‘காதலுக்கு மரியாதை’ ஷாலினியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ‘பாப்’ ஷாலினியிடமும், ‘பாப்’ ஷாலினியிடம் கேட்கவேண்டிய கேள்விகளை நடிகை ஷாலினியிடமும் கேட்டால் எப்படியிருக்கும்? நமது திருவிளையாடலைக் ‘காதலுக்கு மரியாதை’ ஷாலினியிடமிருந்து ஆரம்பித்தோம்.

நீங்கள் ஏன் கர்னாடக சங்கீதம் பக்கமே போவதில்லை?
(கொஞ்ச நேரம் குழம்பினார்) ‘‘அப்படியெல்லாம் இல்லையே... எட்டு வருஷம் நான் கர்னாடக சங்கீதம் படிச்சிருக்கேன். சுமாராப் பாடுவேன். பதினோரு வருஷம் பரதநாட்டியமும் கத்துக்கிட்டேன். ஏன் இப்படிக் கேட்டீங்க?”
நீங்கள் டி.வி காம்ப்பியரிங் செய்வது ஏன்..?
‘‘நானா... டி.வி-யா..? காம்ப்பியரிங்கா..?! ஐயோ! எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் டி.வி. காம்ப்பியரிங்லாம் எதுவும் செய்யலைங்க. டி.வி. பார்க்கத்தான் தெரியும்...”
நீங்க பாட்டு எழுதுவீங்களா..? மியூஸிக் போடற ஆர்வமுண்டா..?
(ஙஞமுஞங’ ரேஞ்சுக்கு நம்மைப் பரிதாபமாக முறைத்தார்... பின் சிரித்தார்.) ‘‘பாட்டா... எழுதறதா?! வைரமுத்துல்லாம் எழுதறாங்களே... அதுமாதிரியா..? என்னங்க நீங்க..? ஏதோ கடவுள் புண்ணியத்துல நல்லபடியா இருக்கேன். நீங்க ஏங்க இப்படியெல்லாம் கேக்கறீங்க..?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களோட அடுத்த ஆல்பம் என்னங்க..?
‘‘என்னங்க... என் பேர் ஷாலினிங்க... நான் பாசில் அங்கிளோட ‘காதலுக்கு மரியாதை’ படத்துல நடிச்சிருக்கேன்...” என்றவரை இடைமறித்து விஷயத்தை விளக்கினோம்.
அருகிலிருந்த டீ டம்ளரை எடுத்து நம்மைக் குறிபார்த்து எறியப் போகிறாராக்கும் என்று காத்திருக்க... ஒரு அகலச் சிரிப்போடு, ‘’நீங்க போங்க... பின்னாடியே நான் போன் செய்து, அந்த ஷாலினிக்குச் சொல்றேன்...” என்றபடி தலையைச் சாய்த்து, செல்லமான சிரிப்புடன் விடைகொடுத்தார்!
அவர் டெலிபோன் டைரக்டரியைத் தேடி ‘பாப்’ ஷாலினியின் எண்ணைக் கண்டுபிடிப் பதற்குள் பறக்க வேண்டுமென்று எல்டாம்ஸ் சாலையிலுள்ள ‘பாப்’ பாடகி ஷாலினி வீட்டுக்கு ‘டேக் ஆப்’ ஆனோம்.
குழந்தையாக நடித்ததற்கும் இப்போ நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?
(‘ஹா’ என்று அதிர்ச்சியாகி) ‘‘ஏதோ தவறுதலா கேட்டுட்டீங்கனு நினைக்கிறேன். ஓகே! குழந்தையா ஷாலினி கேசட் பண்ணினப்போ, புதுப் பாடகியா இருந்தேன். அப்போ வெறும் வெஸ்டர்ன் மட்டும்தான் பாடினேன். இப்போ கஜல், இந்துஸ்தானி கத்துக்கறேன். முன்பைவிட ஓரளவு குரல் பரவாயில்லைனு நினைக்கிறேன்...” (சிரிக்கிறார்)

விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி..?
‘’வ்வாட்..! விஜய்கூட நான் நடிச்சேனா..? விஜய்டி.வி.-யில காம்ப்பியரிங்தான் பண்றேன்...”
ஏன் மலையாளத்துக்கு மட்டும் முன்னுரிமை தர்றீங்க..?
“மலையாளம்னா ஒரு மொழிங்கறது தவிர, எனக்கு வேறெதுவும் தெரியாது...” என்றார் கடுப்பாக. நாம் இன்னும் டென்ஷனை ஏற்றினோம்.
நடிப்புங்கறது உங்க ரத்தத்துல ஊறின விஷயமா?
தலையில் கைவைத்து ``ஓ காட்...” என்றார். ``மம்மி... ப்ளீஸ்... இங்கே வாங்களேன்... இவங்க ஏதேதோ கேக்கறாங்க... எனக்குப் புரியலே...” என்றார். அம்மா வரும் முன், ‘‘எக்ஸ்கியூஸ் மீ... உங்களுக்குப் பாட்டு வருமா..?” என்றோம்.
“ஹாங்... என்ன கேட்டீங்க..?” - வலது கையால் நெற்றியைத் தாங்கியபடி கண்களை மூடினார். முப்பது விநாடிகள் கழித்து, ‘‘நீங்க நடிகை ஷாலினிகிட்ட கேட்க வேண்டிய கேள்வியை மாத்தி என்கிட்டே கேக்கறீங்களா?” என்றார்.
“ஆமாம்..” என்றதும், ‘‘ஹாஹாஹா...” என்று சிரிப்பொலி வந்தது!
- முருகேஷ்பாபு