Published:Updated:

"கெட்டவார்த்தை, மணிரத்னம் டச், டார்க் மேன்..!" - 'துருவ நட்சத்திரம்' டீஸர் குறிப்புகள்

தார்மிக் லீ
"கெட்டவார்த்தை, மணிரத்னம் டச், டார்க் மேன்..!" - 'துருவ நட்சத்திரம்' டீஸர் குறிப்புகள்
"கெட்டவார்த்தை, மணிரத்னம் டச், டார்க் மேன்..!" - 'துருவ நட்சத்திரம்' டீஸர் குறிப்புகள்

`துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் எப்படி இருக்கு? பார்ப்போம் வாங்க!

விக்ரம் நடிக்கும் `துருவ நட்சத்திரம்' படத்தின் அடுத்த டீசர் வெளியாகியுள்ளது. முதல் டீசரில் இருப்பதுபோல் போன் பேசாமலும், இரண்டாம் டீஸரைப் போல் விமானத்திலிருந்து நடந்து வராமலும், அதிரிபுதிரி ஆக்‌ஷன் காட்சிகளோடு களமிறங்கியிருக்கிறது. அனேகமாக `சாமி 2' படத்தின் டீசர் கலாயிலிருந்து தப்பிக்கவே இந்த டீசரை வெளியிட்டிருக்க வேண்டும். என்னவோ பாஸ், `துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் எப்படி இருக்கு? பார்ப்போம் வாங்க!

`சாமி' முதல் பாகத்தில், 'நான் போலீஸ் இல்லை பொறுக்கி' என்று சியான் பன்ச் பேசும்போது சிலிர்த்துப்போய் சில்லறையை விட்டெறிந்த ரசிகர்கள், `சாமி ஸ்கொயர்' படத்தில் `நான் சாமி இல்லை; பூதம்', `மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுனா' எனப் பன்ச் பேசுவதைக் கேட்டு, டீஸர் வந்த நாளிலிருந்து இன்று வரை `வெச்சு' செய்தனர். வெளியான முதல் நாளிலிருந்து இன்றுவரை யூ-டியூபில் அதுதான் டாப் டிரெண்டிங். நெட்டிசன்கள், சமூக வலைதளங்களிலும் விடுவதாய் இல்லை. கையில் குளுகோஸ் ஏற்றிக்கொண்டு ஃபுல் எனர்ஜியோடு கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  

`விக்ரம் இறந்துவிட்டார், இருப்பினும் சிட்டியில் நடக்கும் அக்கிரமங்களை சகித்துக்கொள்ள முடியாமல், தன் மகனின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து, நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்கிறார். இதுதான் கதை' என்றும் ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. `அப்புறம் கீர்த்தி சுரேஷ்கூட ரொமான்ஸ் பண்றது யாரு?' இதுதானே உங்க சந்தேகம். அட அப்பப்போ பையன் விக்ரமை ரொமான்ஸ் பண்ணவிடுவார் பாஸ்!. அதைவிடுங்க, நம்ம விஷயத்துக்கு வருவோம். மூன்று நாள்களாக, `சியான் விக்ரம், கேரக்டருக்காக எந்த மெனக்கெடல்களையும் பண்ணுவார்' என்று மெச்சியவர்களே `சாமி 2' டீசருக்குக் கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் அதேசமயம், `துருவ நட்சத்திரம்' படத்தின் டீசரைக் கோலாகலமாகக் கொண்டாடியும் வருகிறார்கள். டென்ஷன் வேணாம். இப்போ நாம `துருவ நட்சத்திரம்' டீசருக்கு ஜம்ப் பண்ணுவோம். 

விக்ரம், `ஸ்கெட்ச்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் `துருவ நட்சத்திரம்' படத்துக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார், கௌதம் மேனன். பத்துப்பேர் கொண்ட குழுவோடு விமானத்துறை, இராணுவம், உளவுத்துறை எனச் சர்வதேச அளவில் இறங்கி அடித்திருக்கிறார். ஹாலிவுட் பட டீசரை மிஞ்சும் அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் தளும்ப நிரம்பியிருக்கின்றன. படம் முழுவதும் அப்படித்தான்போல. ராதிகா, சிம்ரன், பார்த்திபன், சதீஷ், மாயா, டிடி, வம்சி, சலீம் பைக், முன்னா எனப் படத்தில் பெரும் படையே உள்ளது.  

ஹாரிஸின் மியூசிக்கும், பிரவீன் அந்தோனியின் எடிட்டிங்கும் டீசரில் `கதகளி' ஆடுகிறது. விக்ரம் ஸ்டைலில் சென்சார் செய்யப்பட்ட ஒரு கெட்ட வார்த்தையோடு, '........ இதுதான்டா டீஸரு' எனச் சொல்லும் அளவுக்கு மெர்சல் காட்டியிருக்கிறார்கள். இதற்கு விக்ரமின் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் எக்ஸ்ட்ரா பூஸ்ட். ஆனால், விக்ரம் இந்தப் படத்தில் கடும் கோபக்காரராக இருப்பார்போலத் தெரிகிறது. முதல் டீசரில் தொடங்கி, மூன்றாவது டீசர் வரை... மனுஷன் ரக ரகமாய் கெட்ட வார்த்தை பேசியிருக்கிறார். யூ-டியூபில் சென்சார் செய்யத் தேவையில்லை என்பதால், காதில் தேன் பாய்கிறது. 

எஸ்கேப் ஆர்டிஸ்ட், ஒன்றாக என்டர்டெயின்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களிலிருந்து இப்போது லைக்கா நிறுவனத்துக்குப் படம் கைமாறியிருக்கிறது. கௌதமை கடைசியாக `அச்சம் என்பது மடமையடா' படத்தில் பார்த்தது. அதற்குப் பிறகு `எனை நோக்கிப் பாயும் தோட்டா', `துருவ நட்சத்திரம்' என அவரது ரசிகர்களை ஒரு வைப்ரேஷன் மோடிலே வைத்திருக்கிறாரே தவிர, படத்தை வெளியிடத் தயங்குகிறார். இதற்கு நடுவே `நரகாசுரன்' பட பஞ்சாயத்து வேறு!. 

`துருவ நட்சத்திரம்' டைட்டிலுக்குக் கீழே `யுத்த காண்டம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இராமாயணத்தின் ஆறாவது காண்டமான இதில்தான், ராமன் ராவணனை எதிர்த்துப் போர் புரிந்தார். பொதுவாக மணி ரத்னம் இயக்கும் படங்களில்தாம் இதிகாசத்தின் `டச்' இருக்கும். இந்தப் படத்தின் மூலம் கௌதம் மேனனும் அதைக் கையில் எடுத்திருக்கிறார். கடத்தப்பட்ட `மிஸ்டர் கே'வை தன் டீமோடு `டார்க் மேனி'டமிருந்து மீட்பதுபோல கதை இருக்கும் எனத் தெரிகிறது. அந்த `டார்க் மேன்' யார் என்பதில் ட்விஸ்ட் இருக்கலாம். என்றாலும், படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளையும், விக்ரமின் அசத்தலான நடிப்பையும் பார்க்க முடியும். வீ ஆர் வெயிட்டிங்! 

`துருவ நட்சத்திரம்' டீசர் குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் தட்டிவிடலாமே?!

பின் செல்ல