்ப்போமா? கலிபோர்னியாவில் கல்லூரிப் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறான் ஹீரோ பீட்டர் ப்ரவுட். விசித்திரமான கனவுகளால் அவனின் பல இரவுகள் தூக்கமில்லாமல் கழிகின்றன. அதில் அதிக தடவை வரும் கனவு இதுதான். ஒரு ஏரியில் நீச்சலடித்துக்கொண்டிருக்கிறான் 30 வயதான ஒரு ஆள். அவனை நோக்கி ஒரு படகு வருகிறது. அதில் அவன் மனைவி இருக்கிறாள். அவள் சோகமாய் இருப்பதைப் பார்த்துவிட்டு, `என்னை மன்னித்துவிடு மார்ஷியா. நான் செய்தது தவறுதான்' என்கிறான். அதைக் கேட்டுக் கோபமாகும் அவள், துடுப்பை வைத்து அவனை அடித்தே கொல்கிறாள். உயிரற்ற அவன் உடல் ஏரியின் பரப்பில் மறைவதோடு கனவு முடிகிறது. இந்தக் கனவு வரும்போதெல்லாம் அலறியடித்து எழுகிறான் பீட்டர்.

இது தவிர்த்து ஒரு பெரிய பாலம், சொகுசு கார் ஒன்று, சர்ச் கோபுரம் ஆகியவையும் அவன் கனவில் அடிக்கடி வருகின்றன. இந்தக் கனவுகளுக்கு அர்த்தம் தேடி மனநல மருத்துவரிடம் செல்கிறான் பீட்டர். அவனை ஆழ்துயிலுக்கு அனுப்பும் மருத்துவர்கள், அவனுக்கு வரும் கனவுகளைக் கண்காணிக்க முயலுகிறார்கள். ஆனால், அந்த முயற்சியின்போதுதான் பீட்டருக்கு வருவது கனவுகள் அல்ல... எல்லாமே உண்மை என்று தெரிகிறது!

ஒருவேளை இதெல்லாம் முற்பிறவி நினைவுகளாக இருக்குமோ? என பீட்டருக்குச் சந்தேகம் வர, அதற்காக ஒரு நிபுணரை நாடுகிறான். அவரைச் சந்தித்த பிறகு பீட்டரின் எண்ணம் வலுப்பெறுகிறது. ஆனால் பீட்டரின் கேர்ள் பிரெண்ட், அவனின் மருத்துவர் ஆகியோர் இதை ஏற்க மறுக்கிறார்கள். மறுநாள் டி.வியில் ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக, அதில் தான் கனவில் கண்ட இடங்கள் எல்லாம் வருவதைப் பார்க்கிறான் பீட்டர். விசாரணையில் அது மாஸேஷூஸிட்ஸ் மாகாணம் எனத் தெரிய வருகிறது. பீட்டரும் அவன் கேர்ள் ஃப்ரெண்டும் அங்கே நகரம் நகரமாகத் தேடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பீட்டரின் கேர்ள் ஃப்ரெண்ட் சொந்த ஊருக்குத் திரும்ப, தனியாக தேடலைத் தொடர்கிறான் பீட்டர். அதில் வெற்றியும் பெறுகிறான். கனவில் வந்த வீட்டையும் அந்த வீட்டின் உரிமையாளரான ஆன் என்ற பெண்ணையும் பார்க்கிறான். அவளின் தாய்தான் மார்ஷியா என்பதையும் தெரிந்துகொள்கிறான். மார்ஷியாவை சந்தித்தவுடன், கனவில் தன்னைக் கொலை செய்தவள் இவள்தான் என்று தெரிந்துவிடுகிறது. மார்ஷியாவும், பீட்டர் தன் கணவன் ஜெஃப் சாயலில் இருப்பதைக் கவனிக்கிறாள்.

