Published:Updated:

“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை!” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை

“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை!” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை
“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை!” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது விஷால் அணியை எதிர்த்து நின்று செயற்குழு உறுப்பினராக வெற்றிப்பெற்ற தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பதவி விலகினார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் நிர்வாகத்தின் மீதுள்ள அதிருப்தியால் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தனது செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எழுதிய  ராஜினாமா கடிதத்தில், சங்க நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளையும் பதவி விலகலுக்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

`காதலா காதலா', `பஞ்சதந்திரம்’, `வல்லவன்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தேனப்பன் தற்போது `பேரன்பு' திரைப்படத்தைத்  தயாரித்து வருகிறார். தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்துப் பேசியபோது, ``தயாரிப்பாளர் சங்கத்தில் இப்ராஹிம் ராவுத்தர், கேயார், தாணு காலத்திலிருந்து பல தலைமைகளின் கீழ் நான் தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளேன். ஒவ்வொரு நிர்வாகமும் அந்தந்த செயற்குழுவுக்கு மதிப்பளித்து விவாதங்களை மேற்கொண்டு முடிவுகளை எடுக்கும்.

ஆனால் இந்த நிர்வாகம் ஒரு சிலரின் விருப்பத்தின்படி செயல்படுவது, சொந்த முடிவுகளைச் சங்கத்தின் முடிவுகளாக வெளியிடுவது, அமல்படுத்துவது... எனத் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். அதனால் `நாட்டாமை’ படத்தில் வருவதுபோல இனிஷயல் பிரச்னை வரக் கூடாது என்பதுபோல் ஓரமாக அமர்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எனக்கு வாக்களித்த சக தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைககள் குறித்துகேள்வி கேட்கும்போது ஒரு செயற்குழு உறுப்பினராகப் பதில்கூட சொல்லமுடியாத நிலையில் உள்ளது மிகவும் தவறாகத் தெரிந்தது.

அது மட்டுமல்லாமல் க்யூப் கட்டணத்தை வாரம் ஐயாயிரம் ரூபாய் என்று மாற்றியதில் நான்கு வாரங்கள் ஓடும் படங்களுக்கு மொத்தக் கட்டண அடிப்படையில் கணக்கிடும்பொழுது, முன்பிருந்த கட்டணத்தைவிடவும் இது அதிகம் என்று தெரிகிறது. வாரத்துக்கு மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என்பதை உறுதிசெய்ய ஒரு ரெகுலேஷன் கமிட்டி அமைத்தார்கள். அதில் இருப்பவர்கள் அனைவரும் விஷாலுக்கு வேண்டியவர்கள். அந்தக் கமிட்டியை இன்னும் வரைமுறைப்படுத்தவில்லை. இந்த வாரம் மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக உள்ளன.

அந்தக் கமிட்டியில் சத்யஜோதி தியாகராஜன் சார் போன்று ஒரு மூத்தத் தயாரிப்பாளார்கூட இல்லை. தலைவர் விஷால், எஸ்.ஆர்.பிரபு மற்றும் அவர்களைச் சார்ந்தோர் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்று அறிவுரை சொல்லக்கூட மூத்த உறுப்பினர்கள் யாரும் இல்லை. 48 நாள் ஸ்டிரைக்கின் முடிவில் சொல்லப்பட்ட தீர்வுகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டிய தயாரிப்பாளர்களின் நிலைமைதான் பரிதாபகரமானது.

``உங்களைப்போல் வேறு உறுப்பினர்கள் யாராவது அதிருப்தியில் இருக்கிறார்களா?”

``இந்த நிர்வாகத்தில் நான் மட்டும்தான் எதிரணியிலிருந்து வெற்றிபெற்றவன். என்னால் முடிந்த அளவுக்குச் சங்க நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்துவந்தேன். ஒவ்வொருமுறையும் நான் என் கருத்துகளைப் பதியும்போது இதோ சரி செய்கிறோம் என்பார்கள். அப்படிக் காத்திருந்து 14 மாதங்கள் ஓடிவிட்டன. இப்படி என் அதிருப்திகளை ராஜினாமா கடிதத்தில் விரிவாக எழுதியிருந்தேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இன்னும் இரண்டு மூன்று பேர் விலகல் கடிதம் தருவதாகக் கேள்விப்பட்டேன். கௌதம் மேனனும் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது.”

“சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் எழுந்த புகார்களுக்கு விளக்கம் கேட்டதில் அவர்கள் சங்கத்தை மதிக்கவில்லை எனக் கூறியுள்ளீர்கள்?”

ஆம், சிம்பு, த்ரிஷா, வடிவேலு, மூத்த நடிகர் கார்த்திக் எனப் பலரது மீதும் தயாரிப்பாளர் தரப்பு புகார்களை முன் வைத்தனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சிலருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார்கள். ஆனால் அதற்கு சம்பந்தப்பட்ட நடிகர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.”

“இந்த நிர்வாகத்துக்கு இன்னும் பத்து மாதங்கள் எஞ்சியுள்ளன. இவர்கள் மீண்டும் பதவிக்கு வர வாய்ப்புள்ளதா?”

``எஞ்சியிருக்கும் 10 மாதங்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் மீண்டும் வர வாய்ப்புகள் உள்ளன. இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.”

``உங்களின் `பேரன்பு' படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.  அடுத்த படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள்?”

`` `பேரன்பு', ஷாங்காய் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. அதில் பங்கேற்க இயக்குநர் ராமுடன் சீனா செல்லவுள்ளோம். இந்திப் படங்கள் போன்று தமிழ்ப் படங்களையும் சீனாவுக்கு எடுத்துச்செல்ல உதவியாக இருக்கும் என நம்புகிறோம். படத்தை இங்கு ரிலீஸ் செய்யும் வேலைகளில் இருக்கிறோம்.”

பின் செல்ல