Published:Updated:

சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை... போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய டாப் ஹீரோக்கள்

சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை... போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய டாப் ஹீரோக்கள்
சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை... போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய டாப் ஹீரோக்கள்

சிவாஜி கணேசன் முதல் சிவகார்த்திகேயன் வரை பெரும்பாலான நடிகர்கள்  போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதில்  சில படங்கள் மட்டுமே பெரியளவில் பேசப்பட்டது. போலீஸாக  நடிக்கும்போது  நடிப்பில் சிறு பிழை ஏற்பட்டால் கூட சீரியஸ் ரோல் சிரிப்பு ரோலாக மாறிவிடும். எனவே, போலீஸின் நடை, உடை, பாவனை ஆகிய எல்லாவற்றையும் ரீசர்ச் செய்துதான் பலரும் நடிப்பார்கள். தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் நடிக்க விரும்பும் ஒரே ரோல் போலீஸ்தான் என்றும் சொல்லலாம். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் நடித்த சிறந்த போலீஸ் திரைப்படங்களின் பட்டியல் இதோ...

சிவாஜி - தங்கப் பதக்கம்:

சிவாஜி கணேசனின் சினிமா வாழ்வில் மிக முக்கியமாக முத்திரை பதித்த ஒரு திரைப்படம். இப்படத்தில் சத்தியத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்ட ஒரு போலீஸாக நடித்திருப்பார். இவருக்கு நேர் எதிரான ஒரு மகன்; இவர்களுக்குள் நடக்கும் விஷயம்தான் இப்படம். அவரின் நடிப்பு மூலமாக போலீஸ் ரோல் எப்படி இருக்க வேண்டும் என்ற விதியை அமைத்துவிட்டார். சிவாஜியின் கம்பீரமான தோற்றம், குரல் இப்படத்துக்குப் பலமாக அமைந்தது.

எம்.ஜி.ஆர் - ரகசிய போலீஸ் 115 

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இருந்த காலகட்டத்தில், அதே பாணியில் எம்.ஜி.ஆர் நடித்து ஹிட் ஆன படம் இது. எம்.ஜி.ஆர் மிகவும் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரின் தோற்றம், பார்வை அனைத்தும் கச்சிதமாக பொருத்தி இருந்தது. இப்படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 

ரஜினி - மூன்று முகம்

இப்படத்தில் ரஜினிகாந்த் அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் என்று மூன்று வேடத்தில் நடித்திருப்பார்.  அலெக்ஸ் பாண்டியன் D.S.P ரோலில் அனைவரின் கைதட்டலை பெற்றார். அலெக்ஸ் பாண்டியன் என்ற ஒற்றைச் சொல் பட்டி தொட்டி எங்கும் கம்பீரமாக ஒலித்தது. ரஜினிகாந்தின் ஸ்டைல் குறையாமலும் போலீஸுக்கு உண்டான கெத்து குறையாமலும் நடித்திருந்தார். இப்படம் 250 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. 

கமல் - வேட்டையாடு விளையாடு

``என் கண்ணு வேணும்னு கேட்டியாமே, இப்போ நானே வந்திருக்கேன் எடுடா பார்ப்போம்" என்ற வசனத்தில் ஆரம்பமாகும் படத்தில் இறுதி வரை கமலின் ஆளுமையை திரையில் பார்க்கலாம்.வழக்கமான போலீஸ் கதை என்றாலும் திரைக்கதையில் வித்தியாசம் காட்டி  `ஹாலிவுட் ஸ்டைலில்' இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே கமல்ஹாசன் மாறிவிடுவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்திலும் அதட்டல், மிரட்டல் எதுவும் இல்லாமல் மிகவும் இயல்பான போலீஸாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார்.

விஜயகாந்த் - கேப்டன் பிரபாகரன்

இப்படம் விஜயகாந்தின் நூறாவது படம். பயங்கரமான காடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்தில் விஜய்காந்தியின் நடிப்பு இன்றளவும் பேசப்படும் ஒன்று. விஜயகாந்த் இப்படத்துக்கு கடுமையாக உழைத்திருப்பது படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். வீரப்பன் என்ற ஒற்றை மனிதனைச் சுற்றி நடக்கும் சந்தன கடத்தல் விஷயம்தான் இப்படம். போலீஸாகவும் ராணுவ அதிகாரியாகவும் அதிக படங்கள் நடித்த நடிகர் விஜயகாந்த்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜ் - வால்டர் வெற்றிவேல் 

90களில் சத்யராஜ் நடித்த படங்களில் அதிக வசூலீட்டிய திரைப்படம் வால்டர் வெற்றிவேல்தான். தன்னுடைய தம்பியே குற்றவாளியாக இருந்தாலும் ஒரு நேர்மையான போலீஸாக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியாக திரைக்கதை அமைந்திருக்கும். அவருடைய வசன உச்சரிப்பும், உயரமும் போலீஸ் ரோலுக்கு பலமாக அமைந்தது. இப்படத்தில் தமிழக போலீஸின் பிம்பமாக வால்டர் வெற்றிவேல் இருந்தார். ’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ படத்திலும் போலீஸ் ரோலில் நடித்திருந்தாலும் இந்தப் படம் ஒரு யதார்த்தமான போலீஸை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்திருந்தார். இப்படம்  200 நாள்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து, சத்யராஜுக்கு ஒரு சிறந்த நடிகன் என்ற அடையாளத்தையும் பெற்றுத் தந்தது.

