Published:Updated:

’’ஆசிரமம் ஆரம்பிங்க ரஜினி... கேமரா இல்லாம நடிக்கிறீங்களே கமல்!’’ -  ராதா ரவி

’’ஆசிரமம் ஆரம்பிங்க ரஜினி... கேமரா இல்லாம நடிக்கிறீங்களே கமல்!’’ -  ராதா ரவி
’’ஆசிரமம் ஆரம்பிங்க ரஜினி... கேமரா இல்லாம நடிக்கிறீங்களே கமல்!’’ -  ராதா ரவி

சினிமா சூழல், ரஜினி - கமல் அரசியல், விஜய், விஜயகாந்த் உடனான நட்பு... எனப் பல்வேறு விஷயங்களுக்கு தனக்கான ஸ்டைலில் பதில் சொல்லியிருக்கிறார், நடிகர் ராதா ரவி. அவருடைய விரிவான பேட்டி.

"என்னை யாராவது 'யார் நீ'னு கேட்டிருந்தா, தம்பிக்கு நம்மளைப் பத்தி தெரியலைனு நினைச்சு, 'வணக்கம் தம்பி, வர்றேன்'னு சொல்லிட்டு நகர்ந்திருப்பேன். பின்னே, நம்மளைத் தெரியாத ஒருத்தர்கிட்ட நாம ஏன் பேசணும்? ரஜினிக்கு இது தெரியலை. இந்த மூணாம் நம்பர்காரங்களே இப்படித்தான்!" - ராதா ரவி பேச்சு ரணகளமாதானே இருக்கும். தற்போதைய அரசியல் சூழல், தமிழ் சினிமாவின் நிலை, இன்னபிற விஷயங்களுக்காக அவரை சந்தித்தோம். 

"அதென்ன மூணாம் நம்பர்காரர்?" 

"நிறைய இடத்துல படிச்சிருக்கேன். ரஜினி 12-ம் தேதி பிறந்திருந்திருக்கிறதுனால, 1 + 2 = 3. இந்த நம்பர்காரங்க எப்பவுமே மத்தவங்க பேசுறதைக் கேட்டுக்குவாங்க, நிறைய சந்தேகங்கள் கேட்பாங்க. 'அரசியல்னா என்ன?'னு 'குரு சிஷ்யன்' ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் கேட்டிருக்கார். 'ரஜினிக்கு ஆதரவா பேசுனா என்ன பேசுவீங்க, எதிரா பேசுனா என்ன பேசுவீங்க?'னு அப்பவே அரசியல் பேசியவர்.   

எந்த எமோஷனா இருந்தாலும் பட்டுனு வெளிப்படுத்துற ஆள். சரத்குமார் நடிகர் சங்கத் தலைவரா இருந்தப்போ, ஒரு மீட்டிங். எஸ்.வி.சேகர் ரஜினிகிட்ட, 'சார்.. உங்க யாத்திரை பத்தி பத்திரிகைல'னு ஆரம்பிச்சார். 'சேகர், வேணாம்'னு சொன்னார், ரஜினி. மறுபடியும் எஸ்.வி.சேகர் அந்தப் பேச்சை எடுக்க, 'சேகர் சொல்றேன் இல்லையா...'னு கேட்டுட்டார். அப்படி ஒரு டென்ஷன்ல ரஜினி சாரை நான் பார்த்ததில்லை. அவருக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசுனா, பிடிக்காது. இதுக்குத்தான் நான் அவர்கிட்ட 'அரசியல் வேணாம் சகோதரா'னு சொன்னேன்.  

மத்தபடி, ரஜினி ரொம்ப நல்ல மனிதர். அவர் இன்னும் நிறையப் படங்கள் நடிக்கட்டும். நல்லா சம்பாதிச்சு கர்நாடகாவுல பிசினஸ் பண்ணட்டும். இங்கே அவருக்கு என்ன கனெக்ட் இருக்கு? பொண்ணுங்களை தமிழ்நாட்டுல கட்டிக்கொடுத்திருக்காரு. அவங்களுக்கு நிலம், வீடுனு வாங்கிக் கொடுத்திருப்பார். அதனால, கர்நாடகாவுல அவர் பிசினஸ் பண்ணிக்கிறதுல ஒரு தப்பும் கிடையாது. 

அவருக்குக் கிடைச்சிருக்கிற 'சூப்பர் ஸ்டார்'ங்கிற பட்டம் கடவுள் கொடுத்த வரம். ஏன்னா, ரஜினி ஒரு சாதாரண நடிகர். அவருக்கு கமல் மாதிரி டான்ஸ் ஆடத் தெரியாது; அர்ஜூன் மாதிரி சண்டை போடத் தெரியாது. இதெல்லாம் மீறி, சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கார்னா அவரைப் பாராட்டணும். போராட்டம் கூடாதுனு சொல்ற அவர்தான், 'என் வாழ்க்கையே பெரிய போராட்டம் தெரியுமா?'னு சொன்னார். ஒரு மனுஷன் உயிரோட இருக்கிற வரைக்கும் போராட்டம் இருக்கும். போராட்டம் இல்லைனா, அவன் உயிரோட்டம் இல்லாத பொணத்துக்குச் சமம். போராட்டத்தோட தியரி அவருக்குத் தெரியாது. காசு சேர்த்த அவர், 'அமைதியா இருக்கணும்'னு சொல்றாரு. ஒண்ணுமே இல்லாத அன்றாடங்காச்சியோட நிலையை அவர் யோசிச்சுப் பார்க்கணும். எல்லாத்தையும் படம் மாதிரியே ஃபீல் பண்ணக் கூடாது. உடம்பை அசைச்சா, 'எந்திரன்' படத்துலதான் 42 துப்பாக்கி வரும். நிஜத்துல வராது. 

போராட்டக்காரர்களைப் பத்தி அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. களத்துல சமூக விரோதிகள் வந்துட்டாங்கன்னு பேசியிருக்கக் கூடாது. தவிர, முன்னுக்குப் பின் முரணா பேசுறார். போலீஸ்காரங்க சுட்டது தப்புனு சொல்றாரு; தூத்துக்குடி போன பிறகு சமூக விரோதிகள் குரூப்ல இருந்தாங்கன்னு கண்டுபிடிக்கிறார். அவருக்குத் தெரியாதது எதுவும் இல்லை. இந்த மூணாம் நம்பர்காரங்க டென்ஷன்ல எதையாவது பேசினா, அஞ்சாவது நிமிஷமே மாட்டிப்பாங்க!

எம்.ஜி.ஆர் ஒருத்தர்தான் ஸ்கிரீன்ல என்ன பண்ணாரோ, அதையே நிஜ வாழ்க்கையிலும் பண்ணார். அவர் சிகரெட் பிடிச்சதோ, தண்ணி அடிச்சதோ கிடையாது. 'புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக'னு பாடி, ஸ்கிரீன்ல மட்டும் ஏழைகளைக் கட்டிப்பிடிக்கலை; நிஜத்துலேயும் செஞ்சார். எம்.ஜி.ஆர் பத்து வருஷம் ஆட்சி பண்ணியிருப்பார். அவர் பாலம் கட்டினார், இண்டஸ்ட்ரி கொண்டுவந்தார்னு எல்லாம் பெருசா சொல்லமுடியாது. ஆனா, மக்களுக்கு என்ன தேவையோ அதை சரியா செஞ்சார். 

ரஜினி திடீர் திடீர்னு எதையாவது சொல்றார். போராட்டம் வேணாம்ங்கிறார்; ராஜினாமா பண்ணக் கூடாதுனு சொல்றார். அவருக்கு அரசியல் தெரியலை. மத்தபடி, கிரௌடே இல்லாத ஒரு ரூம்ல உட்கார்ந்து அவர் போதனைகள் பண்ணலாம். ஆசிரமம் ஆரம்பிக்கலாம். நான் இதை காமெடியாவோ, காட்டமான விமர்சனமாவோ சொல்லலை. ஆசிரமம் ஆரம்பிச்சா, நான் அவர் கால்ல விழுந்து சரண்டர் ஆகி, அவருக்குப் பக்தகோடி ஆயிடுவேன்.

ஏன்னா, ரஜினி ஒரு அபூர்வ மனிதர். அவர் கறுப்பு அணிந்தாலும் அது துக்கமா தெரியாது. அவரோட முகம், பாவனை, வெள்ளைத் தாடி... ரஜினி கறுப்பு போட்டா, திராவிட இயக்கங்கள் கறுப்புச் சட்டை போட்டப்போ இருந்த கம்பீரம் இருக்கும். ஏன் இவ்ளோ பேசுறேன்னா, ரஜினியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!"

"ஆனா, ரஜினிகாந்த் நிருபர்கள்கிட்ட ட்விட்டர் மூலமா மன்னிப்பு கேட்டாரே?!" 

"பத்திரிகையாளர்கள்கிட்ட மட்டுமில்ல, போராடுன மக்கள்கிட்டேயும் அவர் மன்னிப்பு கேட்கணும். சமூக விரோதிகள் ஊடுருவல்னு சொல்லி, போராளிகளைக் கொச்சைப்படுத்திட்டார். யூனிஃபார்ம் இல்லாம ஏன் சுட்டீங்கன்னு போலீஸ்காரங்களை ஒரு வார்த்தை கேட்கவேண்டியதுதானே? 'அவர்கள் சுட்டதும் தவறு; இவர்கள் நடந்துகொண்டதும் தவறு'னு நியாயத் தராசு மாதிரியாவது பேசியிருக்கலாமே? ஏன்னா, அவருக்குப் பேச வராது. சாத்வீகமான வொயிட் அண்ட் வொயிட் மனிதர் அவர். எதிலும் கலந்துக்க மாட்டார்."

"12.12.2012... ரஜினி பிறந்தநாளில் அவரோட உடல் நலத்திற்காக விரதம் இருந்திருக்கீங்க. பல இடங்கள்ல அவருக்கு ஆதரவா பேசியிருக்கீங்க. இப்போ ஏன் இத்தனை எதிர்ப்பு?"

"அவரு சொல்றது தப்புனு சொல்றேன்... அவ்வளவுதான். அவரை அரசியலுக்கு வரக்கூடாதுனு தனிப்பட்ட முறையில சொல்றேன். இத்தனை அரசியல்வாதிகள் எதிர்த்தப்போ, பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான் அவருக்கு ஆதரவா பேசுறார். அவர் ஆதரவு ரஜினிக்கு இருந்து, ஒரு 20,000 பேர் ஓட்டுபோட வருவானாங்கிறது கேள்விதான்!"

"கமலோட அரசியல் பயணம் பற்றி உங்க கருத்து என்ன?"

"கமல் என்னோட பால்ய சிநேகிதர். அவர் பேசுறதைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. அவர் மேதாவி. தினமும் மூணு புத்தகத்தைப் படிச்சுட்டுப் பேசுறவர். படங்கள்ல அவர் எடுத்த பல ரூபங்கள் மாதிரி, அரசியலுக்கு ஒரு ரூபம். மீசை வெச்சிருக்கார்; தென்மாவட்டங்கள்ல வலம் வர்றார். அங்கே மீசை தேவைனு அவருக்கு நல்லாவே தெரியும். சிவாஜிக்குப் பிறகு அருமையான நடிகர். முதல்முறையா கேமரா இல்லாம அவர் நடிக்கிறதைப் பார்க்கிறேன். 

இப்போதான் அரசியல்ல வளர்றார். அவரு எவ்ளோ பெரிய ஆளா இருந்தா, அறிவாலயத்துக்குள்ள வந்து, 70 வருட அனுபவமுள்ள கட்சியை தான் நடத்துற அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்குக் கூப்பிடுவார். 

எனக்கும் அவருக்கும் ஆரம்பத்துல இருந்தே ஒத்து வராது. என்னை மாத்தணும்னு நினைச்சுப் பல இடங்கள்ல தோற்றுப்போனார். 86-ல நடிகர் சங்கத் தேர்தல்ல நான் நிற்கும்போது, எனக்கு ஆதரவா ஓட்டு கேட்டவர், கடைசியா நின்னப்போ, நான் தோற்கக் காரணமா இருந்தார். கடைசியா அவர் என்னைத் தோற்கடிச்சிட்டார்னுதான் சொல்லணும். அவர், இந்த மண்ணின் மைந்தர். அரசியல் கட்சி தொடங்குறதுக்கு அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவரோட அரசியல் பயணத்துல இதுவரை அறிவுரை கேட்காதது, அமெரிக்க அதிபர்கிட்டேயும், சீன அதிபர்கிட்டேயும்தான். எல்லோரையும் பார்த்துப் பேசி, அமெரிக்காவுல இருக்கிற நல்லது கொஞ்சம், சீனாவுல இருக்கிற நல்லது கொஞ்சம்னு எடுத்துட்டு வந்து, தமிழ்நாட்டை மாத்தப்போறார்னு நினைக்கிறேன்." 

"கமல் ஒரு கட்சி ஆரம்பிச்சு தலைவரா உருவெடுத்து வர்றார். ஆனா, ரஜினி அரசியல் கட்சி அறிவிப்புக்குக் காலம் வரும்னு சொல்றாரே?"

"நல்லா கேளுங்க... அவர் காலம் வரும்னு சொல்லியிருக்க மாட்டார். 'காலா' வரும்னு சொல்லியிருப்பார். அதுபோக, அவருக்கு '2.0' படம் இருக்கு. சன் பிக்சர்ஸ் படம் வரப்போகுது. அந்தப் படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் அரசியல் கட்சி வராது. ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துறேன்னு சொன்னார். பண்ணலை. இங்கே எல்லா கலர்லேயும் கொடி இருக்கு. அவருக்குனு புதுசா ஏதாவது கலர் கண்டுபிடிச்சாதான் உண்டு!"

"நடிகர் சங்க செயல்பாடுகள் எப்படி இருக்கு, அடுத்த தேர்தல் வரும்போது நீங்க போட்டியிடுவீங்களா?"

"போட்டியிடுற ஐடியா இல்லை. நடிகர் சங்கத் தேர்தலை விஷால் தள்ளிப்போட முடிவெடுத்திருக்கிறதா தெரியுது. என்னோட ஆதரவாளர்களையெல்லாம் நீக்கிட்டே வர்றார். ஜே.கே.ரித்தீஷ் அரசாங்க உதவியோட 50 வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கார். நடிகர் சங்கத்துக்கு ஒரு கல்யாண மண்டபத்தை மதுரையில கட்டிகொடுத்திருக்கார். இதெல்லாம் நடப்பு நிர்வாகம் செஞ்சிருக்கவேண்டியது. வெறும் 50 லட்சம் மட்டுமே நடிகர் சங்கம் கொடுத்திருக்கு. நாடக நடிகர்களையெல்லாம் சங்கத்துல இருந்து நீக்க முடிவெடுத்திருக்காங்க. நாசரே, 'திரைப்பட நடிகர்களை மட்டும் வெச்சு சங்கத்தை நடத்தலாம்'னு சொன்னார். இப்போ, தேர்தல் வரப்போறதுனால அவங்க பக்கமும் பேசினார். 

மத்தபடி, சங்க செயல்பாடுகள் எப்படி இருக்குனு தெரியலையே! நாசர், பெயருக்குத்தான் தலைவர். மத்தபடி எல்லாம் விஷால்தான். எல்லா இடத்தையும் குழப்பத்திலேயே வெச்சிருக்கணும்னு நினைக்கிற புத்திசாலி விஷால்." 

"தயாரிப்பாளர் சங்க, நடிகர் சங்கத்துல முக்கிய நபர்கள் சிலர் ராஜினாமா பண்றாங்களே?"  

"மாங்காய் சீஸன் மாதிரி, இது ராஜினாமா சீஸன். சீனியர் தயாரிப்பாளர் தேனப்பன் பத்து பதினைஞ்சு காரணங்கள் சொல்லி வெளியேறியிருக்கார். அது என்னானு தெரியலை. மத்தபடி தயாரிப்பாளர் சங்கம் நல்லதுதான் பண்ணுதுனு ஃபெஃப்சி சொல்லுது, நானும் கேட்டுக்கிறேன். 

நடிகர் சங்கத்துல ரெண்டுபேருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினாங்க. அவங்க அதைப் பண்றதுக்குள்ள நீக்கிட்டாங்க. என்னைய சங்கத்துல இருந்து நீக்கியது செல்லாதுனு கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்கேன். அதுக்கு, விஷால் நீதி மன்றத்துல மன்னிப்பு கேட்டார். அந்த கேஸ் இன்னும் நடந்துக்கிட்டு இருக்கும்போதே, 'ராதாரவிகிட்ட யாரும் பேசக்கூடாது'னு விஷால் கடிதம் எழுதுறார். எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு. முசோலினி, ஹிட்லர், லெனினுக்கு வராத முடிவா? விஷால் பண்றது டிக்டேட்டர்ஷிப்."

"விஜய்யை ஆரம்பகாலத்துல இருந்து பார்த்துட்டு வர்றீங்க. அவரும் அரசியலுக்கு வரப்போறதா ஒரு பேச்சு இருக்கு. வந்தா, அவரோட அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?"

"விஜயகாந்துக்குப் பிறகு விஜய்யைத்தான் 'விஜிமா'னு கூப்பிடுறேன். இப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல விஜிமாகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன். முன்ன மாதிரி இல்ல அவர். இப்போ நிறைய பேசுறார். ஆனா, அரசியல் பேசலை. 'நாளைய தீர்ப்பு' படத்துல நான்தான் அவருக்கு அப்பா. ஒரு காட்சியில அவரு என் சட்டையைக் கோபமா பிடிக்கணும். அப்போ ரொம்பக் கூச்சப்பட்டார். இப்போ வேறமாதிரி நடிக்கிறார். விஜிமா என் பையன் மாதிரி. ஷூட்டிங் ஸ்பாட்ல லைட்மேன்கிட்ட, புரொடக்‌ஷன் பாய்கிட்ட நான் பேசிக்கிட்டு இருப்பேன். விஜிமா ஒரு மூலையில பாயைப் போட்டு படுத்திருப்பார். இந்தப் பழக்கத்தை நான் ரஜினி சார்கிட்ட பார்த்திருக்கேன். 

அரசியலைப் பொருத்தவரை, கமல் சார் மாதிரி இவரும் மண்ணின் மைந்தன்தான். அரசியலுக்கு வர்ற எல்லா தகுதியும் இருக்கு. அவர்லாம் வரலாம். ஜெயலலிதா அம்மா இருக்கும்போது மக்கள் இயக்கம் மூலமா நிறையா உதவிகள் செஞ்சார் விஜய். அதனால பல பிரச்னைகளுக்கும் ஆளானார். ஆனால், அரசியல் பத்திப் பேசுறதில்லை. தானுண்டு தன் வேலையுண்டுனு இருக்கார்."

" நீங்க 'விஜிமா'னு செல்லமா கூப்பிடுற விஜயகாந்த்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியா இருக்கோ?" 

"நீங்கதான் அப்படிச் சொல்றீங்க. அவர் எப்பவும்போலதான் இருக்கார். அவருக்கு அவருக்கான ஃபாலோயர்ஸ் இருக்கத்தான் செய்றாங்க. அவருக்கு உடல்நிலை சரியில்லாம போச்சுங்கிற கவலைதான். விஜிமா என் நீண்டகால நண்பர். நான், விஜிமா, எஸ்.எஸ்.சந்திரன், வாகை சந்திரசேகர், பாண்டியன், தியாகு... ஆறுபேரும் ஒன்னாவே இருப்போம். நாங்கெல்லாம் சினிமாவுல ஒதுக்கப்பட்ட கோஷ்டி. பெரிய பெரிய சினிமா பார்ட்டிகளுக்கு எங்களைக் கூப்பிட மாட்டாங்க. எங்க கூட்டத்துக்கு யாருக்கும் இங்கிலீஷ் வராது. நான் மட்டும்தான் இந்த கேங்ல படிச்சவன். அது ஒரு காலம். குள்ள மணிதான் உக்கார வெச்சு ஆபீஸ் ஆபீஸா கூட்டிட்டுப் போவான். வாகை சந்திரசேகர், பாண்டியன்போல தைரியமான ஆளுங்களைப் பார்க்க முடியாது. தியாகுதான் ஒரு யோசனையிலேயே இருப்பான், ஆனா நல்லவன். விஜிமாதான் எங்க கூட்டத்துல சிங்கம். எங்க கும்பல் பிரிஞ்சதுக்குக் காரணம், நடிகை ஶ்ரீவித்யாதான். அந்த அம்மாதான் 'ஆறு ஆம்பளைங்க எப்படி இவ்வளவு ஒற்றுமையா இருக்கீங்க?'னு கேட்டுச்சு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலைக்குப் பிரிஞ்சுட்டோம். விஜயகாந்த்தான் ரொம்பக் கஷ்டப்பட்டு மேல வந்த ஆளு. டாப் லெவலுக்கு வந்தபிறகு அவரைமாதிரி சோறுபோட்ட அன்னதானப் பிரபு இங்கே யாரும் கிடையாது. இப்போ, அவரோட பையன் நடிக்க வந்திருக்கார். எல்லோருடைய ஆசீர்வாதமும் இருக்கும்." 

"நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சரியா கொண்டாடலைனு உங்களுக்கு வருத்தம் இருக்கா?"

"எங்க குடும்பத்துல எந்த ஒரு வருத்தமும் கிடையாது. எங்க ஐயாவை யாராவது புகழ்ந்தா, அதை மண்டைக்கு ஏத்திக்க மாட்டார். இப்படித்தான் ஒரு நாடகத்துக்காக எங்க ஐயா மேக்கப் போட்டுக்கிட்டிருக்கும்போது, அவரை ஒருத்தர் பாராட்டிக்கிட்டே இருந்தாரு. எங்க ஐயா, 'அப்படியா, அப்படியா'னு கேட்டுக்கிட்டே, 'போய் நாடகம் பாரு'னு அனுப்பினார். இப்படி அவர் எதையும் பெருமைனு கருத மாட்டார். நான் படிச்சதுனால எனக்குக் கொஞ்சம் பயம் வந்திடுச்சு. கொஞ்சம் பக்குவப்பட்டிருக்கேன். எங்க அப்பா படிக்கலை. அதனால, முரடனாவே இருந்துட்டாரு. ஆனா, அவர் அறிவாளி. எது எப்படியோ... இப்ப மட்டுமில்ல, எம்.ஆர்.ராதாங்கிற மனிதரைப் பற்றி மக்கள் எப்பவுமே பேசிக்கிட்டுதான் இருப்பாங்க!"

"சில தலைவர்கள் பிரபலங்களோட பெயரைச் சொல்றோம். அவரைப் பற்றிய உங்க அபிப்ராயத்தை நீங்க சொல்லணும்?" 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

"முதல்வர் இந்த நிலைக்கு வந்ததுக்கு, அவங்க அப்பா அம்மா ஆசிர்வாதம்தான் காரணம்னு நினைக்கிறேன். முதல்வர் பதவியிலே உட்கார வெச்சவங்களையே ஓடவிடுறார். அந்த சீட்டை விட்டு நகர்ந்தா, வேற யாராவது உட்கார்ந்திடுவாங்களோனு பயத்துல நகரவே மாட்டேங்கிறார். எங்க வீட்டுக்குப் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வந்திருக்காங்க. நான் ஜானகி அம்மா, ஜெயலலிதா அம்மாகூடவும் பழகியிருக்கேன். ஆனா, இவரை மாதிரி ஒரு முதல்வரை பார்த்ததே இல்லை. நல்லா திசை திருப்பக்கூடிய ஆள். ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பற்றிக் கேட்டா, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பேசுவார்."  

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 

"முதல்வரைவிட இவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஓ.பி.எஸ் அண்ணனை ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர்ல தொடங்கி, பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்வரை நான் பார்த்திருக்கேன். அப்போ எப்படி அமைதி காத்தாரோ, இன்னைக்கும் அதேமாதிரிதான் இருக்கார். காலையில பட்டையைப் போட்டு, குங்குமம் வெச்சு சிரிச்ச முகமா இருந்தாருனா, நைட்டு வரைக்கும் அப்படித்தான் இருப்பார்!" 

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் 

"அப்படியே அவங்க அப்பா மாதிரி. பெரிய உழைப்பாளி. அவருக்கு எல்லாமே தெரியும். ஒரு பேட்டி நான் கொடுத்திருக்கேன்னா, அதைப் பார்த்துட்டு, 'இதுக்கு இப்படிப் பேசியிருக்கலாம்'னு திருத்துற தலைமைப் பண்பு அவருக்கு இருக்கு. ரெண்டுபேரும் ஒரு நல்ல உறவுல இருக்கோம். அது நிலைக்கணும்!"   

டி.டி.வி. தினகரன் 

"நான் ரொம்ப ஈடுபாட்டோடு இருந்த மனிதர். நான் அ.தி.மு.க-வுல இருந்த சமயம். தலைமையைப் பார்க்க முடியாதபோது, அவங்ககிட்ட ரீச் ஆகணும்னு சில விஷயங்களை தினகரன்கிட்டதான் சொல்வேன். சொல்ற எல்லாத்தையும் தெளிவா உள்வாங்கிக்குவார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல்ல எங்கே பார்த்தாலும் டி.டி.வி பெயர்தான் இருந்துச்சு. ஒருமுறை எங்க அப்பாவோட நாடகத்துக்காக அருப்புக்கோட்டைக்குப் போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் இரட்டைஇலை இருந்துச்சு. அந்த மாதிரி ஒரு சூழலை அதுக்குப் பிறகு நான் ஆர்.கே.நகர்ல பார்த்தேன். தினகரன் இப்போ செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும், மக்களைச் சந்திக்கும்போதும் சிரிச்சுக்கிட்டே பேசுறார். அவர், தன்னை ரொம்ப நல்லா தயார் படுத்திக்கிட்டார்."

டி.ஆர் 

"அவர் எப்பவுமே சிங்கம்தான். அது தூங்கிக்கிட்டு இருந்தாலும், கர்ஜனைதான். இப்போகூட என்கிட்ட ஒரு கதை சொல்லியிருக்கார். அரசியல் படம்தான். ரொம்ப நாள் கழிச்சு அவரோட இயக்கத்துல நடிக்கப்போறேன்."

சரத்குமார் 

"அறிவார்ந்த மனுஷன். ஆனா, அரசியலுக்கு அவ்வளவு நுண்ணறிவு தேவையானு ஒரு கேள்வி இருக்கு. அவர் தனிக்கட்சி தொடங்காம, ஏதாவது ஒரு கட்சியில இருந்திருந்தா பெரிய இடத்துக்குப் போயிருப்பார். அரசாங்கம் செய்றது தப்புங்கிறாரு. ஆனா, ஆளுங்கட்சியோட கூட்டணினு சொல்றாரு. அரசியல்ல ஒரு விடலைப் பருவத்துல இருக்கார். ரஜினிகாந்த்தையே யாருனு கேட்ட அந்தத் தம்பிகூட, சரத்குமார் எங்களோட போராடுனார்னு சொல்லிச்சு. காலேஜ் டைம்ல இருந்தே அவர் பெரிய போராளி. சரத்குமார் எப்பவுமே ஒரு 'டச் ஆஃப் எ க்ளாஸ்' மனிதன்!" 

அடுத்த கட்டுரைக்கு