Published:Updated:

"இரஞ்சித் பேசுற அரசியலை ரஜினி ஆர்வமா கேட்பார்!" 'காலா' முரளி

'காலா' படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி பேட்டி. இயக்குநர் இரஞ்சித்துக்கும் தனக்குமான நட்பு, ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம்... பல விஷயங்களைப் பேசியிருக்கிறார், முரளி.

"இரஞ்சித் பேசுற அரசியலை ரஜினி ஆர்வமா கேட்பார்!"  'காலா' முரளி
"இரஞ்சித் பேசுற அரசியலை ரஜினி ஆர்வமா கேட்பார்!" 'காலா' முரளி

``என் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பக்கத்துல ஒரு கிராமம். விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன் நான். எங்க ஊர் அரசுப் பள்ளியில படிச்சு முடிச்சவுடனே, காலேஜ்ல என்ன படிக்கணும்ங்கிறது என் விருப்பம்னு சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு மியூசிக் மேல ஆர்வம் அதிகம். பாண்டிச்சேரில இருக்கிற மியூசிக் காலேஜ்ல சேர்ந்தேன். ஆனா, கர்நாடக இசையைக் கத்துக்க எனக்கு சிரமமா இருந்தது. அதனால, பாதியிலேயே விட்டுட்டு, கும்பகோணத்துல இருக்கிற ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தேன். காரணம், எனக்கு சின்ன வயசிலிருந்தே ஓவியங்கள் மேலேயும் ஒரு ஈர்ப்பு. இதுதான் நமக்கான இடம்னு நினைச்சேன். அங்கே போன பிறகு, ஓவியத்தோட அடுத்த கட்டம்தான் ஒளிப்பதிவு, சினிமானு தெரிஞ்சது. புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல ஒளிப்பதிவு கத்துக்கிட்டேன்" - 'உங்க பின்னணி என்ன?' என்ற கேள்விக்கு,  ஒளிப்பதிவாளர் முரளி சொன்ன பதில் இது.    
 

``உங்க குறும்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது கிடைச்சது, பிறகு தெலுங்குல கமிட் ஆன முதல் படம் பற்றி சொல்லுங்க?''   

``அந்தக் குறும்படம் எங்க காலேஜ் புராஜெக்ட். பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியா இருக்கும்போது தேசிய விருது கிடைச்சது. புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சீனியர் - ஜூனியருக்குள்ள அப்படியொரு ஒற்றுமை இருக்கும். அந்தக் காலேஜ்ல படிச்ச முதல் பேட்ச் சீனியர்கள்கூட இப்போ அங்கே படிசக்சுக்கிட்டு இருக்கிறவங்க டச்ல இருப்பாங்க. அப்படித்தான் நான், ராஜீவ் ரவி சார்கூட சேர்ந்து வொர்க் பண்ணேன். காலேஜ் முடிக்கிற சமயத்துல வந்த வாய்ப்பு அது." 

``உங்களுக்கும் பா.இரஞ்சித்துக்குமான அறிமுகம்?''  

``என் தம்பி சென்னையில ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சான். அவன் மூலமாதான் இரஞ்சித் எனக்குப் பழக்கம். முதல்ல 'அட்டக்கத்தி' படத்துல வொர்க் பண்ணதான் கூப்பிட்டார். ஆனா, சில காரணங்களால அது முடியாம போச்சு. இருந்தாலும், எங்களுக்குள்ள சினிமாவைத் தாண்டி பல உரையாடல்கள் இருந்தது. நிலம் சார்ந்த அரசியல், விளிம்பு நிலை மக்களோட நிலை, சமூகத்தைப் பற்றிய பார்வைனு நிறைய விஷயங்கள் எங்களுக்குள்ளே ஒரேமாதிரியான வேவ் லெங்த் இருந்தது. அன்னைக்கு ஆரம்பிச்ச பயணம், 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா'னு போயிட்டிருக்கு. சினிமா மாதிரியான மிகப்பெரிய மீடியத்துல மக்களோட நிலையை மக்களோடு மக்களா இருந்து சொல்லிட்டு வர்றார், இரஞ்சித்"
 

``ரஜினிகாந்த்கூட வொர்க் பண்ண அனுபவம் எப்படி இருக்கு, ஸ்பாட்ல அவர் எப்படி?''

``சூப்பர் ஸ்டார்கூட வொர்க் பண்ணது ரொம்பவே சந்தோஷம். 'கபாலி', 'காலா' ரெண்டு படத்துக்கும் சேர்த்து இருநூறு நாள்களுக்குமேல அவரோட வொர்க் பண்ணியிருக்கேன். ஒவ்வொரு காட்சியையும் புதுசா நடிக்கிற மாதிரி நினைச்சுப் பண்ணுவார். ஒரு நடிகரா அவர் செம என்டர்டெயினர். சின்னக் குழந்தையில இருந்து, பெரியவங்க வரை எல்லோரையும் கவர்ந்திடுவார். அவரை ஆன் ஸ்கிரீன்ல பிடிச்சதைவிட ஆஃப் ஸ்கிரீன்ல எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமாமேல இருக்கிற தீராக் காதல், தொழில் பக்தி, இத்தனை வருடம் படம் பண்ணி சூப்பர் ஸ்டார் ஆனாலும், தனக்கான காட்சிக்கு ரொம்ப மெனக்கெடுவார். அவர் சோர்வா இருந்து நான் பார்த்ததே இல்லை. ரஜினி சார் ரசிகர்கள், ஸ்கிரீனுக்குப் பின்னால் உழைக்கும் ரஜினியைப் பார்த்தா தீவிர ரசிகர் ஆயிடுவாங்க. வெளிப்படையாப் பேசுவார். நடிச்சு முடிச்சுட்டு எல்லோர்கிட்டேயும் ஓகேவானு கேட்பார். ஸ்பாட்ல ஃப்ரீயா இருக்கும்போது, நானும் இரஞ்சித்தும் அரசியல் பற்றி, சமூகத்தை பற்றி பேசிக்கிட்டு இருந்தா, அவ்வளவு ஆர்வமா கேட்டு அவரோட பார்வையையும் ஷேர் பண்ணிப்பார். நல்ல நடிகரைத் தாண்டி, நல்ல மனிதர் ரஜினி சார்!" 

``ராஜீவ் ரவிகூட தொடர்பில் இருக்கீங்களா?''

`இல்லாமல் எப்படி? அடிக்கடி பேசிக்குவோம். அவர் ஒரு ஒளிப்பதிவாளரா தன்னை நிரூபிச்சுட்டு, இப்போ இயக்குநராகவும் மலையாளத்துல கலக்கிட்டு இருக்கார். பலதரப்பட்ட மக்களோட வாழ்வியலைப் பேசும் எதார்த்தமான சினிமாவை கொடுத்துட்டு வர்றார். எனக்கு ஏதாவது சந்தேகம்னா அவர்கிட்டதான் கேட்பேன். அவரோட 'கம்மாட்டிபாடம்' படம் பார்த்துட்டு, அதிலிருந்து என்னால மீண்டுவர முடியலை"
 

``ஒரே கூட்டணியோட அடுத்தடுத்து படம் பண்றது எப்படி இருக்கு?'' 

``சவுண்ட் டிசைனர் ரூபன், ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், பாடலாசிரியர்கள் எல்லோருமே 'அட்டக்கத்தி' படத்துல இருந்தே ஒன்னா வொர்க் பண்ணிட்டு இருக்காங்க. நான்தான் 'மெட்ராஸ்' படத்துல இருந்து வந்து சேர்ந்தேன். இரஞ்சித் டீம்ல இருக்கிற எல்லோருமே விளிம்பு நிலை மக்களோட வாழ்வியலையும், நிலம் சார்ந்த அரசியலையும், சமூகத்துல நடக்கிற பிரச்னைகளையும் அழுத்தமாப் பேசணும்னு நினைக்கிற நபர்கள். அதையெல்லாம் ரியாலிட்டியோட சேர்த்துப் படம் பண்றது சாதாரண விஷயம் இல்லை. ஆனா, ரஞ்சித் அதை செஞ்சுட்டு வர்றார். ரஞ்சித் நினைக்கிறதை  ரீ-கிரியேட் பண்றதை ராமலிங்கம் மிகச் சரியா பண்றார். பாடலாசிரியர்களும் நாம பேச வேண்டிய அரசியலை பாடல் வரிகள் மூலமா கொடுத்திடுறாங்க. அந்த வரிகளுக்குள் இருக்கற வலிகளை சந்தோஷ் நாராயணன் இன்னும் தன் இசையால் அழுத்தமா பிரதிபலிக்கச் செய்றார். இப்படி ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கிற சமூகப் பார்வையை அவங்க திறமையால வெளிக்கொண்டு வர்றாங்க. அதுக்கு ரஞ்சித் சுதந்திரம் கொடுக்கிறார். ஒரே டீமோட தொடர்ந்து பயணிக்கிறதுனால, எங்களுக்குள்ள இருக்கிற வேவ் லெங்த் இன்னும் நேர்கோட்டுல வர ஆரம்பிக்குது."
 

``படத்துல மறக்க முடியாத அனுபவம், அடுத்த புராஜெக்ட்?''

``இந்திய சினிமாவில இருக்கிற பெரிய ஐகான், ரஜினி சார். அவர்கூட சேர்ந்து வொர்க் பண்ணதே மறக்க முடியாத அனுபவம்தான். நான் ஒரு படத்துல வேலை பார்த்து, அந்தப் படம் ரிலீஸாகி மக்கள்கிட்ட எந்தளவுக்குப் போய்ச் சேர்ந்திருக்குனு பார்த்த பிறகுதான் அடுத்த படம் பற்றி யோசிப்பேன். அதை ஒரு சென்டிமென்டாவும் வெச்சிருக்கேன்."