Published:Updated:

`` `விசுவாசம்'ல அஜித்கூட மூணு பிரியாணி; நயன்தாராகிட்ட ரெண்டு விஷயம்!’’ கலைராணி

`` `விசுவாசம்'ல அஜித்கூட மூணு பிரியாணி; நயன்தாராகிட்ட ரெண்டு விஷயம்!’’ கலைராணி
`` `விசுவாசம்'ல அஜித்கூட மூணு பிரியாணி; நயன்தாராகிட்ட ரெண்டு விஷயம்!’’ கலைராணி

``அஜித், ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு வந்ததுமே எல்லா ஆர்டிஸ்டுங்களுக்கும் வணக்கம் சொல்லிட்டுதான் அடுத்த வேலையைக் கவனிப்பார். ஷாட் இல்லாதபோது எல்லோர்கூடவும் சகஜமா பேசுவார்."

மிழ் சினிமா குணச்சித்திர நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர், கலைராணி. 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர். தற்போது, அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் நடித்துவரும் கலைராணி, தன் சினிமா பயணத்தை சுவாரஸ்யமாகப் பகிர்கிறார்.

`` `விசுவாசம்' படத்தில் அஜித்துடன் நடித்திருக்கும் அனுபவம் பற்றி..."

`` `ஆஞ்சநேயா', `வீரம்', `வேதாளம்' படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் நடிக்கும் நாலாவது படம் இது. படத்தில் அஜித் ஃபேமிலியில் நானும் முக்கியமான நபரா நடிச்சிருக்கேன். படம் பற்றி எந்த விஷயத்தையும் இப்போதைக்குச் சொல்லக்கூடாது. அஜித், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததுமே, எல்லா ஆர்டிஸ்ட்களுக்கும் வணக்கம் சொல்லிட்டுதான் அடுத்த வேலையைக் கவனிப்பார். ஷாட் இல்லாதபோது எல்லோரிடமும் சகஜமா பேசுவார். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்துச்சு. இந்தப் படத்தில் இதுவரை 18 நாள்கள் நடிச்சிருக்கேன். இதுவரை மூணு முறை அஜித் எங்களுக்குப் பிரியாணி சமைச்சுக்கொடுத்திருக்கார். சாப்பிட்டுகிட்டே நிறைய அரட்டை அடிப்போம். ஒருமுறை அவரோடு செல்ஃபி எடுத்துக்கிட்டேன். அடுத்த ஷெட்யூல் சீக்கிரமே ஆரம்பிக்குது."

``நயன்தாராவுடன் பேசினீங்களா?"

``இது அவங்களோடு எனக்கு முதல் படம். 'அறம்' படத்தில் சிறப்பா நடிச்சு, லேடி சூப்பர் ஸ்டாரா உயர்ந்திருக்கிறதுக்கு வாழ்த்துச் சொன்னேன். சிரிச்சுகிட்டே, `ரொம்ப நன்றி'னு சொன்னாங்க. அவங்க சிரிப்பு ரொம்ப அழகு."

``தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய 'ஊமை விழிகள்' படத்தின் நினைவுகள் பற்றி..."

``அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் ஆக்டிங் கோர்ஸ் படிச்சேன். ஆபாவணன், அரவிந்த்ராஜ் இருவரும் டைரக்‌ஷன் கோர்ஸ் படிச்சாங்க. சீனியர்ஸா இருந்தாலும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். படிப்பு முடிஞ்சதுமே படம் எடுக்கும் வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. 'ஊமை விழிகள்' படத்தை ஆபாவணன் தயாரிக்க, அரவிந்த்ராஜ் இயக்கினார். அப்போவெல்லாம் ஓர் இயக்குநரிடம் அசிஸ்டென்ட்டா சேர்ந்து அனுபவம் பெற்று, தயாரிப்பாளர் கிடைச்சு, நடிகர்கள் ஒப்புகிட்டு படம் எடுக்கிறது பெரிய சவால். அப்படி இருக்கிறப்போ, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சவங்களே சேர்ந்து படம் எடுத்தது தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துச்சு. ஒருநாள் ஷூட்டிங் பார்க்கப்போனேன். என்னையும் நடிக்கவெச்சுட்டாங்க. அது அரசியல் படம். அதனால், சென்சார்ல நிறைய சோதனைகள் கடந்து ரிலீஸாகி, பெரிய ஹிட்டாச்சு. அப்புறம்தான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் பலரும் சினிமா துறையில் தடம் பதிக்க ஆரம்பிச்சாங்க."

``எதார்த்தமான அம்மா கேரக்டர்களிலேயே அதிகம் நடிச்சிருக்கீங்க. அதுக்கு காரணம் உண்டா?"

`` `ஊமை விழிகள்' படத்தில் நடிச்சுக்கிட்டே 'காணி நிலம்' என்ற படத்திலும் நடிச்சேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாவும் மேடை நாடகங்களில் நடிச்சுட்டிருந்தேன். சினிமாவில் எல்லாமே கிராமிய கதைகளாக இருந்துச்சு. அப்படித்தான் நான் நடிச்ச 'தேவதை' படத்தைப் பார்த்து டைரக்டர் ஷங்கர், `முதல்வன்' படத்துக்கு அணுகினார். சொன்னா நம்பமாட்டீங்க. அந்த அம்மா கேரக்டருக்காக, 21 முறை அவர் தரப்பிலிருந்து என்கிட்ட பேசினாங்க. நாடகங்களில் பிஸியா இருந்ததால், உடனே தேதி கொடுக்கமுடியலை. அந்தப் படத்தில், அர்ஜூன் அம்மாவாக, `ஓடுது... ஓடுது... பாருங்க... பாருங்க'னு டிவியைப் பார்த்து ஒரு சீன்ல கத்துவதைப் பார்த்து எல்லோரும் சிரிச்சுட்டாங்க. ரிலீஸூக்கு அப்புறம் அந்த அழுத்தமான குரல்தான் அந்த கேரக்டருக்கு பிளஸ்னு பாராட்டினாங்க. பிறகு அம்மா கேரக்டர்களே அதிகம் வந்துச்சு. `புதிய கீதை', `கோடம்பாக்கம்', `சொல்ல மறந்த கதை', `ஷாக்', 'ஆனந்தப்புரத்து வீடு', 'ரமணா' எனத் தொடர்ந்து நடிச்சேன். "

``உங்க குரலின் தனித்துவத்துக்குப் பயிற்சி அல்லது சீக்ரெட் இருக்கா?"

``நான் ஒரு கூத்துப்பட்டறை கலைஞர். அங்கே உடல் அசைவுகளில் நடிப்பது, வாய்ஸ் டிரெயினிங், வசனமில்லா நடிப்பு என நிறைய விஷயங்களைக் கத்துக்கணும். மைக் இல்லாமல் உறக்கப் பேசி நடிப்போம். அந்தப் பயிற்சி, என் சினிமா நடிப்புக்கும் உதவியது. எதார்த்தமான மிடில் கிளாஸ் அல்லது ஏழைக் குடும்ப அம்மாவாகவே அதிகம் நடிச்சிருக்கேன். அந்த சிம்பதி கேரக்டருக்காக, எனக்குப் பெரும்பாலும் டல் மேக்கப்தான் போடுவாங்க. அந்த கேரக்டர் நிஜ அம்மா மாதிரி என் குரலிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவேன். பார்க்கிற ஆடியன்ஸூக்கு நான் ரிஸ்க் எடுத்துப் பேசுற மாதிரி தெரியும். ஆனால், எனக்கு அதில் சிரமமே இருக்காது."

``ஆக்டிங் டிரெயினர் பயணம் பற்றி..."

``சினிமா, மேடை நாடக நடிகர்கள் பலரும் எங்கிட்ட நடிப்புப் பயிற்சிக்கு வருவாங்க. கேரக்டர் பற்றிச் சொல்லி மேலோட்டமாக கதையும் சொல்வாங்க. அதில், சிறப்பாக நடிக்கும் அளவுக்கு நடிகர்களை டிரெயின் பண்ணுவேன். சில மாதங்கள் முதல் சில வாரங்கள் வரை ஆக்டிங் சொல்லிக்கொடுப்பேன். 'டும் டும் டும்' படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் மணிரத்னம் சார். அப்போதிலிருந்து அவருடன் நட்பு உண்டு. அவரின் படங்களில் நடிக்கும் புதுமுக நடிகர்கள் பலருக்கும் நடிப்புப் பயிற்சிக் கொடுத்திருக்கிறேன். என்னை நம்பி அவர் நடிகர்களை ஒப்படைப்பார். நானும் அவர் எதிர்பாப்பை பூர்த்திசெய்வேன். கெளதம் கார்த்திக், துளசி, ரித்திகா சிங், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலருக்கும் நடிப்புப் பயிற்சிக் கொடுத்திருக்கேன்." என்றார்

உங்களின் கலைப்பயணம் தொடரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு