Election bannerElection banner
Published:Updated:

இந்தியாவின் முதல் `கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர்' படம்..! - `ஆண்டனி’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இந்தியாவின் முதல் `கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர்' படம்..! - `ஆண்டனி’ விமர்சனம்
இந்தியாவின் முதல் `கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர்' படம்..! - `ஆண்டனி’ விமர்சனம்

இந்தியாவின் முதல் `கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர்' படம்..! - `ஆண்டனி’ விமர்சனம்

மண்ணுக்குள் உயிரோடு புதைக்கப்படும் காவல்துறை அதிகாரி. அவரைத் தேடி அலையும் தந்தை. இறுதியில் என்னாகிறது என்பதை கிளாஸ்ட்ரோஃபோபிக் (claustrophobic) த்ரில்லராகச் சொல்கிறது ஆண்டனி.

இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் த்ரில்லர் என்னும் அடைமொழியுடன் வெளியாகி இருக்கிறது ஆண்டனி. ஓரிடத்துக்குள் அடைபட்டிருக்கும் போது, வரும் பயத்துக்குப் பெயர் கிளாஸ்ட்ரோஃபோபியா. படத்தில் வரும் ஹீரோவுடன் படம் பார்க்கும் நமக்கும் அது வருவதுதான் ஆகப்பெரும் சோகம். 

கிளாஸ்ட்ரோஃபோபிக் மையப்படுத்தி வந்த பல ஹாலிவுட் படங்கள் உண்டு. அதில் பளிச்சென நம் நினைவுக்கு வருவது `பரீட்' (buried). இதிலும் புதையுண்ட ஒரு நபர் சுற்றி நிகழும் கதைதான். ஆனால், அந்த த்ரில்லான ஆட்டத்தை சுவாரஸ்யமாக இயக்குநர் கொடுத்திருக்கிறாரா எனக் கேட்டால் இல்லை என்பதுதான் பதில். ஹீரோ காருக்குள் என்னென்னவோ செய்கிறார். ஆனால், அவற்றை எல்லாம் ஏன் செய்கிறார் எனப் புரிபட மறுக்கிறது. குறைவான காற்று மட்டும் இருக்கும் ஓரிடத்தில், லைட்டரை வைத்துக்கொண்டு புகையை வர வைக்க முயற்சி செய்யும் காட்சி ஒரு சாம்பிள்; இப்படிப் பல காட்சிகள். அவை பார்வையாளனுக்கு ஹீரோ என்ன செய்கிறார் என்பதை கடத்த மறுத்து, மொபைலை நோண்ட வைக்கிறது. 

ஹீரோவின் தந்தையாக வரும் லால், காரில் கொடைக்கானல் சாலைமுழுவதும் தேடுகிறார், பலரிடம் விசாரிக்கிறார். இதை மட்டுமே செய்கிறார். லால் போன்ற ஒரு திறமையான நடிகரை இவ்வளவு சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதெல்லாம் ரொம்ப டூமச். 

லால் தரைக்கு மேல் ஜீப்பில் கொடைக்கானலைச் சுற்றிக் காண்பிக்க, நிஷாந்த் நிலத்துக்கு அடியில், காரின் டேஷ் போர்டு, டிக்கி, ஜாக்கி, டார்ச் லைட் என மினி கண்காட்சி நடத்துகிறார். கதை ஏதாவது ஓரிடத்தில் பரபரப்பாகும் எந்தச் செயலும் நிகழாமல் தொடந்து இவை மட்டுமே ஓடுகிறது. 

த்ரில்லர் படங்களில் பெரும்பாலும் பாடல்களே இருக்காது. பின்னணி இசை அல்லது அமைதியை வைத்து மட்டுமே மிரட்ட வேண்டிய ஓரிடத்தில், படத்தின் பாடல்கள் பேரிரைச்சல். படமாக இல்லாமல், ஆடியோவாகக் கேட்டால், சில பாடல்கள் சிறப்பாகவே இருக்கின்றன. படத்தின் சீரியஸை உணர்ந்து பின்னணி இசையில் தீவிரமாக வேலை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சிவாத்மிகா. 

காருக்குள் நடக்கும் காட்சிகளாகட்டும், அழகான கொடைக்கானலை இன்னும் அழகாகக் காட்டியதாகட்டும், மழை காட்சிகளில் எடுக்கப்பட்ட சண்டை ஆகட்டும், சோர்வான படத்தில் நம்பிக்கை தருகிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பாலாஜி. டெக்னிக்கல் டீமிடம் இயக்குநர் குட்டி குமார் நன்றாக வேலை வாங்கியிருப்பது தெரிகிறது.

ஹீரோவும் போலீஸ், ஹீரோவின் அப்பாவும் போலீஸ். அப்படி இருக்கும் போது காணாமல் போன தன் மகனைக் கண்டிபிடிக்க அவரது விசாரணை எப்படி இருக்கும்; எப்படியெல்லாம் விசாரணை செய்து தன் மகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார் எனப் பக்கா சஸ்பென்ஸ் த்ரில்லராகப் படத்தைக் கொண்டு போயிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  

படத்தின் எண்ட் கிரெடிட்ஸ் காட்சியில், மக்கள் போராடிக்கொண்டிருக்க, ஹீரோ கெத்தாகத் தொப்பியைக் கீழ வைத்துவிட்டு கம்பை எடுத்துச் சுழட்டுவது போல் படம் முடிகிறது. தமிழ்நாட்டுலதான் இருக்கீங்களா இயக்குநரே? நாட்டு நடப்பு ஏதாவது...

வித்தியாசமான முயற்சிகளுக்கு மக்களில் ஆதரவு எப்போதும் உண்டுதான். ஆனால், அந்த வித்தியாசத்தைக் காட்ட அடித்தளத்தில் ஓர்  அடிப்படைக் கதை இருக்க வேண்டும். அப்படி ஒரு விஷயத்துடன் ஆண்டனி வந்திருந்தால், மக்கள் மனதை வென்றிருப்பான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு