Published:Updated:

``நீலாம்பரி முதல் ருத்ரா வரை... வில்லியாக மிரட்டிய ஹீரோயின்கள்!"

ஹீரோயின்களாக வலம் வந்துகொண்டிருக்கும்போதே வில்லத்தனத்தில் மிரட்டிய ஹீரோயின்களின் பட்டியல் இது.

``நீலாம்பரி முதல் ருத்ரா வரை... வில்லியாக மிரட்டிய ஹீரோயின்கள்!"
``நீலாம்பரி முதல் ருத்ரா வரை... வில்லியாக மிரட்டிய ஹீரோயின்கள்!"

நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு அமைந்து, பெர்ஃபாமென்ஸில் அசத்த இடம் கிடைத்தால் நடிகைகளுக்கு டபுள் டமாக்கா ஆஃபர்தான். அப்படி ஹீரோயின்களாக வலம் வந்துகொண்டிருக்கும்போதே வில்லத்தனத்தில் மிரட்டிய ஹீரோயின்கள் பற்றி பார்ப்போம். 

நீலாம்பரி - ரம்யா கிருஷ்ணன் (படையப்பா) :

வில்லி என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது நீலாம்பரி கதாபாத்திரமாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு இதில் ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர் வடிவமைப்பும், வசனங்களும் அருமையாக அமைந்திருக்கும். `எப்படி இருக்கா என் வீட்டு வேலக்காரி?', `வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டுப் போகவே இல்ல' என்று இவர் பேசிய வசனங்கள் இன்றளவும் பாப்புலர். இளைமையான தோற்றம், வயதான தோற்றம் என இரண்டிலுமே தனக்கான கம்பீரத்தில் மெர்சல் காட்டியிருப்பார். ரஜினி ரசிகர்கள் அனைவரும் நீலாம்பரியை `எங்க தலைவருக்கு ஏற்ற வில்லிதான்' என்று ரம்யா கிருஷ்ணனின் நெகட்டிவ் ரோலுக்கு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் கொடுத்தார்கள். 

ஏ.சி.பி காயத்ரி - தபு (சிநேகிதியே) :
 

டோலிவுட், பாலிவுட் எனக் கலக்கிக்கொண்டிருந்த தபு, `காதல் தேசம்' படம் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். `உன்னைக் காணவில்லையே நேற்றோடு...' என இளைஞர்கள் தபுவுக்கு ரசிகர்கள் ஆனார்கள். பின், `இருவர்', `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களில் கலர்ஃபுல் கதாநாயகியாகக் கலக்கியவர், `சிநேகிதியே' படத்தில் போலீஸ் ஆபீஸர் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இறுதியில், அவர் பழி வாங்கும் காட்சிகளில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

ராஜேஸ்வரி - மனீஷா கொய்ராலா (மாப்பிள்ளை) :
 

ரஜினியின் `மாப்பிள்ளை' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் `மாப்பிள்ளை' என்ற பெயரில் ஒரு படம் வெளியாகிறது, அதில் தனுஷ் ஹிரோவாக நடிக்கிறார் என்ற செய்திகள் வந்தவுடன், மாமியார் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. அந்தக் கேரக்டரில் மனீஷா கொய்ராலா நடிக்கிறார் என்றவுடன், காதல் கதையில் நடித்து வந்த மனீஷா, பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து வில்லத்தன மாமியாராக மிரட்டினார். 

ஷைலஜா - மும்தாஜ் (ராஜாதி ராஜா) :
 

ஹீரோயினாக அறிமுகமான மும்தாஜ், துணை கேரக்டர்களில் நடித்துவந்தார். பின், கவர்ச்சியான வேடங்களிலும், ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்த மும்தாஜ், வில்லியாக மிரட்டிய படம், `ராஜாதி ராஜா'. ரெளடியாக இருந்து மந்திரி ஆகும் மும்தாஜிற்கும் லாரன்ஸிற்கும் நடக்கும் ரிவெஞ்ச் காட்சிகளில் தன் முகபாவனைகளாலும், வசன உச்சரிப்புகளாலும் நெகட்டிவ் ரோலில் இவரது நடிப்புப் பேசப்பட்டது. இப்படத்துக்குப் பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.   

ஸ்மிதா - ஜோதிகா (பச்சைக்கிளி முத்துச்சரம்) :
 

ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ஸ்மிதாவைப் பிடிக்கும் நமக்கு, படத்தின் இறுதியில் அவரது வில்லத்தனமும் சரத்குமாரைப் பார்த்து சிரிக்கும் ஏளனச் சிரிப்பும் இவர்மீது கடும் கோபம்கொள்ள வைக்கும். அந்தளவுக்கு சைலன்ட் கில்லராகப் படத்தில் ஜொலித்தார். லவ்லி கதாபாத்திரங்களிலேயே நடித்த ஜோதிகா, இந்தப் படத்தில் வேற லெவலில் இருப்பார். இந்தக் கேரக்டரைப் பார்த்த நாம் மட்டுமல்ல, நடித்த ஜோதிகாவும் ஸ்மிதாவை மறக்கமாட்டார்.  

தேவசேனா - சிம்ரன் (ஐந்தாம் படை) :
 

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பெர்ஃபெக்ட் ஜோடியாக நடித்துவந்த சிம்ரன், பின் துணைக் கேரக்டர்களில் தலை காட்டினார். பரதநாட்டியக் கலைஞராக வரும் தேவசேனா, படத்தின் பாதியில் வில்லியாகத் தன் ருத்ரதாண்டவத்தை நிகழ்த்தியிருப்பார். சுந்தர்.சி-யைப் பழிவாங்கும் நோக்கத்தோடு இவர் போடும் திட்டமும், குடும்பத்தைப் பிரிப்பதற்கு இவர் எடுத்த நடவடிக்கைகளும் சிம்ரனை வித்தியாசமாகக் காட்டியது.

 கீதா - ரீமா சென் (வல்லவன்) :
 

`வசீகரா...' என ரொமான்ஸ் பாடல் பாடி காதல் நாயகியாகவும், கனவு நாயகியாகவும் இருந்த ரீமா சென், `வல்லவன்' படத்தில் ராட்சஷ காதலியாக மிரட்டியிருப்பார். ஓவர் காதல் ஓவர் எதிர்பார்ப்பு என டார்ச்சர் செய்யும் கீதாவைப் பார்த்தாலே கோபம் வருமளவுக்கு அந்தக் கேரக்டரிலேயே வாழ்ந்திருப்பார், ரீமா சென். பள்ளி மாணவியாக வந்திருந்தாலும், தன் கேரக்டருக்கான திமிர், கோபம், ஆணவம் என நடிப்பில் தெறிக்கவிட்டிருப்பார்.

பிரியங்கா - தமன்னா (கேடி) : 
 

எல்லோருக்கும் சில படங்கள் நடித்த பின்புதான் நெகட்டிவ் ரோல் கிடைக்கும். ஆனால், தமன்னாவுக்கு முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோல்தான். அந்தவிதத்தில் தமன்னா வித்தியாசமானவர் என்றே சொல்லலாம். கல்லூரியில் அதிகாரம் பண்ணும் பிரியங்கா, ஹீரோ - ஹீரோயினின் காதலைப் பிரிக்கச் செய்யும் வேலைகள், காதலுக்காகத் தன் அண்ணனைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு வில்லத்தனமானக் காதலால் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருப்பார்.    

ஈஸ்வரி - ஸ்ரேயா ரெட்டி (திமிரு) :
 

தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்த ஸ்ரேயா ரெட்டி, `திமிரு' படம் மூலம் வில்லியாகத் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது உடை, முகபாவனைகள், உடல்மொழி என அனைத்துமே அசத்தியது. பயங்கரமான ரெளடியாக வரும் ஸ்ரேயா ரெட்டி, விஷாலை `ஐ லவ் யூ மாமா' என ஒன்சைடாகக் காதலித்து அடைய விரும்பும் காட்சிகளும், யாருக்குமே மரியாதை கொடுக்காமல் அதட்டிப் பேசும் வசனங்களிலும், `அக்கா ஈஸ்வரி' நன்றாக ஸ்கோர் செய்திருந்தார். 

கட்கி மோய் - சமந்தா (10 எண்றதுக்குள்ள) :
 

`நீதானே என் பொன்வசந்தம்', `கத்தி', `அஞ்சான்' போன்ற படங்களில் கலர்ஃபுல் கதாபாத்திரங்களில் நடித்து, கனவுக் கன்னியாக இருக்கும் சமந்தா, `10 எண்றதுக்குள்ள' படத்தில் வெகுளி ஷகீலா, வில்லி கட்கி மோய் என டூயல் ரோலில் நடித்தார். பார்வை, உடல்மொழி, பேச்சு எனத் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் வாழும் கட்கி மோய், பரோலில் வரும் காட்சியில் புகைப்பிடித்தபடி முறைக்கும் காட்சியிலும், சண்டைக் காட்சிகளிலும் சமந்தாவா இது என ஆச்சர்யப்படும் வகையில் நடித்திருப்பார். 

ருத்ரா - த்ரிஷா (கொடி) :
 

`சிறுக்கி வாசம் காத்தோட' என்று தனுஷுடன் முதல் பாதியில் டூயட் பாடும் த்ரிஷா, இரண்டாம் பாதியில் தன் அரசியல் லட்சியத்துக்காக எதையும் செய்வேன் என்று தனுஷைக் கொலை செய்யும் காட்சியிலும், அரசியல்வாதியாக நேர்த்தியாகக் காய் நகர்த்தும் காட்சிகளிலும் மாஸ் காட்டியிருப்பார், ருத்ரா. 50 படங்களுக்குமேல் நடித்த த்ரிஷா, இந்தப் படத்தில்தான் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்தார். 

இதுதவிர, வரலட்சுமி சரத்குமார் `சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். படத்தின் டீஸரில் காரிலிருந்து இறங்கி ஆக்ரோஷமாகப் பார்க்கும் காட்சிகள் இவரது கேரக்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இன்னும் பல ஹீரோயின்களை வில்லியாகப் பார்க்கவும் ரசிகர்கள் வெயிட்டிங்!