Published:Updated:

``என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் செய்தது யார் தெரியுமா?" - விஷால் பதில்

சுஜிதா சென்

`இரும்புத்திரை' திரைப்பட வெற்றிவிழா குறித்த கட்டுரை.

``என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் செய்தது யார் தெரியுமா?" - விஷால் பதில்
``என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் செய்தது யார் தெரியுமா?" - விஷால் பதில்

கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் `இரும்புத்திரை' பட சக்ஸஸ்மீட் சென்னையில் நடந்தது. விஷால், அர்ஜுன், இயக்குநர் மித்ரன், காஸ்டியூம் டிசைனர் ஜெயலட்சுமி மற்றும் சத்யா, எடிட்டர் ரூபன், வசனகர்த்தா பொன்.பார்த்திபன், கலை இயக்குநர் உமேஷ், கிராஃபிக்ஸ் டிசைனர் சிவக்குமார், நடிகர் காளி வெங்கட், எழுத்தாளர் ஆண்டனி பாக்கியராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். `இரும்புத்திரை' படம் குறித்து மட்டுமல்லாமல், தற்போது நடந்துகொண்டிருக்கும் பல்வேறு சினிமா பிரச்னைகளுக்கும் விஷால் பதிலளித்தார். 

முதலில் பேசிய எழுத்தாளர் பொன்.பார்த்திபன், ``இந்தப் படத்தைப் பற்றி நல்லவிதமாக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. படத்தின் முதல் பாதியைப் போட்டுக் காட்டியபோது, அதுக்கான விமர்சனத்தை நல்லவிதமா எழுதியிருந்தீங்க. இதை `வெற்றி சந்திப்பு'னு சொல்லக் கூடாது. `நன்றி கூறும் சந்திப்பு'னு சொல்லணும். இயக்குநர் மித்ரன் மூலமா நான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். `தாமிரபரணி' படத்துல விஷால் சாரோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். அதை ஞாபகம் வச்சு, இந்தப் படத்துல என்னை வேலை பார்க்கச் சொன்ன விஷால் சாருக்கு நன்றி" என்றார். 

அடுத்து பேசிய ஆண்டனி  பாக்கியராஜ், ``லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சுட்டு சின்னச் சின்ன படங்களுக்கு ஸ்க்ரிப்ட் வேலைகள் பார்த்தேன். ரூபன் அண்ணாதான் என்னை `இரும்புத்திரை' படத்துல வேலைபார்க்கச் சொன்னார். வேலை பார்க்க ஆரம்பிச்சப்போ, எனக்கு 22 வயசு. படம் ரிலீஸ் ஆனப்போ, 25 வயசாயிடுச்சு. கிட்டத்தட்ட மூணு வருட உழைப்பு. ஒரு எழுத்தாளரா வேலைபார்த்ததோட உதவி இயக்குநராகவும் வேலைபார்த்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். நிறைய விஷயங்கள் எழுதுவேன். அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாம மித்ரன் கிழிச்சுப் போட்டுவிடுவார். அப்போ `ஏன் இப்படியெல்லாம் பண்றார்'னு புரியலை. படத்தைப் பார்த்ததும்தான், அதுக்கான காரணம் தெரியுது!" என்றார். 

நடிகர் காளி வெங்கட் பேசியபோது, ``இந்தப் படத்துல எனக்குப் பெரிய கேரக்டர் இல்லை. ஆனாலும், இந்த மாதிரி நல்ல படங்கள்ல நானும் இருக்கேன்னு நினைக்கும்போது, பெருமையா இருக்கு. படத்துல `ஞானவேல்'னு எனக்குப் பெயர் வெச்சது, இயக்குநரும் ஒளிப்பதிவாளரும்தான். எனக்கு சம்பந்தம் இல்லை. தொடர்ந்து விஷால் இந்தமாதிரி பல பெரிய படங்கள் பண்ணணும், நான் அதுல நடிக்கணும்" என்றார். 

இயக்குநர் மித்ரன், ``படத்துக்கான பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பார்க்கும்போது, ரொம்பப் பெருமையா இருக்கு. அத்தனைக்கும் காரணம் விஷால் சார்தான். இந்தப் படத்தை என்னால பண்ணமுடியும்ங்கிற நம்பிக்கையை அவர்தான் கொடுத்தார். சொன்ன தேதியில ரிலீஸ் பண்ணது மாபெரும் சாதனை. அர்ஜுன் சார் இந்தப் படத்துல எப்போ நடிக்க ஒப்புக்கிட்டாரோ, அன்னைக்கே இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு. இயக்குநரா அறிமுகமாகுறதுக்கு முன்னாடி நான் குறும்படங்கள் பண்ணலை, எந்தவொரு இயக்குநர்கிட்டேயும் உதவி இயக்குநரா வேலை பார்க்கலை. அப்படியான என்னை நம்பி, இப்படியொரு வாய்ப்பு கொடுத்திருக்கார் விஷால். நன்றி!" என்றார். 

இது குறித்து எடிட்டர் ரூபன் கூறியதாவது, ``2010-ல் ஓர் உதவி இயக்குநர், ஓர் உதவி ஒளிப்பதிவாளர், ஓர் உதவி எடிட்டர் இவங்க மூணுபேரும் ஒரே வீட்ல உட்கார்ந்து, `இந்த வருடம் எப்படியாவது நாம சினிமாவுக்குள்ள போயிடணும்'னு பேசிக்கிட்டிருந்தாங்க. 2011-ம் இப்படிப் பேசிப் பேசியே கழிஞ்சிருச்சு. ஒரு கட்டத்துல அந்த எடிட்டருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சினிமா வாய்ப்பு கிடைச்சிடுச்சு, இயக்குநர் மட்டும் சும்மா இருந்தார். கிட்டத்தட்ட ஏழு வருடம் கழிச்சு அந்த இயக்குநர், `இரும்புத்திரை' மூலமா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கார். அந்த ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், அந்த எடிட்டர் நான்தான். இந்தக் கதை வேற யார் கைக்குப் போயிருந்தாலும், இரும்புத்திரை `ஈயத்திரை'யாகவோ `பிளாஸ்டிக் திரை'யாகவோ மாறியிருக்கும்!" என்றார். 

அர்ஜுன் பேசியபோது, ``Success is everthing in Life. இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்களை எழுதிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் மித்ரன் மாதிரியான அறிமுக இயக்குநர்களோட அதிகமா நான் வேலை பார்த்திருக்கேன். இந்தப் படத்தை ஒரு கமர்ஷியல் படமா மட்டும் பார்க்காதீங்க. அதுக்குள்ள இருக்கிற சோஷியல் மெசேஜையும் பாருங்க. இதுக்காக மித்ரன் பண்ண ரிசர்ச் வேலைகள் என்னைப் பிரம்மிக்க வைத்தது. எந்தவொரு கருத்து சொன்னாலும் அதைக் காது கொடுத்துப் பொறுமையாகக் கேட்கக்கூடிய தன்மை மித்ரனுக்கு அதிகமா இருக்கு.

2000-ல் எனக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர், ஒரு பையனை என்கிட்ட கூட்டிக்கிட்டு வந்து, `இவர் உதவி இயக்குநராக ஆசைப்படுறார்'னு அறிமுகப்படுத்தினார். அப்போ நான் `வேதம்' படத்தை இயக்கிகிட்டு இருந்த சமயம். அவரை உதவியாளரா சேர்த்ததுக்கு அப்புறமா, சில டெஸ்ட் பண்றதுக்காக அவரைக் கேமரா முன்னாடி நடிக்கச் சொல்வேன். அப்போதான், இவருக்கு டைரக்ஷனைவிட, நடிப்பு நல்லா வருதுனு தெரிஞ்சது. அவர் அப்பாவுக்கு போன் பண்ணி, `பையனை படத்துல நடிக்கச் சொல்லுங்க. அதுல அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்'னு சொன்னேன். அவன்தான் நீங்க பார்த்துகிட்டு இருக்குற நடிகர் விஷால். அதுக்கப்பறம் அவனுடைய வளர்ச்சியைப் பார்த்து நான் பிரமிச்சுப் போயிருக்கேன். திறமையும் நிர்வகிக்கிற பொறுப்பும் விஷாலுக்கு நிறையவே இருக்கு. காசு பார்க்காம இந்தப் படத்துக்கு அதிகமா செலவு பண்ணியிருக்கார். அதுதான் இந்தப் படத்தோட தரத்துக்குக் காரணம்" என்றார். 

அடுத்து பேசிய விஷால், ``எத்தனையோ புது இயக்குநர்களோட படம் பண்ணியிருக்கேன். ஆனா, இந்த இயக்குநரோட நான் வெறும் நடிகனா மட்டும் இல்லாம ஒரு தயாரிப்பாளராகவும் சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். இந்தப் படத்துல ரொம்ப இயல்பா நடிச்சிருக்கீங்க சார்'னு மித்ரன் என்கிட்ட அடிக்கடி சொல்வார். அதுக்குக் காரணம், இதுல இருக்கிற சில காட்சிகள் என் வாழ்க்கையோட தொடர்புடையதா இருந்தது. ஒரு சண்டைக் காட்சியில் லோன் கேட்டு வர்ற ஒருத்தரை நான் அடிக்கணும். அந்தக் காட்சியில் நான் நிஜமாகவே அவரை அடிச்சுட்டேன். அதுக்காக அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன். இந்தப் படத்துல எனக்கு வில்லனா நடிக்கணும்தான் ரொம்ப ஆசை. `இரும்புத்திரை 2' படத்துக்காக நான் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். நான் கட்சி கட்சினு போயிட்டா, `படத்தை முடிக்க முடியாது'னு ஆர்.கே.நகர் தேர்தல்ல மித்ரன் என்னை நிற்கவிடலை.  

மித்ரன் ஏற்கெனவே என்கிட்டே ஒரு கதை சொல்லி ரிஜெக்ட் ஆன பையன். அவன்கிட்ட அடுத்து கதை கேட்டகவே யோசிச்சேன். ரூபன்தான் மறுபடியும் மித்ரனை சிபாரிசு பண்ணான். என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. ஒருத்தன் கதை சொல்லி அது எனக்குப் பிடிக்காம போச்சுனா, அவனை சிபாரிசு பண்ணவனை அடிச்சிடுவேன். நல்லவேளை எனக்குக் கதை பிடிச்சிருந்ததுனால, ரூபன் என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டான். 

கல்யாணம் ஆயிடுச்சுனா ஹீரோயின்ஸ் நடிக்க வரமாட்டாங்க என்ற எண்ணத்தை உடைச்சதுக்காக சமந்தாவுக்கு நன்றி. இண்டஸ்ட்ரியில புது மாற்றத்தை உருவாக்கியிருக்காங்க. இந்தப் படத்துல ஆதார் கார்டு மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான வசனங்கள் இருக்கு. அதை யோசிக்காம பேசிய அர்ஜுன் சாருக்கு நன்றி. ஆதார் கார்டு மூலமா ஏற்படுற பிரச்னை, விவசாயிகளுக்கு லோன் கிடைக்காதது, மிலிட்ரிகாரனுக்குப் பாஸ்போர்ட் கிடைக்காதது போன்ற நிதர்சனங்களை சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்றதுதான், இந்தப் படத்தோட நோக்கம். ரிலீஸ் ஆகுறதுக்கு முதல்நாள் எனக்கு நிறைய பிரச்னைகள், மிரட்டல்கள். அதையெல்லாம் எதிர்த்துதான் இந்தப் படத்தை வெளியிட்டோம். சிறந்த சினிமாக்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒருபோதும் அஞ்சாது" என்று கூறினார். 

மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட, லைகா, நடிகர்கள் சங்கக் கட்டடம், விஷால் திருமணம் குறித்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். "சங்கக் கட்டடம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். அதற்கடுத்துதான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கணும். தமிழ் ராக்கர்ஸ், லைகா நிறுவனத்துடையதுனு சொல்றதுக்கு எந்தவொரு ஆதாரமும் நம்மகிட்ட இல்ல. அதனால அதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்!" என்று முடித்தார் விஷால்.