Published:Updated:

``தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - `வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding

'வீரே தி வெட்டிங்' திரை விமர்சனம்.

``தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - `வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding
``தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - `வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding

ரே மாதிரியான மனநிலை கொண்ட நான்கு பெண்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதில் ஒருவர், மற்ற மூன்றுபேர் எந்த விஷயத்தில் தோற்றுப்போனார்களோ, அதே விஷயத்தைச்  செய்ய நகர்கிறார். அதுதான், திருமணம்!  அந்தப் பெண்ணும் மற்றவர்களைப்போல தோற்றுப்போகிறாரா அல்லது ஜெயித்துக் காட்டுகிறாரா, மற்ற மூவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதுதான் 'வீரே தி வெட்டிங்' சொல்லும் கதை. #VeereDiWedding

இந்தக் காலத்து நியூ ஏஜ் பெண்களின் திருமணம் குறித்த ஃபோபியாவை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. எப்போதும் குடும்பத்தையும் உற்றார் உறவினர்களையுமே நம்பியிருக்கும் பெண்கள், பின்னர் ஒரு கட்டத்தில் ஏன் திருமணத்தில் நம்பிக்கை இழக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது, படம்.  சாக்ஷி சோனி (ஸ்வரா பாஸ்கர்), அவினி ஷர்மா (சோனம் கபூர்), மீரா (ஷிகா தல்சானியா), கலிந்தி பூரி (கரீனா கபூர்) ஆகிய நான்குபேரும், 'பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற சமுதாயத்தின் ஸ்டீரியோ டைப் மனநிலையை முற்றிலுமாக உடைத்து எரிய விருப்பப்படுகிறார்கள். அப்படி நடந்துகொள்ளவும் செய்கிறார்கள். சிகரெட், மது ஆரம்பித்து பாலியல் சார்ந்த விருப்பங்கள் வரை அனைத்திலும் 'ஆண் - பெண் இருபாலரும் சமமே' என்று உணர்த்துகிறார்கள். பெண்களை மையப்படுத்திய இக்கதையில், சமுதாயத்தில் தனக்கான அங்கீகாரத்தைத் தேடும் ஆண் சமபால் ஈர்ப்பாளர்களின் நிலை, தனது தாத்தா பாட்டியைக்கூட அடையாளம் தெரியாத குழந்தைகள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்வதால் நடக்கும் சிக்கல்கள் போன்றவற்றையும் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்கள். 

விவாகரத்தைச் சந்தித்த பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக சாக்ஷி சோனி, தன் விவகாரத்துக்குப் பின் மற்றொரு திருமணத்துக்காகக் காத்திருக்கும் பெண்ணாக அவினி ஷர்மா, சிங்கிள் மதர் மீரா, இவர்கள் அனைவரும் கலிந்தியின் திருமணத்துக்குத் தயாராகிறார்கள். கலிந்தியின் பெற்றோர்கள் ஏற்கெனவே ஒருவரையொருவர் பிரிந்து வாழும் காரணத்தால், கலிந்திக்குத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. இவருக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை ரிஷப் மல்ஹோத்ராவுக்கு (சுமித் வியாஸ்) சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை என்றாலும், குடும்பத்தின் நெருக்கத்தால் எல்லாவற்றுக்கும் அட்ஜஸ்ட் செய்யும் ஒருவராக நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் தோற்றம் என்பது பெரும்பாலும் அவர்களது உடையிலிருந்தே துவங்குகிறது. தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை பெண்களின் சுதந்திரம் பற்றிய A-Z குறிப்பேட்டை 'வீரே தி வெட்டிங்' பார்ப்பவர்களுக்கு அளிக்கிறது. கவர்ச்சியான உடைகள் அணியும்போது சைஸ் குறித்து வரும் கமெண்ட்டுகளை அசால்டாக தாண்டி வருவது, செக்ஸ் குறித்து எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பேசுவது, ஆண்களிடையே ஈக்வெல் ரிலேஷன்ஷிப் கேட்பது... என இப்படம் பேசும் கருத்துகளுக்கு அழுத்தம் அதிகம். "What is orgasm called in Hindi girls" என்பதற்குப் 'பரவச நிலை' என்று வரும் வசனத்துக்கு தியேட்டரே கைதட்டுகிறது.

ரிலேஷன்ஷிப்பில் நடக்கும் எமோஷனல் மற்றும் காமெடி இரண்டையுமே சமன் செய்து ஆடியன்ஸுக்கு அளித்திருக்கிறது நிதி மெஹ்ரா, மேஹுல் சூரியின் திரைக்கதை. டெல்லி திருமணத்தின் கலகலப்பு ஓசைமூலம் படத்துக்கான பாசிட்டிவ் தொனியை ஏற்றியுள்ளார் இசையமைப்பாளர் அர்ஜித் தத்தா. முழுக்க முழுக்க பெண்களின் நிலை குறித்துப் பேசிய இப்படம், 'இக்காலத்து மாடர்ன் பெண்கள் சமுதாயத்தை மதிக்கத் தேவையில்லை' என்ற தொனியை வெளிப்படுத்தியிருக்கிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னிச்சையாகச் செயல்படும் பெண்களாகவே இவர்கள் நால்வரும் படம் முழுக்க வலம் வந்துள்ளனர். 

மாஸ்டர்பேஷன், ப்ரீ-மேரிட்டல் செக்ஸ், லேடீஸ் டாக், ஓப்பன் ரிலேஷன்ஷிப் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை இல்லாதவர்களுக்கு இந்த இரண்டரை மணிநேர படம் கசப்பான உணர்வையே தரும். ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றின் கலர்ஃபுல் கலவையான 'வீரே தி வெட்டிங்' பெண்களின் பார்வையிலிருந்து உருவாக்கப்பட்டிருந்தாலும், ஆண்களின் மனநிலையையும் அழுத்தமாகச் சொல்லத் தவறவில்லை.