விஜய் - தெறி

இப்படத்தில் விஜய் ரவுடிகளை தெறிக்கவிடும் காவல்துறை அதிகாரியாக அசத்தியுள்ளார்.  ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்ற பணக்கார பையனை விஜய்குமார் I.P.S தன்னுடைய பாணியில் கொலை செய்கிறார். வில்லனிடம் ,``உன் மகனை நான்தான் கொன்றேன்" என்று கூறும் காட்சி அனைவரிடமும் கைதட்டல் வாங்கியது. காட்சிக்கு ஏற்ப விஜய் உடல் மொழிகளிலும் வித்தியாசம் காட்டிருக்கிறார். காவல்துறை உடையில் மாஸ்ஸாக திரையில் வலம் வந்து, போலீஸ்கான ஆக்ரோஷத்தை நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்திருப்பார். அன்பான அப்பாவாக, கம்பீரமான காவல்துறை அதிகாரியாக, பாசமான காதலனாக என மூன்று பரிமாணத்தில் நடித்து அசத்திருக்கிறார்.பள்ளிக்கூடத்தில் ரவுடிகளுக்கு பாடம் எடுக்கும் காட்சியில்  விஜய், அவருக்கான பணியில் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.  பள்ளிக்கூடத்திலும், டிராபிக் சிக்னலிலும் நடக்கும் அதிரடியான சண்டை காட்சிகள் பாராட்டைப் பெற்றது. மேலும், ’போக்கிரி’ மற்றும் ’ஜில்லா’ படத்திலும் விஜய் போலீஸாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 

அஜித் - என்னை அறிந்தால் 

அஜித்தின் மாஸ்சும், கெளதம் வாசுதேவ் மேனனின் கிளாசும் சேர்த்த திரைப்படம்தான் இது. ஒரு துடிப்பான இளம் போலீஸ் அதிகாரியாக   திரையில்  வலம் வந்திருப்பார் அஜித். தனது மிரட்டலான பெர்ஃபார்மென்ஸ் மூலம் சண்டைக் காட்சிகள் அனைத்திலும் மாஸாக தோன்றி அனைவரின் லைக்ஸையும் பெற்றார். ’என்னை அறிந்தால்’ திரைப்படம் அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் இன்றுவரை ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கிறது. 

விக்ரம் - சாமி 

``நான் போலீஸ் இல்ல பொறுக்கி" என்ற வசனம் மூலமாகப் போலீஸை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த படம் இது. இப்படத்தில் விக்ரம் நல்லவரா இல்லை கெட்டவரா என்று யோசிக்கும் அளவுக்கு சில காட்சிகளை அமைத்திருப்பார்கள். கண்டிப்பான போலீஸ் கதாபாத்திரங்களைப் பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு இப்படம் வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும். எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் தோற்றத்திலும் நடிப்பிலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் விக்ரம் இப்படத்திலும் யதார்த்தமான ஒரு போலீஸாக மக்களால் ரசிக்கப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் ’சாமி 2’ படமும் திரைக்கு வரவிருக்கிறது.

சூர்யா - காக்க காக்க 

சூர்யாவின் கரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் `காக்க காக்க’. ஸ்டைலான சிம்பிள் போலீஸாகத் திரையில் தோன்றி பல ரசிகர்களை தன் பக்கம் சேர்த்தார். ஆக்க்ஷன் காட்சிகள் மூலமாகவும் வசனங்கள் மூலமாகவும் தன்னை ஒரு யதார்த்தமான போலீஸாக அனைவரின் மனதிலும் பதிய வைத்தார். இந்த ரோலுக்காக அப்போது இருந்த சென்னையின் அசிஸ்டன்ட் கமிஷனர்  விஜயகுமாரை ரோல் மாடலாக வைத்து நடித்திருந்தார். படம் வெளியாகியதும் விஜயகுமார் அவர்களே சூர்யாவை பாராட்டியதாகத் தகவல்கள் வெளியாகியது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் போலீஸாக நடித்த சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களும் மிகப்பெரிய ஹிட். இப்படங்களின் மூலம் மற்ற நடிகர்களைவிட சூர்யா, போலீஸ் ரோலுக்கு சூட்டான நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும், முறுக்கு மீசையுடன், வீரமான தோற்றத்துடன் போலீஸ் கெட்டப்பில் ’சேதுபதி’ படத்தில் அசத்தினார் விஜய் சேதுபதி,   இப்படத்துக்குப் பிறகு  விஜய் சேதுபதிக்குத் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. ’தனிஒருவன்’  படத்தில் கெத்து, ஸ்டைல் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் மக்கள் மனதில் அவரின் யதார்த்தமான நடிப்பின் மூலமாக காவல்துறை அதிகாரியாக இடம்பிடித்தார் ஜெயம் ரவி. ‘சிறுத்தை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து நடிகனாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார் கார்த்தி. காமெடி படங்களாக நடித்துவந்த சிவகார்த்தியேனை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தில் போலீஸ் ரோலை தனது பாணியில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். மாதவனின் ‘விக்ரம் வேதா’, அருண் விஜய்யின் ‘குற்றம் 23’ பாபி சிம்ஹாவின் ’திருட்டுப் பயலே 2’ ஆகிய படங்களும் தனித்துவமான போலீஸ் ஸ்டோரியை தமிழ் சினிமா, பார்வையாளர்களுக்குக் கொடுத்தது.