Published:Updated:

``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே!'' - கமலிடம் சொன்ன ரஜினி

அய்யனார் ராஜன்

காவிரி தொடர்பாக பேசப் கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடர்பான கட்டுரை.

``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே!'' - கமலிடம் சொன்ன ரஜினி
``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே!'' - கமலிடம் சொன்ன ரஜினி

காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கமல்ஹாசன் முன்னெடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தி.நகரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. ஆளுங்கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுங்கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. 'திமுக தனியாக ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருப்பதால், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் பங்கெடுக்கவில்லை. 'எங்களுடன் உள்ள 9 கட்சிகள் கமல் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தேவையில்லை என நினைக்கின்றன' என்று சொல்லிவிட்டார் மு.க.ஸ்டாலின். அதேநேரம், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏ.கே. மூர்த்தியுடன் வந்திருந்தார். டி.டி.வி தினகரன் சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். இவர்கள் இருவரும் கமலுக்கு இடமும் வலமுமாக அமர்ந்திருந்தனர். அர்ஜுன் சம்பத், அய்யாக்கண்ணு, பி.ஆர் பாண்டியன், வேட்டவலம் மணிகண்டன், பேராசியர் ஜனகராஜன், காந்தி கண்ணதாசன், நடிகர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டவர்களில் சிலர்.

தாமதமாக வந்து சேர்ந்த லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூட்டம் நடந்த அரங்கத்துக்குள் சென்ற சில நிமிடங்களிலேயே வெளியேறினார். வெளியே வந்தவரின் காரசாரமான பேச்சு அப்படியே..

''நான் டெல்டா மண்ணுக்காரன். அந்த உணர்வோட வந்தேன். நண்பரும் திரைத்துறையில என்னோட சீனியருமான 'மனித நேய மக்கள் கட்சி'த் தலைவர் (டங் ஸ்லிப்பா, வேணும்னே சொன்னாரா தெரியலை) கமல்ஹாசன் என்னைக் கூப்பிட்டப்பவே, 'இதுல நான் கலந்துக்கிறதுல சில முரண்பாடு இருக்கு. ஆனாலும் நீங்க கூப்பிட்டதுக்காக வர்றேன்'னு சொன்னேன். தமிழனுக்கு, தமிழ் விவசாயிக்குக் குரல் கொடுக்கணும்னா, நான், என் புள்ள எஸ்.டி.ஆர் ரெண்டு பேருமே எப்பவுமே ரெடி. காவிரியில உண்மையான துரோகம் செஞ்சவங்க யாரு? அவங்கதான் இன்னைக்கு நடைபயணம் போயிட்டிருக்காங்க. ஆமாங்க, ஓபனா சொல்றேன். திமுக மட்டும் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்..''

பேசிக்கொண்டே போனவரிடம் குறுக்கிட்ட செய்தியாளர்கள், 'திமுக தான் கலந்து கொள்ளவில்லையே, நீங்க ஏன் பாதியிலேயே வெளியேறி வந்துட்டீங்க' என்றார்கள்.

'ஆக்கபூர்வமா பேசி முடிவு எடுங்க. அப்படி எடுக்கிற எந்த முடிவையும் லட்சிய திமுக ஆதரிக்கும்னு சொல்லிட்டு வந்திருக்கேன். எனக்கு பேங்க்ல ஒரு பிரச்னை. போய் கையெழுத்து போடணும். சாயங்காலம் வெளியூர் பயணம் இருக்கு' என்றபடி கிளம்பினார்.

மூன்று மணி நேரம் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை கமல் வாசித்தார்.. கீழ்க்காண்பவை அவற்றுள் முக்கியமானவை.

1.காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு செயல்படுத்தப்பட வேண்டும்

2.தமிழகத்தில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களைத் தூர்வாறி மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

3.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளித்தார்கள். சில கேள்வி-பதில்கள் இங்கே..

கேள்வி :  ரஜினியோ அல்லது அவர் சார்பாகவோ இந்தக் கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லையே?

கமல்ஹாசன் : ரஜினியை அழைத்தேன். அப்போது நீங்க கட்சி தொடங்கிவிட்டீர்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை. கட்சியே ஆரம்பிக்காத நான் கலந்துக்கிட்டா எந்தக் கணக்குல அவரை அழைச்சீங்க'னு உங்களுக்குக் கேள்வி வரலாம்னு சொன்னார். அவர் பங்கெடுத்திருக்கலாம்கிறது என் கருத்து.

கேள்வி : மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறார். இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

கமல்ஹாசன் : கூட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்த வார்த்தைகள் வந்திருக்குமென நம்புகிறேன். அடுத்தடுத்தும் கூடவுள்ளோம். அப்போதும் அழைப்போம்.

கேள்வி : உள்ளாட்சித் தேர்தலில் பாமகவும் மக்கள் நீதி மய்யமும் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?

அன்புமணி ராமதாஸ் : தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலே நடக்கப் போறதில்லையேங்க