Published:Updated:

"சீக்கிரமே அரசியல் படம் பண்ணுவோம்!" - 'எரும சாணி' டீம்

"சீக்கிரமே அரசியல் படம் பண்ணுவோம்!" - 'எரும சாணி' டீம்
"சீக்கிரமே அரசியல் படம் பண்ணுவோம்!" - 'எரும சாணி' டீம்

'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் இயக்குநர் 'எரும சாணி' ரமேஷ் வெங்கட் பேட்டி

பெரிய பட்ஜெட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டுமே பிரபலமாக முடியும் என்ற எண்ணத்தை முறியடித்து, இன்றைய சென்சேஷனாக இருக்கின்றனர் யூடியூப் ஸ்டார்ஸ். எதார்த்தமான சூழலையும், சமுதாயப் பிரச்னைகளையும் முன்நிறுத்தி பல குறும்படங்கள், வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகின்றனர். அந்தவகையில், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு பல குறும்படங்களை வெளியிட்டு வந்த 'எரும சாணி' யூடியூப் சேனல், தற்போது 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கிறது. 'எரும சாணி' சேனலின் இயக்குநர் ரமேஷ் வெங்கட்தான், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.   
 

`` `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' டைட்டிலுக்கான காரணம்?''

``கதைக்கும் இந்த டைட்டிலுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கு. காமெடி கலந்த ஹாரர் கதை, இந்த டைட்டிலைவிட வேற எதுவும் கதைக்கு இவ்வளவு பொருத்தமா இருக்குமானு தோணலை."

``டீம் 21 பற்றி சொல்லுங்களேன்...?''  

"எங்க படக்குழுவை பொதுவா எல்லோரும் 'டீம் 21'னு சொல்வாங்க. காரணம், டீம்ல இருக்கிற யாருக்கும் 21, 22 வயசுக்குமேல இல்லை. விஜய், ஹரிஜா, 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி சுதாகர்னு படத்துல நடிச்சிருக்கிற எல்லோருமே யூடியூப் ஸ்டார்கள்தான். அதனால, ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருக்கும். ஒவ்வொரு நாளும் மறக்க முடியாததா இருந்துச்சு." 

``முழுக்க இளைஞர் பட்டாளத்தை வெச்சு சமூகப் பிரச்னைகள், அரசியல் பேசுற படம் பண்ற ஐடியா இருக்கா?''

``இப்போதைக்கு இல்லை. இந்தப் படம் நல்லா வரணும். அப்புறம்தான் அடுத்த புராஜெக்ட் பத்தி யோசிக்கணும். நல்ல ஒன்லைன் அமைஞ்சா, நிச்சயம் அரசியல் படம் பண்றதுக்கான வாய்ப்பு இருக்கு."

``பல முன்னணி நடிகர்கள் இருக்கும்போது, வெள்ளித்திரையிலும் யூடியூப் நட்சத்திரங்களை வெச்சுப் படம் பண்றதுக்கான காரணம் என்ன?'' 

"யூடியூபில் இருந்துதான் நாங்கெல்லாம் வந்திருக்கோம். முதல் படம், அவங்களை வெச்சுப் பண்ணா புதுசா இருக்கும்னு தோணுச்சு. அதுக்கு தகுந்த மாதிரிதான் கதையையும் ரெடி பண்ணோம். இதுவரைக்கும் வெள்ளித்திரையில முழுக்க யூடியூப் ஸ்டார்களை வெச்சு எடுத்த படம் வந்ததில்லை. இது ஒரு வித்தியாசமான முயற்சி, அவ்ளோதான்."

``யூடியூப் ஸ்டார்ஸ் மட்டுமே இருக்கிற படத்தை இளைஞர்களைத் தவிர, மத்தவங்க எந்த அளவுக்கு வரவேற்பாங்கனு நினைக்கிறீங்க?''

