Published:Updated:

தந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau

தந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau
தந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau

ஒரு மரணம், மரண வீடும், அங்கு நடக்கும் நிகழ்வுகளையும் அதிகபட்சம் எத்தனை நேரம் திரைப்படமாகக் காட்சிப்படுத்த முடியும்? #EeMaYau

24 மணி நேரம் தொடர்ச்சியாக ஒரு கடற்கரையில் அமர்ந்திருக்கிறீர்களா? அந்த ஒட்டுமொத்த நாளையும் உங்களால் ரசித்துக்கொண்டே இருக்க முடியுமா? அதிகாலையின் குளிர்க்காற்று, சூரிய உதயத்தின் இளமஞ்சள் வெயில் முகத்தில் அறைய வீசும் மென்காற்று, காலை நேரத்தில் கொஞ்சம் வெயில் ஏறிய நிலை, நடுப்பகலில் சுள்ளென அடிக்கும் வெயிலும் லேசான ஈரக்காற்றும், அஸ்தமன நேரத்து ஈரக்காற்றும், நிலவொளியின் குளிர்ச்சியோடு இரவில் வீசும் குளிர்க்காற்றும் சரி… வெறுமனே வெயிலும் குளிர்ச்சியும் மட்டுமல்ல, கடற்கரையில் விளையாடும் குழந்தைகளும், சுண்டல் விற்கும் சிறுவர்களும், தொல்லை தரும் 1008 விஷயங்களையும் தரிசிக்கலாம். அத்தனை இடையூறுகளையும் தாண்டி ஒரு நாள் முழுக்க உங்களால் ரசித்துக்கொண்டிருக்க முடியுமா?

ஒரு மரணம், மரண வீடும், அங்கு நடக்கும் நிகழ்வுகளையும் அதிகபட்சம் எத்தனை நேரம் திரைப்படமாகக் காட்சிப்படுத்த முடியும்? இறப்பதற்கும், புதைப்பதற்கும் இடையிலான வாழ்வியலை சினிமாக்கள் பெரிய அளவில் காட்சிப்படுத்தியதில்லை. ஹங்கேரிய திரைப்படமான சன் ஆஃப் சாலில் (Son of Saul) ஒரு யூத சிறுவனுக்கு, அவர்களின் சம்பிரதாய முறைப்படி புதைக்கப் போராடுவான் சால். தமிழில் விருமாண்டி திரைப்படத்தில், விருமாண்டி கதாபாத்திரத்தின் பாட்டி இறந்தவுடன், நிகழும் அந்த அறைக் காட்சிகள், சில நிமிடங்களே தொடர்ந்தாலும், அந்தக் கதாபாத்திரம் இறந்த உடலுடன் பேசுவது பார்வையாளனுக்குக் கடத்தப்படும். படம் முழுக்க இத்தகைய காட்சிகள் மட்டுமே இருந்தால், எப்படி இருக்கும்?

தந்தைக்கும் மகனுக்குமான நெகிழ்ச்சியான உறவுகள் எப்போதுமே அரிதாக நிகழ்பவை. முட்டல் மோதல்களும், புரிதலுமற்றதாகவும் கடந்துபோகும் உறவு நிலை அது. உளவியலில் பேசப்படும் ஈடிபஸ் காம்ப்ளக்ஸின் அடிநாதத்திலும் முட்டி மோதுவது இந்த உறவுச்சிக்கல் தான். உலக சினிமாக்களில் Le Grand Voyage, Road to Perdition போன்ற படங்கள் கிட்டத்தட்ட இந்தக் கதைக் கருவோடு ஒத்துப்போகக் கூடியவை. முந்தைய படத்தில் தந்தையின் ஆசையை, கடமையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான் மகன். Road to Perdition படத்தில் படத்தின் பெயர் சொல்வது போல மகனை விடுவிக்க தந்தை போராடுகிறான். இரண்டு படங்களிலும் தந்தை மகன் உறவில் மற்றொருவருக்காக உழைப்பார்கள். இரண்டு படங்களும் நம்முடைய கலாசாரத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும் நம்மோடு ஒன்றிப்போகும். இரண்டு படங்களிலும் தந்தை மகன் உறவு தொடக்கத்தில் சீரற்றதாக இருக்கும், போகப்போக இருவரும் மற்றவரை புரிந்துகொள்வதும் அவர்களுக்காக நெகிழ்வதுமாகவும் இருக்கும். ஆனால், ‘ஈ.ம.யவ்’ படத்தில் தந்தையும் மகனும் சந்திக்கும் முதல் காட்சியிலேயே இருவரும் அத்தனை நெருக்கமானவர்களாக இருப்பார்கள், இத்தனைக்கும் எப்போதாவது வீட்டுக்கு வரும் தந்தை, ``என் கூடவே சாராயம் குடிப்ப… சிகரெட் புடிக்க மாட்டியா?” என தந்தை மகனைச் சீண்டுவதும், மிதமான போதையில் தந்தையின் கால் அருகில் உட்கார்ந்திருக்கும் மகன், அவருடைய லுங்கி விலக அத்தனை வாஞ்சையோடு ஒழுங்குபடுத்துவான், முழு போதைக்குக் கொஞ்சம் அருகில் சென்றவுடன் மகன் பிறப்பதற்கு முன்பு தான் நடித்த நாடகத்தின் பாடல் ஒன்றைப் பாடி அவன் ஆடும் போது ஓரம் கிடக்கும் மரப்பெஞ்சை எடுத்துப்போட்டு அமர்ந்து குழந்தை மனதோடு அவன் ரசிப்பதாகட்டும்… இந்தத் தந்தை விருப்பப்பட்டதை இவன் செய்து முடிப்பான் என நம்மை நம்பவைக்கிறார்கள். தந்தைக்கும் மகனுக்குமான இந்தப் பத்து நிமிட காட்சிகள் ஓர் உன்னதம்.

ஆனால், இத்தகைய காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு இரண்டு மணிநேர திரைப்படத்தை உருவாக்கியதோடு, அதை ஒரு சிறந்த கலைப்படைப்பாகவும் மாற்றும் திறமை தேர்ந்த கலைஞனுக்கு மட்டுமே வாய்க்கும். தான் அத்தகைய கலைஞன்தான் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. யார் கதை எழுதினாலும், அதை வைத்து ஒரு சிறப்பான படைப்பை நல்குகிறார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அங்கமாலி டைரீஸ், ஆமென், டபுள் பேரல் எனத் தன் ஒவ்வொரு படைப்பிலும் முத்திரை பதிக்கிறார் பெல்லிசேரி.

Ee Mau Yau என்றால் ஏசோ... மரியம் ... யாசஃபே (ஜீசஸ்... மரியா... ஜோசஃப் ). குறிப்பிட்ட சில கிறிஸ்த்துவப் பிரிவுகளில், மரணப்படுக்கையில் இருக்கும் மனிதர்களின் காதுகளில், இது சொல்லப்படுகிறது.

அவ்வப்போது மட்டுமே வீட்டுக்கு வரும் வாவச்சன் மேஸ்திரி, அன்றிரவும் ஒரு வாத்துடன் வீட்டுக்கு வருகிறார். தன் குடும்பத்தைத் தவறாகப் பேசும் ஒருவருடன் சண்டையில் ஈடுபடுகிறார். ஆனால், அது எதையும் காட்டிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்கிறார். சில நாள்களுக்கேனும், அவரை அங்கு தங்க வைக்க நினைக்கும், அவரது குடும்பத்தார் சில வேலைகள் செய்கிறார்கள். அதற்கு வாவச்சன் மேஸ்திரியின் மகன் ஈஷி எதிர்ப்புத் தெரிவிக்கிறான். மேள தாளங்கள், சவப்பெட்டி, பிஷப்பின் மரியாதை என தான் தன் தந்தைக்கு நிகழ்த்திய இறுதி ஊர்வலத்தை விவரிக்கிறார் வாவச்சன். அதை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறான் ஈஷி.

ஈஷி பாத்திரத்தில் நடித்துள்ள செம்பன் வினோத் ஜோஸ் (`அங்கமாலி டைரீஸ்' படத்தின் கதையாசிரியர்) நடுத்தர, ஏழைக் குடும்பத்து மகன்களை கண்முன் நிறுத்துகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது ஊர்ஜிதம் செய்ய, தொடர்ந்து தண்ணீரை முகத்தில் அடித்துக்கொண்டே இருப்பது; எல்லாவற்றிலும் தோற்றுப்போய், ஒரு ஏமாளியாய் ஒடிந்து போய், தந்தையின் பிணத்தின் முன் அழுதுகொண்டே `அவரை' முத்தமிடும் அக்காட்சி. ஹேட்ஸ் ஆஃப்.

ஈஷியின் நண்பனாக வரும் அய்யப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விநாயகன், மீண்டுமொருமுறை தான் ஒரு தேர்ந்த நடிகன் என நிரூபித்திருக்கிறார். அய்யப்பன் மாதிரியான கதாபாத்திரங்களை நாம் திருமண, இறப்பு நிகழ்வுகளில் பார்க்க முடியும். அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமாகக் கூட இவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், எல்லா நிகழ்வுகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து கொண்டு இருப்பார்கள். பாதிரியார் உதவாத நிலையில், போலீஸின் உதவியை நாடுகிறான் அய்யப்பன். அங்கு தழுதழுத்த குரலில் பேசிவிட்டு, மழையில் நிர்கதியாய் நிற்கும் காட்சி ஒரு சாம்பிள். மொபைலை லவுட்ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, எதிரில் கேட்பவருக்குப் புரிகிறதா இல்லையா என்பதை இவ்வளவு இயல்பாக எல்லாம் நடிக்க முடியுமா என ஆச்சர்யப்படுத்துகிறார் மனிதர்.

ஈஷியிடம் தப்பிக்க பொய்க்கதைகளைக் காற்றில் கலக்கும் லாசர், தனக்குத்தான் வெட்டுகிறோம் எனத் தெரியாமல் குழி தோண்டும் நபர், அவ்வளவு நேரம் அன்பாகப் பேசிவிட்டு மருமகளின் உறவினர்கள் வரும்போது அவர்களை உதாசீனம் செய்யும் பன்னம்மா, நடக்கும் சம்பவங்களின் பார்வையாளர்களாக சீட்டாடிக் கொண்டிருக்கும் இருவர், தன்னைத் துப்பறியும் அதிகாரி போல் உருவகம் செய்து கொள்ளும் சர்ச் ஃபாதர், என ஒவ்வொரு கதாபாத்திரமும், அதன் இயல்பில் நின்று விளையாடி இருக்கிறது.

`மகேஷிண்டே பிரதிகாரம்', `சூடானி ப்ரம் நைஜீரியா' படங்களின் ஒளிப்பதிவாளர் சைஜீ காலித் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடற்கரை இருளையும், பெருமழையின் வாசத்தையும், துக்க வீட்டின் அமைதியையும் கேமராவில் மிகத் துல்லியமாகக் கடத்தியிருக்கிறார். வாவச்சன் மேஸ்திரி இறந்ததும், ஈஷியின் மனைவி அங்கிருந்து ஒவ்வொரு வீடாக அலறியபடி சென்று கதறிக்கொண்டே மீண்டும் வீட்டினுள் நுழைவார். ஈஷியின் மனைவியிடம் ஆரம்பிக்கும் கேமரா, ஒவ்வொரு வீடாகச் சென்று, பின் இறுதியாக வாவச்சன் மேஸ்திரியின் இறந்த உடலில் வந்து நிலை கொள்ளும். அதை ஒரே ஷாட்டில் எடுத்து அதிசயிக்க வைக்கிறார் சைஜி.

மலையாளிகள் தொடர்ந்து தங்கள் படைப்புகளில், அரசின் மீதான விமர்சனத்தை வைத்துக்கொண்டே வருகிறார்கள். ஒரு கையில் சாராயத்தையும், இன்னொரு கையில் பழைய 500 ரூபாய் கட்டையும் வைத்துக்கொண்டு, இரண்டும் தடை எனச் சொல்லிவிட்டு சாராயத்தை அருந்தும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு.

ஒவ்வொரு படமும், யாரோ ஒரு குழுவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். மகன்கள் தந்தைகளுக்காக ஆனந்த யாழையெல்லாம் மீட்டுவதில்லை. ஆனால், அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது. சிறுவயதில் தம் தந்தை சூப்பர் ஹீரோ, தந்தைதான் எல்லாம் என நினைக்கும் மனம், பதின்ம வயதில், கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். 20 வயதைக் கடந்தபின், ஏனோ எதையும் புரிந்துகொள்ளாத அவுட்டேட்டான ஒரு மனிதர் எனத் தோன்ற வைப்பார் அதே தந்தை. பின்னர், நமக்கு இருக்கும் எல்லாம் கஷ்டமான சூழ்நிலைகளுக்கும், அவரை நோகடிக்க ஆரம்பிப்போம். `என் அப்பாதான் எல்லாம் ' என்றிருந்த வாழ்வியல் ' என்ன இருந்தாலும் அவர் என் அப்பா' என ஆகி பின்னர், `என்ன செய்வது அப்பாவாகப் போய்விட்டார்' என்னும் நிலைக்குத் தள்ளப்படுவார் அதே அப்பா. `ச்சே அவர் எவ்வளவோ, நமக்காகப் பண்ணி இருக்கார்ல ' என நினைத்து மனமுருகும் போது பெரும்பாலும் அப்பாக்கள் இருப்பதேயில்லை.

குடும்பத்தைப் பிரிந்து அல்லது ஏதோவொரு வைராக்கியத்துடன் கிளம்பி பிற ஊர்களில் இருந்துகொண்டு குடும்பத்தைக் கவனிக்காமல், பணம் இல்லாமல் தங்கள் தோல்வியை, இயலாமையை மறைக்க கடும் கோபத்துடன் சுழலும் மகன்கள் பார்க்க வேண்டிய சினிமா இந்த Ee Mau Yau.

அடுத்த கட்டுரைக்கு