Published:Updated:

`` `இனி ஒவ்வொரு வருஷமும் எனக்கு ராக்கி கட்டணும்'னு ரஜினி சொன்னார்!’’ சத்யப்ரியா

``ரக்‌ஷா பந்தன் தினம் வந்தபோது ரஜினிக்கு நான் ராக்கிக் கயிறு கட்டிவிட்டேன். `இனி ஒவ்வொரு வருஷமும் எனக்கு ராக்கிக் கயிறு கட்டணும்'னு சொன்னார். அப்புறம் ஒருமுறை அவர் வீட்டுக்குப்போய் கட்டினேன்."

`` `இனி ஒவ்வொரு வருஷமும் எனக்கு ராக்கி கட்டணும்'னு ரஜினி சொன்னார்!’’ சத்யப்ரியா
`` `இனி ஒவ்வொரு வருஷமும் எனக்கு ராக்கி கட்டணும்'னு ரஜினி சொன்னார்!’’ சத்யப்ரியா


"ஹீரோயின், அம்மா, குணச்சித்திர கதாபாத்திரங்கள்னு 45 வருஷமா சினிமாவில் இருக்கேன். இந்த ஃபீல்டைவிட்டு எப்போதும் விலகப்போறதில்லை. தொடர்ந்து நடிச்சுட்டிருக்கிறதுதான் என் ஆசை" எனப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை சத்யப்ரியா. சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

"சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் என்ட்ரி..."

"ஆமாம்! சன் டிவி 'வம்சம்' சீரியலுக்குப் பிறகு நடிக்கலை. என் பையன் அமெரிக்காவிலும் பொண்ணு லண்டனிலும் இருக்காங்க. பேரக்குழந்தைகள் இருக்காங்க. அவங்களோடு நான் இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதனால், ரெண்டு நாடுகளிலும் குடும்பத்தோடு நேரம் போச்சு. மறுபடியும் சென்னைக்கே வந்துட்டேன். இடைப்பட்ட காலத்தில், நான் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிட்டதாவும், இனிமே நடிக்க மாட்டேன்னும் வதந்தி கிளப்பிடுச்சு. அது உண்மையில்லை. என் வாழ்நாள் முழுக்க நடிச்சுட்டே இருப்பேன். இப்போ, விஜய் டிவி 'அவளும் நானும்' சீரியல்ல நடிச்சுகிட்டுருக்கேன்."

"ஏழு வருட 'கோலங்கள்' பயணம், உங்க கரியரில் எவ்வளவு முக்கியமானது?" 

"ஒரு தெலுங்கு சீரியல்ல அம்மா ரோலில் நடிச்சேன். அதில், என் கணவரா பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிச்சார். அந்த சீரியலைப் பார்த்துதான், 'கோலங்கள்'ல என்னை செலக்ட் பண்ணினாங்க. அதுக்கு அப்புறம் ஏதோ சிக்கல். விசாரிச்சா, 'ஹீரோயினா தேவயானி, கெளசல்யா ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டிருக்கோம். இன்னும் முடிவாகலை'னு சொன்னாங்க. `முதல்ல செலக்ட் பண்ணின தேவயானி என்ன ஆனாங்க?'னு கேட்டேன். `சில சிக்கலால் அவங்க ஒப்புக்கலை'னு சொன்னாங்க. `எனக்கு அவங்க ரொம்ப குளோஸ். நான் பேசறேன்'னு சொல்லிட்டு தேவயானியிடம் பேசினேன். முதல்முறையா சீரியலுக்கு வர்றதால, அவங்களுக்கு நிறைய சந்தேகம். விளக்கம் கொடுத்தேன். அப்புறம் ஒப்புகிட்டாங்க. அந்த சீரியல் பெரிய ஹிட். நாயகியின் அம்மாவா என் மூலமாகத்தான் கதை நகரும். அந்த கேரக்டராவே வாழ்ந்தேன்னுதான் சொல்லணும். அந்த சீரியல், என் ஆக்டிங் பயணத்தின் முக்கியமான காலகட்டம். நிறைய பெயரும் புகழும் கிடைச்சுது. நிறைய ஹிட் படங்களில் நடித்தபோது கிடைக்காத `கலைமாமணி' விருதும் அப்போதான் கிடைச்சுது."

"உங்க சினிமா பயணம் எப்படி ஆரம்பிச்சது?"

"நான் கிளாஸிகல் டான்ஸர். மேடை நாடகங்களிலும் நடிச்சுகிட்டுருந்தேன். என் டான்ஸ்தான் ஆக்டிங் வாய்ப்புக்கு அடிப்படையா அமைஞ்சது. `மஞ்சள் முகமே வருக'  படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். என் இயற்பெயர், சத்யவதி. அந்த நேரத்தில் ஶ்ரீப்ரியா, பத்மப்ரியா எனச் சில ஹீரோயின்ஸ் இருந்தாங்க. அந்த வரிசையில், சத்யப்ரியா என மாறினேன். 50 படங்களுக்கு மேலே ஹீரோயினா நடிச்சேன். அப்போ எம்.ஜி.ஆர்.கூட நடிக்க ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு அமையலை. சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என ஆரம்பிச்சு விஜய், அஜித் வரைக்கும் நடிச்சிருக்கேன். எல்லோருடனும் நல்ல நட்பும் இருக்கு. தென்னிந்திய நான்கு மொழிகளில் 300 படங்களுக்கு மேலே நடிச்சாச்சு. இப்போ, `வணங்காமுடி' படத்தில் அர்விந்த்சாமியுடன் நடிச்சுகிட்டுருக்கேன். அவருக்கு அம்மா ரோல் இல்லை. ஆனால், சஸ்பென்ஸ் ரோல்."

"நடிச்சதில் மறக்க முடியாத திரைப்படங்கள்..?" 

"70-களில் தொடங்கி, தொடர்ச்சியான நடிப்பிலிருந்து சின்ன பிரேக் எடுத்திருந்தேன். பிறகு, ரீ-என்ட்ரியாக `புதிய பாதை’ படத்தில் பார்த்திபன் அம்மா கேரக்டர். அந்தப் படத்தின் மூலம், முதல் இன்னிங்ஸைவிடவும் சிறப்பான கேரக்டர்கள் நிறைய வந்துச்சு. அதில் மனநிறைவும் கிடைச்சுது. `பாட்ஷா' படத்தில் ரஜினியின் அம்மாவாகவும், `ரோஜா' படத்தில், அர்விந்த்சாமிக்கு அம்மாவாகவும் நடிச்சது ரொம்பப் பிடிக்கும். `சின்ன கவுண்டர்' படத்தில், வில்லி ரோலில் சின்ன கேரக்டர்தான். ஆனால், மக்கள் பெரிதாக ரசிச்சாங்க. இப்படிப் பல படங்களைச் சொல்லலாம்."

"ரஜினியுடனான நட்பு பற்றி..."

"அவரும் என் கணவர் முகுந்தும் ஃப்ரெண்ட்ஸ். `பாட்ஷா' படத்தில் நடிச்சுகிட்டுருந்தப்போ, சோகமாக இருந்த என் முகத்தைப் பார்த்து, அக்கறையுடன் விசாரிச்சார். `என் கணவருக்கு உடம்பு சரியில்லை. கொஞ்சம் நெகட்டிவா ஃபீல் பண்றார்'னு சொன்னேன். உடனே, அவரை நேரில் வரவழைச்சு, ரொம்பவே ஊக்கம் கொடுத்தார். அப்போ ரக்‌ஷா பந்தன். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே, ரஜினிக்கு ராக்கிக் கயிறு கட்டிவிட்டேன். `இனி ஒவ்வொரு வருஷமும் எனக்கு ராக்கி கட்டணும்'னு சொன்னார். அப்புறம் ஒருமுறை அவர் வீட்டுக்குப்போய் கட்டினேன். அவர் பிஸியா இருக்கிறதால் ஒவ்வொரு வருஷமும் கட்ட முடியலை. என் கணவர் மறைந்தபோது ரஜினியின் ஆறுதல் மறக்க முடியாது."

"சினிமா தோழிகளுடன் டச்ல இருக்கீங்களா?"

`` `கோல்டன் கேர்ள்ஸ்'னு ஒரு குழு இருக்கு. அதில் 70, 80-களில் பீக்ல இருந்த நடிகைகள் உறுப்பினரா இருக்கோம். நாங்க அடிக்கடி மீட் பண்ணுவோம். தொடர்ந்து டச்ல இருக்கோம்."