``கதாபாத்திரங்களைவிட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படம் பார்க்கிற ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படமா இது இருக்கும்னு நம்புறேன். அதுமட்டுமில்லாம, பல யூடியூப் சேனல்ல பிரபலமானவங்கதான் நடிச்சிருக்காங்க. கதையும் ரொம்ப ஜாலியா இருக்கும்ங்கிறதால, இது எல்லோருக்குமான படமா இருக்கும். மக்களும் ரொம்பவே ரசிப்பாங்கனு நம்புறேன்." 

``ஜம்ப் கட்ஸ், புட் சட்னி மாதிரியான மற்ற யூடியூப் நட்சத்திரங்களை அப்ரோச் பண்ணலையா?''

``கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ற நடிகர்களை முன்னாடியே தேர்ந்தெடுத்துட்டோம். இது நிறைய பேரை வெச்சு எடுக்கிறதுக்கான கதையும் இல்லை. அதனால, எங்களுக்கு நிறைய நபர்கள் தேவைப்படலை. அடுத்த படத்துல கதையில தேவைப்பட்டா கண்டிப்பா சேர்ந்து வொர்க் பண்ணுவோம்." 

``உங்களோட டெக்னிக்கல் டீம் பற்றி சொல்லுங்க?''

``டெக்னிகல் டீமும் 'எரும சாணி'யில வொர்க் பண்ணவங்கதான். ஜோஷுவா, கேமராமேன். எடிட்டிங், தௌபீக், கணேஷ். 'ஹிப் ஹாப் தமிழா' படத்துல சவுண்ட் இன்ஜினீயரா வொர்க் பண்ண கௌஷிக் க்ரிஷ் இசை அமைச்சிருக்கார். ஆகமொத்தம், எல்லோருமே யூடியூப்ல இருந்து வந்தவங்கதான்."

`` `எரும சாணி'யோட ரீச்சுக்குக் காரணம் என்னனு நினைக்கிறீங்க?''

``பொதுவா எதார்த்தமான காதல் வாழ்க்கையில நடக்கிற சம்பவத்தை ஸ்க்ரீன்ல பார்க்கிற மாதிரி இல்லாம, அவங்க வாழ்க்கையோட ரிலேட் பண்ணிக்கிறாங்க. அதுல நாங்க கொஞ்சம் காமெடியும் சேர்த்துக் கொடுத்ததுதான் இவ்ளோ பெரிய வரவேற்புக்குக் காரணம்னு நினைக்கிறேன். விஜய் - ஹரிஜா காம்போவும் முக்கியமான காரணம். அவங்க காலேஜ்ல ஒன்னாப் படிச்சவங்க. ரெண்டுபேரும் சேர்ந்து நிறைய குறும்படங்கள் பண்ணிருக்காங்க. அவங்க காம்போ இவ்ளோ பெரிய ஹிட் ஆகும்னு எதிர்பார்க்கலை."

`` `ஹாய் ஆன்ட்டி' கான்செப்ட் பற்றி?''  

``அந்த ஐடியா விஜய்யும், கேமராமேன் ஜோஷுவாவும் சேர்ந்து பண்ணது. ஷூட்டிங்ல ஒருமுறை ஒரு ஆன்ட்டி கிராஸ் பண்ணிப் போனாங்க. அவங்களைப் பார்த்து சும்மா 'ஹாய் ஆன்ட்டி'னு சொல்லச் சொன்னோம். அந்த வீடியோவுல மட்டும்தான் அதைப் பண்றதா இருந்துச்சு. ஆனா, அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சதும், தொடர்ந்து பண்ணிட்டோம்."

`` `எரும சாணி'ல ரெண்டு பேரை வெச்சுக் குறும்படம் எடுத்ததுக்கும், இவ்ளோ பெரிய கூட்டத்தை வெச்சுப் படம் பண்றதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?'' 

``அங்கே ரெண்டு பேர், இங்கே பதிமூணு பேர்... அவ்ளோதான். கேமேராவுக்குப் புதுசாவோ, நடிக்கத் தெரியாதவங்களோ இங்கே யாரும் இல்லை. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தகுந்தமாதிரி வசனம் எழுதிக்கொடுத்தா போதும், மத்ததையெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க!" 

அடுத்த கட்டுரைக்கு