Published:Updated:

``தாத்தா பேர் லிங்கா, அப்பா பேர் ரங்கா, என் பேரு ஜுங்கா!" - விஜய் சேதுபதி

``தாத்தா பேர் லிங்கா, அப்பா பேர் ரங்கா, என் பேரு ஜுங்கா!" - விஜய் சேதுபதி
``தாத்தா பேர் லிங்கா, அப்பா பேர் ரங்கா, என் பேரு ஜுங்கா!" - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருக்கும் `ஜுங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு

`ரெளத்திரம்', `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்களை இயக்கிய கோகுல் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து எடுத்திருக்கும் படம், `ஜுங்கா'. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒரே மாதிரியான உடையணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

`இன்னிக்கு சேது அண்ணனைப் பார்த்துப் பேசிடணும்', `டேய் நம்ம சேது அண்ணன்டா' என்று குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, விஜய் சேதுபதியும் அதே கலர் காஸ்ட்யூமில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை மா.கா.பா.ஆனந்தும் ப்ரியங்காவும் தொகுத்து வழங்கினார்கள். முதற்கட்டமாக தனது ரசிகர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார் விஜய் சேதுபதி. பிறகு, ஸ்ரீதர் மாஸ்டரின் நடனக் குழுவில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் `ஜுங்கா' உடையில் தோன்றி நடனமாடினர். அதைத் தொடர்ந்து, படத்தின் டீஸரும் பாடல்களும் திரையிடப்பட்டன. பிறகு, கிராமத்து டீ கடைகளில் இருப்பதுபோல் மூன்று பெஞ்சுகள் போடப்பட்டு அதில் படக்குழுவினர் அமர்ந்தனர். 

முதலில் பேசிய இயக்குநர் கோகுல், ``ஆரம்பத்தில் விஜய் சேதுபதியை நடிகனா பார்த்தேன்; நண்பனா பார்த்தேன்; இப்போ அவரோட ரசிகனா இந்தப் படத்தை எடுத்திருக்கேன். அவர்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்களோ அது முழுமையா இதில் இருக்கும். இந்தப் படம், `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இரண்டாவது பாகமா’னு சிலர் கேட்குறாங்க. இது அந்தப் படத்தைவிட வேற லெவலில் இருக்கும். `பாலகுமாரா’ இளைஞர்களை குறிவெச்சு எடுத்த படம். ஆனால், இதை குழந்தைகள்ல இருந்து பாட்டிகள் வரை எல்லோருக்கும் பிடித்த விதத்தில் எடுத்திருக்கோம். எளிமையா சொல்லணும்னா, `பாலகுமாரா’ படத்தின் இரண்டாவது பாகத்தை பிரமாண்டமா எடுத்தா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும்.

நானே மிகப்பெரிய விஜய் சேதுபதி ரசிகன். சாயிஷா, ஃபாரின்ல பாட்டு ஷூட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது மைனஸ் ஒன்பது டிகிரில கோட்கூட போடாம டான்ஸ் ஆடினாங்க." என்று கூறினார். 

படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன், ``என் 35 வருட சினிமா வாழ்க்கையில் விஜய் சேதுபதி மாதிரியான ஒரு மனிதரைப் பார்த்ததில்லை. `இந்தப் பண்பு எத்தனை வருடம் இருக்கும்’னு கேட்டேன். `நீங்க கவலையே படாதீங்க சார். நான் கடைசிவரை இப்படித்தான் இருப்பேன்’னு சொன்னார். இவரைப்போல கோகுல் என்கிட்ட என்ன சொன்னாரோ அதைவிட சூப்பரா படத்தை  எடுத்திருக்கார். கண்டிப்பா இந்தப் படம் வெற்றி பெறும்" என்றார்.

பாதி தமிழ் மீதி ஆங்கிலமுமாகப் பேசிய ஹீரோயின் சாயிஷா, ``விஜய் சேதுபதிகூட நடிச்சது சந்தோஷமா இருக்கு. யதார்த்தமான நடிகர். எங்க ஜோடி உங்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பா எடுத்திருக்கும் இயக்குநர் கோகுலுக்கும் இதில் என்னை அழகா காட்டியிருக்கும் கேமராமேன் டட்லி சாருக்கும் நன்றி. சித்தார்த் விபினின் மியூசிக் நல்லா டான்ஸ் பண்ண வாய்ப்பு கொடுத்திருக்கு. நன்றி சித்தார்த்!" என்றார்.

ஒளிப்பதிவாளர் டட்லி, ``தமிழில் இதுதான் என் முதல் படம். ஒரு தமிழனா இருந்தாலும், இந்திப் படங்கள்தான் பண்ணிக்கிட்டு இருந்தேன். நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான கோகுல், இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கிற விஜய் சேதுபதியை எனக்குப் பிடிக்கும்.” என்றார். 

ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையில் பேச ஆரம்பித்த விஜய் சேதுபதி, ``இந்தப் படத்தின் கதையைக் கேட்டதுல இருந்து இன்னைக்கு வரை அவ்வளவு அனுபவங்கள். `ஜுங்கா’ பெயர் காரணம்  கேட்கிறாங்க. படத்துல என் தாத்தா பேர் லிங்கா, அப்பா பேரு ரங்கா, என் பேரு ஜுங்கா. அவ்ளோதான். யோகிபாபுகூட நடிச்சது ரொம்ப ஜாலியா இருந்தது. அவர் கொடுக்கிற கவுன்டர்கள்தாம் அவரின் பெரிய பிளஸ். அவருக்குத் தன்னம்பிக்கை அதிகம். அது ஸ்கிரீன்ல வெளிப்படும்" என்றவுடன், `யோகிபாபுவை பாரீஸ் சிட்டிக்குள்ள விட்டாங்களா?' என்று கேட்டார் தொகுப்பாளினி பிரியங்கா. 

``ஏன் அவருக்கென்ன, ஆணழகன். கர்லிங் ஹேர் வெச்சுகிட்டு சூப்பரா இருக்காப்ல. ஒரு முறை சாயிஷா, யோகிபாபு, நான் மூவரும் நடிக்கிற சீன் ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு யோகிபாபுவைச் சுற்றி அவ்ளோ கூட்டம். இவர் அந்த ஊர் ஃபுட்பால் பிளேயர் மாதிரி இருந்திருக்கார் போல!. எல்லாரும் அவர்கூட செல்ஃபி எடுத்துட்டு இருந்தாங்க. நம்ம இண்டஸ்ட்ரி ஸ்டிரைக்னாகூட அவர் ஃபாரின் போய் பிழைச்சுக்கலாம்!" என்றார்.  

`` `தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்குப் பிறகு நானும் விஜய் சேதுபதியும் எட்டு வருடம் கழிச்சு மறுபடியும் சேர்ந்து நடிக்கிறோம். அந்தப் பட ஷூட்டிங்ல, `என் முகம்லாம் யாருக்காவது பிடிக்குமாம்மா?'னு அப்போ விஜய் சேதுபதி என்கிட்ட கேட்டது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. `ஏன் இப்படியெல்லாம் கேட்குறீங்க. எவ்வளவு லட்சணமா கியூட்டா குழந்தைமாதிரி இருக்கீங்க. நீங்க பெரிய சக்சஸ் கொடுப்பீங்க!'னு அன்னைக்குச் சொன்னேன். `பார்க்கலாம்மா'னு யோசிச்சு, தயங்கி சொல்லிட்டுப் போனார்.

ஆனா, இன்னைக்கு அவர் தயாரிச்சு நடிக்கிற படத்துல அவர்கிட்ட நான் சம்பளம் வாங்கி நடிச்சிருக்கேன். ஒரு குழந்தையோட வளர்ச்சியை தாய் பார்க்கிற மாதிரி இருக்கு. எனக்கு இதைவிட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்? கொஞ்சம் கொஞ்சமா சேது வளர்ந்து, இப்போ இந்தளவுக்கு வந்திருக்கார். அதுக்கு அவரோட விடாமுயற்சியும் எளிமையான பண்பும்தான் காரணம். இன்னும் பெரிய இடத்துக்குப் போவீங்க சேது!" என்று படத்தில் இவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் வாழ்த்தினார். 

``தன்னிலை மாறாம இருக்கிறதுதான் சேதுவோட அடையாளம். இந்தப் படத்துல எல்லாமே புதுசா இருக்கு, நீ பண்ண சேட்டைகள்கூட!. இந்தத் தோழமை, இணைப்புனு தொடர்ந்து பயணிக்கணும். வாழ்த்துகள் `ஜுங்கா' டீம்.!" என்று வாழ்த்தினார், நடிகர் நாசர். படத்தின் இசையை சீனியர் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். விழாவில் விஜய் சேதுபதியின் இயக்குநர்களான சீனு ராமசாமி, எஸ்.பி.ஜனநாதன், பாலாஜி தரணிதரன், பிரேம் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அடுத்த கட்டுரைக்கு