Published:Updated:

``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம!" #3YearsOfDemonteColony

ஃபிரான்க் ஆண்டனி எம்.டி

``கதையோ, கற்பனையோ... `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம!" #3YearsOfDemonteColony

``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம!" #3YearsOfDemonteColony
``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம!" #3YearsOfDemonteColony

ஓர் இயக்குநருக்கு, திரையரங்குக்கு வரும் ரசிகர்களுக்குச் சரியான பொழுதுபோக்கைக் கொடுத்து, அவர்கள் செலவழித்த காசு வீணாகவில்லை என்ற சிந்தனையை உண்டாக்க வேண்டும். இன்றைய இயக்குநர்களுக்கு இருக்கும் பெரும் சவால் இது. அதுவும், பேய் படம் என்றால்... சொல்லவே வேண்டாம். அப்படியோர் அசுர உழைப்புக் கொடுத்து வெற்றி பெற்ற பேய் படம், `டிமான்டி காலனி'!

பேய் படம் என்றாலே ஒரு பழைய வீடு, அதில் ஒரு குடும்பம், அவர்களைப் பழிவாங்கக் காத்திருக்கும் ஒரு பேய். இதுதான் வழக்கம். ஆனால், `டிமான்டி காலனி' அப்படி இல்லை. இன்றும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது திகில் கலந்த பிரமிப்பை ஏற்படுத்தும். இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் பல பேய் படங்கள் வருகின்றன. ஆனால், அவையெல்லாம் `டிமான்டி காலனி'க்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பதுதான், இந்தப் படத்தின் வெற்றி!

அப்படியென்ன சுவாரஸ்யம் இருக்கிறது இப்படத்தில்?! வேலையில்லாத இளைஞர்கள். அதில், கிடைக்கும் வேலைகளைச் செய்யும் ஓர் இளைஞன், இயக்குநர் கனவோடு இருக்கும் ஒருவன், போட்டோகிராஃபராக ஒருவன். என்னதான் சண்டை போட்டுக்கொண்டாலும், இறுதியில் `பார்ட்டி'யில் இணைந்துவிடும் பாசக்கார நண்பர்கள். முதல் காட்சியிலேயே ஒரு தயாரிப்பாளரிடம் `டிமான்டி காலனி' பேய் கதையைக் கூறுகிறார். அவர் அதனை நிராகரித்துவிட்டு ஒரு காமெடி கதை வேண்டும் என்று அனுப்பிவிட, உண்மையாக இருப்பவருக்கு இங்கு மதிப்பும் மரியாதையும் இருக்காது என்ற கருத்தினைக் காமெடியாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.  

அன்று இரவு அனைவரும் ஒன்றாகக் கூடும்போது, எங்கேயாவது ஒரு த்ரில்லிங்கான இடத்துக்குப் போகவேண்டும் என முடிவெடுத்துவிட்டுச் செல்கிறார்கள். அதுதான், டிமான்டி காலனி. அங்கிருந்து கதை விறுவிறுப்பாகிறது. கூட்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு இருட்டென்றால் பயம். எனவே, சில காமெடி திகில்களை அரங்கேற்றுகிறார்கள். ஆனால், உண்மையாகவும் சில அமானுஷ்யங்கள் அங்கு நடக்க, மேலும் விறுவிறுப்பாகிறது திரைக்கதை. அருள்நிதிக்கு இது முக்கியமான படம். ஹீரோயிஸத்தைத் தாண்டி, மிக இயல்பாக நடித்திருப்பார். முக்கியமாக, க்ளைமாக்ஸ் காட்சியில் அருள்நிதியின் ஃபெர்பாமன்ஸ் வேற லெவல். தவிர, காமெடி கேரக்டர்களில் நடித்திருக்கும் மதுமிதாவும், எம்.எஸ்.பாஸ்கரும் அவரவர் கேரக்டரைக் கச்சிதமாகச் செய்திருப்பார்கள். குறிப்பாக, `கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?' என எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்க, அதுக்கு அவர் காட்டும் ரியாக்‌ஷன்கள் மரண பங்கம்!

`டிமான்டி காலனி'யின் வெற்றிக்கு முக்கியமான காரணம், படத்திற்காக அமைக்கப்பட்ட செட். தத்ரூபமான பேய் பங்களாவுக்காக ரொம்பவே உழைத்திருந்தார்கள். ஒளிப்பதிவு மற்றொரு பலம். பத்துக்குப் பத்து அறையாக இருந்தாலும், கண் சிமிட்டும் அவகாசம்கூட தராமல், திகிலிலேயே உறைய வைத்திருப்பார், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். படத்தின் கேரக்டர்கள் பயப்படும் ஒவ்வொரு காட்சியிலும், ஆடியன்ஸும் பயந்தார்கள். அந்த அறைக்குள்ளே நாமும் இருப்பதுபோன்ற உணர்வை தனது இசையால் கடத்தியிருப்பார்,கிபா ஜெரிமியாஹ். இவர் அமைத்த ஒவ்வொரு பி.ஜி.எம்மும் திரையரங்குகளைத் திகிலில் ஆழ்த்தியது. 

`அந்த வீட்டுக்குச் சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லை' என்பது, `டிமான்டி காலனி' குறித்துச் சொல்லப்படும் செய்தி. ஆனால், நான்கு நண்பர்களில் ஒருவன் டிமான்டி காலனி வீட்டில் இருக்கும் விலைமதிப்பற்ற நகை ஒன்றைக் கொண்டுவந்து விடுகிறான். பின்னர் அவர்களுக்கு நடப்பவையெல்லாம் தரமான சம்பவங்கள்! முக்கியமாக, தாங்கள் சாகப்போவதைக் காணொளியில் பார்க்கும் காட்சி உச்சகட்ட திகிலாகப் படம்பிடித்திருப்பார், இயக்குநர் அஜய் ஞானமுத்து. வழக்கமான பேய் படங்களில் இருக்கும் கலர் பூச்சுகள் இதில் இல்லை. மிடில் கிளாஸ் வாழ்க்கைதான், அந்த இளைஞர்களுக்கும் வாய்த்திருந்தது. அவர்களது வாழ்க்கைக்குள் ஒரு திகில் கதையைப் புகுத்தி, திரைக்கதை அமைத்திருந்த விதமும் அருமை.

படத்தில் காட்டப்பட்ட டிமான்டி காலனி என்ற ஏரியா, சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் இருக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கு முன்புவரை, அந்த இடம் பலருக்கும் தெரியாது. ஆனால், இன்றுவரை டிமான்டி காலனி விசிட்டிங்கிற்கு இருக்கும் டிமாண்ட் அதிகம்! டிமான்டி காலனி பகுதியில் வசிக்கும் சிலர், இது உண்மைக் கதை என்கிறார்கள். சிலரோ இதை கட்டுக்கதை என்கிறார்கள். 

டிமான்டி என்ற ஒருவர் வாழ்ந்திருக்கலாம், மனைவிக்கு நேர்ந்த அநீதிக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கியிருக்கலாம். அந்த வீட்டுக்கு வருபவர்களை டிமான்டி தேடிப்போய் கொன்றிருக்கலாம். இது நடந்த கதையோ, கட்டுக்கதையோ... ரசிகர்களுக்குப் பிடித்த மொழியில் அதை சினிமாவாகக் கடத்தியதுதான், இந்தப் படத்தின் வெற்றி. வாழ்த்துகள் அஜய் ஞானமுத்து, அருள்நிதி அண்ட் `டிமான்டி காலனி' டீம்!