Published:Updated:

"என்னடா ராஸ்கலே... என்ன நினைச்சுட்டு இருக்கீங்க!" - 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
"என்னடா ராஸ்கலே... என்ன நினைச்சுட்டு இருக்கீங்க!" - 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விமர்சனம்
"என்னடா ராஸ்கலே... என்ன நினைச்சுட்டு இருக்கீங்க!" - 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விமர்சனம்

"என்னடா ராஸ்கலே... என்ன நினைச்சுட்டு இருக்கீங்க!" - 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விமர்சனம்

சிங்கிள் ஃபாதர் பாஸ்கரின் மகன் ஆகாஷும் சிங்கிள் மதர் அனுவின் மகள் ஷிவானியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஷிவானிக்கு ஒரு அப்பா வேண்டும், ஆகாஷுக்கு ஒரு அம்மா வேண்டும். அதனால், குழந்தைகள் இருவரும் பாஸ்கருக்கும் அனுவுக்கும் திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார்கள். திட்டம் ஜெயிக்கிறதா, இல்லையா என்பதே `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சொல்லும் கதை!

`எங்கள் அண்ணா', `ஃப்ரெண்ட்ஸ்' போன்ற ரோஃபல் காமெடி படங்களைத் தந்த சித்திக், தான் மலையாளத்தில் இயக்கிய `பாஸ்கர் தி ராஸ்கல்' படத்துக்கு மூன்று கோட்டிங் கோலிவுட் கலர் அடித்து கொடுத்திருக்கிறார். படம் மலையாளத்தில் ஹிட் என கேள்விபட்டதும், `ஏன் திமிங்கலம், நீயெல்லாம் எப்படி பாட்ஷா பாய் கிட்டே அசிஸ்டென்ட்டா இருந்தே' காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

நாயகன் பாஸ்கராக அரவிந்த்சுவாமி. மேனர்ஸ் என்பதே தெரியாத அடவாடிப் பேர்வழி. அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். `புதையல்' படத்துக்குப் பிறகு முழுநீள காமெடி திரைப்படத்தில் நடித்திருப்பவர், நம்மை ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார். என்னதான், அரவிந்த் சுவாமி கட்டுமஸ்தான உடலோடு பார்க்க ப்ராக் லெஸ்னர் போல இருந்தாலும், அடியாட்களை பறக்கவிட்டு பந்தாடுவதெல்லாம் ரொம்பவே ஓவர். தமிழ் சினிமாவில் அந்தமாதிரியான அட்ராசிட்டியெல்லாம் ரொம்பவே குறைந்துவிட்டது சித்திக் சார்.  படத்தில் நாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் அமலா பாலுக்கு. நடிப்பில் குறையொன்றுமில்லை, தன் பங்கை மிச்சம் சொச்சம் வைக்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். கதையோடு கூடிய காமெடிதான் சித்திக்கின் படங்களின் ஸ்பெஷல். இதிலும் சூரி-ரோபோசங்கர்-ரமேஷ் கண்ணா மூவரின் காம்போவில் அப்படியான நிறைய காட்சிகள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை காமெடிகளாக மாறாமல் வெறும் சாவடிகளாக இருப்பதுதான் பிரச்னை. இவர்கள் செய்யும் காமெடியைவிட, அர்விந்த் சுவாமி அலட்டாமல் செய்யும் காமெடியே ஓகேவாக இருக்கிறது. சிறுவன் மாஸ்டர் ராகவனின் நடிப்பில் அத்தனை முதிர்ச்சி. பேபி நைனிகா இன்னும் தெறி பேபியாகவே இருக்கிறார்.

திரைக்கதை நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. அதாவது, ஒரு காட்சி ஆரம்பிக்கும்போதே அடுத்த காட்சி இதுதான் என நாம் எதிர்பார்ப்பதை இம்மியளவு கூட பிசாகமல் பூர்த்தி செய்கிறது திரைக்கதை. ரொம்பவே சிம்பிளான கதை, அதையே கலகலப்பான காட்சிகள் அமைத்து சுவாரஸ்யமாக தந்திருக்கலாம். அதைவிடுத்து மொத்தமாகவே கதையிலிருந்து தவறி புளூட்டோனியம், அலுமினியம் என ஜேம்ஸ்பாண்ட் படம் ஓட்டுகிறார்கள். பாஸ்கர் ஒரு பாண்ட், ஜேம்ஸ்பாண்ட்! வசனங்களில் நகைச்சுவையின் தடமே தெரியவில்லை.  வசனங்களைக் கேட்டு சிரித்திருக்க வேண்டிய ரசிகர்களின் வாய், கொட்டாவிதான் விடுகிறது. பின் வரிசையில் இரண்டு குழந்தைகள் சீட்டில் உருண்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள். எனவே, குழந்தை மனமுள்ளவர்கள் ஆங்காங்கே சிரிக்க வாய்ப்புள்ளது.

பின்னணி இசை ஓகே. ஆனால், பாடல்கள் வரும்போதுதான் இரண்டு பாப்கார்னை எடுத்து காதுகளை அடைத்துக்கொள்ளலாமா என தோன்றுகிறது. வண்ணமயமான, ஷார்ப்பான ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத் தனது வேலையை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார். பெனலி பைக்கில் ஏறிக்கொண்டு ரௌடிகளை மாலுக்குள்ளேயே விரட்டி விரட்டி வெளுக்கும் காட்சிகளெல்லாம் நினைத்தாலே கிலி கிளம்புகிறது. சிஜியும் தம் பங்குக்கு பயமுறுத்தியிருக்கிறது. 

மொத்தத்தில் சுவாரஸ்யமில்லாத கதைசொல்லல் இந்த பாஸ்கர் எனும் ராஸ்கலை நன்றாக பழிவாங்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு