Published:Updated:

"கர்நாடகாவில் 'காலா' ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?!" - பிரச்னையின் விபரம்

"கர்நாடகாவில் 'காலா' ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?!" - பிரச்னையின் விபரம்
"கர்நாடகாவில் 'காலா' ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?!" - பிரச்னையின் விபரம்

தமிழகத்துக்குக் காவிரி நீரைத் தர வேண்டி, தமிழ் சினிமா கலைஞர்கள் அவ்வப்போது பேசுவதும் அப்படிப் பேசுபவர்களின் படம் கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என எதிர்ப்பதும் ஒரு வழக்கமாகவே நடந்து வருகிறது. `காலா'வுக்கும் அந்தப் பிரச்னை எழுந்திருக்கிறது.

ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த முதல் நாளே எதிர்பார்க்கப்பட்ட சில விஷயங்களில் ஒன்று, இவரது திரைப்படங்கள் இனி  எதிர்ப்பில்லாமல் ரிலீஸ் ஆகாது என்பது. ரஜினியின் `காலா' படத்தை ரிலீஸ் செய்வது தமிழகத்தில் சாத்தியமாகிவிட்டது. ஆனால், கர்நாடகா எதிர்க்கிறது! 

"கர்நாடகாவில் 'காலா' ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?!" - பிரச்னையின் விபரம்

ரஜினியின் படங்கள் `சூப்பர் ஸ்டார்' என்ற ஒற்றை வார்த்தையைச் சொன்னாலே தேசம் முழுதும் பிசினஸ் ஆகிவிடும். பெரிய பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் ரஜினியின் `காலா', `2.0' இரு படங்களும் அதை மனதில் வைத்தே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ளது. ஜூன் 7- ம் தேதி `காலா' வெளியாகவுள்ள நிலையில், காவிரி பிரச்னையில் தமிழகத்துக்காகக் குரல் கொடுத்தார் ரஜினி என்ற காரணத்துக்காக, இன்று அவரது `காலா' படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யத்தடை என வர்த்தக அமைப்புகள் அறிவித்துள்ளன. தவிர, ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 'கலவரத்தை ஏற்படுத்தியது சமூக விரோதிகள்' என்று ரஜினி சொல்ல, `காலா' ரஜினியைத் தமிழகமும் நிர்கதி ஆக்கியுள்ளது. 

ரஜினி  காவிரிக்காகக் குரல் கொடுக்காதபோது உணர்ச்சிப்பொங்கப் பேசிய சத்யராஜ், தான் நடித்த `பாகுபலி' படத்தில் ரிலீஸ் சமயத்தில் தன்னுடைய பேச்சு கன்னடர்கள் மனதைப் புண்படுத்துவதுபோல் இருந்ததற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். அதைப் பின்பற்றி ரஜினியும் தன் `காலா' படம் கர்நாடகத்தில் ரிலீஸாக வேண்டுமென்றால், மன்னிப்புக் கோருவது சரியானதாக இருக்குமா? இன்று தமிழகத்தில் ரஜினி உருவாக்கிவரும் அரசியல் முகத்துக்கு இப்படி மன்னிப்புக் கேட்பது தமிழகத்தில் அவருக்குப் பெரிய சறுக்கலாக இருக்காதா? எனப் பல கேள்விகள் எழுகின்றன.             

கர்நாடகாவில் `காலா' ரிலீஸுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கர்நாடக சினிமா வர்த்தக சபை உறுப்பினர் ஒருவருடன் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவரிடம் கூடுதலாகச் சில விவரங்களும் கிடைத்தன. ``காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை இதுவரை சில கர்நாடக அமைப்புகள் மட்டுமே சினிமா ரிலீஸைத் தடுப்பது, எதிர்த்துக் கோஷம் போடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். லோக்கல் விநியோகஸ்தர்களிடம் அல்லது படத்தின் தயாரிப்பாளரிடம் பணத்தைக் கறப்பதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாய் இருக்கும். அதை செட்டில் செய்துவிட்டால், படங்கள் சுமுகமாக ரிலீஸ் ஆகும். 

ஆனால், `காலா' பிரச்னையில் அப்படியில்லை. இங்கு இரண்டு மூன்றுபேர் கூடிக்கொண்டு அமைப்புகளாக தங்களைக் வெளிக்காட்டிக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட 18 அமைப்புகள் `காலா'வுக்கு எதிராகப் போர்க்கொடியைத் தூக்கியிருக்கிறது. அவர்களை மீறி படத்தைத் திரையிட்டால், தியேட்டர்கள் தாக்கப்படும், படம் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் கர்நாடக திரைப்பட வர்த்தகச் சம்மேளனம் இந்த விஷயத்தை கேர்ஃபுல்லாக அணுகி வருகிறது. கர்நாடகாவில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் `காலா' வெளிவரவிருக்கிறது. படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாவிட்டால், கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும். 

"கர்நாடகாவில் 'காலா' ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?!" - பிரச்னையின் விபரம்

`பாகுபலி 2' திரைப்படத்துக்கு இதேபோல் ஒரு பிரச்னை வந்தபோது, சத்யராஜ் மன்னிப்புக் கேட்டும் கேட்காத மாதிரி ஒரு விஷயத்தைச் செய்தார். தொடர்ந்து சில செட்டில்மென்ட்ஸுக்குப் பிறகு அப்படம் வெளியானது. `காலா' விஷயத்தில் எதிர்ப்புக் குழுவினர் பணத்தை எதிர்பார்க்காதது ஆச்சர்யமாக உள்ளது. தவிர, சத்யராஜ் செய்ததுபோல் ரஜினியால் செய்யமுடியாது. ரஜினி இன்றைக்குத் தமிழக அரசியல்வாதி. அவர் தமிழகத்துக்கு ஆதரவாகப் பேசியவதற்கு எப்படி மன்னிப்புக் கேட்பார் என்று தெரியவில்லை. இன்று மாலை ரஜினியை எதிர்க்கும் குழுவினரோடு கர்நாடகத் திரைப்பட வர்த்தகச் சங்கம் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையில்தான் அனைத்துமே உள்ளது. இன்று இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், `காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது. இந்த விஷயத்தில் ரஜினிகாந்த அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கும்தான் நஷ்டம்." என்கிறார், அவர்.

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், ``சினிமா வேறு அரசியல் வேறு. `காலா' படத்தை ஒருவர் தயாரித்திருக்கிறார், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கிறார். அதனால், இதை எதிர்ப்பதில் நியாயம் இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவது வேறு; அவர் நடித்திருக்கும் திரைப்படம் என்பது வேறு. இதுகுறித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பரிடம் பேசியிருக்கிறோம். அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. `காலா' படம் எல்லா இடங்களிலும் நல்லபடியா வெளியாக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியைக் கண்டிப்பாகச் சந்திப்போம்." எனக் கூறியிருக்கிறார். 

கர்நாடகாவில் `காலா' ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்பது இன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவில்தான் தெரியும்!.

அடுத்த கட்டுரைக்கு