Published:Updated:

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''
பிரீமியம் ஸ்டோரி
“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

Published:Updated:
“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''
பிரீமியம் ஸ்டோரி
“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''
“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

மல், எப்போதும் ஓர் ஆச்சர்யம்!

‘ஹே ராம்’ நேரத்துப் பேட்டியின்போது ‘கப்பலோட்டிய தமிழன்’ போல ஓர் ஆசாமியைப் பார்த்தோம். இப்போது ஹைடெக் நிபுணர்போல, கம்ப்யூட்டர் முன் இருந்தார் ‘தெனாலி’ கமல்.

அவரது பரிமாணங்களும் தோற்றங்களும் படத்துக்குப் படம் வியப்பூட்டுகிற விஷயம்.

‘`ஒரு மணி நேரம்தான்...’’  என்றார் உதவியாளர். ஆனால், பேட்டி முடிந்தபோது முழுதாக மூன்று மணி நேரத்தைத் தின்றிருந்தோம்.சந்திப்பில் இருந்து...

`` `தெனாலி’யில் கமல் முத்தம் குடுக்கிறாரா...இல்லையா?'னு தமிழ்நாட்டுல பட்டிமன்றம் மாதிரி பேசுறாங்க. இதெல்லாம் உங்களுக்குச் சங்கடமா தோணுமா?”

“முத்தம், எல்லாரும்தான் கொடுக்கிறாங்க. எங்க அப்பா, எங்க அம்மாவுக்குக் கொடுத்ததுபோக மிச்சம்தான் நான் கொடுப்பது. சொல்லப்போனா, என் அம்மா-அப்பா முத்தத்தின் சத்தம்தானே நான். அதனால, அது ஒரு பாவச்செயலா எனக்குத் தெரியலை.

தமிழ் சினிமாவுல நான் முத்தம் தர தொடங்கி, இது சில்வர் ஜூப்ளி வருஷம். அதனாலதான் இந்த விமர்சனங்கள் வருதோ, என்னவோ! முத்தமும் ரத்தமும் முக்கியம். அதுக்குத் தரவேண்டிய மரியாதையையும் தனி இடத்தையும் ஒதுக்கிட்டோம்னா சுகாதாரமான சூழல் வந்துடும்.
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நாம செலவு பண்ற இடம் படுக்கை அறை. ஆனா, அதைச் சுத்தம் இல்லாம அசிங்கமா சுருட்டிவெச்சுட்டு, திண்ணையை மட்டும் பிரமாதமா வெச்சிருக்கணும்னா... அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

கமல் நடிக்கிறானா... இல்லையா என்பதைத் தள்ளிவிட்டு, அவன் முத்தம் தருகிறானா... இல்லையானு சிலர் துப்புத்துலக்கினா, என்னங்க சொல்றது?”

‘`அதேபோல, ` ‘ஆளவந்தான்’ல கமல் நிர்வாணமா நடிக்கிறார்'னு ஒரு நியூஸ். என்ன கலாட்டாங்க அது?”


`` ‘தெனாலி' செம ஜாலியான படம். அதுல ஒரு எலி வருது. கதையில் அது எலி சைஸ்லதான் வரும். ஆனா, அதையே யானை சைஸுக்கு எழுதிட்டாங்க. எல்லாத்தையும் அப்படியே பண்றாங்க.

‘ஆளவந்தான்’ல ஒரு ஸ்டில் வந்தது. உடனே ‘கமல் அம்மணமா நடிக்கிறான்’னு ஒரே பேச்சாகிட்டது. ‘கமல் இப்படித்தாம்ப்பா செய்வான்’னு ஆரம்பிச்சுட்டாங்க. அந்த மாதிரி நடிக்கணும்னு எனக்கு என்ன ஆசையா? என் வயசுக்குத் தொப்பை விழாத உடம்பு இருக்கு. படத்துக்கு அது தேவைப்பட்டா, தைரியமா சட்டையைக் கழட்டலாம். அவ்வளவுதான்!

‘ஆளவந்தான்’, ஒரு ஆக்‌ஷன் படம்; இரண்டு எரிமலைகள் மோதுகிற படம். ஹீரோவும் நான்தான்; வில்லனும் நான்தான். மொட்டைபோடுறேன். கமாண்டோ ஃபோர்ஸ் போய் ட்ரெய்னிங் எடுக்கிறேன். இப்படிச் சொல்ல எவ்வளவோ இருக்கு. ஆனா, அரை நிர்வாணம்னுதான் ஆரம்பிக்கிறாங்க. கோபப்படுறதா என்னன்னு புரியலை!

‘ஹே ராம்’ ஆரம்பித்ததும் இப்படித்தான் திடீர்னு ‘காந்தியைத் திட்டுறான்’னு ஒரு ரவுண்ட் எழுதிட்டாங்க. படம் வந்ததுக்கு அப்புறம் அது அசட்டுத்தனமாப்பட்டிருக்கும். எனக்கு அப்போ வருத்தம் வந்தது. காந்தி, என்னோட ஹீரோ. ஒரு நல்ல விஷயம் சொல்லவந்தேன். இன்னும்கூட சிலபேர் ‘படத்துல ரகசியமா காந்தியைத் திட்டுறீங்கதானே?’னு கேட்கிறாங்க. ‘ஹே ராமி’ன் தோல்வியே அங்கேதான் ஆரம்பிச்சதுனு நினைக்கிறேன்.”

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`அந்தத் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?”

‘`என்னோட ஒவ்வொரு படமும் எக்ஸர்சைஸ் பண்ற மாதிரிதான். இதுதான்னு கம்ப்ளீட்டா ஒரு படமும் தர்றது இல்லை. ரிலீஸான பிறகுதான் ‘அடடா... முடிச்சுக்கொடுத்திருக்கலாமே’னு தோணும். கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். என்னுடைய எந்த புராடெக்ட்டுமே இறுதி வடிவம்னு கிடையாது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் முடியும்போதுதான் குள்ளனா எப்படி நடிப்பதுனு முழுமையாகக் கத்துக்கிட்டேன். இது சினிமா நடிகனுக்கே உரித்தான சோகம்.”

‘`கமல் ஒரு படம் சீரியஸா பண்ணா, அடுத்த படம் ஜாலியா பண்ணுவார். அந்த இரண்டாவது படத்தைப் பார்த்துக்கலாம்னு சிலர் இருக்காங்களோ?”


(சிரிக்கிறார்) ‘`எனக்கு அந்த ஒரு பயம் உண்டு. நானேகூட அதுக்குக் காரணமா இருக்கலாம்.”

‘`ஒரு படம் எவ்வளவு சிரமங்களோடு செய்து, அது போய்ச் சேரலைன்னா மனசு தளர்ந்துடாதா?”

`` ‘ராஜபார்வை’ சரியில்லைனு சொன்னபோது குமுறிக்கிட்டுக் கோபம் வந்தது. ‘பதினாறு வயதினிலே’கிட்ட அது வரமுடியலை; ‘மூன்றாம்பிறை’கிட்ட அது வரமுடியலை. ஆனாலும் ‘ராஜபார்வை’யும் பெரிய படம்தான்னு அப்போ சொன்னேன். ஏன்னா, அது `வியர்வை காயறதுக்கு முன்னாடி தோண்டின குழியை மறுபடியும் மூடுறா’னா, குழிக்காரனுக்கு வர்ற கோபம். ‘காலையில சொல்லியிருக்கலாமே’ அப்படிம்பான்.

இப்போ ஒருநாள் அதை சரிகாவுக்குப் போட்டுக் காட்டினேன். அவங்க நல்ல சினிமா ரசிகை. படம் பார்த்துட்டு, ‘க்யூட் ஃபிலிம். ஆனா, அந்த மசாலா இல்லை கமல். பஞ்சுமிட்டாய் மாதிரி இருக்கு’னுட்டாங்க.

‘ராஜபார்வை’யில ஒரு முதல் எழுத்தாளனின் எல்லா ஆர்வக்கோளாறுகளும் தெரியும். அதை ஒப்புக்கொண்டு அதில் இருந்து மேம்பட்டதால்தான் நான் இன்னிக்கும் இருக்கேன். ‘சகலகலாவல்லவன்’க்குப் பிறகு எடுத்த படம். ஏன் சொல்றேன்னா, சினிமா பண்றது என் வேலை. நான் சொல்வதுதான் நியாயம்னு நிரூபிக்கிறது இல்லை. சொல்லிப்பார்ப்பேன், சரியில்லைன்னா ‘அப்படிங்களா... அது தப்புங்களா..? சரி, மாற்றிடுவோம். அடுத்த படம் எடுத்துத் தர்றேன்’னு கிளம்பிடுவேன். அதுதான் சொன்னேன்... என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை.”

``இப்போ கமல்னாலே `மருதநாயக'மும் ஞாபகம் வந்துடும். எப்படி இருக்கார், அந்தச் சரித்திர நாயகர்?”

“பணம் வேணும். ஏழு மில்லியன் வேணும். ஆறு மில்லியன் கிடைச்சாக்கூட ஆரம்பிச்சுடுவேன். அதுவும் டாலராத்தான் வேணும். திரவியம் தேடிக்கிட்டே இருக்கேன்.

‘அது நல்லா பண்ணியிருந்தீங்க... இது அசத்திட்டீங்க’னு என்னை எது எதுக்காகவோ யாராவது பாராட்டுறப்போ, பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துட்டிருக்கேன். முக்கியமான ஆளு ஒருத்தன் வரணும். அப்புறம் மொத்தமா சந்தோஷமா சிரிக்கலாம்னு.”

‘`சம்பாதிக்கிறதை எல்லாம் இப்படி சினிமாவுலயே கொட்டி ரிஸ்க் எடுக்கிறது ஏன்?”

‘`எல்லாம் அங்கே இருந்துதானே வந்தது. `கோடி ரூபாய் இருந்தா என்ன பண்ணுவீங்க?'னு ஒரு பூசாரிகிட்ட கேட்டா, ‘தங்கத்துலயே கோயில் கட்டுவேன்’பான். ஒரு ஆண்டிக்கிட்டே கேட்டா, ‘தங்கத்துல ஒரு திருவோடு. அப்படியே திண்ணையில படுக்க தங்கத்துலயே ஒரு தலைகாணி’னுதான் யோசிப்பான். புத்தி அப்படித்தான் போகும். நான் சினிமா ஆளு இன்னும் பெரிசா ஒரு படம் எடுக்கத்தான் ஆசைப்படுவேன்.”

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

`` ‘மருதநாயகம்' மாதிரியே உங்களோட இன்னொரு கனவு பாரதியார், இன்னொருத்தர் நடிச்சு இப்போ ‘பாரதி’ படமே வந்துவிட்டது. நீங்க பார்த்தீங்களா?”

‘`நிச்சயமா `பாரதி' படத்தை மறுபடியும் பண்ணலாம். ராமாயணத்தை கம்பன் மட்டுமா எழுதினான்? என்னென்னவோ பேர் இருக்கே... ஒட்டக்கூத்தர்கூட கொஞ்சம் முயற்சி பண்ணினார்.

‘பாரதியார்’, ‘காந்தி’ படங்களை எல்லாம் இன்னும் யாரும் பண்ணலை. அதற்கான முயற்சிகள் பண்ணியிருக்கோம். நான் அட்டன்பரோவையும் சேர்த்துத்தான் சொல்றேன்.”

‘`ஒருகட்டத்துல கமல், ரஜினி ரெண்டு பேரும் ஒரே மாதிரி படங்கள்தான் பண்ணிட்டிருந்தீங்க. ‘நாயகன்’, ‘குணா’, ‘மகாநதி’னு கமல் எங்கே அந்தப் புது ட்ராக்கைப் பிடித்தார்?”

‘` `விக்ரம்’ படம் முடித்ததுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கையில் எல்லா முக்கிய முடிவுகளையும் எடுத்தேன்; துணிச்சலா எடுத்தேன். என் புதுத் திருமண வாழ்க்கை உள்பட எல்லாம் எப்படி இருக்கணும்னு தீர்மானிச்சேன். வீரத்தைக் காட்டணும்னு இல்லை. எது நியாயம்னுபட்டதோ, அதைச் செய்தேன்.

எல்லாரும் பயமுறுத்தினாங்க. ‘உங்களைக் கல்லால அடிப்பாங்க’னார் ஒரு டைரக்டர். ‘இதெல்லாம் வெளியே சொல்லக் கூடாது. தனியா ஒரு சின்ன வீடா ஒதுக்கி, லண்டன் பக்கம் வெச்சிருங்க’னாங்க. என்னால அதை ஒப்புக்க முடியலை. பொய்யாவே வாழறதுங்கிறது முடியாதுனு தோணுச்சு. அந்த அளவுக்குக் குழப்பங்கள். அதை எல்லாம் ‘புத்திகொள்முதல்’னு சொல்வாங்க. நான் அதை லாபம்னு நினைக்கிறேன்.

அதுதான் என்னை ஒரு படைப்பாளியா மேம்படுத்தின காலங்கள். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பித்தேன். பொய் பேசுறதைக் குறைச்சுட்டேன். என்னால நேர்மையா ஒருத்தரைத் திட்ட முடியுது. தப்புன்னா, உடனே ‘ஸாரி’ கேட்க முடியுது!

மனசுல பட்டதைப் பேசுறேன். பிடிச்சதைப் படமா பண்றேன். நிம்மதியா இருக்கு. ‘என்ன பண்றீங்க?’னு யாராவது கேட்டா, ‘ஹாலிடேஸ்ல இருக்கேன்’னு சொல்வேன். ‘எத்தனை நாளா?’னு கேட்டா, ‘பதினைஞ்சு வருஷங்களா!’னு சொல்வேன். `அதுக்கு எனக்குச் சம்பளமும் தர்றாங்க'னு சொல்வேன். எனக்குப் பிடித்ததைச் செய்யும்போது, அதுதானே ஹாலிடே. நான் சந்தோஷமா இருக்கேன். அதுல ஜனங்களும் எங்கேயாவது சந்தோஷப்படுறாங்கன்னா கிரேட்!”

`` `தமிழ்நாட்டுல, திறமைக்கு எப்பவுமே ரெண்டாவது இடம்தான்’னு ரொம்ப வருத்தத்தோட லட்சுமி சொல்லியிருந்தாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?”


“எதை  முதல்  இடமா   நீங்க நினைக்கிறீங் கங்கிறதைப் பொறுத்த விஷயம் அது. ஔவையாரின் இடம் எது? மகாராஜாக்களே எழுந்து நிற்கிற இடம். அதியமானுக்குக் கிடைச்ச இடம் ஒளவையாருக்குக் கிடைக்கலேயேனு பேச முடியாது. ஔவையார் குதிரையில ஏறியிருந்தா, ஒருவேளை ஜான்சி ராணியாக்கூட ஆகியிருக்கலாம். அவங்க கவிதையில ஏற ஆசைப்பட்டாங்க. அது, அவங்க விருப்பத்தோடு எடுத்துக்கிட்ட இடம். பெர்சனலா தமிழ் மக்கள், என்னை அன்பா வெச்சிருக்காங்க. ‘ஹே ராம்’ எடுத்த என்னை இன்னும் வாழவெச்சிருக்காங்களே... (சிரிக்கிறார்)
நான் எதை நோக்கி உழைத்தேனோ, அதற்கான பலன்களை அனுபவிக்கிறேன். ரஜினி என்னென்ன தேடி உழைத்தாரோ, அதற்கான பலன்களை அவர் அனுபவிக்கிறார்.

எங்க வீட்டை எடுத்துக்கலாமே... எங்க அண்ணன்கள் வக்கீல்கள். நான் படிக்காதவன். ஆனா, இன்னிக்கு இன்கம்டாக்ஸ் அதிகம் கட்டுறது நான்தான். ‘முதல் பையன் நல்லா படிச்சான். அவனுக்கு எதுவுமே கிடைக்கலை. இரண்டாவது பையன் சும்மா இருந்தான். அவனுக்கு எல்லாமே கிடைச்சிருச்சு'னு எங்க அம்மா ஆதங்கமா சொல்றது மாதிரிதான் இது!”

``சிங்காரச் சென்னையில் சந்தோஷமா இருக்கீங்களா?’’

``இரண்டு நதிகளுக்கு இடையில் உருவானதுங்க இந்தச் சென்னைப் பட்டினம். இப்போ அது நதி இல்லை. பிரமாண்டமான சாக்கடை. நாறுது. இது ஏதோ நேத்து ராத்திரி நடந்த விபத்து இல்லை. காலங்காலமா தொடரும் தப்பு. அந்தத் தப்புல உங்க பங்கும் என் பங்கும் இருக்கு.
நியாயமாப் பார்த்தா, மெட்ராஸ்காரனுக்குப் பொண்ணுகூடத் தரக் கூடாது. `உன்னால ஒரு நதியைக்கூடக் காப்பாத்த முடியலியே... அப்புறம் எப்படிடா என் பொண்ணை வெச்சுக் காப்பாத்துவே?’னு விரட்டிவிட்டுரணும்.

ஆழ்வார்பேட்டையில் என் வீடு கட்டினப்போ அது ஆறு படிகள் வெச்ச உயரமான வீடு. இப்போ அதே வீடு பள்ளத்துல போயிருச்சு. ரோடு, மேல வந்துருச்சு. வருஷாவருஷம் டின் டின்னா தாரையும் கல்லையும் கொட்டிக்கிட்டே போனா அப்படித்தான் வரும். முழங்கால் அளவுக்கு ஆழமா இருந்த என் வீட்டுச் சாக்கடையில், இப்ப முழு ஆள் முங்கலாம். அவ்வளவு உயரமாகிருச்சு ரோடு.

இப்பத்தான் ரோட்ல குப்பை அள்ள ஆரம்பிச்சிருக்கோம். கூவத்துல குடிக்கத் தண்ணி பிடிக்கிறதுக்கு இன்னும் எவ்வளவு வருஷம் ஆகும்னு தெரியலை! ஆனா, என் பேரக் குழந்தைகளோடு கூவம் தண்ணியை விசிறி அடிச்சு விளையாடினாத்தான் என் மனசு ஆறும்!’’

“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை!''

``கமல் - ரஜினினு ஒப்பிட்டுப் பார்க்கிற பழக்கம் இன்னிக்கும் இருக்கு. அந்தப் போட்டி இருக்கா..?’’

``ரஜினியை என்னோட போட்டியா நினைச்சா, அவர் செய்றதை எல்லாம் நானும் செய்யணும் அல்லது அவரைவிட சிறப்பா செய்யணும்கிற மனப்பான்மை எங்க ரெண்டு பேருக்கும் வந்திருக்கும்.

திறமைகளிலும் சரி, சித்தாந்தங்களிலும் சரி, எங்க இரண்டு பேருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் உண்டு. என்னைக் கேட்டா `ஒவ்வொண்ணும் புதுசா செய்யணும்!’னு  சொல்வேன். அவரோ எல்லா பெருமைகளையும் ஒப்புக்கிட்டு, `இருந்தாலும் மக்களுக்குப் பிடிக்கிறதைத்தான் செய்யணும்’னு முடிப்பார். ஆரம்பத்தில் இருந்தே நானும் ரஜினியும் பேசிக்கிற விஷயம்தான் இது. இதில் என்னோட முடிவு - என் படங்களா வருது. ரஜினியின் கருத்து - அவர் படங்களா வருது!

போட்டினு வந்துட்டா... தேவை இல்லாத சில சலனங்கள் வரும். என்னால ஓர் ஓட்டப்பந்தய வீரனாவோ, குத்துச்சண்டைக்காரனாவோ வந்திருக்க முடியாது. ஒருவேளை ரெளடியாகி இருக்கலாம். ஏன்னா, ஒரு குறிப்பிட்ட டைம்ல ஒரு கூட்டமே சுத்தி நின்னுட்டு, `கமான்... கமான்...’னு பிரஷர் தந்தா, அந்தப் பதற்றத்துல நான் தோத்துடுவேன். டென்ஷன் தாங்காம க்ளவுஸைக் கழட்டிப் போட்டுட்டு வந்திருவேன். என்னை யார் யாரோ நிர்ணயம்பண்றது சரிவராது. நான் முடிவுபண்ணி, இது என்னால் முடியும்னு இறங்கி... நினைச்சதைச் செஞ்சு ஜெயிக்கணும். அதுதான் கரெக்ட்டா வரும்.

எனக்கு அழகா கோலம் போட வரும்னு வெச்சுக்குங்க. அவருக்கு முன்னாடி கோலம் போடுறமா... இல்லையாங்கிறது முக்கியம் இல்லை. நிதானமாவும் போடலாம், சீக்கிரமாவும் முடிச்சுடலாம். கோலம் நினைச்ச மாதிரி வருதாங்கிறதுதான் எனக்கு முக்கியம்.’’

``தவறு செய்ததா, அரசியல்வாதிகள் ஜெயிலுக்குப் போற காலம் ஆரம்பிச்சிருச்சு... இது நல்ல ஆரம்பம்தானே?’’

``இப்போ அரசியல்வாதிகளைத் திட்டுறது ஓல்டு ஃபேஷன் ஆகிருச்சு. எல்லாரும் திட்டிட்டாங்க. முதல்ல தப்பு எங்கேனு பார்க்கணும்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருட்டு, ஊழல்னு அரசியவாதிகளைத் திட்டுறோமே... அவன் எங்கே இருந்து வர்றான்? நமக்குள்ளே இருந்துதானே வர்றான்! இந்தக் கூட்டத்துலேர்ந்து வர்றவன் திருடனாத்தானே இருக்க முடியும்.

நீ எதையாவது குடம், வடம்னு வாங்கிட்டு ஓட்டு போடுறீயே... சாதி பார்க்கிறியே... நீதானே தூக்கிவிடுறே. அப்போ திருடன்தான் வருவான்.

குள்ளனுக்குப் பிறக்கிற குழந்தையும், குள்ளனாகத்தான் பிறக்கணும்கிற மாதிரி ஜெனட்டிக்கா இந்த கரப்ஷனைப் பண்ணி வெச்சிருக்கோமே.

நிறையச் சரிபண்ணணும் சார். சேவை செய்றவனை மதிக்கணும். வாத்தியாருக்கும் போலீஸ்காரருக்கும் மரியாதை கிடையாது. அதைத் தந்ததாத்தான் இந்தத் தேசம் உருப்படும். நீங்க மரியாதை தரலைன்னா, அவன் ஒழுக்கத்தில் இருந்து எல்லாத்தையும் கொஞ்சம் குறைச்சுக் கிட்டுத்தானே திரும்பக் குடுப்பான்.’’

``கமலுக்கும் வயசாகும்னா அது ஆச்சர்யம்தான். `அடடா... நம்ம ரொமான்டிக் இமேஜ் போகுதே!'னு நீங்க கவலைப்படுறது உண்டா?’’

``இந்த விஷயத்தில் ரசிகர்களை எதிர்கொள்வதற்கு முன்னால் நான் தயாராகிவிட்டேன். ரசிகர்கள் சொல்லிக்காட்டி, `ஓ... ஆமாம்!’னு அசடு வழியக் கூடாது. என்னோட டைரக்டர்ஸ்கிட்ட இதை நான் சொல்லிட்டே இருப்பேன். ஏன்னா, வயது பற்றி பதற்றம் வந்துட்டா, போலிப் பணிவு வரும். பொய்கள் வரும். நான் `எட்டடி உயரம்’னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அஞ்சு அடி எட்டரை அங்குலம்தான்னு சொல்லிடுறது நல்லது.

எனக்கு இன்னும் நிறையப் பரிமாணங்கள் இருக்கு. என் வயசுக்கு ஏத்த மாதிரி பண்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறப்போ, பதற்றப்படவேண்டியது இல்லை. ஏன்னா... பதற்றம் வந்ததுன்னா நான் ரிட்டையர்டு ஆகிடுவேன்!’’

- ரா.கண்ணன், செல்லா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism