Published:Updated:

``முக்தா சீனிவாசன் படமா... வீட்டுல நிச்சயம் உலை கொதிக்கும்!" - எஸ்.பி.முத்துராமன்

``முக்தா சீனிவாசன் படமா... வீட்டுல நிச்சயம் உலை கொதிக்கும்!" - எஸ்.பி.முத்துராமன்

மறைந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

``முக்தா சீனிவாசன் படமா... வீட்டுல நிச்சயம் உலை கொதிக்கும்!" - எஸ்.பி.முத்துராமன்

மறைந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

Published:Updated:
``முக்தா சீனிவாசன் படமா... வீட்டுல நிச்சயம் உலை கொதிக்கும்!" - எஸ்.பி.முத்துராமன்

ழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா சீனிவாசன் மறைந்தார். சினிமாத்துறையைப் பற்றி நிறைய தொடர்களையும் புத்தகங்களையும் எழுதியுள்ள அவருக்கு 88 வயது. மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்ட `நாயகன்' படத்தை முதலில் தயாரித்தவர் இவர்தான். பிறகுதான், வேறொரு தயாரிப்பாளர் மாறினார். முக்தா சீனிவாசன் நினைவுகள் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

"எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயனாக நடித்த `முதலாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முக்தா சீனிவாசன், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர். ஒரு பக்கம் தயாரிப்பாளராகவும் இன்னொரு பக்கம் இயக்குநராகவும் வலம் வந்தவர். முக்தாவுக்குப் பெரும் பின்புலமாக இருந்தவர், அவர் அண்ணன் ராமசாமி. முக்தா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிப்பதற்குப் புதுமுகங்களும் சரி, முன்னணி நடிகர் நடிகைகளும் சரி... ரொம்பவே ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக, துணை நடிகர், நடிகைகளுக்கு இவர்களின் படங்களில் நடிக்கும்போது அவ்வளவு சந்தோஷம்! 

ஏனெனில், ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடியும் தருவாயில் துணை நட்சத்திரங்களின் பெயர்களைக் கவரில் எழுதி, அதில் அவர்களது சம்பளப் பணத்தைப் போட்டு கையில் கொடுக்கத் தயாராக நிற்பார், ராமசாமி. வேலை முடிந்த மறுநிமிடம் தொழிலாளர்கள், நடிகர், நடிகைகள் கையில் பணம் கொடுத்து, அனைவருக்கும் நன்றி சொல்லி வழியனுப்பி வைப்பார். தினசரி வருமானத்துக்குக் கஷ்டப்படும் துணை நடிகைகள் பலர், `முக்தா கம்பெனியில் நடிக்கப்போனா அடுப்புல உலையை வெச்சிட்டு தைரியமா நடிக்கப் போகலாம்' என்று பெருமையாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு அமோக வரவேற்பு பெற்ற தயாரிப்பு நிறுவனமாக இருந்தது முக்தா கம்பெனி. 

நாங்களெல்லாம் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும், நாங்கள் இதுவரை செய்யாத ஒரு செயலை செய்து எங்களுக்கு ஷாக் கொடுத்தார். சினிமாவில் காலம் காலமாக ஒரு மணிக்கு பிரேக் விடுவார்கள். சாப்பிட்டு முடித்து மறுபடியும் 3 மணிக்குப் படப்பிடிப்பைத் தொடர்வார்கள். அதன்பிறகே டிரைவர்கள், புரொடக்‌ஷன் உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள். முக்தா கம்பெனியில் அப்படியில்லை. மதியம் 12.30 மணிக்கே டிரைவர்களையும், புரொடக்‌ஷன் உதவியாளர்களையும் சாப்பிட வைப்பார்கள். சினிமாவில் ஷூட்டிங் இடைவேளையில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்களுக்குத் தயாரிப்பு உதவியாளர்கள் பசியோடு உணவைப் பரிமாறாமல், முகமலர்ச்சியோடு பரிமாறுவதைப் பார்த்து மகிழ்வார், முக்தா சீனிவாசன்.

சினிமாவில் புதுப்படம் தயாரிப்பதற்கு முன்னர் பட்ஜெட் போடுவது தனிக்கலை. ஆரம்பத்தில் 5 கோடிக்குப் பட்ஜெட் போட்டுவிட்டு, படம் முடியும் தருவாயில் 10 கோடிக்குமேல் செலவாகிப்போவதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். முக்தா சீனிவாசன் துல்லியமாக பட்ஜெட் போடுவதில் கில்லாடி. சிவாஜி நடித்த `கீழ்வானம் சிவக்கும்', ஜெயலலிதா நடித்த `சூரியகாந்தி', ரஜினி நடித்த `பொல்லாதவன்', கமல் நடித்த `சிம்லா ஸ்பெஷல்' போன்ற படங்களைத் திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் தயாரித்து முடித்து, நல்ல லாபத்தைச் சம்பாதித்தார். சினிமா வரி, கேளிக்கை வரி உள்பட சினிமா சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் தனது விரல்நுனியில் வைத்திருப்பார், முக்தா சீனிவாசன்.

தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த அனைத்துத் தலைவர்களோடும், அவர்களது கட்சியினரோடும் இணக்கமாக இருந்தார். சினிமா தொடர்பான விஷயம் குறித்துப் பேசும்போது, அரசு சார்பில் முக்தாவிடம் ஆலோசனைகள் கேட்கப்படும். முக்தா காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், ஜெயலலிதா நடித்த `சூரியகாந்தி' படத்தைத் தந்தை பெரியாருக்குப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டினார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பெரியார், `பெண்ணடிமைக்கு எதிராகப் படத்தை தயாரித்ததற்காகப் பாராட்டுகிறேன்' என்று முக்தாவை வாழ்த்தினார்.

சினிமாவில் மூத்த இயக்குநராக இருந்தாலும் இளைஞர்களையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். சிலசமயம் வயது வித்தியாசம் பார்க்காமல் என்னிடம்கூட கருத்துக் கேட்டிருக்கிறார். இப்போதுள்ள தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் முக்தா சீனிவாசன் ஒரு ரோல் மாடல் என்று சொன்னால் மிகையல்ல!'' என்றார், முத்துராமன்.