Published:Updated:

என் அன்பிற்குரிய வாழ்க்கையே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என் அன்பிற்குரிய வாழ்க்கையே!
என் அன்பிற்குரிய வாழ்க்கையே!

அவள் சினிமா பொன்.விமலா

பிரீமியம் ஸ்டோரி

ருப்பது ஒரு வாழ்க்கை. அதில்தான் எத்தனை கோபம், வெறுப்பு, பகை, குழப்பம், போராட்டம். அனைத்தையும் மீறி நம் வாழ்க்கையை நம்மை நேசிக்கச் சொல்லி, மயிலிறகு வருடலாக திரைமொழியில் பேசுகிறது... சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘டியர் ஜிந்தகி'  (Dear Zindagi)  இந்தித் திரைப்படம்!

என் அன்பிற்குரிய வாழ்க்கையே!

காதலில் பிரேக்-அப் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதுதான். ஆனால், தாடி வைத்துக்கொள்வது, தன்னைச் சூழ்ந்தவர்களிடம் பிரேக்-அப் குறித்துப் பேசிப் புலம்புவது, காதலித்தப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்வது என அவரவர் மனநிலைக்குத் தகுந்தவாறு செய்கிறார்கள் ஆண்கள். அதைப் பெரும்பாலும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிப்பதோடு, தேவையற்ற மனக் குழப்பத்துக்கும் ஆளாகிறார்கள் பெண்கள். இப்படி பல பிரேக்-அப்களை சந்திக்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனக்குழப்பங்களைப் பற்றி பேசும் படமே... டியர் ஜிந்தகி. ‘அன்புக்குரிய வாழ்க்கையே’ என்று தமிழில் பொருள் கொள்ளலாம்!

விளம்பரப்பட ஒளிப்பதிவாளராக இருக்கும் கைரா (அலியா பட்), குறும்படம் இயக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். கூடவே காதலிலும் விழுகிறாள். இரண்டிலுமே வெற்றிபெற முடியாதவளாக தெளிவற்ற பாதையில் பயணிக்கிறாள். காதல் என்னும் மெல்லிய உணர்வையும், அதைவிட்டுப் பிரியும்போது ஏற்படும் வலிகளையும் கைரா மூலமாக பார்வையாளர்களிடம் அழகாக கொண்டு வந்து சேர்க்கிறார் இயக்குநர் கௌரி ஷிண்டே! ஸ்ரீதேவியை வைத்து ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை இயக்கியவர் இவரே!

சிறுவயதில் தாத்தாவிடம் வளரும் கைரா, பெற்றோரின் அன்புக்காக ஏங்கித் தவிக்கிறாள். தம்பி பிறந்த பிறகு ஏக்கம் நிரந்தரமாகிவிட, தனிமையில் தவிப்பதோடு, படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறாள். வளர்ந்த பிறகு, ஒளிப்பதிவுத் துறைக்குள் கால்பதிக்கும் கைரா, விளம்பரத் தயாரிப்பாளர் ரகுவேந்திர ராவ் (குணால் கபூர்) மீது விருப்பம்கொள்கிறாள். அவனோ, வெளிநாட்டுக்குச் செல்லும்போது வேறு ஒரு பெண்ணை நிச்சயித்துக் கொள்ள, கைராவின் உறவு முறிகிறது.

‘திருமணம் ஆகாத பெண்களுக்கு வீடு இல்லை’ என வீட்டு உரிமையாளர் திடீரென விரட்ட, மும்பையை விட்டு பெற்றோர் இருக்கும் கோவா செல்கிறாள். இதற்கிடையில் சித் என்பவருடன் ஈர்ப்பு தோன்றி, அதுவும் ஈடேறாமல் முடிகிறது.
உச்சகட்ட மனஅழுத்தத்துக்கு ஆளாகும் கைராவுக்கு கோவாவில் சிகிச்சை அளிக்கிறார், மனநல மருத்துவர் ஜஹாங்கீர் கான் (ஷாரூக் கான்). ‘ஜக்’ என்று சுருக்கமாக அவரை அழைக்கும் கைரா, தன் கதையை, தோழிக்கு நிகழ்ந்தது போல அவரிடம் கூறுகிறாள். ஒரு பெண், தனக்கு ஏற்பட்ட பிரச்னையைத் தைரியமாக, வெளிப்படையாகக்கூட சொல்ல முடியாத இந்தச் சமுதாயச் சூழலை அழகாகவும் அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இதற்கிடையில் ருமி என்னும் இசைக்கலைஞனை காதலிக்கும் கைரா, அவன் போக்கும் பிடிக்காமல் தானாகவே விலகுகிறாள். தெளிவற்ற நிலையும், பாதுகாப்பற்ற உணர்வுமே கைராவின் பிரேக்-அப்களுக்குக் காரணமாகிறது. நிஜத்தில் எத்தனை எத்தனை கைராக்களை கேள்விப் பட்டுக்கொண்டே  இருக்கிறோம்?

கைரா, பெண்களுடனே பழகிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்து அவள் தந்தையே, ‘நீ லெஸ்பியனா’ (ஓரினச் சேர்க்கையாளர்) என்று கேட்கும் காட்சி, பெற்றோர் துணையின்றி தனித்து இயங்கும் பெண்களின் மீதான சமூகத்தின் பார்வைக்குச் சாட்சி.

இறுதியாக, தனக்கு சிகிச்சையளிக்கும் ஜக் மீதும் கைராவுக்கு காதல் வர, ஜக் அதைத் தவிர்க்க, மெச்சூரிட்டி மனநிலைக்கு தன்னைத் தயார் செய்துகொண்டு திரைத்துறையில் கைரா வெல்வதாக கதை நகர்கிறது. கைராவுக்கு கடைசியாக ஒரு காதலும் அமைகிறது.

‘உன்னுடைய இறந்த காலத்தை வைத்துக்கொண்டு நிகழ்காலத்தை பிளாக்மெயில் செய்வதால் எதிர்காலம் வீணாகிவிடும்’, ‘வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நாம் எல்லோருமே ஆசான்கள்’
 
- இப்படி பல வசனங்கள் திரையில் நமக்குப் பாடம் நடத்துகின்றன.

தூக்கம் வராத அளவுக்கு மனஅழுத்தம் உள்ளவராக இருந்தாலும், மற்றவர்கள் மீது நாம் காட்டும் அன்பாலும் அக்கறையாலும் நம் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்; ‘என் அன்புக்குரிய வாழ்க்கை’யே என்று தினம் தினம் அழைத்து, நாமே நம் மனதுக்கு மருந்து போட்டுக் கொள்ளலாம் என்பதை அழகாக பார்வையாளர்களுக்குள் கடத்துகிறார் இயக்குநர் கௌரி ஷிண்டே... குறிப்பாக பெண்களுக்குள்.

மறக்காமல் மருந்து போடுவோம்... தினம் தினம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு