Published:Updated:

"அப்போ ஆக்டிங், இப்போ ஆடிட்டிங், சீக்கிரமே ஒரு யூ-டியூப் சேனல்!" - 'அப்போ இப்போ' கதை சொல்லும் ரேகா : பகுதி 12

"அப்போ ஆக்டிங், இப்போ ஆடிட்டிங், சீக்கிரமே ஒரு யூ-டியூப் சேனல்!" - 'அப்போ இப்போ' கதை சொல்லும் ரேகா : பகுதி 12
"அப்போ ஆக்டிங், இப்போ ஆடிட்டிங், சீக்கிரமே ஒரு யூ-டியூப் சேனல்!" - 'அப்போ இப்போ' கதை சொல்லும் ரேகா : பகுதி 12

`இப்போ என்ன பண்றாங்க?' தொடருக்காக நடிகை ரேகா, அவருடைய வாழ்க்கை அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

``என் சொந்த ஊர் கேரளாவில் இருக்கிற ஆழப்புலா. அப்பாவுக்கு சென்ட்ரல் கவர்மென்ட் வேலை. நான் குட்டிப் பொண்ணா இருக்கும்போதே, அப்பாவை தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க. ஊட்டியில்தான் படிச்சு வளர்ந்தேன். அப்போ, அப்பா எங்களை சினிமா பார்க்க அனுமதிக்கவே மாட்டார். அப்படி இருந்த நான், சினிமாவுல கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். பிரைவஸி பாதிக்கும்ங்கிறதால நான் எப்பவுமே ஃபேமிலியைப் பற்றி மீடியாக்கள்கிட்ட அவ்வளவா பேசமாட்டேன். ஆனாலும், நான் சினிமாவுக்குள்ள வந்த அந்தச் சுவாரஸ்யமான கதையை உங்களுக்குச் சொல்றேன் வாங்க..." - உற்சாகமாகத் தனது `அப்போ இப்போ’ கதையைச் சொல்லத் தொடங்குகிறார், `கடலோரக் கவிதைகள்' ரேகா.

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

`தெற்கத்திக் கள்ளன்' பட இயக்குநர் கலைமணி சார் ஒருமுறை என்னை ஊட்டியில் யதேச்சையா பார்த்துட்டு, `பார்க்க சாவித்திரி மாதிரி இருக்க...'னு சொல்லி, அவரோட படத்துல நடிக்கக் கூப்பிட்டார். `சினிமா பார்க்கிறதையே குற்றம்னு சொல்ற எங்க அப்பா சினிமாவுல நடிக்கிறதுக்கெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்’னு சொல்லிட்டுப் போயிட்டேன். 

பிறகு, சிலநாள் கழித்து கலைமணி சாரே என்னைத் தேடிவந்து, ``பாரதிராஜா சார் புதுப்படம் ஒண்ணு எடுக்கிறார். ஹீரோயினுக்கு டீச்சர் கேரக்டர். அதுவும் கிறிஸ்தவப் பெண்ணா இருக்கணும். அந்தக் கேரக்டருக்கு உங்கப்பா எதுவும் சொல்லமாட்டார்'னு சொல்லி, அவரே என் அப்பாகிட்ட பேசினார். எங்க அப்பாவும் ஆடிஷனுக்குப் போக சம்மதிச்சார் என்பதுதான், இதில் பெரிய ஆச்சர்யம். பிறகென்ன... நானும் அம்மாவும் ஆடிஷனுக்காக சென்னையில இருந்த பாரதிராஜா சார் ஆபீஸுக்குப் போனோம்.  

அப்போ எனக்கு 15 வயதுதான். பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். பேன்ட், ஷர்ட் போட்டுப் போயிருந்தேன். `இந்தக் காட்டன் சேலையைக் கட்டிக்கோ; பெரிய பொட்டு வெச்சுக்கோ; மேக்கப் எதுவும் போடாமா, இந்தக் கண்ணாடியைப் போட்டுகிட்டு வா’னு பாரதிராஜா சார் சொன்னார். அப்படியே வந்து நின்னேன். சினிமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால, மனசுக்குள்ள பயம் எதுவும் இல்லை. ஆனால், அந்தப் பெரிய கண்ணாடிதான் கொஞ்சம் காமெடியா இருந்துச்சு. பிறகு அன்னைக்கே பாரதிராஜா சார், `கடலோரக் கவிதைகள்’ பட ஜெனிஃபர் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்துட்டார்.  

அதுவரை நான் பாரதிராஜா சார் படங்கள் எதையும் பார்த்ததே இல்லை என்பதுதான் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம். `அட்வான்ஸை பிடிம்மா’னு உடனே 11 ரூபாய் பணத்தைக் கொடுத்த பாரதிராஜா சார், `இங்க பாரு, சினிமாவுல நடிக்கிறேன்னு யாருக்கிட்டேயும் சொல்லக் கூடாது'னு சொல்லி அனுப்பிவெச்சார். பிறகு, மூன்று நாள் கழிச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டு போனார். அங்கே போனா, சத்யராஜ் சாரை என் முன்னாடி நிற்க வெச்சாங்க. அவரைப் பார்த்ததுமே, `ஐய்யோ... இவ்வளவு பெரிய ஆள்கூடவா நடிக்கப்போறோம்’னு நினைச்சு பயந்துட்டேன்.

பிறகு சத்யராஜ் சாரின் ஹைட், வெயிட்டுக்கு ஓரளவுக்காவது பொருத்தமா தெரியணும்னு நிறைய முட்டையும் சத்தான சாப்பாடும் கொடுத்து சாப்பிட வெச்சாங்க. வெரைட்டியான காட்டன் புடவைகளைக் கொடுத்து கட்டச் சொன்னாங்க. இதுக்கிடையில் ஷூட்டிங் ஸ்பாட்ல சின்னப் பசங்ககூட சேர்ந்து கடல்ல நண்டு பிடிச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பேன். பாரதிராஜா சார் அதைப் பார்த்துட்டு, `என் படத்தில் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்திருக்கேன். நீ என்னடான்னா சின்னப் பசங்ககூட சேர்ந்துகிட்டு நண்டு பிடிச்சுக்கிட்டு இருக்க, இங்க வந்து உட்காரு... டேய், போய் அந்தப் பொண்ணை இழுத்துக்கிட்டு வாங்கடா'னு திட்டுவார். சின்னப்பிள்ளை மாதிரி நான் நடந்துகிட்ட அந்த ஷூட்டிங் ஸ்பாட் நாள்களையெல்லாம் நினைச்சுப் பார்த்தா இப்போவும் சிரிப்புதான் வருது. 

ஷூட்டிங் முடிச்சுட்டு எங்க ஊரான ஊட்டிக்குப் போயிட்டேன். பிறகு சில நாள்கள்லேயே, `கவிதாலயா ஆபீஸ்ல இருந்து பேசுறோம். பாலசந்தர் சார் டைரக்‌ஷனில் நடிக்கணும்'னு சொல்லி ஒரு போன் வந்தது. உண்மையைச் சொன்னா, அப்போ எனக்குப் பாலசந்தர் சார் யாருன்னே தெரியாது. `கடலோரக் கவிதைகள்' படத்தோட போட்டோ ஆனந்த விகடனில் அட்டைப் படமா வந்திருந்துச்சு. அதைப் பார்த்துட்டுதான் பாலசந்தர் சார், `புன்னகை மன்னன்' படத்துல நடிக்கக் கூப்பிட்டிருக்கார்னு தெரிஞ்சது.  

`நான் கமல் சாருக்கு ஹீரோயினா?’னு உள்ளுக்குள்ள பயம். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, `எப்படி நடிக்கணும்’னு வொர்க்ஷாப் நடத்தினாங்க. அங்கே கமல் சார், பாலசந்தர் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்த சுரேஷ் கிருஷ்ணா, வஸந்த் சார்னு பலரும் இருந்தாங்க. எல்லோரும் என்னைத் தங்கத் தட்டில் வெச்சுத் தாலாட்டாத குறையா தாங்குவாங்க. பாலசந்தர் சார் அடிக்கடி, `நல்லா கண்ணைத் திறந்து நடி'னு சொல்லி, ஒவ்வொரு காட்சியையும் நடிச்சுக் காட்டுவார். 

அதில் வந்த `என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டோட ஷூட்டிங் டைம்ல திடீர்னு கமல் சார் எனக்கு முத்தம் கொடுப்பார். அந்தக் காட்சி ஸ்கிரிப்ட்ல கிடையாது. அப்படியொரு காட்சி எடுக்கப்போறாங்கனு எனக்குத் தெரியாது. அது, கமல் சாரும் பாலசந்தர் சாரும் பேசி முடிவு பண்ண விஷயம். எனக்கே தெரியாமத்தான் அந்த ஷாட்டை திடீர்னு ஷூட் பண்ணாங்க. நான் உடனே பாலு சார்கிட்ட, `இப்படி ஒரு சீன்ல நடிக்க எங்க அப்பா ஒப்புக்கமாட்டார்'னு சொன்னேன். சுரேஷ் கிருஷ்ணா சாரும் வஸந்த் சாரும், `இதை சென்சாரே ஒப்புக்கமாட்டாங்கம்மா’னு சொன்னாங்க. உடனே நான், `சென்சார்னா என்ன சார்?’னு கேட்டது இப்போவும் ஞாபகம் இருக்கு. அப்படிக் கேட்டதும், எல்லோரும் சிரிச்சுட்டாங்க. 

என் மூணாவது படம் `நம்ம ஊரு நல்ல ஊரு’. நாயகன், ராமராஜன் சார். அந்தப் படத்துல நான் நடிக்கப்போறதைத் தெரிஞ்சுக்கிட்டு பாரதிராஜா சார், `உன்னை எவ்வளவு பெரிய ஹீரோயினா கொண்டு வந்திருக்கிறேன். நீ என்னடானா யாரோ புதுமுக ஹீரோகூட நடிக்கிறியாம்ல'னு திட்டினார். ஆனால், அந்தப் படம் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து நிறைய படங்கள், நிறைய கேரக்டர்கள். 

`பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படம் பண்ணப்போ மலையாள சினிமாவுல இருந்து நடிக்கக் கூப்பிட்டாங்க. `ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’னு முதல் படமே இயக்குநர் ஃபாசில் சாரின் தயாரிப்பு. அப்போ எனக்காக இயக்குநர் பாசில் சாரே செட்டுக்கு வந்திருந்தார். அப்படி மலையாளத்தில் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. கடவுள் புண்ணியத்தில் நிறைய நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களுடைய படங்களில் நடிச்சேன். 

மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்தன்னு மற்ற மொழிகளின் டாப் ஹீரோ படங்களில் நடிச்சுட்டேன். ஆனா, ரஜினி சார்கூட மட்டும்தான் நடிக்க முடியலை. ஒருமுறை அந்த வாய்ப்பும் வந்தது, கால்ஷீட் பிரச்னை காரணமா நடிக்க முடியாம போச்சு. ஆனா, ரஜினி சார்கூட எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. காவிரி பிரச்னைக்காக ரஜினி சார் உண்ணாவிரதம் இருந்தப்போ, ஒரு பொண்ணு அவருக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடிச்சு வெச்சா... அடுத்தநாள் காலையில அந்தப் புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தது. அது என் பொண்ணுதான்!

எனக்காக ஆஷா போஸ்லே பாடின, `செண்பகமே... செண்பகமே' பாட்டு. பிறகு டிவியில் `கனா காணும் காலங்கள்' தொடர். பல மொழிப் படங்கள், பாடல்கள், சீரியல்கள்னு எனக்கு எல்லாமே அமைந்தன. முக்கியமா, `கனா காணும் காலங்கள்’ சீரியல் பார்த்துட்டு, `இந்த மாதிரியான அம்மாதான் வேண்டும்’னு பலரும் பேசுவாங்க. அந்தத் தொடருக்கான ஸ்கிரிப்ட் எழுதும்போதே, நான், ரமணன் சார் எல்லாரும் `இப்படி இருக்கட்டும், அப்படி இருக்கட்டும், இப்படி இருந்தாதான் பசங்களுக்குப் பிடிக்கும்!'னு பார்த்துப் பார்த்து செதுக்குவோம்.  

நான் ஹீரோயினா உச்சத்தில் இருந்த காலத்திலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சினிமாவுல நடிக்க வந்ததுக்குப் பிறகு படிப்பைத் தொடர முடியாம பேச்சு. ஆனா, என் கணவர் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளும் எனக்கு நிறைய கத்துக்கொடுத்தா. இப்போ என் கணவரோட எல்லா ஆடிட்டிங் வேலைகளையும் நான்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  

கல்யாணத்துக்குப் பிறகு சில வருடங்கள் நடிக்காம இருந்தேன். ஒரு பொது நிகழ்ச்சியில் என்னையும் என் கணவரையும் பார்த்த ரஜினி சார், `அப்படியே இருக்காங்களே. திரும்பவும் நடிக்கச் சொல்லலாமே. யோசிங்க'னு என் கணவரிடம் சொன்னார். அப்புறம் நானும், கணவரும் பேசி, நான் மீண்டும் நடிக்கிற முடிவை எடுத்தோம். நான் திரும்ப நடிக்க வந்ததுக்கு ரஜினி சார் மாதிரி ராதிகா மேடமும் நிறைய நம்பிக்கை கொடுத்தாங்க.  

சினிமாவுல நடிச்சுக்கிட்டே இருந்தாலும், வீட்டையும் குடும்பத்தையும் நல்லா பார்த்துக்குவேன். படத்துக்கான அட்வான்ஸ் பணம் கைக்கு வந்ததுமே, நானும் பொண்ணும் ஷாப்பிங் கெளம்பிடுவோம். வாழ்க்கையை பாசிட்டிவ்வா, ரிலாக்ஸா அனுபவிக்கணும்னு நினைப்பேன். காலையில் எழுந்ததும் யோகா பண்ணுவேன். சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, ஹெல்த்தியா இருக்கணும்னு நினைப்பேன். 

அதேசமயம், நல்ல கேரக்டர்ஸ் கிடைச்சாதான் நடிப்பேன். ஆனா, பலரும் ஒரேமாதிரியான கேரக்டர்களுக்கே என்னைக் கூப்பிடுறாங்க. அப்படிப் பல வாய்ப்புகளைத் தவிர்த்திருக்கேன். ஒரு யூ-டியூப் சேனல் ஆரம்பிச்சு, பெண்களுக்கான பல விஷயங்களைப் பதிவு பண்ணனும்னு ஆசை இருக்கு, சீக்கிரமே அதைப் பண்ணப்போறேன்!" 

வாழ்த்துகள் ரேகா!

அடுத்த கட்டுரைக்கு