Published:Updated:

``ஹீரோயின்களுக்குப் பணம் மட்டும்தான் முக்கியம்னு நினைக்கிறீங்களா?’’ - நிவேதா பெத்துராஜ்

ஜெயம் ரவியுடன் `டிக் டிக் டிக்’ படத்தில் நடித்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், படம் குறித்த அனுபவத்தையும் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

``ஹீரோயின்களுக்குப் பணம் மட்டும்தான் முக்கியம்னு நினைக்கிறீங்களா?’’ - நிவேதா பெத்துராஜ்
``ஹீரோயின்களுக்குப் பணம் மட்டும்தான் முக்கியம்னு நினைக்கிறீங்களா?’’ - நிவேதா பெத்துராஜ்

``இந்தியாவின் முதல் விண்வெளிப் படத்துல நடிக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் பற்றி பேசும்போதெல்லாம் பெருமையா ஃபீல் பண்றேன்'' என்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். 

``எனக்கு தற்காப்புக் கலை தெரியும். தாய்லாந்தில் இது சம்பந்தமா ரெண்டு வருஷம் படிச்சிருக்கேன். பாக்ஸிங் நல்லா தெரியும். அதனால என் உடம்பு எப்பவும் ஃபிட்டா இருக்கும். தற்காப்புக் கலை, பாக்ஸிங்... இதெல்லாம் கத்துக்கிட்டதுனால மைண்ட் கன்ட்ரோல் என்கிட்ட அதிகமா இருக்கும். நான் கத்துக்கிட்ட தற்காப்புக் கலை `டிக் டிக் டிக்' படத்துல நடிக்கும்போது எனக்குப் பெரும் உதவியா இருந்தது. ஏன்னா, படத்துல நிறைய சீன்ஸ்ல ரோப்ல தொங்கிக்கிட்டேதான் நடிச்சேன். படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உள்ளே போனா வெளியே வர்றதுக்கு ஒருநாள் முழுக்க ஆயிடும். ஹாலிவுட் தரத்துல செட் ரெடி பண்ணியிருந்தாங்க. தினமும் காலையில ஷூட்டிங் ஸ்பாட்டுகுப் போகும்போது ரொம்ப உற்சாகமா இருக்கும். ஏன்னா, `இன்டர்ஸ்டெல்லர்' என் ஃபேவரைட் படம். அந்த மாதிரி ஒரு படத்துல நடிக்கிறோம்னு சந்தோஷம் ஷூட்டிங் முடியிற வரை இருந்தது. 

படத்துல என் பெயர் சுவாதி. டிசைன் பேஸ் டிவிஷன் வேலை பார்க்கிற ஆர்மி ஆபீஸரா  நடிச்சிருக்கேன். ஜெயம் ரவி எப்போவுமே வித்தியாசமான கேரக்டர் பண்ற நடிகர். இந்தப் படத்துல எனக்குதான் ரோப் கட்டித் தொங்குறது புது அனுபவமா இருந்தது. ஆனா, ரவி அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்காம, ஈஸியா நடிச்சு முடிச்சார். நான் நிறைய டேக் வாங்கினாகூட, அவர் கொஞ்சம்கூட முகம் சுளிக்காம நடிச்சார். அவரை சுத்தி எப்பவும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும். அது, எங்க டீம் முழுக்கப் பிரதிபலிக்கும். படத்துல எனக்கும் அவருக்கும் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கு. தவிர, இந்தப் படத்துல முதல் முறையா நான் ஆக்‌ஷன் செய்த அனுபவம் சூப்பர்!.

ஆக்‌ஷன் காட்சியில நடிக்கும்போது ஒருமுறை எனக்குக் கையில அடி. ஆனா, எனக்கு அடிபட்ட ஃபீலே தெரியலை. ரவிதான், 'ஏங்க... உங்க கையிலயிருந்து ரத்தம் வருது!'னு சொன்னார். டைரக்டரும் `கேரவனுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க'னு சொன்னார். ஆனா, என்னால படத்தோட ஷூட்டிங் பாதிக்கக் கூடாதுனு அதுக்குப் பிறகு, ரொம்பக் கவனமா இருந்தேன்.

படத்தோட இன்னொரு ஸ்பெஷல், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிச்சிருக்கார். சின்ன வயசுதான். ஆனா, பொறுப்பா இருந்தார். அதிக டேக் எடுத்துக்காம, சொல்றதைக் கவனமா கேட்டு நடிச்சார். ரொம்ப சமத்துப் பையன் ஆரவ். எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய சீன்ஸ் இருக்கு. அதனால, மனசளவுல ரொம்ப குளோஸ் ஆயிட்டார். நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். அவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம்மளும் இந்தமாதிரி படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்படுவேன். அந்த ஆசையை இந்தப் படம் எனக்கு பூர்த்தி பண்ணி வச்சிருக்கு.   

தமிழ் சினிமாவுல நடிக்கிற ஹீரோயின்ஸ் இப்போ ரொம்பவே மாறிட்டாங்கனு நினைக்கிறேன். படத்துல நடிக்கும்போது, அவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கானு பார்க்குறாங்க, ஸ்கிரிப்ட்டை வாங்கி முழுசா படிக்கிறாங்க. அவங்க சம்பளத்தை மட்டுமே பிரதானமா பாக்கறதில்ல. நல்ல கேரக்டர்கள்தான் முக்கியம்னு நினைக்கிறாங்க. என்னைப் பொருத்தவரை இந்தநாள் வரைக்கும் எந்தத் தப்பான விஷயங்களுக்காகவும் சினிமாவில் யாரும் என்னை அணுகியதில்லை."

"குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து வீடியோ ஒண்ணு வெளியிட்டிருந்தீங்களே?"

"நான் கேள்விப்பட்ட வரை, நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்னு தெரிஞ்சும், அதைக் கண்டுக்காம இருக்காங்க, வெளியே சொல்ல பயப்படுறாங்க. அதனாலதான், அந்த வீடியோவை நான் வெளியிட்டேன். பார்த்துட்டு பலபேர் எனக்கு நன்றி சொல்லிப் பேசினாங்க. நாம சொல்றதை நாலு பேர் கேட்கிறாங்களேனு சந்தோஷமா இருந்தது. முக்கியமா, என் பெற்றோர்கள் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. தவிர, அந்த வீடியோவைப் பார்த்த சிலர், நான்தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாயிட்டேன்னு நினைச்சு நியூஸ் போட்டிருந்தாங்க. நான் அந்த வீடியோ வெளியிட்டதுக்குக் காரணம், குழந்தைகளுக்கான பாதுகாப்பைப் பற்றிப் பேசுறதுக்கு, எனக்கு சரியான பிளாட்பார்ம் கிடைக்காததுதான். கிடைக்கும்போது, கண்டிப்பா குழந்தைகள் பாதுகாப்பு குறித்துப் பேசுவேன்!"