Published:Updated:

"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்!" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11

"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்!" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11
"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்!" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11

அப்போ இப்போ கதை சொல்கிறார் 'சேரன் பாண்டியன்' சித்ரா

'ஷேவ் பண்ணாத தாடியுடன் கையில் மாலையை வைத்துக்கொண்டு ஶ்ரீவித்யாவைப் பார்க்கக் காத்திருந்தபடி, தமிழ் சினிமாவுக்குள் ரஜினி அடியெடுத்து வைத்த 'அபூர்வ ராகங்கள்' க்ளைமாக்ஸை யாரும் மறக்கமுடியாது. ஶ்ரீவித்யாவின் கச்சேரி நடக்கும் அந்த அரங்கத்தின் வாசலில் வந்து நின்ற ரஜினி, ஒரு சிறுமியை அழைத்து, அந்தச் சிறுமி கையில் தன்னுடைய மன்னிப்புக் கடிதத்தைக் கொடுத்து, ஶ்ரீவித்யாவிடம் கொடுக்கச் சொல்வார். அந்தச் சிறுமிதான், இந்தவார 'அப்போ இப்போ' நாயகி.

பின்னாளில் 'ஊர்க்காவலன்', 'சேரன் பாண்டியன்', 'என் தங்கச்சி படிச்சவ' போன்ற பல படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்திருந்த சித்ராதான் அவர். தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து 'நல்லெண்ணெய்' சித்ரா எனவும் அறியப்பட்ட இவருக்கும் 'அபூர்வ ராகங்கள்'தான் அறிமுகப்படம்.

'ரஜினியுடன் அறிமுகமானவங்களா நீங்க?' என்றால், 'அட ஆமால்ல, நானே இதை நினைச்சுப் பார்த்ததில்லையே!' எனச் சிரித்துவிட்டு, பேசத் தொடங்குகிறார்.

`` `அபூர்வ ராகங்கள்' சான்ஸ் கிடைச்சதே ரொம்ப சுவாரஸ்யமான கதை. சென்னையில ஐ.சி.எஃப்-ல அப்பாவுக்கு வேலை. வீடும் கம்பெனியும் பக்கத்துலேயே இருந்துச்சு. என் அத்தை வீடு வடபழனி. கோடை விடுமுறைக்கு அங்கே போறது வழக்கம். பக்கத்துல ஏவி.எம்-ல ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கக் கூட்டிக்கிட்டு போவாங்க. நடிகர் நடிகைகள் பெரிய பெரிய கார்ல வந்து போறதைப் பார்த்தாலே பிரம்மிப்பா இருக்கும். ஆனா, சினிமாவுக்கும் எங்க குடும்பத்துக்கும் தொடர்பில்லை. ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துப் பழகி, எங்கே ஷூட்டிங் நடந்தாலும் பார்க்கணும்கிற ஆசை வந்திடுச்சு. எனக்கு மட்டுமில்ல, அப்பாவுக்கும். அதனால, ஷூட்டிங் நடக்குற இடங்களுக்கு நானும் அப்பாவும் போயிடுவோம்.

அப்படித்தான் ஒருநாள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பிட்டிருந்தோம். வழியில 'நாரத கான சபா'வுல 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஒதுங்கினதுல, அப்பா ஒரு பக்கமாகவும், நான் ஒரு பக்கமாவும் போயிட்டோம். அப்போ, எனக்கு ஆறு வயசுதான். பின்னாடி இருந்து கூட்டம் என்னை நெருக்கித் தள்ள, தடுமாறி கேமராவுக்கு முன்னாடி போய் விழுந்துட்டேன். உடனே, 'கட்... கட்'னு சத்தம். ஓடிவந்து சிலர் என்னைத் தூக்கி விட்டாங்க. சிலர் திட்டுனாங்க. திரும்பிப் பார்த்தா, அப்பாவையும் காணோமா... அழுதுட்டேன். படத்தோட டைரக்டர் கே.பாலச்சந்தர் சார் என் பக்கத்துல வந்து, 'சரி பாப்பா அழாத. யார்கூட வந்தே'னு கேட்டார். அதுக்குள்ள அப்பா என்கிட்ட வந்துட, அவருக்கும் வசவு. 'தெரியாம நடந்திடுச்சுங்க'னு ஸாரி கேட்டுட்டு, அப்பா என்னைக் கூட்டிட்டுக் கிளம்பிட்டார்.

கொஞ்சதூரம் போயிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து ஒருத்தர் ஓடி வர்றார். 'டைரக்டர் உங்களைக் கூப்பிடுறார்'னு சொல்றார். பயந்துக்கிட்டே போனோம். 'எப்படியோ ஃபீல்டுக்குள்ள வந்து விழுந்துட்ட. பட்டுப் பாவாடையெல்லாம் கட்டியிருக்க. இந்தப் படத்துல நடிக்கிறியா'னு கேட்டார், கேபி சார். என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருக்க, 'ஒன்னுமில்ல, இந்த அங்கிள் தர்ற ஒரு பேப்பரை அந்த ஆன்ட்டிகிட்ட போய்க் கொடுக்கணும்... அவ்ளோதான்!'னு சொன்னார். ரஜினிகிட்ட இருந்து கடிதத்தை வாங்கிட்டுப்போய் மேடையில பாடிக்கிட்டு இருக்கிற ஶ்ரீவித்யாகிட்ட கொடுக்கணும். சந்தோஷமா வாங்கிக் கொடுத்துட்டுக் கிளம்பினேன். 'லன்ச் சாப்பிட்டுப் போங்க'னு சாப்பாடு போட்டு அனுப்பினாங்க. படத்துல அந்தக் காட்சி அப்படியே வர, தமிழ் சினிமாவுல நானும் என்ட்ரி ஆகிட்டேன்.

அப்பாகிட்ட தொடர்புலேயே இருக்கச் சொன்ன கே.பி சார் அடுத்து, 'மூன்று முடிச்சு' படத்துக்காகக் கூப்பிட்டார். ஆனா, ஸ்கூல்ல லீவு தராததுனால, அந்தப் படத்துல நடிக்க முடியலை. ஆனாலும் அடுத்த கொஞ்சநாள்ல 'கவிதாலயா' ரெகமன்டேஷன்லேயே 'அவள் அப்படித்தான்' வாய்ப்பு வந்தது.

படிப்பையும் நடிப்பையும் பேலன்ஸ் பண்ணிப் போயிட்டிருந்தேன். அடுத்து 'ராஜ பார்வை' வாய்ப்பு. கண் தெரியாத குழந்தையா நடிச்சேன். படத்தோட 100-வது நாள் விழாவுல கலந்துக்கிட்ட எம்.ஜி.ஆர்., 'பார்வையற்றோர் பள்ளியில இருந்து வந்து நடிச்சிருந்த பாப்பா ரொம்ப நல்லா நடிச்சிருந்தது'னு பாராட்டினார். அதாவது, என்னைப் 'பார்வையற்ற குழந்தை'னே நினைச்சிருக்கார். பிறகு, எனக்குப் பார்வை தெரியும்னு சொன்னது, ஆச்சரியப்பட்டுப் போனார். 

தமிழ்ல சில படங்கள்ல தலைகாட்டத் தொடங்கினதும், மலையாள வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனா, அங்கே முதல் படமே ஹீரோயின் ரோல். 'அட்ட கலசம்'ங்கிற அந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். சினிமாவுல நடிக்கணும்னா, ஃபோட்டோஷூட் பண்ணி வைக்கணும்னுகூட தெரியாத வயசு. நிறைய பேர்கிட்ட ஸ்டாம்ப் சைஸ் போட்டோவைக் கொடுத்துவிட்டிருக்கார் அப்பா. மோகன்லால் படத்துல கமிட் ஆனப்போ, ஒரு விஷயம் நடந்திச்சு. கமிட் ஆகுறதுக்கு முதல்நாள் திடீர்னு புரொடியூசர் வந்து, என்னோட ஜாதகத்தைக் கேட்டார். 'இது என்ன புதுசா இருக்கு'னு நினைச்சோம். 'இல்ல, எனக்கு ஜாதகம்மேல நம்பிக்கை, அதனால கொடுங்க'னு சொன்னார், கொடுத்தோம். 

வாங்கிப் பார்த்த அடுத்த நொடி, படத்துல கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. ஏன்னா, ஹீரோ மோகன்லால் பிறந்தநாளும் என் பிறந்தநாளும் ஒரே தினம். மே 21. இந்த ஒரு விஷயம் போதும்னு சொல்லிட்டார். படம் கோல்டன் ஜூப்ளி. பிறகு, மம்முட்டிகூட ஒரு படம் பண்ணிட்டேன்.