சுட்ட படம்

பீட்டர் தொடர்ந்து அவர்களோடு பழக, ஆனும் அவனும் காதலில் விழுகிறார்கள். இது பிடிக்காத மார்ஷியா ஆனைக் கண்டிக்கிறாள். ஆனால் இருவரின் நட்பும் தொடர்கிறது. ஆன் தன் தந்தை வழி பாட்டியிடம் பீட்டரை அழைத்துச் செல்ல, அந்த மூதாட்டி இவனை `ஜெஃப், ஜெஃப்' என அழைக்கிறார். இதை எல்லாம் பார்க்கும் மார்ஷியாவுக்குத் தன் கணவன்தான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறானோ என்ற சந்தேகம் வலுக்கிறது. அதை உறுதி செய்வதுபோல, `என்னை மன்னித்துவிடு மார்ஷியா. நான் செய்தது தவறுதான்' என ஜெஃப் சொன்ன அதே வார்த்தைகளைத் தூக்கத்தில் உளறுகிறான் பீட்டர்.

இப்போது ஃப்ளாஷ்பேக். பிரசவத்திற்காக மார்ஷியா மருத்துவமனையில் இருந்தபோது வேலைக்காரப் பெண்ணோடு உறவு வைத்துக்கொள்கிறான் ஜெஃப். இது தெரிந்து நியாயம் கேட்கும் மார்ஷியாவையும் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். இதனால் வெறுப்பாகும் மார்ஷியா அவனை ஏரியில் வைத்துக் கொல்கிறாள். இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் பீட்டரும் உயிரோடு இருக்கக்கூடாது என அவனைத் தேடிச் செல்கிறாள்.

அதே ஏரியில் பீட்டர் நீச்சலடித்துக் கொண்டிருக்க, `நீ திரும்ப வந்திருக்கவே கூடாது, தவறு மேல் தவறு செய்கிறாய்' எனக் கூறி அவனைச் சுட்டுக்கொல்கிறாள். இரண்டாவது முறையாக அதே சம்பவம் நடப்பதாகக் கதை முடிகிறது.

இப்போது தமிழ்ப் படத்திற்கு வருவோம். கன்னிப் பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் டான்ஸர் கமல். அவருக்கும் சக டான்ஸரான ஷோபனாவுக்கும் முதலில் முட்டிக்கொண்டாலும் பின்னர் காதலில் விழுகிறார்கள். ஷோபனாவின் அரங்கேற்றத்தைப் பார்க்கும் கமல், இதை ஏற்கெனவே எங்கோ பார்த்தது போல உணர்கிறார். அதே போல டார்ஜிலிங் மலைப் பிரதேசங்களும் அவர் கனவில் அடிக்கடி வருகின்றன. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க அங்கு செல்கிறார் கமல். அங்கு கனவில் நடனமாடிய பெண் ஸ்ரீப்ரியாவை நேரில் பார்க்கிறார்.

சுட்ட படம்

ஸ்ரீப்ரியாவின் வீட்டில் கமலின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. இங்கு ஒரு ஃப்ளாஷ்பேக். தொழிலதிபரான கமல், ஸ்ரீப்ரியா மேல் காதல் கொள்கிறார். ஸ்ரீப்ரியா பெயரில் பாதிச் சொத்துகளை எழுதிவைத்தால்தான் கல்யாணம் எனக் கண்டிஷன் போடுகிறார் ஸ்ரீப்ரியாவின் மாமாவான சத்யராஜ். அதன்படி சொத்து கைக்கு வந்ததும் கமலைக் கொன்று அதை விபத்து போல செட்டப் செய்கிறார். இதை எல்லாம் கண்டுபிடிக்கும் இந்தக் கால கமல், சத்யராஜைப் போட்டுத்தள்ளி சொத்தை மீட்டு ஸ்ரீப்ரியாவிடம் தந்துவிட்டு ஷோபனாவைத் திருமணம் செய்துகொள்கிறார். சுபம்.

மையக்கதை, ஹீரோவின் அம்மா கேரக்டர், கனவுகள் என முக்கிய அம்சங்கள் பலவும் அப்படியே ஹாலிவுட் படத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டதுதான். இங்கே இன்னொரு ட்விஸ்ட்... இந்த `எனக்குள் ஒருவன்' படம் பாலிவுட்டில் வெளியான `கர்ஸ்' என்ற படத்தின் ரீமேக். ஆக, ஹாலிவுட்டில் இருந்து ஹிந்தியில் சுட்டு அதைத் திரும்ப சூடு பண்ணி தமிழ் மக்களுக்குப் பரிமாறியிருக்கிறார்கள். சூப்பர்ல?

- இன்னும் சுடும்