Published:Updated:

''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க!” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் துப்பாக்கிச் சூட்டில் மைத்துனரைப் பலி கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா

''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க!” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite
''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க!” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திப் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது காவல் துறை நடத்திய கோரமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே பலியானவர்களில் சினிமா ஸ்டன்ட் இயக்குநர் சில்வாவின் உடன்பிறந்த தங்கையின் கணவர் செல்வராஜும் ஒருவர்.

செல்வராஜின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கிருக்கும் சில்வாவிடம் பேசினோம்.

''தூத்துக்குடி நகரமே ரத்தக் களறியா இருக்குங்க. போலீஸ் வெறியாட்டம் போட்டுட்டுப் போனதோட பயம் இங்க இருக்கிற சாதாரண மக்கள் முகத்துல இருந்து இன்னும் விலகலை. எல்லாருமே அப்பாவிங்க. அமைதியான வழியில நூறு நாள் போராடிட்டு இருந்தவங்களை வன்முறைக்குள்ள திட்டமிட்டு போலீஸே இழுத்து விட்டிருக்காங்க. முதல்நாளே இளவட்டப் பசங்க சிலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைன்னு இழுத்துட்டுப் போய் வேனுக்குள்ள வெச்சு அடிச்சு துவைச்சபடியே சிட்டியை ரவுண்ட் அடிச்சதெல்லாம் நட்ந்திருக்கு. இதுக்கெல்லாம் இவங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அமைதியா கலெக்டர் அலுவலகம் நோக்கிப் பேரணியாப் போயிட்டிருந்தப்ப கூட்டத்துல புகுந்து வாகனங்களுக்குத் தீ வச்சது யாரு...' இப்படி இங்க நிறையக் கேள்விகள் இருக்குங்க. இதையெல்லாம் யார்கிட்டப் போய்க் கேட்கறது?

போராட்டக்காரங்களோ அல்லது சம்பந்தமில்லாத சிலரோ வாகனங்களுக்குத் தீ வெச்சிருந்தாலும் அதுக்காக உடனே துப்பாக்கி எடுத்து டப் டப்னு சுட்டு சாகடிச்சிடறதா? உயிரோட மதிப்பு போலீசுக்கு அவ்வளவு மலிவாப் போச்சா? இந்த 100 நாள் போராட்டங்கள்ல எங்கயாச்சும் ஒரு போலீஸ்காரராவது போராட்டக்காரங்களால அடிபட்டதா நியூஸ் வந்திருக்கா? செத்தவங்களோட எண்ணிக்கை பத்து பேர்லாம் இல்லைங்க. அது ஐம்பது பேருக்கும் மேல இருக்கும்னு பயப்படுறோம். ஏன் இப்ப உங்களோட பேசிட்டிருக்கிறப்பக்கூட தூரத்துல துப்பாக்கிச் சத்தம் கேட்டுட்டேதான் இருக்கு.

புள்ளய அநியாயமாச் சுட்டுக் கொன்னா எந்த அப்பன் ஆத்தா பேசாம இருப்பா? அண்ணனை இழ்ந்த தம்பி வந்து நியாயம் கேக்கறான். அப்பனைப் பறிகொடுத்த புள்ள வந்து கதறுறான். ஏன் இந்தக் கொலவெறின்னு கேட்டா உடனே மறுபடியும் லத்தியைச் சுழட்டுறாங்க. போலீஸ் வெறி இன்னும் அடங்கின மாதிரி தெரியலை. இங்கயும் எந்த நேரத்துல துப்பாக்கியை எடுப்பாங்களோங்கிற பீதி எல்லார்கிட்டயும் இருக்கு.

ஆனா ஒரு விஷயம்ங்க. இந்தத் துப்பாக்கிச் சூடு நான் கேள்விப்பட்டவரை சரியா திட்டமிட்டு பண்ணப்பட்டிருக்கு. கலவரங்கள்ல துப்பாக்கிச் சூடு நடத்தறதுல கைதேர்ந்த போலீஸ்காரங்களை தேடிக் கொண்டுவந்து ஒருவாரமா தூத்துக்குடியில வச்சிருந்ததா சொல்றாங்க. அவங்கதான் அன்னைக்கு அந்த வெறியாட்டம் போட்டிருக்காங்க'' என்றவர் தன் மைத்துனர் பற்றிப் பேச ஆரம்பித்ததும் குரல் உடைந்து அழுகிறார். 

“மனைவி, ஒரு மகன், ஒரு மகள், 15 ஆயிரம் சம்பளத்துல ஒரு வேலைனு என் மச்சான் அளவா, அழகா எளிமையா குடும்பம் நடத்திட்டிருக்கிற சாதாரண ஆளுங்க. 'சுட்டுக்கொல்லப்பட்டவங்க எல்லாருமே போராட்டத்தை ஒருங்கிணைச்சவங்க'ன்னு கிளப்பி விட்டது யாருன்னு தெரியலை. இங்க வீட்டுக்கு வீட்டு அந்தக் கம்பெனிக்கு எதிரா இருக்கற எதிர்ப்புணர்வுல போயிருக்காங்க. வரிசையாக் சுட்டுக் கொன்னுட்டு செத்தவங்க தீவிரவாதின்னு கூடச் சொல்வாங்க.

தங்கச்சி பொண்ணு பெரிய மனுஷி ஆகியிருக்கா. இன்னும் மூணு நாள்ல அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார். சொந்தபந்தங்களுக்குச் சந்தோஷமாப் போய் பத்திரிக்கை வச்சிட்டிருந்தவரை அநியாயமாச் சாகடிச்சு அந்த வீட்டையே இழவு வீடு ஆக்கிட்டாங்க பாவிங்க' எனக் கதறி அழுகிறார்.