பிறகு, மறுபடியும் தமிழுக்கு வந்தேன். கே.பி.சார் படம்தான். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தை கன்னடத்துல எடுத்தார். எந்த ஶ்ரீவித்யாகிட்ட லெட்டரைக் கொண்டுபோய் கொடுத்து, நான் சினிமாவுக்கு அறிமுகமானேனோ, அதே ஶ்ரீவித்யா தமிழ்ல பண்ணின கேரக்டரை நான் கன்னடத்துல பண்னேன். 

பிளஸ் டூ பரீட்சை முடிஞ்சது. அதுல கொஞ்சம் வரிசையா படங்கள் அமைஞ்சது. 'ஊர்க்காவலன்', 'நினைவுச் சின்னம்'னு தமிழ்ல ஒரு பக்கம் நடிச்சுக்கிட்டே, தெலுங்கு பக்கமும் போனேன். மலையாளம் போலவே அங்கேயும் ஹீரோயின் கேரக்டர். 'மத்த மொழிகள்ல ஹீரோயினா நடிச்ச மாதிரி, தமிழ்ல ஏன் பண்ணலை?'னு கேட்கலாம். அதென்னவோ தெரியலை, இங்கே அந்தமாதிரி அமையலைங்கிறதுதான் உண்மை. ஆனா, கதையில எனக்கு முக்கியத்துவம் இருந்தது. அதுவும் ஒருவகையில நல்லதுனு நினைச்சுக்கிட்டேன். ஏன்னா, கட்டிப் பிடிக்கற காட்சிகளுக்கெல்லாம் தயங்கின குடும்பம்தான் எங்களோடது.

ஏதோ ஒரு சின்ன சம்பவம் மூலமா சினிமாவுக்கு வந்து, தென்னிந்திய மொழிகள்ல 200 படங்கள் வரைக்கும் நடிச்ச பிறகு, என்னோட அப்பாவோட உடல்நலக் குறைவும் என்னோட கல்யாணமும் ஒருசேர வந்தது. வேற வழியில்லை. அப்பா பார்த்து கைபிடிச்சுக் கொடுத்தவர்தான் என்னோட கணவர் விஜயராகவன், மகள் ஸ்ருதி.  அவளுக்கு ஒரு வயசு ஆனப்போ ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்திச்சு. 'பண்ணலாமே'னு கோழிக்கோடு கிளம்பிப் போனேன். மறுநாளே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போக, பெரிய கும்பிடு போட்டுட்டுக் கிளம்பி வந்துட்டேன்.

அந்தநாள்ல இருந்து சினிமா வாய்ப்புகளை ஏத்துக்கலை. நடிகை சரிதா ஒருமுறை எனக்கு அட்வைஸ் தந்தாங்க. 'பிள்ளைங்களுக்குப் பத்து வயசு ஆகுறவரையாவது பக்கத்துலயே இருக்கணும்'னு அவங்க சொன்னது, எனக்கும் சரினு பட்டுச்சு. என் மகள் இப்போ பத்தாவது படிக்கிறா. இதுநாள் வரை அவளோடேயே என் நேரத்தைச் செலவு செய்ய முடிஞ்சதைப் பெரிய வரமாகவே நினைக்கிறேன்'' என்றவரிடம், இன்றைய ஒருநாள் எப்படிக் கழிகிறது? என்றோம்.

``மகளை ஸ்கூல் கொண்டுபோய் விடுறது, வீட்டுல சமையல்... இப்படிப் பாதிநேரம் போகும். கணவர் ஐஸ்க்ரீம் ஃபேக்டரி வெச்சிருக்கார். நேரம் கிடைச்சா அங்க போய் அவருக்கு உதவுவேன். மதிய நேரங்கள்ல நான் நடிச்ச பழைய படங்கள் டி.வியில் ஒளிபரப்பானா, பார்ப்பேன்" என்றவர், கொசுறாக இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

முதலாவது : மறுபடியும் நடிக்கப் போகிறாராம். 'மலையாளத்துல கமிட் ஆகிட்டேன். தமிழ்லேயும் வாய்ப்பு வந்தா, இனி பண்ணலாம்னு இருக்கேன்!

இரண்டாவது : இவர் நடித்த நல்லெண்ணெய் விளம்பரத்துக்காகவே இன்றும் அந்த நல்லெண்ணெய் தயாரிப்பாளர்கள் தீபாவளிதோறும் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை இவருக்கு அனுப்பி வருகிறார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு