Published:Updated:

ரயில் ஓசை, சூரிய அந்திமம்... 'தளபதி'க்கு நன்றி பிறந்தநாள் நாயகர்களே!

ரயில் ஓசை, சூரிய அந்திமம்... 'தளபதி'க்கு நன்றி பிறந்தநாள் நாயகர்களே!
News
ரயில் ஓசை, சூரிய அந்திமம்... 'தளபதி'க்கு நன்றி பிறந்தநாள் நாயகர்களே!

உண்மை தெரிந்ததும் முதன் முதலில் சூர்யாவும் அவன் அம்மாவும் சந்தித்துக்கொள்ளும்பொழுது இருவருமே கண்ணீர் பெருக அழுவார்கள். இப்பொழுதும் அவர்களை அழ வேண்டாம் என்று சொல்லாமல் பற்றுதலுக்காக வயலின் இசைத்துக்கொண்டிருக்கும்.

வசனங்களைக் குறைத்து காட்சிகளில் கச்சிதமாக கதை சொல்லும் மணிரத்னம்,  இசையால் கதை சொல்லும் இளையராஜா என இருவரும் சேர்ந்து கொடுத்த கொடையின் பிரம்மாண்டம் `தளபதி'. இந்த இருவருக்கும் மட்டுமல்ல நூறாண்டு கடந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு திரைப்படம் இது. ஒரு இயக்குநரும், இசையமைப்பாளரும் எப்படி இணைந்து கதை சொல்லவேண்டும் என்பதை எதிர்காலம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவுப்பெட்டகம் இந்த `தளபதி’.  ரயிலின் ஓசை, சூரியனின் அந்திமம், ஏக்கப்பார்வை, காதலின் பிரிவு என்று அனைத்திற்கும் இசை செய்திருந்தார் இளையராஜா.

அழுகைக்காகவும், ஆறுதலுக்காகவும் செய்யப்பட்ட இசைகுறிப்புகள் எல்லாம் ரசிக்கப்பட வேண்டியவை. சூர்யாவின் அழுகை சார்ந்த இடங்களில் `அழாதே’ என்று சொல்ல புல்லாங்குழலின் இசையையும், ஆற்றாமையால் கதறும்பொழுதும் ஏங்கும்பொழுதும் ஒரு பற்றுதலாக ஆறுதலாக வயலின் இசையையும் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. சில இடங்களில் கண்ணீரின் தேவையிருந்தால் அழும்போது புல்லாங்குழல் இல்லாமல் வயலின் பயன்படுத்தப்பட்டிருக்கும். 

சொற்களற்ற இந்த இசையின் இனிமை ஒர் அரூபம். காற்றின் பாதையில் அது பதிக்கும் சுவடுக்கு சிறுபிள்ளையின் பாதம் ஒரு அழகிய உதாரணம். சுவாசத்தில் உருவாகும் இசைக்கு உயிரின் பாஷை தெரியும். பாஷை தெரிந்த இசைக்கு உணர்வுகளின் திடத்தை பிரதிபலிப்பது அத்துனை சுலபம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பதின்மூன்று வயதில் யாரோசெய்த தவறால் ஈன்றெடுத்த சூர்யாவை ரயிலில் அநாதையாக சேலை போர்த்தி வீசுவாள் அவன் தாய். அது தான் சூர்யாவின் முதல் அழுகை. அப்பொழுது கேட்கும் சூர்யாவின் அழுகைக்கு பின்னணியில் ஒரு புல்லாங்குழல் ஒலிக்கத்தொடங்கும். `சின்னத்தாயவள்’ பாடலின் இசைப்பதிப்பாக அந்த புல்லாங்குழல் சொல்லும் செய்தி `அழாதே’. ரயிலிலிருந்து ஆற்றுக்கு வந்த சூர்யாவை ஊர்மக்கள் தூக்கியெடுக்கும்பொழுது மீண்டும் சூர்யாவின் அழுகை; மீண்டும் புல்லாங்குழலின் `அழாதே’ ஓசை. வளர்ந்த பிறகு தான் மிதந்து கரைசேர்ந்த ஆற்றங்கரையை வெறித்துப்பார்த்துக்கொண்டு ஏக்கத்தோடு `அம்மா ஏன் என்ன தூக்கிப்போட்டா’ என்ற பின்னாலும் அதே புல்லாங்குழல். அப்பொழுது தான் திரையில் `இசை - இளையராஜா’ என்று தெரியும். அதுவரை  செவிகளில் இருந்த இசை நம் கண்முன் வரும். 

சூர்யா வளர்கிறான்; தேவராஜனுக்கு தளபதி ஆகிறான். தான் கொன்ற ரமணாவின் குழந்தைக்கு `தமிழழகி’ என்று பெயர் வைக்கும் காட்சி. சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ரமணாவின் புகைப்படத்தைப் பார்த்து தன்னால் கொல்லப்பட்டவனின் மனைவி  தான் இந்த விதவைத்தாய் என்று குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகி நிற்பான் சூர்யா. அழாமல் இருப்பது அத்தனை சுலபமானதல்ல. அந்த குற்ற உணர்வின் சோகத்திற்கு ராஜா பின்னனியில் வயலினை இசைப்பார். அந்த இசை சூர்யாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும். 

கொலைவெறித் தாக்குதலால் உயிருக்குப் போராடும் தேவாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லும்பொழுது `சாகாத தேவா, முழிச்சுக்கோ’ என்று கதறும் தேவாவிற்கு வயலினே ஆறுதல். தேவாவைக் கொல்ல முயன்றவனை கொன்றவர்களைப்பிடிக்க விசாரணை நடக்கும் காட்சி. அம்மா பெயர் கேட்கும் காக்கியிடம் `தெரியாது. தெரியாதுடா. நான் பிறந்தப்பவே தூக்கி எறிஞ்சுட்டா’ என்று ஆற்றாமையில் வெடிக்கும் சூர்யாவுக்கு ஆறுதல் சொல்லும் வயலின் இசை. 

சூர்யாவை தன்னோடு அழைத்துச்செல்ல தேவா கேட்கும்பொழுது கண்களில் அழாத கண்ணீரோடு பேசிக்கொண்டிருக்கும் சூர்யாவின் சோகத்துக்கு ராஜாவின் வயலின் ஆறுதல். அந்த ஆறுதலை தேவராஜன் அணைத்துக்கொள்ளுவதைப்போல காட்சியாக்கியிருப்பார் மணிரத்னம்.

சூர்யாவும் சுப்புலெட்சுமியும் சந்தித்துக்கொள்ளும் காட்சி. 
அதுவரை அம்மாவுக்காக அழுத சூர்யாவுக்கு எதிர்குரலில் இருந்து வரும் அழுகை அது. 

`இப்போ ஏன் அழற’
`பிடிச்சிருக்கு’
`அதுக்கு  ஏன் அழற’ 
`தெரில’

சூர்யா சுப்புலெட்சுமியிடம் அழாதே என்று சொல்ல பின்னணியில் `அழாதே’ சொல்லும் புல்லாங்குழல் இசை. 

பின்னர், காதல் கைகூடாத நிலையில் தன் நிலையைச்சொல்லி அழுவாள் சுப்புலட்சுமி. அழும் சுப்புலெட்சுமியிடன் தேங்கிய கண்களோடு `அழாதே, கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு.. போடி.. போ.. ’ என்று சொல்லி முடித்து திரும்பும் சூர்யாவுக்கு மீண்டும் ஆறுதல் தரும் வயலின் இசை. பிரிந்து செல்லும் காதலையெண்ணி தவிக்கும்பொழுது கண்ணீர் வராமல் இருக்குமா என்ன?. கசிந்துத் தழும்பும் கண்களுக்கு வயலின் அளித்த ஆறுதலைதொடர்ந்து புல்லாங்குழல் இசையும் பின்தொடரும் அந்த புல்லாங்குழலுக்கு `அழாதே’ என்ற மொழி. இந்த முழு காட்சியில் `அழாதே' என்ற மெல்லிய குரல் சுப்புலெட்சுமிக்கு சூர்யாவின் குரலிலும், சூர்யாவுக்கு புல்லாங்குழலின் குரலிலும் இருந்தது. பிரிவுக்குப்பின்னர், இறுதியில்  இருவரும் அர்ஜுன் வீட்டு படிகளில் சந்திக்கும்பொழுது பிரிந்த உயிர்கள் தங்களது உடல்களை எட்டிப்பார்ப்பது போல வயலின் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கும். 

