Published:Updated:

"வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன், பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம் செஞ்சு கொடுக்கிறேன்!" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை!- பகுதி 13

"வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன், பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம் செஞ்சு கொடுக்கிறேன்!"  - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை!-  பகுதி 13
"வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன், பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம் செஞ்சு கொடுக்கிறேன்!" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை!- பகுதி 13

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

``ரொம்ப ஆச்சாரமான குடும்பத்திலிருந்து வந்தவள் நான். சினிமா பார்க்க எங்க அப்பா எப்போவுமே அனுமதி தரமாட்டார். நான் சினிமாவுக்கு வந்ததே பெரிய கதைதான்!'' என்று தன்னுடைய பயணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார், பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி. 

``ஆந்திராதான் என் பூர்வீகம். பானுமதி அம்மா நடிச்ச படம் ஒண்ணு தெலுங்கில் ரிலீஸ் ஆச்சு. அப்போ எனக்கு வயசு ஏழு. அந்த சமயத்தில் பானுமதி அம்மா நடிச்ச படத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா, அப்பா கூடாதுனு சொல்லிட்டார். அப்பா இங்கிலாந்தில் படிச்சவர். கெமிக்கல் இன்ஜினீயர். நல்ல உழைப்பாளி. எனக்கு ஒரு அண்ணா, தங்கை, தம்பி. அப்பாவுக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கும். அதனால, எங்க வீட்டுல இருந்த யாரும் சரியாக ஸ்கூல்ல சேர்ந்து படிக்க முடியலை. ஆனா, எங்க அப்பா அவருக்குக் கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவை தபால் மூலமா டிகிரி படிக்க வெச்சு பாஸ் பண்ண வெச்சார். ஆனா, அவருடைய பசங்களைதான் அவரால சரியா படிக்க வைக்க முடியலை. எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. கடவுள் பக்தி அதிகம். எங்களுக்கு வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கத்துக்கொடுத்தாங்க. படிப்பு மட்டும் வாழ்க்கையில் அரிதான விஷயமா அமைஞ்சிருச்சு எங்களுக்கு!. 

அப்பா வேலை நிமித்தமா சென்னைக்கு வந்தார். அப்போ, எனக்கு இருந்த விருப்பத்தின் காரணமா சென்னை ஆல் இந்தியா ரேடியோவுல ரேடியோ ஆர்டிஸ்ட் வேலைக்குச் சேர்ந்தேன். ரொம்பப் பிடித்த வேலை. அப்போ என் குரல் கேட்டுட்டு, படத்துல நடிக்க வைக்க வாணி ஸ்டூடியோ அதிபர் பி.எம்.ரெட்டி ரேடியோ ஸ்டேஷனுக்கு போன் பண்ணி என்னை விசாரிச்சிருக்கார். நல்ல பொண்ணு, அழகாக இருப்பானு ரேடியோ ஸ்டேஷனில் இருந்து பதில் சொல்லியிருக்காங்க. உடனே, என்னைப் பார்க்க வந்துட்டார். அவர் என்கிட்ட பேசுனவுடனே, ஓகே நான் பண்றேன்னு சொல்லிட்டேன். அப்போ எனக்குப் பதினைஞ்சு வயசு.  

வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்ட சினிமாவுல வாய்ப்பு வந்தது பத்தி சொன்னேன். என் அண்ணன் பாய்ஞ்சு வந்து என்னை பெல்ட்டால அடிச்சார். 'இவளை ரேடியோ ஸ்டேஷன் அனுப்புனதே தப்பு. இதுல சினிமாவுக்கு நடிக்கப்போறேன் வேற சொல்றா'னு உடனே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. கல்யாணம்னாலே என்னனு தெரியாத வயசு அது. தூரத்து சொந்தத்துல கல்யாணம் நடந்துச்சு. என் கல்யாணம் முடிஞ்சவுடனே என் அப்பா, அம்மா, தம்பியெல்லாம் அசாம் போயிட்டாங்க. நான் திருமணம் முடிச்சு விஜயவாடா வந்துட்டேன். 

என் கணவருக்கு என்ன வேலை, சம்பளம் எப்படினு எந்த கேள்வியும் கேட்டதில்லை. இதுதான் என் வாழ்க்கைனு நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் என் கணவர், ``எனக்கு இங்கே வேலை பிடிக்கலை. உங்க பொண்ணக் கூட்டிக்கிட்டு அசாம் வந்துட்றேன். எனக்கு நல்ல வேலை இருந்தா சொல்லுங்க'னு என் அப்பாவுக்கு லெட்டர் எழுதியிருக்கார். இந்த விஷயமே எனக்குத் தெரியாது. 'புறப்படு, அசாம் போலாம்'னு என்கிட்ட சொன்னார். ``ஏங்க, அம்மா அப்பாவைப் பார்க்க போறாமா?'னு கேட்டேன். அப்போதான் விஷயத்தைச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. எனக்கு அம்மா வீட்டுக்கு உதவிக்காகப் போறதுல விருப்பம் இல்லை. ஏமாற்றத்துடன் அம்மா வீட்டுக்குப் போனேன். 

அங்கப் போய் பல நாள்கள் அவர் வேலை கிடைக்காமல் இருந்தார். அந்த சமயம் பார்த்து நான் கர்ப்பம் ஆனேன். என் மனசுக்குள்ளே பல கவலைகள் குடிகொள்ள ஆரம்பிச்சது. அசாமில் அப்போது அடிக்கடி பூகம்பம் வரும். அதனால, டெலிவரிக்காக நானும் அவரும் சென்னைக்கு வந்துட்டோம். சென்னையில் என் தாய்மாமன் வீட்டுக்குப் போய் தங்கினோம். அங்கேதான் என் முதல் குழந்தை பிறந்துச்சு. குழந்தை பிறந்து மூணு மாசம் இருந்தபோது கணவரிடம், ``நீங்க இப்படியே வேலை இல்லாம இருக்கீங்க. நமக்கும் குழந்தை பிறந்துருச்சு. நான் வேலைக்குப் போகட்டுமா? நம்ம திருமணத்துக்கு முன்னாடி சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துச்சு... இப்போ முயற்சி பண்ணிப் பார்க்கட்டுமா?''னு கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாமல் யோசிச்சுக்கிட்டே இருந்தார். அதற்குப் பிறகு, `நடிக்கிறதுக்குப் பதிலா பின்னணிப் பாடகியா போலாமே?'னு சொன்னார். எனக்குப் பாட்டு பாட வராது. கொஞ்சம் நடிக்க வரும். ஸ்கூல் படிக்கும்போதும் டிராமா பண்ணியிருக்கேன்னு சொன்னேன். என்ன நினைச்சாரோ, ஓகே சொல்லிட்டார். 

அடுத்தநாள் காலையில வாணி ஸ்டூடியோவுக்கு கணவர், குழந்தையுடன் பி.எம்.ரெட்டி சாரை பார்க்கப் போனேன். அவர் என்னைப் பார்த்துட்டு, 'ஏன் வந்தீங்க'னு கேட்டார். 'சார், நடிக்க வாய்ப்பு தரேனு சொன்னீங்களே'னு கேட்டேன். 'அந்தப் படத்தோட ஷூட்டிங் எப்போவே முடிஞ்சிருச்சுமா'னு சொல்லிட்டு, என் கணவரைப் பார்த்துட்டு, விசாரிச்சார். என் கணவரையும், குழந்தையையும் அறிமுகப்படுத்தினேன். 'கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கிறது கஷ்டம்'னு சொல்லிட்டார். 'என் குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில இருக்கு. நீங்க எனக்கு ஏதாவது வேலை கொடுங்க சார். யாரிடமாவது சிபாரிசு பண்ணுங்க'னு கேட்டேன். 

அவருடைய தம்பி நாகி ரெட்டிக்குப் போன் பண்ணினார். என்னைப் பத்தி சொல்லிட்டு, 'ஒருநாள் வாஹினி ஸ்டூடியோவுக்கு வரச் சொல்றேன். படத்துக்கு டெஸ்ட் எடுத்துப் பாரு'னு சொன்னார். எனக்கு அவர் பேசுனது ஆறுதலா இருந்துச்சு. அடுத்தநாள் வாஹினி ஸ்டூடியோவுக்குப் போனேன். என்னை வெச்சு மேக்கப் டெஸ்ட் எடுத்தாங்க. அப்போ, அந்த இடத்தில் ஜெமினி கணேசன் காஸ்ட்டியூம் டிசைனரா இருந்தார். என்னைப் பார்த்துட்டு, 'என்னமா குழந்தையுடன் வந்திருக்க'னு கேட்டார். 'சவுகார்' படத்துக்காக ஆடிஷன் நடந்துச்சு. டயலாக் பேப்பரைக் கையிலே கொடுத்துப் படிச்சு காட்டச் சொன்னாங்க. நான் ரெண்டு நிமிடத்துல மனப்பாடம் செஞ்சு நடிச்சேன். அன்னைக்கு பொழுது வாஹினி ஸ்டூடியோவுல நல்லபடியா முடிஞ்சது. பிறகு ரெண்டு மாசம் ஆச்சு. எந்தப் பதிலும் வரலை. கவலையா இருந்தேன். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஏரியாவுல வீடு. ஒருநாள் வீட்டு வாசல்ல கார் வந்து நிற்குது. காரிலிருந்து எல்.வி.பிரசாத், நாகி ரெட்டி சார் வந்து நின்னாங்க. 'உனக்கு வேஷம் கிடைச்சிருச்சு பொண்ணு'னு சொன்னாங்க. சின்ன வேஷமா இருக்கும்னு சந்தோஷப்பட்டேன். 'ஹீரோயின் ரோல்'னு சொன்னதும், எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்தப் படத்துலதான் என்.டி.ராமராவ் அவர்களும் அறிமுகமானார். முதல் படமே பெரிய படமா அமைஞ்சிருச்சு. என் உண்மையான பேர் சங்கரமன்சி ஜானகி. 'செளகார்' படத்தோட ஹிட் என் பெயரை 'செளகார் ஜானகி'னு மாத்திருச்சு. தெலுங்கில் படம் செம ஹிட். பிறகு தமிழில் 'வளையாபதி' படத்துல அறிமுகமானேன். இந்தப் படம் ரிலீஸ் ஆன நேரத்துலதான், 'பராசக்தி' படமும் ரிலீஸ் ஆச்சு. என் தமிழ் உச்சரிப்பு நல்லாயிருக்குனு கலைஞர் சொன்னதா சொல்வாங்க. கலைஞர் ஆட்சியில் எனக்கு நிறைய விருதுகள் கிடைச்சிருக்கு. 

நான் தெலுங்குப் பொண்ணா இருந்தாலும், எனக்கு வாழ்க்கை கொடுத்து, என்னை வாழ வைத்தது தமிழ் சினிமாதான்!. அதை எப்போவும் மறக்கமாட்டேன். தெலுங்கு சினிமாவுலேயே இதைச் சொல்லியிருக்கேன். கே.பி.பாலசந்தர் சார் எனக்கு அவருடைய படங்களில் நல்ல கேரக்டர் கொடுப்பார். நான் சினிமாவில் நடிச்சுக்கிட்டு இருந்த நேரத்தில் கே.பி. இயக்குநராக இல்லாத காலகட்டத்தில் அவருடைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். மேஜர் சுந்தர்ராஜன் சார் சைக்கிளில் வந்து என்கிட்ட, 'கே.பி நாடகத்துல நடிக்க முடியுமா'னு கேட்டார். அப்போ சினிமாவுல  நான் பிஸி.  ஆனாலும், பாலசந்தர் நாடகத்துல ஒரு பைசா வாங்காம, சொந்த காஸ்ட்யூமில் நடிச்சுக் கொடுத்தேன். அவருடைய டைரக்‌ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 

எனக்கு மொத்தம் மூணு பசங்க. எல்லோரையும் நான்தான் படிக்க வெச்சு, நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சேன். என் பொண்ணு சர்ச் பார்க் ஸ்கூலில் படிக்கும்போது, ஜெயலலிதா சீனியர். 'ஜெயா படிப்புல கெட்டிக்காரி. எல்லாத்துலேயும் அவதான் ஃபர்ஸ்ட்'னு என் பொண்ணு சொல்வா. நான் ஜெயலலிதா நடிக்க வருவார்னு எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டரா வருவார்னுதான் நினைச்சேன். அந்த அளவுக்குப் படிப்புல கெட்டிக்காரி. அவங்க அம்மா சந்தியா எனக்கு நல்ல பழக்கம். சந்தியா ஷூட்டிங் போகும்போது ஜெயா என் பசங்ககூட வீட்டுல விளையாடுவா. குடும்பச் சூழ்நிலை என்னை மாதிரி ஜெயலலிதாவையும் சினிமாவுக்குக் கொண்டு வந்துருச்சு. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்தவள் நான். சினிமாவுக்கு நான் வந்தப்போ பெண்களை மதிச்சாங்க. ஆனா, வெளியே இருக்கிற மக்கள் எங்களை அவதூறாகப் பேசினாங்க. சினிமாவுல இருக்கிறனால தங்குறதுக்கு வீடு தரலை. சினிமா நட்சத்திரங்களும் ஒழுக்கமானவங்கதான். இந்த சினிமா எனக்கு நிறைய நல்லதைக் கொடுத்திருக்கு. சில கஷ்டங்களையும் பார்த்திருக்கேன். ஒரு படத்துல நடிக்கிறதுக்கு எல்லாம் ஓகே ஆகி, கடைசி நேரத்துல வேற ஹீரோயினுக்கு வாய்ப்பு போயிரும். 'தேவதாஸ்' படம் நான் நடிக்க வேண்டியது. மேக்கப், காஸ்ட்டியூம் எல்லாம் ஓகே ஆனதுக்குப் பிறகு சில காரணங்களால என்கிட்டகூட சொல்லாம என்னைப் படத்துல இருந்து தூக்கிட்டு, அதில் சாவித்திரியை நடிக்க வெச்சாங்க. 

ஆண்டவன் புண்ணியத்துல இப்போ நல்லா இருக்கேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நான்தான் சில வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன். மகன், மகள் அமெரிக்காவில் இருக்காங்க. ஒரு பொண்ணு மட்டும் சென்னையில் இருக்கா. நான் பெங்களூரில் எனக்கான வீட்டில் இருக்கேன். கொள்ளுப் பேரன், பேத்தியும் இருக்காங்க. என்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நான் யாரையும் எதிர்பார்க்காம, யாரிடமும் ஒரு ரூபாய் வாங்காம எண்பத்து ஏழு வயசுல கடவுளை நினைச்சுக்கிட்டு பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம்னு ரெடி பண்ணிக் கொடுத்துட்டு சந்தோஷமா இருக்கேன்!'' எனச் சிரிக்கிறார், சௌகார் ஜானகி. 

அடுத்த கட்டுரைக்கு