Published:Updated:

"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்" - 'மாஸ்டர்' தினேஷ்

"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்" - 'மாஸ்டர்' தினேஷ்
"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்" - 'மாஸ்டர்' தினேஷ்

"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்" - 'மாஸ்டர்' தினேஷ்

டன இயக்குநராக கிட்டத்தட்ட 18 வருடங்களாக சினிமாவில் இருக்கும் மாஸ்டர் தினேஷ், தற்போது 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் மூலம் நடிகராகவும் ஆகியிருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினேன். 

"ஒரு நடிகனா, இப்போ எப்படி உணர்றீங்க?"

"டான்ஸ் ஆடுறதும் நடிக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். டான்ஸ் ஆடும்போது நாம சில முக பாவனைகளெல்லாம் கொடுக்கணும். அந்த அனுபவம்தான், நமக்கு நடிப்புலேயும் உதவியிருக்கு. 'ஒரு குப்பைக் கதை' படம் சண்டை போடுறது, பொண்ணுங்க பின்னாடி சுத்துறது மாதிரியான சாதாரணமான கதையா இருந்திருந்தா, நடிக்க நான் ஓகே சொல்லியிருக்கமாட்டேன். இந்தப்படம் ஒரு தனி மனிதனோட சாதாரண வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கு. படம் பார்த்துட்டு பலபேர் திருந்துறதுக்கும் வழி இருக்கு. இன்னைக்கு மக்கள் அதிகமா சந்திக்கிற பிரச்னைகள்ல மிக முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படமா எடுத்துத்திருக்கோம். 

இது குப்பைகளை சுத்தப்படுத்துற ஒரு மனிதரோட கதை. குப்பையை சுத்தம் பண்றவங்க தினமும் எந்த வண்டியில போவாங்களோ, அதே வண்டியிலதான் நானும் போனேன். படத்துக்காக நிஜமாவே குப்பை அள்ளியிருக்கேன். இப்போதான், இது எவ்வளோ கஷ்டமான ஒரு வேலைனு புரியுது. நினைச்சுப் பார்க்காத பொருளெல்லாம் குப்பையில இருக்கும். அது நம்மளை முகம் சுளிக்க வைக்கும். இப்படியெல்லாம் குப்பைகளைப் போடுவாங்களானு மக்கள்மேல நமக்குக் கோபம் வரும். இந்தப் படத்துக்கு அப்புறம் குப்பை வண்டியை 'என் வண்டி'னு சொல்ற அளவுக்கு சென்டிமென்டா மாறிருச்சு. நாம சாகுறப்போ எதையுமே எடுத்துட்டுப் போகப்போறதில்லை. நாம செஞ்ச பாவ புண்ணியங்களைத் தவிர!. அதனால, எல்லாத்தையும் மன்னிக்கிற மனப்பக்குவத்தை இந்தப் படம் மத்தவங்களுக்குக் கொடுக்கும்.  

"நீங்க நடிகப்போறதுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் சொன்னவங்ககிட்ட எப்படி ரியாக்ட் பண்ணீங்க?" 

"பலபேர், 'வீண் கனவு' சொன்னாங்க. ஆனா, சிவகார்த்திகேயன், விஜய் சார், சசிகுமார் சார்... இவங்கெல்லாம் 'நீ எடுத்தது சரியான முடிவு'னு உத்வேகம் கொடுத்தாங்க. சினிமாவுக்குள்ள இருக்கிற நாம சினிமாவுக்காக என்னவேணாலும் பண்ணலாம்னு முடிவெடுத்துதான், ஹீரோ ஆனேன். பாண்டியராஜன் சார், 'ஏன் டான்ஸ் மாஸ்டர் நடிக்க வந்தார்?'னு மேடையில ஓப்பனாவே கேட்டார். நடிகனாகிட்டா, டான்ஸ் பண்றதுக்குக் கூப்பிடமாட்டாங்களோனு எனக்கும் பயம் இருந்தது. இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்குனு நிறைய மொழிப் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்றேன். நடனம் என் குலதெய்வம். அதை விட்டுடமாட்டேன்!" 

"இந்தப் படத்துக்கு. 'ஒரு குப்பைக் கதை'னு ஏன் டைட்டில்?" 

"டைட்டில் ஒருமாதிரி இருக்குனு படக்குழுவுல இருக்கிற பலருமே சொன்னாங்க. ஆனா, பாசிட்டிவ் டைட்டிலைவிட நெகட்டிவ் டைட்டில் சீக்கிரமே மக்கள்கிட்ட ரீச் ஆகும்னு, இந்த டைட்டில் வெச்சோம். 

"நாகேந்திர பிரசாத்துக்கும் உங்களுக்குமான நட்பு...?" 

"சினிமாவுக்கு முன்னாடி என்னை முதன் முதல்ல மேடையில டான்ஸ் ஆட வெச்சது என் அண்ணன்தான். ஸ்கூல் டான்ஸ் போட்டிகள்ல நானும் நாகேந்திர பிரசாத் மாஸ்டரும் எதிரெதிர் டீம். நிறைய போட்டிகள்ல மீட் பண்ணி, நாங்க நல்ல நண்பர்கள் ஆயிட்டோம். அடிக்கடி அவர் என் வீட்டுக்கு வருவார். மொட்டை மாடியில டான்ஸ் ஆடுவோம். ஒருமுறை காலேஜ் கல்சுரல்ஸ்ல நாங்க ஆடும்போது, பிரபுதேவா மாஸ்டர்தான் நடுவரா வந்தார். அப்போ, எங்க டீம் முதல் பரிசு ஜெயிச்சுச்சு. அப்புறம் நாகேந்திர பிரசாத்தான் அவங்க குடும்பத்துக்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். தவிர, ராஜுசுந்தரம் மாஸ்டர்தான் என்னை டான்ஸ் அசோசியேஷன்ல சேர்த்துவிட்டார். அவங்க கை காட்டுன வழிதான், நான் சினிமாவுக்கு வர முழு காரணம்!"  


"தமிழ்ல முதல் என்ட்ரி பிரபுதேவாவோட அமைஞ்சிருக்கு. வாய்ப்பு கொடுத்த அவருக்கே நடனம் சொல்லிக்கொடுத்த அனுபவம் எப்படி இருந்துச்சு?"

" 'மனதைத் திருடிவிட்டாய்' படத்துல பிரபுதேவா மாஸ்டருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்தப்போ, எனக்கு ரொம்பவே டென்ஷன். ஆனா, பிரபுதேவா மாஸ்டர் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கலை. அவருக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்ததுதான், என் வாழ்க்கையில கிடைச்ச மிகப்பெரிய விருதுனு சொல்வேன்." 

"கமல், ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி... இப்படிப் பல பெரிய நடிகர்களுடன் சேர்ந்து வேலை பார்த்த அனுபவம்?" 

கமல்:

"கமல் சார் அடுத்த ஐந்து வருடத்துல என்ன நடக்கப்போகுதுனு சொல்ற தீர்க்கதரிசி. 'அன்பே சிவம்' படத்துல சுனாமினு ஒன்னை நமக்கு அறிமுகப்படுத்தினார். அடுத்த கொஞ்ச வருடத்துலேயே சென்னையில சுனாமி வந்து, அந்த வார்த்தையோட வடிவம் நமக்கு அறிமுகம் ஆச்சு. ஷூட் பண்ணி முடிச்சதும், நாம எந்த லென்ஸ் யூஸ் பண்ணி ஷூட் பண்ணோம்னு முதற்கொண்டு சரியா சொல்வார். அந்த அளவுக்கு சுத்தி என்ன நடக்குதுனு பக்காவா கவனிப்பார்."

"'எந்திரன்' படத்துக்காக ஷங்கர் சாரோட சேர்ந்து தினமும் டிஸ்கஷன் நடக்கும். படத்துல டான்ஸ் ரொம்பக் கம்மி, மான்டேஜ் ஷூட்ஸ்தான் அதிகம். அந்தக் கதைக்கு தேவையானது டான்ஸ் இல்லை. மெஸேஜை ஆடியன்ஸ்கிட்ட சரியா கொண்டுபோய் சேர்க்கணும். 'பருத்திவீரன்', 'ஆடுகளம்' ரெண்டு படங்கள்லேயும் எப்படிக் கதையோட பாடல்கள் ஒன்றிப்போயிருக்கோ, அதேமாதிரிதான் 'எந்திரன்' படமும்."

விஜய் :

"விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடவுள் எப்பவுமே சில விஷயங்களை நேரடியா கொடுக்காம, வேறு யார் மூலமாவது கொடுப்பார். அப்படி எனக்குக் கிடைச்சதுதான் விஜய் சார் படத்துல 'ஆல்தோட்டா பூபதி' பாடலுக்கு நடனம் அமைக்கிற வாய்ப்பு. தவிர, அவரோட 'துள்ளாத மனமும் துள்ளும்'  படத்துல டான்ஸூம் ஆடியிருக்கேன். 'ஷாஜஹான்' படத்துல 'மெல்லினமே மெல்லினமே'தான் விஜய் சாரோட எனக்கு முதல் பாடல். அப்புறம், 'தமிழன்', 'யூத்', 'வசீகரா', 'சிவகாசி', 'போக்கிரி', 'துப்பாக்கி'னு பல படங்களுக்கு விஜய் சாரோட சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன். 'வசீகரா' பாடல் ஷூட்டிங்கிற்காக நியூசிலாந்து போயிருந்தோம். அப்போ, கேமராமேன் பாலு சார், இருட்டுல இருக்க பயப்படுவார். தூங்கும்போதுகூட லைட்டை போட்டுதான் தூங்குவார். அவரை நானும் விஜய் சாரும் சேர்ந்து பயமுறுத்துவோம். விஜய் சார் ரொம்ப அமைதியான டைப்னு நினைக்கிறீங்க. அப்படிக் கிடையாது. அவர்கிட்ட பழகினா, வேற லெவல்ல தெரிவார்!" 

அஜித் :

"அஜித் சாரோட 'உல்லாசம்', 'ஆசை' படங்கள் பண்ணும்போது நான் நடன உதவியாளர். அஜித் சாருக்கு மெமரி பவர் ரொம்ப ஸ்ட்ராங். ஒருதடவை சொல்லிக்கொடுத்தாலே, சரியா பண்ணிடுவார். பிறகு, 'ரெட்', 'ராஜா', 'ஆரம்பம்', 'வீரம்'னு அவரோட பல படங்களுக்கு நான் நடனம் அமைச்சிருக்கேன்."  

சிவகார்த்திகேயன் : 

"'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துல இருந்து சிவகார்த்திகேயனோட வேலை பார்த்திருக்கேன். அவர் முதல்ல டான்ஸ் ஆடும்போது கொஞ்சம் தயங்கினார். ஆனா, இப்போ டான்ஸ் செமயா பண்றார். ஒரு விஷயம் சிவகார்த்திகேயன்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது, அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருக்கும்போது எப்படி இருந்தாரோ, இப்பயும் அப்படியேதான் இருக்கார். கொஞ்சம்கூட அவர் மாறலை. இயல்பான ஒரு மனிதர்னா, அது சிவாதான்."

விஜய் சேதுபதி : 

"'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துல 'என் வீட்டுல நான் இருந்தேனே' பாட்டை நானும், ராஜுசுந்தரம் மாஸ்டரும் சேர்ந்து கோரியோகிராஃப் பண்ணோம். அதுக்கப்பறம், 'மக்க கலங்குதப்பா' பாட்டுல பட்டயைக் கெளப்பிருப்பார். இதே ஸ்டைல்ல பண்ணதுதான் 'இறுதிச்சுற்று'ல வர்ற 'வா மச்சானே...' பாடல். 

சூர்யா : 

'பளபளக்குற பகலா நீ' பாடலுக்கு மாநில அரசு விருது கிடைச்சது. அந்தப் படத்துல இருந்து 'தானா சேர்ந்த கூட்டம்' வரை நிறைய படங்கள்ல சூர்யா சாரோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். நான் பார்த்ததுலேயே பெஸ்ட் டான்ஸர்னு சூர்யா சாரை சொல்வேன்."

"தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தினு பல மொழிகள்ல வொர்க் பண்றீங்க. ஒவ்வொரு மொழிப் படங்களுக்குத் தகுந்த மாதிரி டான்ஸ் ஸ்டைலிலும் மாற்றம் இருக்குமா?"

"ஆமா, ஒவ்வொரு மொழிப் படங்களுக்குத் தகுந்தமாதிரி தனித்தனி ஸ்டைல்லதான் பண்ணனும். தமிழ் ரசிகர்களுக்கு டான்ஸுக்குள்ள கதை இருந்தா, ரொம்பப் பிடிக்கும். குறும்புத்தனம், கியூட் ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் நம்ம தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கும். ஆனா, தெலுங்குப் படங்கள் அப்படியே நேரெதிர். டான்ஸ் மட்டும்தான் எதிர்பார்ப்பங்க. இந்தியும் தமிழும் கிட்டத்தட்ட ஒரே டான்ஸ் ஸ்டைலை ஃபாலோ பண்றாங்க."

"நீங்க வாங்கிய விருதுகளை வீட்டுல வெச்சுக்கிற பழக்கம் உங்களுக்கு இல்லையே, ஏன்?" 

"வாங்கிய விருதுகளை தினம்தினம் பார்க்கும்போது, அந்த சந்தோஷத்துல நாம மூழ்கிடுவோம். அடுத்த வெற்றிப் பயணத்தை நோக்கி நாம எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும் சறுக்கும். கர்வம் வந்துடும். அதனால, விருதுகளையெல்லாம் நான் வீட்டுல வெச்சுக்கிறதில்லை. நான் வாங்குன தேசியவிருது இப்போ எங்க இருக்குனுகூட எனக்குத் தெரியாது. ஆபீஸுக்குக்கூட அடிக்கடி போகமாட்டேன். மே பீ... அங்கே இருக்கும்னு நினைக்கிறேன்." என்று முடித்தார், தினேஷ். 

அடுத்த கட்டுரைக்கு