பிரிந்து வந்த சூர்யாவுக்கு ரமணாவின் மனைவி பத்மாவை திருமணம் செய்து வைப்பான் தேவா. தன் பக்க நியாயத்தை எடுத்துச்சொல்லி பத்மாவிடம் மன்னிப்பு கேட்பான் சூர்யா. 

`நான் பாவிமா. பாவி. பாவம் பண்ணிட்டேன். மன்னிப்பு தேடிட்ருக்கேன். நீ கவலைப்படாத 
நான் இந்த வீட்டுக்கு காவல். வெறும் காவல். உனக்கு காவல். உன் குழந்தைக்கு காவல்".

தனது நிலைப்பாட்டினை  சொல்லும் சூர்யாவுக்கு ஆறுதல் அளிக்கும் வயலின் இசை. 

அர்ஜுனின் அப்பா சூர்யாவிடம் அர்ஜுனின் அம்மா தான் உன் அம்மா என்று சொல்ல சொல்ல கண்களில் நீர் தழும்ப `அர்ஜுன் அம்மா என் அம்மாவா? அன்னிக்கி கோயில்ல பாத்தேனே.. இல்ல இல்ல இல்ல என் அம்மா இல்ல’ என்று அழும்பொழுது வழக்கமாக சூர்யா அழும்பொழுது ஒலிக்கும் புல்லாங்குழல் ஒலிக்காது. ஏனென்றால் இங்க கண்ணீரின் தேவை அவசியம். பற்றுதலுக்காக வயலின் மட்டுமே பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த காட்சி முடியும்பொழுது அழுதுகொண்டிருக்கும் சூர்யாவிடம் `அழுதது போதும் சூர்யா இனியும் அழாதே. உன் அம்மா இருக்கிறாள்’ என்று சொல்வது போல புல்லாங்குழல் இசை வரும். 

ஒதுங்கிக்கொள்வதாகவும் அம்மாவுக்குத் தெரியவேண்டாம் என்றும் சத்தியம் வாங்கிக்கொள்வான் சூர்யா. அன்று இரவு மாடியில் அமர்ந்து அழும் சூர்யாவுக்கு அழத் தேவையில்லை, ஆறுதல் தேவை என்று வயலின் மட்டுமே இசைக்கப்படும். காரணம் அந்த சமயம் தான் அதுவரை இல்லாதது போல சூர்யா கண்ணீர் நிலம்தொட அழுவான். 

உண்மை தெரிந்ததும் முதன் முதலில் சூர்யாவும் அவன் அம்மாவும் சந்தித்துக்கொள்ளும்பொழுது இருவருமே கண்ணீர் பெருக அழுவார்கள். இப்பொழுதும் அவர்களை அழ வேண்டாம் என்று சொல்லாமல் பற்றுதலுக்காக வயலின் இசைத்துக்கொண்டிருக்கும். முன்பு சொன்னதுபோல இங்கு கண்ணீரின் அவசியத்திற்காக புல்லாங்குழல் இல்லாமல் வயலின் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கும். அழுது முடித்து அம்மாவின் மடிசாயும்போது அம்மாவின் கைகள் சூர்யாவின் தலையில் படும். அப்பொழுது அம்மாவின் கைகளே `அழாதே’ என்று சொல்வது போல புல்லாங்குழல் ஒலிக்கும். அதே போல, தேவா இறக்கும்பொழுது கண்ணீரின் அவசியம் கருதி சூர்யாவுக்கு வயலின் மட்டுமே ஆறுதலாக இசைக்கப்படும். 

இந்த இரண்டு கைகளும் மீண்டும் இணைய காத்திருக்கின்றன ரசிக மனங்கள். 
இருபெரும் ஆளுமைகளுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!