Published:Updated:

"தேர்ந்தெடுத்து நடிக்கும் கலைஞர், உதவும் அன்பர், சிவாஜிக்கே பிடித்த நடிகர்!" - நடிகர் நீலு நினைவலைகள்

"தேர்ந்தெடுத்து நடிக்கும் கலைஞர், உதவும் அன்பர், சிவாஜிக்கே பிடித்த நடிகர்!" - நடிகர் நீலு நினைவலைகள்
"தேர்ந்தெடுத்து நடிக்கும் கலைஞர், உதவும் அன்பர், சிவாஜிக்கே பிடித்த நடிகர்!" - நடிகர் நீலு நினைவலைகள்

நடிகர் நீலு சமீபத்தில் மறைந்தார். அவரைப் பற்றிய ஒரு நினைவுக் கட்டுரை இது.

ன் ஆரம்பகால நாடகங்கள் தொடங்கி, சமீபத்தில் நடித்த சினிமா வரை... ரசிகர்களைச் சிரிக்கவைத்து ரசித்த நீலு என்கிற நீலகண்டன் இன்று நம்மிடையே இல்லை. அவருக்கு வயது எண்பத்தி மூன்று. 8000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இவர் நடித்த மேடை நாடகங்களில் பெரும்பாலானவை சோ, கிரேஸி மோகனின் நாடகங்களே. இவருடன் நாடகங்களில் பயணித்தவர் காந்தன். இயக்குநர் மௌலியின் சகோதரர். நீலுவின் நினைவுகள் குறித்து காந்தனிடம் பேசினேன். 

“நீலு, சென்னையில் சுவாமி அண்ட் கோ என்கிற பெரிய நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்தவர். அந்த வேலையில் இருந்துகொண்டே சோவின் `விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ நடத்திவந்த நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவருடைய நடிப்பைத் தூரத்திலிருந்து பார்த்து வியந்து ரசித்த காலம் அது. ஒரு கட்டத்தில் நாடகம் நடத்துவதை நிறுத்திவிட்டார் சோ.

பிறகு, தன்னை எங்களுடைய நாடகக்குழுவில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டார், நீலு. நாடகங்களுக்காக வெளியூர் போகும்போது ரயிலில் ஏ/சி கோச், தங்குவதற்கு பிரத்தியேக அறை, சிறப்பு உணவு என்று அவரைப் பராமரிப்பது ரொம்பவே கஷ்டம் என்று நினைத்தோம். ஏனெனில், ஜூனியர்களான நாங்கள் வெளியூர் செல்வது என்றால் ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் போய்விடுவோம். அதனால்தான் அவரைத் தவிர்த்தோம். 

விஜய் டிவியில் வந்த `கிரேஸி காமெடி டைம்’ நிகழ்ச்சியில் நீலு நடித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஊட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென முடிவான பயணம். அதனால் நீலுவுக்கு ஏ/சி கோச் ஏற்பாடு செய்ய இயலவில்லை, சாதாரண ஸ்லீப்பர் கோச்தான். நீலு சார் ஆறடிக்கு மேல் உயரமானவர். எப்படி அந்த இருக்கையில்அமரப்போகிறாரோ என்று தயக்கத்துடன் இருந்தேன்.

அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். `அதனாலென்ன, எல்லாத்தையும் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு நடந்துக்கிறதுதானே வாழ்க்கை’ என்றார். அன்று ஆரம்பித்த எங்கள் நட்பு, கடந்த 12 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்தது. எங்களின் `சாக்லேட் பேபி' நாடகம் ஆயிரம்முறை அரங்கேறியது. அதில், நீலுவின் நடிப்பை எல்லோரும் சிலாகித்து, ரசித்துப் பாராட்டினார்கள். 

எங்கள் கிரேஸி கிரியேஷன்ஸின் நாடகங்கள் மேடையில் அரங்கேறுவதற்குப் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே தீவிரமாக ரிகர்சல்கள் இருக்கும். அப்படி, நீலுவுக்கு அவர் எங்களிடம் நடித்த நாடகத்துக்கான பத்துப் பக்கம் கொண்ட வசன பேப்பரைக் கொடுத்தோம். `வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு விறுவிறுவெனக் கிளம்பிவிட்டார்.

மறுநாள் எல்லோரும் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு அவரவர் வசனத்தைப் பேசினார்கள். ஆனால், நீலு மட்டும் மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனத்தைக் கடவென மாடுலேஷனோடு சொன்னார். எங்கள் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் நாடகத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்டால், உடனே வீட்டுக்குப் போகமாட்டார். மேடையின் ஓரமாக ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து, நடிப்பவர்களை பயங்கரமாகக் கிண்டலடித்தபடி இருப்பார். 

திரைப்படத்தில் வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். தேர்வுசெய்துதான் நடிப்பார். சிவாஜி சாருக்கு நீலு மீது அலாதியான பிரியம். அவுட்டோர் ஷூட்டிங் போனால் நீலுவைத் தனியே அழைத்து, ரூம் வசதி, சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கு’ என்று அவரிடம் விசாரிப்பார். அதேபோல, ஷூட்டிங் பேக்கப் ஆகும்போதும், `என் அறைக்கு வா, உன்னிடம் பேசவேண்டும்’ என்று சிவாஜி தன்னிடம் காட்டும் சிறப்புக் கவனிப்பை எங்களிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வார்.  

எப்போதும் தன்னை மாணவன் என்ற மனநிலையிலேயே வைத்துக்கொள்வார். தன் உதவியாளர்கள், மேக்கப்மேன், காஸ்ட்யூமர் மீது அதிகமான அன்பு செலுத்துவார். ஒருமுறை வெளிநாட்டில் நாடகம் நடத்தச் சென்றபோது, `மேக்கப்மேன் எங்கே?' என்று கேட்டார். `அவருக்கு பாஸ்போர்ட் இல்லை, அதனால அழைச்சுட்டு வரலை' என்றேன். பிறகு சென்னை வந்ததும் மறுநாள் காலை காரை எடுத்துக்கொண்டு நேராக மேக்கப்மேன் வீட்டுக்குச் சென்றார். அவரைத் தன் காரிலேயே அழைத்துக்கொண்டு பாஸ்போர்ட் ஆபீஸுக்கு  பாஸ்போர்ட் அப்ளை செய்தபிறகே வீட்டுக்குத் திரும்பினார்.  

தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டும் என்பது நீலுவின் தினசரி நடவடிக்கைகளில் ஒன்று. எங்கள் நாடகக் குழுவில் இருப்பவர்களில் கரன்ட் பில் பிரச்னை, குடிநீர் பிரச்னை எனக் கஷ்டப்படுபவர்களின் வீடு தேடிப்போய் உதவி செய்துவிட்டுவருவது அவரது இயல்பு. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நீலுவுக்கு பைபாஸ் ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகு நாடகங்களில் நடிப்பதைத் தவிர்த்தார்.

நீலுவின் மனைவி சாந்தா பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் அர்ஜுன், துபாயில் வேலை பார்க்கிறார், இளைய மகன் பரத், நைஜீரியாவில் வேலை பார்க்கிறார். நீலு மறைந்தாலும் அவரின் நினைவுகள் என்றும் எங்களை வழிநடத்தும்." என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு