கலாய்
Published:Updated:

“பிரியங்கா சோப்ரா போல நடிக்கணும்!''

“பிரியங்கா சோப்ரா போல நடிக்கணும்!''
பிரீமியம் ஸ்டோரி
News
“பிரியங்கா சோப்ரா போல நடிக்கணும்!''

“பிரியங்கா சோப்ரா போல நடிக்கணும்!''

“பிரியங்கா சோப்ரா போல நடிக்கணும்!''

“சொந்த ஊர், திருநெல்வேலி. ஆனால், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அண்ணா யுனிவர்சிட்டில பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிச்சேன். அப்பா, சினிமாவில் இயக்குநராக இருந்தவர். அவர் இயக்கிய ‘ஊழியன்’ படம் சரியாகப் போகவில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்காக ஹோட்டல் பிசினஸ் செய்தார். அவர் இறந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. அம்மா, குடும்பத் தலைவி. அக்கா, சினிமாவில் காஸ்ட்யூம் டிஸைனர். தம்பி, ஃபிலிம் டெக்னாலஜி படிக்கிறான்!” – தன்னுடைய சுயவிவரக் குறிப்பை படபடவென ஒப்பிக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். ‘ஜோக்கர்’ படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு…’ என சோமசுந்தரம் உருகுவாரே… அதே ஜாஸ்மினுடன் காபி ஷாப் மீட்!

``அப்பா ஆசையை நிறைவேற்றத்தான் நீங்கள் மூன்று பேருமே சினிமாத் துறைக்கு வந்தீர்களா?''

``தானாக அமைந்தது அது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே எனக்குக் கிடையாது. படங்கள் பார்க்க ஆரம்பித்ததே, காலேஜ் வந்த பிறகுதான். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போதுதான், குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகுதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே ஏற்பட்டது. வீட்டில் பயங்கர எதிர்ப்பு. குறும்படங்களில் நடிக்க அனுமதி வாங்கி, 3 குறும்படங்களில் நடித்தேன். அப்புறம் போராடி சினிமாவுக்கு சம்மதம் வாங்கினேன்.''

`` ‘ஜோக்கர்’ வாய்ப்பு கிடைத்தது எப்படி?''

``முதலில், பாலாஜி சக்திவேல் இயக்கும் ‘ரா ரா ராஜசேகர்’ படத்தின் ஆடிஷனுக்குத்தான் போயிருந்தேன். அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருந்தது. ஸ்கிரீன் டெஸ்ட்டெல்லாம் பண்ணி, ஃபைனல் பண்ணிட்டாங்க. ஆனா, பெர்சனல் காரணத்தால், அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அந்த டீம் தான் ‘ஜோக்கர்’ படத்துக்கு ரெஃபர் பண்ணாங்க.''

``பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக்கொள்ளத்தான் விரும்புவார்கள். முதல் படத்திலேயே பழைய புடவை கட்டி, அழுக்காக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?''

``ராஜுமுருகன் இயக்குநர்னு சொன்னதுமே, எந்த லுக்கா இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லைனு முடிவு பண்ணிட்டேன். ஸ்கிரிப்ட் கேட்டதும் இன்னும் பிடித்துவிட்டது. அழகான கதாபாத்திரத்துக்காக, தோற்றம் எவ்வளவு அசிங்கமா இருந்தாலும் `ஓ.கே'ங்கிற மனநிலைக்கு வந்திட்டேன்.''

``ராஜுமுருகனுடன் பணியாற்றிய அனுபவம்?''

``அவர் செம ஜாலி டைப். வாயைத் திறந்தாலே, நாங்கெல்லாம் சிரிச்சிகிட்டுத்தான் இருப்போம். ஸ்பாட்ல சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். கோமாவுல படுத்திருக்கிற சீன்ல கூட, சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிட்டுத்தான் நடிச்சேன். எல்லாருக்கும் நல்ல மரியாதை கொடுப்பார். குறிப்பா, பெண்கள் மேல அவருக்கு நல்ல மரியாதை உண்டு. பெண்கள் மீதான அவருடைய மதிப்புதான், திரைப்படங்கள் மூலமா வெளிப்படுதுனு நினைக்கிறேன்.''

`` ‘ஜோக்கர்’ படத்துல ஹீரோ உங்க பின்னாடியே அலைந்தது போல், நிஜத்தில் உங்களை யாராவது லவ் டார்ச்சர் பண்ணியிருக்காங்களா?''

``காலேஜ் டைம்ல அந்த மாதிரி நடந்திருக்கு. அதை என்ஜாய் பண்ண மாட்டேன். கஷ்டமா ஃபீல் பண்ணேன். நாம எங்க போனாலும், எதிர்பாராதவிதமா ஒருத்தரை மீட் பண்ணுவோம் இல்லையா? அப்படித்தான் எனக்கும் நடந்தது. கடைசியில் பார்த்தா, அவர் என்னோட சீனியர். நேரடியாவே வந்து புரப்போஸ் பண்ணினார். எப்படி ரெஸ்பான்ஸ் பண்றதுனு தெரியாம, அந்த இடத்தை விட்டே ஓடிட்டேன்.''

``அடுத்த படம்?''

``தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி ஜோடியா ‘ஆண் தேவதை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறேன்.''

``தொடர்ந்து சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தால், இளம் ஹீரோக்கள் உங்களைக் கண்டுக்க மாட்டாங்களே…''

``சினிமாதான் வாழ்க்கைனு நினைச்சு இந்த ஃபீல்டுக்கு வரலை. ‘ஜோக்கர்’ படத்துக்குப் பிறகு, நல்ல கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், மனதுக்குப் பிடித்திருந்தால் நடிக்கலாம்னு முடிவெடுத்தேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும். என் பெர்ஃபாமன்ஸ் நல்லா இருந்தா, இளம் ஹீரோக்களுடனும் வாய்ப்பு வரலாம்.''

“பிரியங்கா சோப்ரா போல நடிக்கணும்!''

``யாருக்கு ஜோடியா நடிக்க ஆசைப்படுறீங்க?''

``நிறைய ஹீரோக்கள் பிடிக்கும். அஜித், விக்ரம், விஜய், ரஜினி, தனுஷ் எனப் பெரிய லிஸ்ட்டே இருக்கு.''

``உங்களுடைய ரோல் மாடல்?''

``அப்படி யாரையும் நான் ஃபிக்ஸ் பண்ணிக்கலை. சமீப காலங்களில், பிரியங்கா சோப்ராவின் போல்ட் அட்டம்ப்ட் பிடித்திருக்கிறது. அவங்களுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ், டயலாக் டெலிவரி செம. அதுமாதிரி நடிக்கணும்!''

``பெர்சனலா ரம்யா எப்படி?''

``ரொம்ப ஜாலியான பொண்ணு. கொஞ்சம் பெர்ஃபக்‌ஷனிஸ்ட்.  வீட்டுல அப்படி இல்லைன்னா, கோபம் வரும். வெளியில் கோபப்பட மாட்டேன்.''

``நண்பர்களுடன் எந்த இடத்துக்கு அவுட்டிங் போவீங்க?''

``90 சதவீதம் தியேட்டருக்குத்தான் போவோம். காலேஜ் டைம்ல, எந்தப் படம் ரிலீஸானாலும் ‘பேட்ஜ் மூவி'னு சொல்லி, கிளம்பிடுவோம். அந்தப் பழக்கம் இன்னும் தொடருது.''

பிடித்த விஷயங்கள்?

``பெயின்ட்டிங் வரையப் பிடிக்கும். சமையல் செய்யவும் பிடிக்கும். ஆனால், இதற்காக கிளாஸெல்லாம் போய்க் கற்றுக்கொள்ளவில்லை. யூ-டியூப் வீடியோ பார்த்து, நானாகச் செய்வதுதான். சமீப காலமாக, தையலில் ஈடுபாடு வந்திருக்கிறது. குடும்ப நண்பர் ஒருவரிடம் கற்று வருகிறேன்.''

- சி.காவேரி மாணிக்கம், படங்கள் : ஆ.சரண்குமார்