Published:Updated:

"படத்துல மட்டுமில்ல, ஸ்பாட்லயும் நானா படேகர் அப்படித்தான்!" - 'காலா' மணிகண்டன்

"படத்துல மட்டுமில்ல, ஸ்பாட்லயும் நானா படேகர் அப்படித்தான்!" - 'காலா' மணிகண்டன்
News
"படத்துல மட்டுமில்ல, ஸ்பாட்லயும் நானா படேகர் அப்படித்தான்!" - 'காலா' மணிகண்டன்

"கற்பனை, கொஞ்சம் டிஷ்கஸன், சில புத்தகங்கள்... லெனின் கேரக்டர் இப்படித்தான் உருவாச்சு!" - மணிகண்டன்

ஒரு உச்ச நட்சத்திரத்தின் படத்தில் கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களைத் தாண்டி முக்கியமான கதாபாத்திரங்கள் இருந்தால், அது ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்களாகவே இருக்கும். இந்த ஸ்டீரியோ டைப்பை உடைத்து 'காலா' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், நடிகரும் வசனகர்த்தாவுமான மணிகண்டன். அவரிடம் பேசினோம். 


"லெனின் கதாபாத்திரத்திற்குத் தேர்வானது எப்படி?"

"நான் என்னோட வெப் சேனலுக்கு ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். அதைப் பார்த்துட்டு ரஞ்சித் சார் போன் பண்ணிப் பாராட்டினார். பிறகு நானும் அவரும் பேசிக்கிட்டதில்லை. 'மெட்ராஸ்' படம் சம்பந்தமா ஒரு கான்ஃபெரென்ஸ் நடந்தது. அதுல கலந்துக்கிட்டு பேசினேன். அப்போதான் ரஞ்சித் அண்ணன்கிட்ட மறுபடியும் பேசுற சான்ஸ் கிடைச்சது. பிறகு ஒருநாள் ரஞ்சித் சார் ஆபீஸ்ல இருந்து ஆடிஷன்ல கலந்துக்கச் சொல்லி போன் வந்தது. அவங்க கொடுத்த வசனங்களைப் பேசினேன். ஆடிஷன் 5 ரவுண்டு நடந்தது. 'கபாலி'க்குப் பிறகு ரஜினி - ரஞ்சித் சாரோட படம்னு தெரியும். அப்போகூட ரஜினி சாருக்குப் பையன் கதாபாத்திரம்னு தெரியாது."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"படத்தில் நெல்லை வட்டார வழக்கை நல்லா பேசியிருக்கீங்களே?"

"தாராவில் பலரும் திருநெல்வேலியில இருந்து புலம்பெயர்ந்து வந்தவங்க. அடிப்படையில அவங்க பேசுறது நெல்லைத் தமிழ்னாலும், தாராவில மத்த மொழி மக்களோட பேசிப் பழகியதால, அவங்களோட தொனி கொஞ்சம் வித்தியாசப்படும். நான் சென்னையில பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவன். ஆன, எனக்கு நிறைய தூத்துக்குடி, திருநெல்வேலி நண்பர்கள் இருக்காங்க. அவங்களோட பேசிப் பழகினதுனால அந்த வட்டார வழக்கு எனக்கு சரளமா வந்திடுச்சு. ஏற்கெனவே சில படங்களுக்கு இந்த வட்டார வழக்குல டப்பிங் பேசியிருக்கேன்."

"லெனின் கதாபாத்திரத்துக்காக என்னென்ன ரெஃபரென்ஸ் எடுத்துக்கிட்டீங்க?" 

"லெனின் கதாபாத்திரம் முழுக்க ரஞ்சித் அண்ணன் கற்பனை. ரெஃபரென்ஸ்னு எதுவும் எடுத்துக்கலை. ஆரம்பத்துல வீம்பா இருக்கிற லெனின் எப்படி இருக்கணும், அப்பா காலாவைப் புரிஞ்சிக்கிட்ட லெனின் எப்படி இருக்கணும்னு டைரக்டர் சொல்லிக் கொடுத்தார். சில புத்தகங்களைப் படிக்கவேண்டியதா இருந்தது." 

"ஒரு வசனகர்த்தாவா, படத்துல இருக்கிற வசனங்களை எந்தளவுக்கு ரசிச்சீங்க?" 

"ஒரு ஆழமான கதாபாத்திரம் பேசும் வசனங்கள் அந்தமாதிரி வாழும் நமது சக மக்களோட வலியைப் புரியவெச்சது."

"சக நடிகர்கள் எல்லோரும் டாப் நடிகர்கள். அவங்களோட நடிச்ச அனுபவம்?"  

"ரஜினி சார் பையனா நடிக்கிறேன்னு தெரிஞ்சதுமே எனக்கு சந்தோஷம். ரஜினி செம என்கரேஜிங் பெர்சன். சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கவனிச்சுப் பாராட்டுவார். 'விக்ரம் வேதா'வுக்கு நான் எழுதுன வசனங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். ஈஸ்வரி ராவ் நடிப்பைப் பலரும் பாராட்டுறாங்க. அந்தப் பாராட்டுக்கு வொர்த்தான ஆள் அவங்க. என் மனைவியா நடிச்ச அஞ்சலி பாட்டில் உண்மையிலேயே 'புயல்'தான். ஷாட் ஆரம்பிக்கிறவரை அமைதியா இருப்பாங்க. ஆக்‌ஷன் சொன்னா நடிச்சு வெளுத்துவாங்குவங்க. இதுக்கெல்லாம் மேல நானா படேகர். படத்துல மட்டுமில்ல, ஸ்பாட்லேயும் நாங்கெல்லாம் அவரை டெரர் லுக்லேயே பார்த்தோம். ஒரு நாள் நானா சாரோட ஃபிரெண்டு ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். செட்ல இருந்த எல்லோரையும் அறிமுகப்படுத்தி வெச்சார்.

என்னைக் கூப்பிட்டு, 'இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார், நல்ல நடிகர்'னு அறிமுகப்படுத்தி வெச்சார். பிறகு நானும் அவரும் சந்திக்கிற சீன் முடிஞ்சதும், கிட்ட வந்து 'யூ ஹேவ் பவர்ஃபுல் ஐஸ்'னு சொன்னார். விபத்துக் காட்சியில நடிக்கும்போது எனக்குக் கால்ல சின்னதா அடி. ஷுட்டிங் முடிஞ்சு டாக்டரைப் பார்த்து ஊசி போட்டுட்டு வீட்டுக்குப் போயிட்டேன். எனக்குத் தெரியாத ஒரு நம்பர்ல இருந்து ரெண்டுதடவை கால் வந்திருந்தது. எங்க புரொடக்‌ஷன் மேனேஜர் போன் பண்ணி, 'ரஜினி சார் கால் பண்ணாராம், எடுத்துப் பேசு'னு சொன்னார். பண்ணேன். 'மணீ, அடிபட்டுச்சாமே... உடம்பைப் பார்த்துக்கோங்க"னு அன்பா விசாரிச்சார். நெகிழ்ந்துட்டேன்!" என்கிறார், மணிகண்டன்.