Published:Updated:

``பதினைந்து கெட்டப், பாவமா உட்கார்ந்திருந்த சிம்பன்ஸி, டைரக்டருக்கு ஜாலி ரிவெஞ்ச்!" - `தமிழ்ப்படம் 2.0' சதீஷ்

காமெடி நடிகர் சதீஷ், `தமிழ்ப்படம் 2.0' படத்தில் பத்துக்கும் அதிகமான கெட்டப்களில் நடித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

2010-ல் `தமிழ்ப்படம்' மூலமாக கோலிவுட்டில் என்ட்ரியான நடிகர் சதீஷ், இன்று பிஸியோ பிஸி. `தமிழ்ப்படம் 2.0' படத்தில் பத்து கெட்டப்களில் நடித்திருக்கிறார் எனத் தொடர்புகொண்டால், `பத்து இல்லை பாஸ்... பதினைந்து கெட்டப்ல கலக்கியிருக்கேன்!' எனச் சிரிக்கிறார். 
 

`` `தமிழ்ப்படம்' டூ `தமிழ்ப்படம் 2.0' வரை... கொஞ்சம் ரீவைண்ட் ப்ளீஸ்!?"  

``நான் முதல்ல கமிட் ஆன படம் `மதராசப்பட்டினம்'. அதுல நடிச்சுக்கிட்டு இருந்தபோது, கேமராமேன் நீரவ் ஷா சார்தான் `தமிழ் சினிமாவை ஸ்பூஃப் பண்ணி ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கோம்'னு சொன்னார். அதைக் கேட்டுட்டு, `எங்கே எப்போனு சொல்லுங்க சார். ஏதாவது ரோல் இருந்தா நானும் பண்றேன்'னு சொன்னேன். என்னை அந்த டீமுக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். `சென்னைனாலே சென்ட்ரல் ஸ்டேஷன் முன்னாடி கேமரா வெச்சிடுவீங்களாடா? சென்னையில வேற எதுவுமே இல்லையாடா?'னு ஒரு வசனம் பேச வெச்சு ஆடிஷன் பண்ணாங்க. ஆனா, ஷூட்டிங் எப்போனு சொல்லலை. கிரேஸி மோகன் சார் டிராமா ட்ரூபோட சேர்ந்து டெல்லிக்குப் போயிருந்தோம். `நாளைக்கு ஷூட்டிங் உங்க போர்ஷன்தான் முதல்ல எடுக்கிறோம் வந்திடுங்க'னு போன் வந்திடுச்சு. உடனே திரும்பி வர கையில காசு இல்லை. ஒரு நண்பர் மூலமா ஃபிளைட் டிக்கெட் போடச் சொல்லி சென்னை வந்து முதல்நாள் ஷூட்டிங்ல கலந்துக்கிட்டேன். பரபரப்பான அனுபவம் அது."
 

`` `தமிழ்ப்படம் 2.0' படத்துல பத்துக் கெட்டப்ல வர்றீங்களாமே!?"

``ஆக்சுவலா, பத்து இல்ல... பதினைஞ்சு கெட்டப்ல வர்றேன்! ஒவ்வொரு சீன்லேயும் ஒவ்வொரு கெட்டப்ல வருவேன். இதுவரை ஜீன்ஸையும் சட்டையும்தான் மாத்தி மாத்திப் போட்டு நடிச்சிருக்கேனே தவிர, இதுவரை பெருசா கெட்டப் சேஞ்ச்னு நான் பண்ணதில்லை. இந்தப் படம் அதை பிரேக் பண்ணும்னு நினைக்கிறேன். பொதுவா, தமிழ் சினிமாவுல இருக்கிற கிளிஷேவான விஷயங்களை ட்ரோல் பண்ணிருக்கோம். படம் பார்க்கிறவங்களுக்கு அது சர்பிரைஸா இருக்கும். முதல் பார்ட்ல `டி' கேரக்டருக்கு அசிஸ்டென்ட்டா வந்தேன். `டி' கேரக்டர் இறந்துட்டதுனால, இந்தப் படத்துல நான் மெயின் கேரக்டர் ஆயிட்டேன். படத்துல இத்தனை கெட்டப்னு எனக்குத் தெரியாது. `லுக் டெஸ்ட்'னு சொல்லிக் கூட்டிக்கிட்டு போனப்போதான் இத்தனை கெட்டப்ல வரப்போறோம்னு தெரிஞ்சது. தவிர, இந்தப் படத்துல சிவாவும் நானும் போட்டி போட்டு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கோம். நானும், சிவாவும் எப்படிப்பட்ட டான்ஸர்னு எல்லோருக்கும் தெரியும்... ரகளையா இருக்கும் அந்தப் பாட்டு! `ஜிகர்தண்டா' படத்துல, `ஒரு பாட்டுக்கு எல்லோரும் இப்படிச் சிரிச்சு நான் பார்த்ததே இல்லை'னு பாபி சிம்ஹாகிட்ட ஒருத்தர் சொல்வார்... அதை இந்தப் படத்துல நீங்க நிஜமாவே பார்க்கப்போறீங்க."
 

`` `பூமராங்' ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டரைக் கட்டிப்போட்டு விளையாடிருக்கீங்க போல...? 

``ஷூட்டிங் ஸ்பாட்ல ஐபிஎல் போட்டிகளை போன்லேயே பார்த்திடுவோம். அந்த வீடியோ எடுத்த அன்னைக்கு சிஎஸ்கே மேட்ச் இருந்தது. ஆனா, ஷூட்டிங்கை லேட் ஆக்கி, ஹைலைட்ஸ்கூட பார்க்கவிடாம பண்ணிட்டார், இயக்குநர். அதனால, மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல அவரைக் கட்டிப்போட்டு ரிவெஞ்ச் எடுத்தோம்."

`` `கொரில்லா' படத்துல சிம்பன்ஸிகூட நடிச்ச அனுபவம்?"

``ரொம்ப வித்தியாசமான அனுபவம்னுதான் சொல்லணும். செம ஜாலியா இருந்துச்சு. அந்த சிம்பன்ஸி எங்களுக்கு ஒரு குழந்தை மாதிரி. அதுகூட இருந்தா நேரம் போறதே தெரியாது. `அதுகூட ரொம்ப நெருக்கமாப் பழகாதீங்க. அப்புறம், நீங்க இல்லைனா ரொம்ப ஃபீல் பண்ணும்'னு சிம்பன்ஸியோட டிரெய்னர் சொன்னார். ஆனா, நாங்க ரொம்ப நெருக்கமாப் பழகிட்டோம். கடைசி நாள்ல எல்லோரும் போகப் போறாங்கனு அதுக்குத் தெரிஞ்சிருக்கும்போல... ரொம்ப ஃபீல் ஆகி பாவமா உட்கார்ந்திருந்துச்சு. அந்த சிம்பன்ஸியோட ப்ளூப்பர்ஸ் ரெடி பண்ணி வெச்சிருக்காங்க. படத்துல அதைப் பார்க்கும்போது உங்களுக்கு செமயா இருக்கும்!" 
 

``சிவகார்த்திகேயன் - சதீஷ் காம்போ மறுபடியும் இணைஞ்சிருக்கு. என்ன எதிர்பார்க்கலாம்?"

``இந்தப் படத்தோட ஷூட்டிங் ஜூலை மாசம்தான். இதுல நடிக்க நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன். காரணம், ராஜேஷ் சார் படம்னாலே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். சிவா ஹீரோ... சொல்லவேவேணாம். உங்க ரெண்டுபேரோட காம்போவுல இந்தப் படம் பெஸ்டா இருக்கும்னு சொன்னார்."