Published:Updated:

``ஆணாதிக்கம்னு சொல்ல வேணாம்... ஆனா, இப்படிச் சொல்லுங்க!" - ரகுல் ப்ரீத் சிங்

சுஜிதா சென்

சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களோடு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார், ரகுல் ப்ரீத் சிங். அவருடன் கொஞ்சம் ஜாலி சாட்.

``ஆணாதிக்கம்னு சொல்ல வேணாம்... ஆனா, இப்படிச் சொல்லுங்க!" - ரகுல் ப்ரீத் சிங்
``ஆணாதிக்கம்னு சொல்ல வேணாம்... ஆனா, இப்படிச் சொல்லுங்க!" - ரகுல் ப்ரீத் சிங்

சூர்யா நடிக்கும் 'என்ஜிகே', கார்த்தி நடிக்கும் புதிய படம், சிவகார்த்திகேயன் படம் எனத் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு, ரகுல் ப்ரீத் சிங்தான் ஜோடி! தவிர, பாலிவுட் படம் ஒன்றிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் கொஞ்சம் ஜாலி சாட்! 

``ரகுல் ப்ரீத் சிங்... உங்களைப் பற்றி நீங்களே ஒரு ஜாலி ரீ-வைண்ட் கொடுக்க முடியுமா?" 

``அப்பா ஆர்மிமேன். அவருக்கு ரெண்டு வருடத்துக்கு ஒரு தடவை வெவ்வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சுக்கிட்டே இருக்கும். அதனால, இந்தியாவுல இருக்கிற நிறைய இடங்கள்ல வாழ்ந்திருக்கேன். எல்லா ஊர் கலாசாரத்தையும் ஏத்துக்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கு. என் அம்மா நான் எங்கே போனாலும் கூடவேதான் வருவாங்க. இந்த வருடத்துல இருந்துதான் நான் தனியா போறேன்னு சொல்லியிருக்கேன். அம்மா எனக்கு எப்பவுமே சப்போர்டிவ். எந்த ஒரு முடிவாக இருந்தாலும், 'நீதான் எடுக்கணும்'னு சொல்வாங்க. ஆனா, அதுக்கான பக்குவம் இன்னும் எனக்கு வரலை.  அதனால, எல்லா விஷயத்தையும் அப்பாகிட்ட கேட்டுத்தான் முடிவு பண்ணுவேன். என் குடும்பம் டெல்லியில இருக்கு. நான் ஹைதராபாத்ல இருக்கேன். தொடர்ந்து ஷூட்டிங்ல இருக்கிறதுனால அடிக்கடி மீட் பண்ணிக்க முடியாது. ஆனா, போன்ல எப்பவுமே தொடர்புல இருப்போம்."

``உங்களுக்கு விளையாட்டுல ஆர்வம் அதிகமோ?"

``ஃபிட்னெஸ்ஸை பராமரிக்கிறதுதான் என் முக்கியமான பொழுதுபோக்கு. சின்ன வயசுலேயே கராத்தேயில புளூ பெல்ட் வாங்கியிருக்கேன். ஸ்கூல் படிக்கும்போது தேசிய அளவிலான கோல்ஃப் போட்டிகள்ல விளையாடியிருக்கேன். மாசத்துல ஒரு தடவையாவது கோல்ஃப் கிரவுண்ட்டுக்குப் போயிடுவேன். இல்லைனா, இன்டோர் கேம்ஸ் விளையாடுவேன்!" 

``பெண் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்ல உங்களை அதிகமா பார்க்கமுடியுதே?" 

``குழந்தை வளர்ப்புல ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன். பெண் குழந்தைகளுக்குப் படிப்பு, மருத்துவம், தொழில் தொடங்குதல் இந்தமாதிரி எந்த செலவாக இருந்தாலும், அதை அரசாங்கம் ஏத்துக்கணும். இப்படிப் பண்றது மூலமா பெண் சிசுக் கொலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொதுமக்களும் பெண் குழந்தைகளை ஒரு சுமையா பார்க்கமாட்டாங்க. நடிகையா இருந்தாலும், எனக்கும் சமூகப் பொறுப்புகள் இருக்கு. பெண் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கணும்ங்கிற நோக்கத்தோட தொடங்கப்பட்ட 'Beti Bachao, Beti Padhao' அமைப்போட தெலுங்கானா மாநிலத் தூதுவர் நான்!" 

``உங்களுக்கு ஆன்மிகத்துல ஆர்வம் இருக்குனு சொல்றாங்களே..."

``ஆன்மிகத்துல ஆர்வமும் இருக்கு, இறை பக்திமேல நம்பிக்கையும் இருக்கு. 'மதம்' என்ற கோட்பாடுதான் முட்டாள்தனம்னு நான் நினைக்கிறேன். 'கடவுள்'ங்கிற சக்தி ஒன்றுதான். அதை மத அடிப்படையில பிரிக்க முடியாது. அதுக்காக தினமும் கோயிலுக்குப் போறது, பூஜை பண்றது மாதிரியான விஷயங்களை நான் கடைப்பிடிக்கிறது இல்லை. நம்ம மனசுதான் கோயில். அதுல கடவுளை நினைச்சாலே போதும். எல்லாம் நல்லதாகவே நடக்கும்!"

``சினிமாவுல ஆணாதிக்கம் அதிகம்னு ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தீங்களே...?"    

``இந்த உலகமே ஆணாதிக்கம் நிறைந்ததுதான். சினிமாவுல ஆணாதிக்கம் இருக்குனு தயவுசெஞ்சு பேசாதீங்க. சினிமாவையும் மற்ற துறை மாதிரி சமமா பாருங்க. இப்போ பெண்களும் ஆண்களுக்குப் போட்டியா எல்லாத் துறையிலேயும் முன்னேறிக்கிட்டு வர்றாங்க. ஆணாதிக்கம் என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வெச்சுட்டு, 'போட்டி நிறைந்த உலகம்'னு சொல்ல ஆரம்பிக்கலாமே!" கோரிக்கையோடு பேட்டியை முடிக்கிறார், நடிகை ரகுல் ப்ரீத் சிங்