Published:Updated:

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா
பிரீமியம் ஸ்டோரி
பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

Published:Updated:
பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா
பிரீமியம் ஸ்டோரி
பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

நீண்ட தூரப் பயணம் ஒன்றை வழித்துணை இல்லாமல் மேற்கொள்வது போன்றது, பெண்கள் திரைப்படத் தொழில்நுட்பத் துறையில் பணிசெய்வது. ஆனாலும்கூட, இந்தப் பயணத்தை உலகம் முழுவதுமே சொற்பமான பெண்கள் அர்ப்பணிப்புடன் தொடர்கிறார்கள்.

உலகின் முதல் திரைப்படம் 1890-களில் தயாரிக்கப்பட்டது. சினிமாவின் வயது 120 வருடங்களைக் கடந்திருக்கிறது. இத்தனை வருட காலத்தில் திரைப்படங்கள் பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன/ எழுதப்பட்டு வருகின்றன. ஆனால், சினிமா தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்புப் பற்றிய  பதிவுகள் சில நூறு பக்கங்களைக்கூட தாண்டுவது இல்லை.

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

திரைப்படத்தில் பெண்களின் பங்கு என்பது நடிப்பதில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது. மிகுந்த மெனக்கெடல்கள் தேவைப்படுகிற தொழில்நுட்பத் துறையில் பெண்களை ஊக்குவிப்பவர்கள், சில தலைமுறைகளுக்குப் பிறகுதான் நமக்குக் கிடைத்தார்கள். அதன் பின் மெதுவாக ஒவ்வொரு துறைக்குள்ளும் ஆரம்பித்தது பெண்களின் நுழைவு. திரைப்படத் துறையைப் பொறுத்தமட்டில் மற்ற யாவற்றையும்விட இயக்கம் என்பதே முதன்மையானதும் முக்கியமானதுமாக இருப்பதால், இதில் பெண்களின் நுழைவு குறித்து விரிவாகப் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.

முதல் பெண் திரைப்பட இயக்குநர் பிரெஞ்சு தேசத்தில் இருந்து நமக்குக் கிடைத்தார். 1890-களில் திரைப்படம் என்பது ஏதேனும் துண்டுக் காட்சியை ஒரு செய்திபோல் சொல்வதாக அமைந்திருந்தது. ‘ஆலிஸ் கீ ப்ளாஷே’ அப்போதுதான் ஒரு திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். அதற்கு முன்பாக அவர் பார்த்தது ஒரு புகைப்பட நிபுணரிடம் உதவியாளர் வேலை. அதனால் கேமராவின் நுணுக்கங்கள் அவருக்கு அத்துப்படி. ஓர் ஆவணம்போல துண்டுக்  காட்சிகள்  வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில், ‘நாம் ஏன் கேமரா மூலமாக ஒரு கதையைச் சொல்லக் கூடாது?’ என்று நினைத்தார் ஆலிஸ். அதற்கான அனுமதியை அவர் பணிசெய்யும் திரைப்பட நிறுவனத்திடம் இருந்து பெற்றார். ஒரு கதையை எழுதினார். ஆச்சர்யமாக அதை ஒரு நகைச்சுவைப் படமாகவே அவரால் யோசிக்க முடிந்திருந்தது. 60 நொடிகள் மட்டுமே எடுக்க முடிந்த அந்தப் படத்தில் ஒரு நிமிடக் கதையை அவரால் சொல்ல முடிந்தது. ‘The Cabbage Fairy’ என்ற அந்தத் திரைப்படம், 1896-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்தது. முதன்முதலாகக் கதை சொன்ன திரைப்படம் எனச் சில ஆய்வாளர்கள் இந்தப் படத்தைச் சுட்டிக்காட்டினாலும், இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே இப்படியான பரிசோதனை முயற்சிகள் தொடங்கிவிட்டன. ஆனாலும்கூட, எந்தப் பிசகும் இல்லாமல் தெளிவான கதைசொல்லல் முறையைக்கொண்டிருந்த படம் என்பதாக அறியப்படுகிறது ஆலிஸ் இயக்கிய ‘The Cabbage Fairy’.

மௌனப் படக் காலங்களில் திரைப்படத் துறையில் ஆலிஸ் மேற்கொண்ட பணி மகத்தானது. தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் அவர் வேலை செய்த படங்களின் எண்ணிக்கை 700-க்கும் அதிகம்.

ஆலிஸால் ஈர்க்கப்பட்டு சில பெண்கள் ஆர்வத்துடன் திரைப்படத் துறைக்கு வந்தனர். அவர்களுக்கு ஆலிஸ் நேரடி வழிகாட்டியாக இருந்தார். இப்படியான பெண்கள் எல்லோருமே எடுத்துக் கொண்ட கதைக்களங்கள் வீரியம் மிகுந்தவையாக இருந்தன. கருக்கலைப்பு செய்துகொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் உடல் - மனத் துயரங்கள், தூக்குத் தண்டனைக்கு எதிரான பிரசாரங்கள் எனத் தீவிரப் பிரச்னைகளே கையாளப்பட்டன. அதன் பிறகு, மேற்கத்திய நாடுகளில் திரைப்படத் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் நுழைவு மெதுவாக மேம்படத் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

உலக வரைபடத்தில் சிறுசிறு புள்ளிகளாகத் தெரிகிற நாடுகளில்கூட பெண்கள், திரைப்படங்களை இயக்குகிறார்கள் என்பது பெரும் முன்னேற்றம்தான். இருப்பினும், பெண்கள் திரைப்படத் துறையில் இயங்குவது என்பது சவாலான ஒரு காரியமாகவே இன்னும்  இருந்துவருகிறது.

ஒரு காலகட்டம் வரை திரைப்படங்கள் பெண் பார்வையாளர்களையும் கணக்கில் கொண்டிருந்தன. இன்றைய நவீனத் திரைப்படங்களோ பரவலான பெண் பார்வையாளர்களை இழந்திருக்கின்றன.  ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சிலாகித்தும், விமர்சித்தும் சமையல்கட்டுகளிலும், கிணற்றடிகளிலும் பேசிக்கொள்கிற ரசிகைகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்படி கதை கேட்டு வளர்ந்த தலைமுறையில் இருந்துதான் பல இயக்குநர்கள் இன்று உருவாகியிருக்கிறார்கள். இதில் பெண் இயக்குநர்களும் அடக்கம்.

திரைப்படக் கதைகள் அமெரிக்க சமையற்கட்டுகளிலும் பேசப்பட்டு வந்தன என்பதன் சாட்சி ‘இவா டூவர்னே’. கறுப்பினத்தைச் சேர்ந்த இவர் இதுவரை இயக்கியது மூன்று திரைப்படங்களும் சில ஆவணப்படங்களும். பாட்டிகள், அம்மா, சித்தி எனப் பெண்கள் சூழ் குடும்பத்தில் வளர்ந்ததாலேயே திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகச் சொல்கிறார் டூவர்னே. இவருடைய படங்கள் அனைத்துமே கறுப்பின மக்களின் அகக்குரலாகவே ஒலிக்கின்றன. கறுப்பின மக்களின் குரல்கள் பல நூற்றாண்டுகளாக நெரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்தக் குரல்களுக்கு வீரியமும் அழுத்தமும் எவ்வளவு அதிகம் என்பதைப் பேசுகின்றன இவரது படங்கள். அந்த வகையில் இவா டூவர்னே மிக முக்கியமான இயக்குநராக இருக்கிறார். குழந்தைகளைக் கவரும் ‘பார்பி’ பொம்மை நிறுவனம், இவருடைய உருவத்தில் ஒரு பார்பி பொம்மையைத் தயாரித்தது. அவை சில நாட்களிலேயே முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன.  “என்னுடைய இனத்தின் குரலை அடுத்த தலைமுறைவரை என்னால் கொண்டுசேர்க்க முடிந்திருக்கிறது என்பதை, இந்தப் பொம்மை விற்பனை மூலம் புரிந்து கொண்டேன்” என்கிறார் இவா டூவர்னே.

கேத்ரின் பிக்லோ, அனி பிளட்சர், சோபியா கொப்பொல்லோ, நான்சி மேயர்ஸ் என அமெரிக்கப் பெண் இயக்குநர்கள் இன்று உலகம் முழுவதும் பிரபலமான முகங்கள். பெண்களுக்கு சமஉரிமை தருகிற நாடு என்று சொல்லப்படுகிற அமெரிக்காவிலும்கூட, பெண்களுக்குத் திரைப்படத் துறையில் இயங்க சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. பல பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர் கிடைக்காமல் தங்களின் குடும்ப நண்பர்கள் மூலமாகப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கின்றனர்.

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

பெண் இயக்குநர்கள் குறித்துப் பேசுகையில் தவறவிடக்கூடாத நாடு ஈரான். அங்கு அரசுக்கு எதிராக துப்பாக்கி தூக்குவதற்கு நிகரானது, கேமராவைக் கையில் எடுப்பது. அரசாங்கத்துக்கு எதிராக கதையைச் சிந்திக்கிறார்கள் என்று தெரிந்தாலே நாடு கடத்திவிடக்கூடிய அபாயம்கொண்ட நாட்டில், பெண்கள் திரைப்படங்கள் எடுப்பது என்பது சாகசம்தான். “நாங்கள் கேட்பது எல்லாம் பெண்களுக்கான உரிமை, மக்களுக்கான வாழும் சுதந்திரம். இதை எங்கள் மொழியில் கேட்கிறோம்” என்றே ஒவ்வொரு படத்தையும் எடுக்கிறார்கள். ஈரானியத் திரைப்பட இயக்குநர்களில் பெருமைகொள்ளத்தக்கவர்களாக சஹ்லா ரியாஹி, ரக்ஷன் பனி, சமீரா மக்மல்பஃப், மெர்சியா மெஸ்கினி என்று நீண்ட பட்டியலைச் சொல்ல முடியும். இவர்கள் அனைவரையும் பற்றிய ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. இவர்களின் திரைப்பட இயக்க அனுபவங்கள், பல நூறு திரைப்படங்கள் எடுக்கக்கூடிய கருக்களைக் கொண்டிருக்கின்றன.

ஆப்பிரிக்க நாட்டின் முதல் பெண் இயக்குநர் சஃபி ஃபாயே 1975-ம் ஆண்டு தன் முதல் படத்தை இயக்கினார். செனகலில் உள்ள தனது கிராமத்தைப் பற்றிய படம் அது. கிராமத்தில் இருந்து பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒருவன் தன்னுடைய பாடுகளைச் சொல்லக்கூடிய படமாக இருந்தது. அது சஃபி ஃபாயே நேரடியாக அனுபவித்த ஒரு சம்பவம். அதுவே, அவரை அந்தப் படத்தை இயக்கத் தூண்டியது. அந்தப் படம் ஆப்பிரிக்க கிராம மக்களின் சொல்லித் தீராத கதைகளைச் சொன்னது.

சவுதி அரேபியாவில் இருந்து ஒரு பெண் இயக்குநர் உருவாகும்போது, சினிமா நூற்றாண்டு களைக்  கடந்துவிட்டது. 2013-ம் ஆண்டு ‘Wadjda’ படத்தை ஹைஃபா அல் மன்சூர் இயக்கினார். ஒரு சைக்கிள் வாங்குவதற்காக 11 வயது பெண் எடுத்துக்கொள்ளும் முயற்சிதான் படத்தின் கதைக்கரு. சைக்கிள் வாங்கவே போராடும் பெண்களின் மத்தியில் ஒரு பெண் திரைப்படம் எடுப்பது என்பது அசாதாரண காரியம்தானே. ஹைஃபா அல் மன்சூர் திரைப்படம் இயக்குவதில் கொண்ட சிரமங்களுக்குப் பலனாக, அவரைத் தேடி பல சர்வதேச விருதுகள் குவிந்தன.

‘சவுதி தன்னுடைய கலாசாரக் கொள்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று சொந்த நாட்டுக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டு, தொடர்ந்து அங்கேயே  திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட 30 திரைப்படங்கள் வரை இயக்கிய ஒரு பெண் இயக்குநரும் நம்மிடையே உண்டு. பிரிட்டிஷ் பிடியில் ஹாங்காங் கிடந்தபோது பிறந்த ‘ஆன் ஹூய்’க்கு இப்போது வயது 70-ஐ நெருங்குகிறது. தன்னுடைய கடைசிப் படத்தை 2014-ம் ஆண்டு இயக்கினார். ஓய்வில் இருப்பதாக ஹூய் அறிவித்தாலும்கூட அவர் தொடர்ந்து இயக்குவார் என்றே சீனத் திரைப்பட ஆர்வலர்கள் கணிக்கின்றனர். ஏனெனில், பலமுறை ஓய்வை அறிவித்து அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டவர் ஆன் ஹூய். இப்படித்தான், இதைத்தான் படம் எடுப்பார் என யூகித்துவிட முடியாதபடி எல்லா வகையிலான திரைப்படங்களையும் நமக்குத் தந்திருக்கிறார். இவற்றில் துப்பறியும் கதைகளும் பேய்க்கதைகளும்கூட அடக்கம். இறுதியாக இவர் இயக்கிய ‘The  Golden Era’ படம், சீனப் பெண்கவிஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு.

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

இப்படியாக ஒவ்வொரு தேசத்திலுமே பெண்கள் ஓர் அலைபோல வரத் தொடங்கி யிருக்கிறார்கள். வேறுபட்ட நிலவியல் பின்னணிகொண்ட இந்தப் பெண் இயக்குநர்களின் திரைப்படங்களை ஒருசேரப் பார்க்கிறபோது, சில பொது அம்சங்களை நம்மால் பார்க்க முடிகிறது. இவை பெண்களின் குரல்களாக இருக்கின்றன என்பதைக் கடந்து, மனிதர்களுக்கு மறுக்கப்பட்ட நியாயத்தைக் கேட்கும் குரல்களாகவும் பதிவாகின்றன. தன் சமூகத்தைப் பாதிக்கிற எவற்றையும் பதிவுசெய்ய நினைக்கும் உந்துதலில்தான் பெண்கள் திரைப்படம் இயக்கவருகிறார்கள் என்பதற்கான சாட்சிகள் இவர்கள். அதனாலேயே திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற விதிமுறை பற்றி எந்த அறிதலும் இல்லாமல் கையில் ஒரு கேமராவுடன், தான் விரும்பியதை எடுத்தவர் நியூஸிலாந்து இயக்குநர், ஜேன் காம்பயின். ‘Palme d’Or’ விருதைப் பெற்ற முதல் பெண் இயக்குநர் இவர். ஆஸ்கர் விருதும் இவருக்குக் கிடைத்தது.

பொதுவாக பெண் இயக்குநர்கள், ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள், தன்னுடைய இனம் குறித்த கவலைகள், கேட்பார் இன்றிக் கிடந்த உன்னத இலக்கியப் படைப்புகள் என யாவற்றையும்  படம்  எடுத்துவருகிறார்கள். குறிப்பாக, தங்களின் நாட்டைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் இவர்களுக்கு இருக்கிறது. கூடவே கவலையும். மேற்கத்தியக் கலாசாரத்துக்குத் தன்னைப் பலிகொடுக்கும் ஜப்பான் பற்றியும் அங்கே கைவிடப்படும் முதியோர்களின் வலியையும், தொடர்ந்து தனது படங்களின் கருவாகக் கொண்டிருக்கிறார் ‘நவோமி கவாஸ்’. பெண் இயக்குநர்கள் அனுதினமும் சந்திக்கும் கேள்வி ஒன்று உண்டு: `எது உங்களை இயக்குநர் ஆக்கியது?’ அதற்கு ஒவ்வொருவரும் பல்வேறு பதில்களைச் சொன்னாலும் எல்லோருடைய வார்த்தைகளிலும் இருக்கும் ஓர் ஆன்ம விடை “எங்களது ஆழ்மனம்” என்பதே.

இந்தியத் திரையுலகில் பெண் திரைப்பட இயக்குநர்களின் ஆரம்பம், ஃபத்மா பேகத்திடம் இருந்து தொடங்குகிறது. நடிக்கத் தொடங்கி பின்னர், திரைக்கதை எழுதி இயக்குநரானவர் ஃபத்மா பேகம். இவருடைய முதல் படமான ‘புல்புல் – இ – பரிஸ்தான்’ அதிகச் செலவில் எடுக்கப்பட்ட மாயாஜாலக் காட்சிகள் நிறைந்த படம். 1926-ல் வெளிவந்தது.

சமகால இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர்களில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றவர்களாக மீரா நாயர், தீபா மேத்தா, அபர்ணா சென், மஞ்சு போரா எனப் பட்டியல் நீள்கிறது.

இவர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்ப அமைப்புகளின் சிக்கல்களையும் முரண்களையும் கேள்வி கேட்பதாகவே அமைந்திருக்கின்றன.

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

திருமணம் மூலம் இணையும் ஆண், பெண் உறவைக் கேள்வி கேட்கவே அஞ்சுகின்ற இந்தியச் சமூகத்தில்தான் அபர்ணாவின் திரைப்படங்கள் 35 வருட காலமாக ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. “தனிமை உணர்வை விரட்டுவதற்காகச் செய்யப்படுகிற திருமணங்கள் பெண்களுக்குத் தனிமையைத் தூர ஓட்டுகிறதா” என்பது அபர்ணா, தன்னுடைய படங்களின் மூலம் நம்மிடம் முன்வைக்கும் கேள்வி.

கலாசாரம் என்ற பெயரில் எவ்வளவு போலியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை, மீரா நாயர் எள்ளலுடனும் நேரடியாகவும் படைப்புகளில் வெளிக்காட்டுகிறார்.

தீபா மேத்தா தன்னுடைய படங்களுக்காகப் பல முறை நிந்தனை செய்யப்பட்டவர். பல எதிர்ப்புகளைக் கையாண்டவர். படைப்பின் உரிமையை இங்கு யாரும் கேள்வி கேட்க முடியாது என்று வாதாடியவர். இவரின் ஒவ்வொரு படமுமே நம்மால் பதில் சொல்ல இயலாத வினாக்களாகவே இருக்கின்றன.

திரைப்படத் துறைப் பின்னணி, பொருளாதாரத் தன்னிறைவு போன்றவையே நமது நாட்டில் பெண் திரைப்பட இயக்குநர்கள் உருவாகக் காரணமாக அமைந்திருந்தன. அதற்கு, தமிழ்த் திரைப்படத் துறையும்கூட விதிவிலக்கு. திரைப்பட இயக்கம் என்பது அனுபவத்தின் மூலமே சாத்தியப்படும் ஒரு துறை. இந்தத் துறை பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே இயக்குநராக முடியும். அதனாலேயே நடிக்க வந்த பெண்களே இயக்கவும் செய்தார்கள். தமிழிலும் முதல் பெண் இயக்குநர் ஒரு நடிகைதான்.

தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் ‘சினிமா ராணி’ எனப் புகழப்பட்ட டி.பி.ராஜலட்சுமி. நாடகங்களில் நடிப்பதற்கு பெண்கள் முன்வராத காலகட்டம் அது. ஆங்காங்கே சில பெண்கள் மட்டும் தைரியமாக நாடகங்களில் முகம்காட்டத் தொடங்கி இருந்தனர். தைரியம் என்பதைவிட குடும்பத்தின் வறுமைதான் அவரை நாடகம் நோக்கித் திசைதிருப்பியது. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் ராஜலட்சுமி சேர்வதற்கு அவருடைய ஆர்வமே பிரதான காரணம். ஏழு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ராஜலட்சுமியின் நாடக ஆர்வம், புகுந்த வீட்டைச் சிரமப்படுத்த அவருடைய 11-ம் வயதில் ‘கணவர்’ பிரிந்து போகிறார். அதன் பின்பு, 20-ம் வயதில் சக நடிகரைத் திருமணம் செய்துகொண்டார் ராஜலட்சுமி.

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

இயல்பிலேயே நல்ல குரல்வளம் கொண்ட அவர், அங்கு பாடுவதற்கும் நடிப்பதற்கும் பயிற்சி எடுத்துக்கொண்டார். தமிழ், தெலுங்குத் திரைப்படங்களின் முதல் கதாநாயகி என்ற பெருமை கிடைத்தது அவருக்கு. அத்தோடு  போதும் என அவர் நினைக்கவில்லை. நடித்துக் கொண்டிருக்கும்போதே இரண்டு புதினங்கள் எழுதியிருக்கிறார். அப்போது இந்தியா விடுதலையடையத் துடித்துக்கொண்டிருந்த காலகட்டம். இந்தத் துடிப்பை ராஜலட்சுமி இயக்கிய திரைப்படங்களில் பார்க்கலாம். இவரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘மிஸ். கமலா’ 1936-ம் ஆண்டு வெளியானது. அந்தச் சமயத்தில் பெண் சிசுக்கொலை என்பது பரவலாக இருந்தது. இதற்கு எதிரான விழிப்புஉணர்வுக்குத் தன் பிரபலத்தன்மையைப் பயன்படுத்த நினைத்தார் ராஜலட்சுமி. ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு கமலா என்று பெயரிட்டார்.

படைப்பு வேறு, சொந்த வாழ்க்கை வேறு என இல்லாமல் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகிறோமோ, அதே கொள்கையோடு வாழ வேண்டும் என விரும்பிய படைப்பாளிகளில் ஒருவர் டி.பி. ராஜலட்சுமி. தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் தனது படங்களின் மூலம் சமூகத்தின் மூடத்தனங்களை மாற்ற நினைத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பது பெருமையான வரலாறு.

டி.பி.ராஜலட்சுமி படம் இயக்கிக் கொண்டிருக்கும் காட்சியைச் சொல்லும் ஒரு புகைப்படம்கூட நமது கண்ணில் படாதது துரதிருஷ்டம்தான்.

டி.பி.ராஜலட்சுமிக்குப் பிறகு அவரைப் போலவே நடிக்கத் தொடங்கி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பின்னணிப் பாடகியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் பானுமதி. சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும், இவர் இயக்கியப் படங்களில் வருகிற  பெண் கதாபாத்திரங்களும் காத்திரமானவர்கள். 10-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தென்னகத்தில் முதன்முதலாகச் சொந்த ஸ்டுடியோ வாங்கிய பெண்ணும் பானுமதியே.

இவர்கள் இருவரைப் போலவே அடுத்தடுத்து சிலர் நடிப்பதில் தங்களை நிரூபித்த பின் திரைப்படம் இயக்கினார்கள். சாவித்திரி, லட்சு மி, சுஹாசினி மணிரத்னம், ரேவதி, ஸ்ரீப்ரியா, லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஹினி என சுருக்கமான பட்டியல் அடுத்த வரிசைக்காகக் காத்திருக்கிறது.

