Published:Updated:

கிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா? - `காளி’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
கிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா? - `காளி’ விமர்சனம்
கிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா? - `காளி’ விமர்சனம்

கிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா? - `காளி’ விமர்சனம்

அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரியும் விஜய் ஆண்டனிக்கு, இதுநாள் வரை தன்னோடு இருந்தது வளர்ப்புப் பெற்றோர்கள் என்ற உண்மை தெரியவருகிறது. எனில், 'தன்னுடைய உண்மையான பெற்றோர் யார்' என்ற கேள்விக்கான விடைதேடி, இந்தியாவுக்குப் புறப்படுகிறார். விஜய் ஆண்டனியின் பெற்றோர்கள் யார், ஏன் அவரை விட்டுச் சென்றார்கள்? என்பதே `காளி' சொல்லும் கதை.

அமெரிக்காவின் மிக முக்கியமான மருத்துவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. அடிக்கடி வரும் பாம்பு, மாடு, குழந்தை கனவுக்கு விடை தெரியாமல் விழிக்கும் சூழலில், அம்மாவும் அப்பாவும் தன்னை வளர்த்தவர்களே தவிர, பெற்றவர்கள் அல்ல என்ற உண்மை தெரியவருகிறது. தனக்கு வரும் கனவுக்கும் தன் உண்மையான பெற்றோர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக உணரும் அவர், தன் தாய் தந்தை பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள கனவுக்கரை என்ற கிராமத்துக்குப் பயணப்படுகிறார். சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் மூலம் சொல்லப்படும் கிளைக் கதைகள் வழியாக, விஜய் ஆண்டனி தன் அப்பாவைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் திரைக்கதை.

நிகழ்காலக் கதைக்கு, 80-களின் ஃபிளாஷ்பேக் வழியா கதை சொன்ன விதம் சூப்பர். ஆனால், அது காட்சி வழியாகக் கடத்துவதில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. மருத்துவம், வளர்ப்புப் பெற்றோர், கனவு, பெற்றோரைத் தேடும் படலம் எனச் சுற்றிவரும் கதை, கடைசியில் சாதி ஏற்றத்தாழ்வுகளில் முடிவது ஓகே. ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே பழக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ரொம்பவே வீக்! திணிக்கப்பட்ட பாடல்கள், தேவையற்ற சில காட்சிகள், வீரியம் இல்லாத அல்லது ரொம்பவே ஓவர் டோஸான சில காட்சிகள் எனப் படத்தில் இருக்கும் டேமேஜ்கள் எக்கச்சக்கம். 

கேரக்டருக்குப் பொருந்திப் போகிறார் விஜய் ஆண்டனி. ஆனால், ஸ்லோமோஷன் பேச்சும், வெரைட்டி ரியாக்‌ஷன் காட்டாத முகமுமாய் இன்னும் எத்தனை படத்தில்தான் தொடர்வார் எனத் தெரியவில்லை. ஃப்ளாஷ்பேக்கில் கல்லூரி மாணவர், திருடன், சர்ச் ஃபாதர்... என கெட்அப்-களில் வெரைட்டி காட்டியிருந்தாலும், நடிப்பில் ஒரே ரகம்தான்! அதில், ஃபாதர் கேரக்டர் மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்க்கிறது. 

இந்தியாவுக்கு வரும் டாக்டர் விஜய் ஆண்டனிக்கு, எடுபிடியாக யோகிபாபு. முதல்பாதி படத்தை முற்றிலுமாகத் தாங்கிப்பிடிக்கும் இவர், சிரிக்கவைக்கவும் தவறவில்லை. அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள். இதில், ஷில்பா மஞ்சுநாத் தவிர மற்ற அனைவருக்கும் `வந்துபோகும்' கதாபாத்திரங்கள்தான்.

நாசர், ஜெயப்பிரகாஷ், மதுசூதன் ராவ் ஆகிய மூவரின் கதாபாத்திரத்தைத் தவிர, படத்தில் இடம்பெற்ற மற்ற கேரக்டர்களான வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என அனைவருமே திரைக்கதையை நகர்த்த மட்டுமே உதவியிருக்கிறார்கள். அதில் ஆர்.கே.சுரேஷின் நடிப்பு மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறது. 

விஜய் ஆண்டனி இசையில் 'அரும்பே...' பாடல் செம்ம. 2018, 1980 என இரு தளங்களில் பயணிக்கும் திரைக்கதையைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். பீரியட் ஃபிலிமுக்கு, கலை இயக்குநரின் பங்களிப்பு மிக முக்கியம். அதைக் கலை இயக்குநர் உணர்ந்தால் சரி.  

கார்டியோ சர்ஜனாக வரும் விஜய் ஆண்டனி, பொது மருத்துவம் முதல் டி.என்.ஏ டெஸ்ட் வரை... அனைத்தையும் சர்வ சாதாரணமாகக் கையாள்வதெல்லாம்? இப்படி லாஜிக் மிஸ்டேக்ஸும் அதிகம். 80-களில் போலியோ டிராப்ஸ் போட கிராமம் தேடி வந்தார்களா என்ன?

'உடனே ஓகே சொல்ற பொண்ணு விட்டுட்டுப் போயிடுவா, சுத்தவிட்டு ஓகே சொல்ற பொண்ணுதான் கூடவே இருப்பா!' போன்ற வசனங்களுக்கு, 'பெண்' இயக்குநர் கிருத்திகா உதயநிதிதான் சொந்தக்காரர். 

நல்ல கதை, கலர் கலரான முகங்கள் என அலங்காரங்களுக்கு மெனக்கெட்ட இயக்குநர் கிருத்திகா, திரைக்கதைக்கும் காட்சி அமைப்புகளுக்கும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால், 'காளி' ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு