Published:Updated:

``விஷாம் அஹமது காஷ்மீரியை `விஸ்வரூபம் 2' விளக்கும்!" - கமல்

தார்மிக் லீ
``விஷாம் அஹமது காஷ்மீரியை `விஸ்வரூபம் 2' விளக்கும்!" - கமல்
``விஷாம் அஹமது காஷ்மீரியை `விஸ்வரூபம் 2' விளக்கும்!" - கமல்

``விஷாம் அஹமது காஷ்மீரியை `விஸ்வரூபம் 2' விளக்கும்!" - `விஸ்வரூபம் 2' டிரெய்லர் வெளியீட்டில் கமல்

``தமிழ்ல ஸ்ருதி ஹாசன், இந்தில அமீர் கான், தெலுங்குல ஜூனியர் என்.டி.ஆர் டிரெயிலரை லான்ச் பண்றாங்க..." என்று ஆங்கர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பின்னணித் திரையில் 5 மணியை நோக்கி கவுன்டவுன் ஆரம்பித்தது. மணித்துளிகள் மூன்றை நெருங்கும்போது, `அனைவரும் வணக்கம்' என்ற குரல் ஒலிக்கிறது. ஆம்... கமல்ஹாசனுடைய குரல்தான். ``நம்ம பிற்பாடு பேசிக்கலாம். இப்போ `விஸ்வரூபம் 2', `விஸ்வரூப் 2' டிரெய்லர்கள் உங்கள் பார்வைக்காக" எனப் படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசினார். 

``வணக்கம். பிடித்திருந்தது என நம்புகிறேன். எங்களுக்குச் சரினு தோணுறதைத்தான் உங்களுக்குக் கொடுப்போம். அது, ராஜ் கமலின் பழக்கம். ஆனால், இந்தமுறை தாமதத்திற்குக் காரணம் ராஜ்கமல் அல்ல. அது யார்னு உங்களுக்குத் தெரியும். முதல் விஸ்வரூபம் தாமதத்துக்குக் காரணம் என்ன, யாருனு உங்களுக்கே நல்லா தெரியும். கிட்டத்தட்ட அதே காரணங்கள்தாம் தொடர்ந்தன. ஆனால், தடைகளை வென்றே வரிகளை எழுதிக்கொடுத்த வைரமுத்துவுக்கு நன்றி. இதில் நடித்தவர்களைப் பற்றி சொல்கிறேன். இது சும்மா கொடுக்கல் வாங்கல் விஷயம் இல்லை. அப்படிப் பார்க்கும்போது, ராஜ்கமல் கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி. அவர் இல்லேன்னாதான் கேள்வி வருமே தவிர, ஏன் இருக்கார்னு யாரும் கேட்டது இல்லை!'' எனச் சொல்லி, நடிகர் நாசரை மேடைக்கு அழைத்தார் கமல். 

கமலைத் தொடர்ந்து நாசர், ``வணக்கம். நெடுநாள் காத்திருப்பு இன்றைக்கு நிறைவேறுகிறது. இந்தக் காத்திருப்புக்கான சரியான பதிலை இந்தப் படம் கொடுக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள். இந்தக் கம்பெனி ஆர்டிஸ்ட்னு என்னைச் சொன்னதே பெருமைக்குரிய விஷயம். நிச்சயமாக, இந்தப் படத்தின் தலைப்பு மட்டுமல்ல, படமும் விஸ்வரூபமாக இருக்கும். நன்றி.'' எனப் பேசினார். 

அவரைத் தொடர்ந்து கமல், ``நாசருக்கு வழக்கமாக பெரிய வேடம் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அவ்வளவு பெரிய வேடம் இல்லையென்றாலும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நாசர் இருக்கவேண்டும் என்று நானும் அவரும் விரும்பி வைக்கப்பட்ட கேரக்டர். இந்தப் படத்தில் இயக்குநர் சேகர் கபூரும் நடித்திருக்கிறார். நானும் அவரும் 25 வருடங்களாக, இயக்குநர்களாக வேண்டும், நடிகர்களாக வேண்டும் என்று முயற்சி செய்த காலத்திலிருந்து நண்பர்கள். அப்போ `நான் இனிமேல் ஒரு இயக்குநர்தான் நடிக்கமாட்டேன். நீங்க ஒரு படம் டைரக்ட் பண்ணுங்க, அப்போ நான் நடிக்கிறேன்'னு நூறு கதைகள் பேசியிருப்போம். ஆனால், என்கூட அவர் கதை பேசிட்டு அங்கேபோய் அவர் `எலிசபத்' இயக்கிட்டார். ட்விட்டர்லகூட `சீக்கிரம் என்னை வெச்சு ஒரு படம் எடுங்க. இல்லேன்னா அரசியல் ஆவணப்படம்தான் எடுக்கணும்'னு சொன்னார்.  

இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா குமார், ஆண்ட்ரியா முக்கியமாக இந்தப் படத்தின் பலம் ராகுல் போஸ், ஜெய்தீப் அலாவத் போன்ற நிறைய பேர் இந்தப் படத்திற்காக பங்களித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த ஷ்யாம்தத் இப்போ இயக்குநராகிட்டார். இந்தப் படத்துல வொர்க் பண்ண நிறைய பேர் வளர்ந்துட்டாங்க, சிலர் இயக்குநர்களாகக்கூட ஆகிட்டாங்க. இவ்வளவு லேட் பண்ணா முன்னேறமாட்டாங்களா என்ன... அதில், ராஜ்கமலுக்குத்தான் பெருமை. நடனப் பயிற்சியாளராக என்னுடைய மானசீக குரு பண்டிட் பிர்ஜு மகாராஜ். அவர்கூட வேலை பார்த்தது, அவர்கூட சேர்ந்து நானும் நடனம் அமைத்தது சந்தோஷமா இருக்கு. நடனம் அமைக்கத்தான் நான் சினிமாவுக்குள் வந்தேன். அது பெருகி, உங்களது ஆதரவுதான் என்னைப் பெரிய நடிகனாக, இயக்குநராக மாற்றியிருக்கிறது. 

கலை இயக்குநர் லால்குடி இளையராஜா முதல் பாகத்தில் வியட்நாமைச் சேர்ந்த ஒருவரோடு சேர்ந்து வேலை பார்த்தார். அவருடன் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, இந்தப் பாகத்தில் தனித்து நின்று அவர் இல்லையென்ற குறையை இல்லாமலேயே செய்துவிட்டார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கால தாமதம் காரணமாக அவர் வெவ்வேறு படத்திற்காக வேலை செய்துவிட்டார். சரியான சமயத்தில் வெளியாகியிருந்தால் அவருக்கு இது இரண்டாவது படமாக இருந்திருக்கும். ஆனால், கால தாமதத்தைப் பற்றி கவலைப்படாமல் இந்த வெற்றியை அவர் அனுபவிப்பார் என நம்புகிறேன். முதல் பாகத்தில் இடம்பெற்ற வைரமுத்துவின் வரிகளை இரண்டாம் பாகத்திலும் சேர்த்துள்ளோம். அதற்கான சம்பளத்தை நாங்கள் அவருக்குக் கொடுத்துவிட்டோம். கொடுக்கவில்லை என்றாலும் கொடுத்துவிடுவோம். ஏன்னா, அதுதானே நியாயம். வைரமுத்துவைப்போல நானும் பாடல்கள் எழுத ஆசைப்பட்டு வரிகள் எழுதியிருக்கிறேன்.

எடிட்டர்கள், மகேஷ் நாராயணன் மற்றும் விஜய் ஷங்கர். ரெண்டுபேருமே ரொம்ப அருமையான எடிட்டர்கள். அவரும் இப்போ இயக்குநராகி தேசிய விருதுகூட வாங்கிட்டார். இந்தப் படத்தில் வேலை பார்த்த பல உதவி இயக்குநர்கள் இப்போ இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள். இதில் நடித்த இயக்குநர்கள் யார்னு எடுத்துப் பார்த்தாலே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. நாசரையும் என்னையும் சேர்த்து ஆறு இயக்குநர்கள் நடித்திருக்கிறோம். இதில் பெயர் குறிப்பிடாதவர்கள் பலர் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.

முக்கியமாக, என் சகோதரர் சந்திரஹாசன் அவருக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். அவர் என்னுடன் இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரை சந்திரஹாசன் தன்னுடைய சாரம்சத்தை என்னுள் இறக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். நான் எடுக்கும் சில நல்ல முடிவுகளுக்கெல்லாம் அவர் இருந்து என்னிடம் சொல்லியதுபோல இருக்கிறது. இந்த விழாவும் அப்படித்தான். அவர் இடத்தை நிரப்புவதற்கு நிறைய சகோதரர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அது அவருடைய ஆசியாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

900 பிரின்டுகளுடன் இந்தியா முழுவதும் இந்தப் படம் வெளியாகப்போகிறது. உலகம் முழுவதும் என்று சொல்ல கொஞ்சம் பகட்டாகத் தோன்றினாலும், அதுவும் உண்மைதான். கூடிய விரைவில் தமிழில் வெளியாகும் அனைத்துப் படங்களும் உலகெங்கும் பார்க்கும் படங்களாக மாறவேண்டும். அப்படி வரிசையில் எங்களது படங்களும், நாங்கள் வாழ்ந்ததும், உழைப்பும் வீண் போகவில்லை என நம்புகிறேன். நன்றி.'' என முடித்துவிட்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார், கமல்.  

``முதல் பாகத்துக்குப் பல்வேறு அமைப்புகள்ல இருந்து எதிர்ப்புகள் வந்தது. அந்த மாதிரி எதிர்ப்புகள் வந்தால் எப்படி எதிர்கொள்வீங்க?"

``அதுமாதிரி எதுவும் வராதுனு நினைக்கிறேன். முதல்ல வந்தது வேற ஒரு பெயரில் உருவம் மாற்றி மாறு வேடத்தில் வந்த எதிர்ப்புதான். அந்த எதிர்ப்பு பிற்பாடு அவர்களிடமிருந்து வரவில்லை. இப்போதும் அப்படித்தான். அது அரசியல். இதிலும் அரசியல் வந்தால், எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அரசியல்வாதியாக வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன். இது, `விஸ்வரூபம்' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது. முன்கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. யார் இந்த விஸாம் அஹமது காஷ்மிரி என்பதை விளக்கும் கதையாகவும் இந்தப் படம் இருக்கிறது." என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு