கலாய்
Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமால்

சினிமால்

சினிமால்

காமெடியிலிருந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சபதம் எடுத்த சந்தானத்தின் மார்க்கெட் எகிறிக்கிடக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையில் சந்தானம் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே, ஒட்டுமொத்த கோலிவுட்டும் பொறாமையில் உச் கொட்டிவருகிறது. இப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் என்ற மராத்தி நடிகை நடிக்கிறார். சந்தானத்தின் மற்ற இரு படங்களான `சர்வர் சுந்தரம்', `சக்கப்போடு போடு ராஜா' படங்களின் ஹீரோயினான வைபவி ஷாந்தாலியாவும் மராத்தி நடிகைதான். #வாழ்வுதான்!

• நம்பர்களில் படத்தின் டைட்டில்கள் வைப்பது குறிஞ்சிப்பூ போலத் தான். `180', `3', `24', `555' என்று நம்பர் தலைப்பில் வந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் `நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' பட ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிக்கவிருக்கும் படத்துக்கு `96' என்று பெயரிட்டுள்ளனர். ரோடு மூவியாக உருவாகும் இப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக த்ரிஷாவிற்கு கதாபாத்திரம் இருக்கிறதாம். மற்ற நடிகர், நடிககைகளின் தேர்வு உறுதியானதும் படப்பிடிப்பு செல்லப் படக்குழு திட்டம்! # நம்பர் 1!

• பி.வாசுவின் கன்னட ஹிட் திரைப்படமான `சிவலிங்கா'வின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். தமன் இசையில், அனிருத் இப்படத்துக்காக பாடியிருக்கும் பாடல் ‘ரங்கு ரக்கர...’ பாடல், `வேதாளம்' படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ ரேஞ்சுக்கு ஹிட் அடிக்கும் என்கிறார்கள். படத்துக்கு இப்பாடல் கூடுதல் பலம் சேர்க்குமாம்! #தூளும்மா!

சினிமால்

• பண நெருக்கடி, வர்தா புயல், ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட காரணங்களால் சூர்யாவின் `சிங்கம் 3' பொங்கலுக்குத் தள்ளிப்போனது. ஜனவரி 26-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. கடந்த 2001-ல் `ஃப்ரெண்ட்ஸ்' படம் ஜனவரி மாதம் வெளியானது. 15 ஆண்டுகள்  கழித்து இப்போது தான் சூர்யா படம் பொங்கலைக் காண்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது. #அட!

• `புரூஸ்லீ' ரிலீஸுக்கு ரெடி. ஜி.வி-யின் அடுத்த படம் என்னவென்று விசாரித்தால் லிஸ்ட் எகிறுகிறது. `அடங்காதே', `4G', ராஜீவ்மேனன் இயக்கும் படம் மற்றும் சசி இயக்கத்தில் ஒரு படம்... என நான்கு படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். முதல் இரண்டு படங்களுக்குமான படப்பிடிப்பில் எந்தவிதப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு ஷூட்டிங் போய் வருகிறார். ஷங்கரின் உதவியாளர் வெங்கட் இயக்கும் `4G' படத்தில் ஹீரோயினாக காயத்ரி சுரேஷும், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் `அடங்காதே' படத்தில் சுரபியும் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். #நடிகன்டா!

• எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்துவரும் படத்துக்கு `முடிசூடா மன்னன்' என்ற பெயரை அறிவித்தார்கள். தற்பொழுது விஜயகாந்த் நடித்த `சத்ரியன்' படத் தலைப்பையே இப்படத்துக்கும் உறுதி செய்திருக்கிறார்கள். இதற்காக `சத்ரியன்' படத்தின் தயாரிப்பாளரிடம் முறையாக அனுமதியும் வாங்கியிருக்கிறார்கள். `ஏன் இந்த திடீர் மாற்றம்?' என்று விசாரித்தால், `சத்ரியன்' என்ற பெயர் கதைக்குப் பொருத்தமாக இருக்குமாம். தொடர்ந்து படங்கள் காலைவாரி விடுவதால், நிச்சயம் இந்தப்படத்தில் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் விக்ரம் பிரபு. #அப்போ ராஜா ராணி கதையோ!

சினிமால்

• தனது    பிறந்த நாளை  நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார் ஆண்ட்ரியா. கொண்டாட்டத்துக்கு இன்னொரு காரணம், மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் `துப்பறிவாளன்' படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதே. இப்படத்துக்கு முதலில் ராகுல்ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி, தேதிகள் பிரச்னையால் ஆண்ட்ரியா ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது. ஜனவரி வரையிலும் இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறாராம் இந்த அழகுப்பதுமை. #சூப்பர்யா!

• `கத்திச்சண்டை', `சிவலிங்கா' என மீண்டும் காமெடி ரோல்களில் வடிவேலு களமிறங்கியிருப்பதால், வளரும் காமெடி நடிகர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய்யுடன் வடிவேலு நடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. `சச்சின்', `போக்கிரி', `வில்லு', `சுறா', `காவலன்' என நான் ஸ்டாப் காமெடி சரவெடிகளில் சிரிக்கவைத்த விஜய் - வடிவேலு கூட்டணி அட்லீ இயக்கும் படத்தில் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. #வர்லாம் வா... வைகைப்புயலே!

சினிமால்

• `உங்களால் முடியாது, உங்களால் அவர்களை நெருங்கமுடியாது. பெரிய ஸ்டார் நடிகர்களுடன் நடிக்க முடியாது... என்பதே நான் சினிமாவில் வரும்போது எனக்கு கிடைத்த வார்த்தைகள். ஆனால் இப்போது பெரிய நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டேன். 2016-ல் இந்தியாவின் தேடப்படும் பிரபலங்களில் நானும் ஒருவர். இதற்கான என்னுடைய உழைப்பு அதிகம். என்னைவிட என் கணவர்தான் அதிகமாக ஆச்சர்யப்படுகிறார்!' என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிச்சொல்லி நெகிழ்கிறாராம் சன்னி லியோன். #நாங்களும்தான் தேடுறோம்!

சினிமால்

• `ஹிட் கொடுத்துவிட வேண்டும்' என்பதால், அதர்வாவின் கடைசி துருப்புச்சீட்டு, `ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படம்தான். `படத்தில் எந்தச் சிக்கலும் வேண்டாம்' என்பதற்காக முழுக்க முழுக்க காமெடி படமாகவே உருவாக்கிவருகிறார்கள். இப்படத்துக்கான படப்பிடிப்பு பின்னி மில்லில் நடந்துவருகிறது. என்னவென்று எட்டிப்பார்த்தால், `கட்டிங் கட்டிங்' என்ற பாடலைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். படத்தின் ஸ்பெஷலே சூரி - மொட்டை ராஜேந்திரன் காம்போதானாம்! #காமெடி சரவெடி!