Published:Updated:

’’சுமாரான படத்துக்கு கோவப்படுறீங்க; நல்ல படத்துக்கு ஏன் பாராட்ட மாட்றீங்க..!’’ ரசிகர்களுக்கு உதயநிதி கேள்வி

ஜெ.பஷீர் அஹமது
’’சுமாரான படத்துக்கு கோவப்படுறீங்க; நல்ல படத்துக்கு ஏன் பாராட்ட மாட்றீங்க..!’’ ரசிகர்களுக்கு உதயநிதி கேள்வி
’’சுமாரான படத்துக்கு கோவப்படுறீங்க; நல்ல படத்துக்கு ஏன் பாராட்ட மாட்றீங்க..!’’ ரசிகர்களுக்கு உதயநிதி கேள்வி

நடன இயக்குநர் தினேஷ், மனிஷா யாதவ் நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு குப்பைக் கதை’. இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளிவரயிருந்த படம், பல காரணங்களால் தடைபட்டு, தற்போது ரெட் ஜெயிண்ட் மூவீஸ் வெளியீட்டில் வருகிற மே, 25ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ’’நடிகர் விஜய் நடித்த ’குருவி’ படம் மூலமாக தயாரிப்பில் இறங்கிய ரெட் ஜெயிண்ட் தற்போது அதன் பத்தாவது வருடத்தில் இருக்கிறது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களை கொடுத்துள்ளோம். சுமாரான படங்களை கொடுக்கும் போது கோபப்பட்டு கழுவி ஊற்றும் மக்கள் நல்ல படங்களை கொடுக்கும் போது ஆதரவு தரவில்லை. அது எங்களையும் கோபம் அடையச் செய்யும். 

நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து பயணித்துள்ளார். என்னை மாதிரி சில பேருக்கு நடனம் சொல்லிக்கொடுத்து, ’என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்க’னு கோபத்துல இந்தப் படத்தில் நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார் என நினைக்கிறேன். இந்தப் படம் ’மைனா’ போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

விழாவில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக கொண்டிருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் அவர்களை கவனித்தில் கொள்வதில்லை. ஒரு நாட்டின் ஆரோக்கியம் என்பது அந்நாட்டின் குப்பையில் இருந்தே சொல்லப்படுகிறது. குப்பையில் என்னென்ன கிடக்கின்றன என்பதைப் பொருத்து அந்த சமூகம் எப்படி இருக்கிறது என தீர்மானிக்க முடியும்’’ என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், ’’நானும் இந்தப் படத்தின் இயக்குநர் காளிரங்கசாமியும் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். என்னிடம் இந்த கதையை சொல்லும் போது, நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இப்படம் வெளிவரும் போது படம் பற்றிய பரபரப்பு உண்டாகும். படத்தின் நாயகியும் கதைக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்’’ என்றார். 

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘‘இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது என் கடமை. இது நான் தினேஷ் மாஸ்டருக்கு செய்யும் கைமாறு என்று நினைக்கிறேன். நடனம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. நான் தொகுப்பாளராக இருக்கும் போது, உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கிண்டலாக கூறினேன். ஆனால் ’எதிர்நீச்சல்’ படத்தில் நான் ஆடும் போது அதன் கஷ்டத்தை உணர்ந்தேன். 

ஒரு துறையில் இருந்து, மற்றொரு துறையில் கால் எடுத்து வைக்கும்போது உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள். நானும் தொகுப்பாளனாக இருந்து நடிகராக வரும் போது என்னிடமும் கேட்டார்கள். ஆனால், அதை ஒதுக்கித் தள்ள வேண்டும். நம்மை மக்கள் தான் அங்கீகரிக்கிறார்கள். அவர்கள் நம்மை எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்திருக்கிறார். நடன கலைஞராக மட்டுமின்றி நடிகராகவும் தினேஷ் மாஸ்டர் இருப்பார்’’ என்று பேசினார்.