Published:Updated:

``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு!”, கணவர் பற்றி கீதா கைலாசம்

கே.பாலசந்தரின் மகன், `மின்பிம்பங்கள்’ நிறுவனத்தின் தலைவர் என்பதைத் தாண்டி, வெளியுலகத்துக்குத் தெரியாத பாலா கைலாசத்தின் பல முகங்களை நம்மிடம் பிரத்யேகமாகப் பகிர்ந்துகொள்கிறார் கீதா கைலாசம்.

``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு!”, கணவர் பற்றி கீதா கைலாசம்
``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு!”, கணவர் பற்றி கீதா கைலாசம்

``எங்க திருமணம் 1991-ம் வருஷம் நடந்தது. அப்போ கைலாசம், `என்னைப் பேர் சொல்லி, வா போன்னுதான் கூப்பிடணும். மத்தவங்க முன்னாடி வாங்க போங்கன்னும், வீட்டுக்குள்ளே வா போ என மாத்திக்கணும்னு அவசியமில்லை. எப்பவும் ஒரே மாதிரியே கூப்பிடு'னு சொன்னார். அப்போ எனக்கு அது புரிஞ்சுதோ புரியலையோ.. ஆனால் பிடிச்சிருந்துச்சு” - தன் கணவர் பால கைலாசத்தை பற்றிக் கூற ஆரம்பிக்கும்போது, கீதாவின் முகத்தில் உற்சாகம் தோன்றினாலும் இரண்டு வரி பேசி முடிப்பதற்குள் சொல்லமுடியாத துக்கத்தை அவர் பேசிய வார்த்தைகளில் உணர முடிந்தது.

`இயக்குநர் சிகரம்  ' கே.பாலசந்தரின் மகன், `மின்பிம்பங்கள்’ நிறுவனத்தின் தலைவர் என்பதைத் தாண்டி, வெளியுலகத்துக்குத் தெரியாத பாலா கைலாசத்தின் பல முகங்களை நம்மிடம் பிரத்யேகமாகப் பகிர்ந்துகொள்கிறார் கீதா கைலாசம். 

சில ஆண்டுகளாக எழுத்துலகில் ஆர்வம்கொண்டிருக்கும் கீதா... நாடகம், திரைக்கதை எழுதுவது எனக் கனவுடன் இயங்கத் தொடங்கியிருக்கிறார். அதன் தொடக்கமாக, `ஒரு சில பல நிமிடமும் பேச்சும்' என்ற நாடகத்தை சமீபத்தில் இயக்கி அரங்கேற்றினார், தன் மாமனார் பாலசந்தருக்குச் சமர்ப்பணம் என்ற வரிகளுடன். இந்த முனைப்புக்குத் தூண்டுகோலாக இருந்த கணவர் பாலா கைலாசத்தை இந்த உலகம் அறிந்துகொள்ளாமல்போனது என்ற ஏக்கம், கீதாவின் பேச்சில் வெளிப்படுகிறது. தன் கணவர் விட்டுச்சென்ற கலைப்பணியைத் தொடரும் லட்சியத்தில் பயணிக்கிறார்.

``எனக்கு திருவாரூர். என் அப்பாவும் பாலசந்தர் சாரும் பக்கத்து வீட்டு நண்பர்கள். அவங்க சின்ன வயசுலேயே சேர்ந்து நாடகங்கள் போட்டு விளையாடுவது, ஒண்ணா ஊர் சுத்துவது என இருந்திருக்காங்க. அப்படித்தான் குடும்ப நண்பர்களாக இருந்தோம். சின்ன வயசிலிருந்தே எனக்கு பாலா கைலாசத்தைத் தெரியும். நான் சி.ஏ. முடிச்சு வேலை செஞ்சுட்டிருக்கிறப்போ, திருமணப் பேச்சு எடுத்தாங்க. 1991-ம் வருஷம்  திருமணம் நடந்துச்சு. பாலா எனக்கு எப்பவுமே வித்தியாசமா தெரிவார். அவர் பேசும் விஷயங்கள், படிக்கும் புத்தகங்கள், சினிமாவுக்காகச் சிந்திக்கும் கதைக்களம் என எல்லாமே என் மூளைக்கு எட்டாத, புரியாத விஷயங்களாகவே அப்போ இருந்துச்சு” எனச் சிரிப்புடன் தொடர்கிறார் கீதா.

``எங்களுக்குக் கல்யாணமான புதுசுல கொடைக்கானல் போயிருந்தோம். அங்கே ஊரைச் சுற்றிப் பார்க்கப் போனபோது, சின்ன ஓடைக்கு நடுவில் ஒத்தையடிப் பாதை இருந்துச்சு. அவர் முன்னாடி போக, நான் பின்னாடி நடந்துட்டிருந்தேன். என்ன நினைச்சாரோ திடீர்னு திரும்பி, ``டு நாட் ஃபாலோ மை ஃபுட் ஸ்டெப்ஸ். உனக்குனு தனி பாதை இருக்கணும். பீ யுவர்செல்ஃப்'னு சொன்னார். ஏன் இதைச் சொல்றார்னு புரியலை. ஆனால், அவர் சொன்னது எனக்குப் பிடிச்சுருந்துச்சு. அவ்வளவு ஏன்... எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே, `எனக்குக் காலில் விழுந்து நமஸ்காரம் பண்றதெல்லாம் பிடிக்காது. யாராவது வீட்டுல கெஞ்சிக் கேட்டாலும் என் காலில் விழுந்துடாதே'னு சொன்னார். அப்பவும் ஏன் இப்படிச் சொல்றார்னு புரியலை. ஆனால், சொன்னது பிடிச்சிருந்துச்சு.

அவரிடம் முற்போக்குச் சிந்தனையும் சக மனிதனுக்கு அன்பு காட்டும் மனசும் இருந்துச்சு. எங்க குழந்தைகளைச் சராசரி பெற்றோர்போல வளர்க்காமல், நிறைய விஷயங்களை அவங்க வழியிலேயே போய், வித்தியாசமாக வளர்க்க நினைச்சேன். ஆனால், அதை எப்படிச் செய்றதுனு தெரியலை. அதைப் புரிஞ்சுக்கிட்டு, பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஹோல்ட் எழுதிய புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். பேரன்டிங் சம்பந்தமான என் பார்வையே மாற்றின புத்தகங்கள் அவை” என நெகிழ்கிறார் கீதா. 

``கே.பாலசந்தரை உலகமே கொண்டாடினது. அவரே கொண்டாடின ஒருத்தர்னா, அது கைலாசம்தான். என் கணவர் என்பதால் இதைச் சொல்லலை. என் கணவர் இறந்து சில நாள்கள் கழிச்சு கே.பி சார், `அவன் என்னைவிட ரொம்ப புத்திசாலிம்மா. பொதுவா, என் படங்கள் பற்றி மற்றவர்கள் பேசும்போது, 10 வருஷம் அட்வான்ஸா நான் திங்க் பண்றதா சொல்வாங்க. ஆனால், பாலா எடுத்த, எடுக்க நினைச்ச படங்கள் பற்றி இப்போ யோசிச்சா, 20 வருஷம் அட்வான்ஸா அவன் திங்க் பண்ணியிருக்கான்'னு சொன்னார். நான் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தபோது, சினிமா, தயாரிப்பு, திரைக்கதை பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், `மின்பிம்பங்கள்' நிறுவனத்தில் கைலாசத்துடன் வொர்க் பண்ண அனுபவம், அவர் செய்ற விஷயங்களைப் பக்கத்திலிருந்து பார்த்தது ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கு.

"கைலாசம் திடீர் உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 2014 இல் காலமானார்” இது எனக்குப் புரியவுமில்லை. பிடிக்கவுமில்லை என்கிறார் கீதா.

“என் கணவரோட கனவுகளை  யாராலயும்  நிறைவேற்ற முடியாது, ஆனா, அவர் விரும்பிய கலைப்பயணத்தில், கொஞ்சமாவது நடந்துப்பார்க்கணும்னு அவரைப் புரிஞ்சவங்க கண்டிப்பா நினைப்பாங்க. இதோ கைலாசத்துடன் வேலை பார்த்தவர்கள், அவரது நண்பர்கள் கைலாசம் சொன்னபடியே தத்தம் கனவுகளை நோக்கிப் பயணித்தபடி! அதே பாதையில் தான் நானும்” என்று தீர்க்கமாக கூறி முடிக்கிறார் கீதா கைலாசம்!"