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

இவர்கள் தவிர ஜானகி விஸ்வநாதன், சாரதா ராமநாதன், நந்தினி, மதுமிதா, கிருத்திகா உதயநிதி, ப்ரியா, ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா, சுதா கொங்குரா, உஷா கிருஷ்ணன் என்று நேரடியாக இயக்குநர் ஆனவர்களும் இருக்கிறார்கள். இயக்குநர் அஷ்வினி ஐயர் திவாரியின் இயக்கத்தில் ‘அம்மா கணக்கு’ம், உஷா கிருஷ்ணன் இயக்கிய ‘ராஜா மந்திரி’யும் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. இரண்டு பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது தமிழ்த் திரையுலகம் இதற்கு முன்னர் காணாதது. இதுபோக மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர் மலையாளத் திரையுலகின் சமீபகால வரவான அஞ்சலி மேனன். திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் அஞ்சலி மேனன் பணிசெய்யும் படங்களுக்கு வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றன.

ஓர் ஓவியம் வரைவது மாதிரியோ, பாடல் இசைப்பது போலவோ அன்றி திரைப்படத்தை உருவாக்குவது என்பது தனி ஒருவராக மட்டுமே செய்ய முடியாத ஒரு கலை. நிர்வாகத் திறனும் சமயோசிதமும் முக்கியமாகப் படைப்பாளுமையும் இருப்பவரே இதில் நிலைத்து நிற்க முடியும். பலரை ஒரே நேரத்தில் வேலைவாங்கும் சாமர்த்தியம் என்பது அதிஅவசியமான திறனாகிறது.

கடந்த சில வருடங்களாக இந்தியச் சூழலில் பெண் உதவி இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நல்ல மாற்றம். பல இயக்குநர்களும் தங்களின் குழுவில் ஒரு பெண் உதவியாளர் இருப்பது அவசியம் என்று நினைக்கின்றனர். இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த கதாநாயகிகளுடன் தொடர்புகொள்வதற்கான ஓர் ஊடகமாக பெண் உதவி இயக்குநர் வேண்டும் என்று விரும்பும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அது தனிப்பட்ட உதவியாளராக மாற்றுமே அன்றி அவர்கள் எப்படி ஒரு திரைப்படத்தைக் கற்றுக்கொள்ள வழி செய்யும்?

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா10 வருடங்களுக்கு முன்பு, ‘பெண் உதவியாளர்கள் என்றால் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்குச் செல்லும்போது அவர்கள் தங்குவதற்குத் தனியறை ஏற்பாடு செய்ய வேண்டும், பாதுகாப்புக்குத் தனிக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று தயாரிப்பு நிர்வாகத்திடம் ஒரு தயக்கம் இருந்தது. இன்றும் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை என்றாலும், கனிசமான முன்னேற்றம் நடந்திருக்கிறது. இதைக் கடந்து படங்களில் வேலை செய்யும் பெண்கள் திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்காக தங்கள் கனவுகளை அர்ப்பணிக்க வேண்டிய நிலையும் உள்ளது. அதையும் மீறி திரைப்படம் இயக்கும் வரை நிலை கொள்வதற்கான பொருளாதாரச் சிக்கல்கள் வேறு இருக்கின்றன. இந்த வேகத் தடைகளை எல்லாம் கடந்தாலும்கூட ஒரு தயாரிப்பாளரும் நடிகரும் எதிர்பார்ப்பது வணிகரீதியான வெற்றிப் படங்களையே. பரீட்சார்த்த முறை படங்கள் என்பது திரைப்பட விழாக்களுக்கானது என்ற எண்ணம் அனைவரிடமும் வலுவாக உள்ளது.

மற்ற துறைகள் போலவேதான் இங்கும் வெற்றியை நிரூபிப்பது என்பது, ஒரு  பெண் தன்னை முன்னிலைப்படுத்தி ஓடுவதோடு, சக பெண்களின் கனவுகளையும் சுமந்துகொண்டு ஓடவேண்டும். மிக விரைவில் மூச்சிரைப்பற்ற ஓட்டமாக அது மாறும் என்பது நிதர்சனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism