Published:Updated:

'காலா' ஷுட்டிங் சுவாரஸ்யம் சொல்கிறார் திலீபன்!

'காலா' ஷுட்டிங் சுவாரஸ்யம் சொல்கிறார் திலீபன்!
'காலா' ஷுட்டிங் சுவாரஸ்யம் சொல்கிறார் திலீபன்!

'வத்திக்குச்சி' படத்தில் தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய திலீபன், 'காலா' படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

'வத்திக்குச்சி' படத்தில் தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய திலீபன், முரட்டு உடல், ஆக்ரோஷமான பார்வை என 'காலா' படத்தில் செல்வமாக நம்மைக் கவர்ந்தார். 'காலா' வாய்ப்பு பற்றியும் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 
 

 "முதல் படத்துக்குப் பிறகு இவ்ளோ பெரிய இடைவெளி ஏன்?"

"சினிமா ஆர்வத்தோட பலபேர் வாய்ப்புக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க; வாய்ப்பைத் தேடிக்கிட்டு இருப்பாங்க. ஆனா, எனக்கு மெரிட்ல கிடைச்ச சீட் மாதிரிதான், ஆக்டிங். 'வத்திக்குச்சி' படத்துக்காக ஒரு வருடம் இயக்குநர்கூடவே சுத்துனேன். என் நடிப்பைப் பார்க்குற ஆடியன்ஸ், 'இந்தப் படத்துல வேற யாராவது நடிச்சிருக்கலாமே?'னு யோசிச்சிடக்கூடாதுனு ரொம்ப மெனக்கெட்டேன். லவ் சீன்ஸ் கொஞ்சம் சொதப்பினாலும், ஆக்‌ஷன் காட்சிகள்ல நல்லா நடிச்சிருந்தேன்னு பலரும் கமெண்ட்ஸ் பண்ணாங்க. எங்கே போனாலும் அடையாளம் கண்டுக்க ஆரம்பிச்சாங்க. பிறகு 'குத்தூசி'னு ஒரு படம் பண்ணேன். இயற்கை விவசாயத்தை மையப்படுத்திய கதை. விவசாயத்தை பத்தி நல்லா தெரிஞ்சவன் வில்லன். எதுவுமே தெரியாதவன் ஹீரோ. விவசாயத்தைப் பத்தி முழுக்க ஹீரோவுக்குத் தெரிஞ்சபிறகு, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கிற விஷயங்கள்தான் படம். சென்சார் முடிஞ்சு ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. பிறகு, 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துல நடிச்சேன். இப்போ, 'காலா'. நல்ல படங்களுக்காக காத்திருக்கிறதுல பிரச்னை இல்லை!" 

'காலா' பட வாய்ப்பு?" 

"ரஞ்சித் சாரோட நண்பர் ஒருத்தர், 'குத்தூசி' பட கேமராமேனுக்கும் நண்பர். அவர்மூலமா ரஞ்சித் சாரை மீட் பண்ணேன். " 'வத்திக்குச்சி'யில உடம்பு ஃபிட்டா இருந்தது. இப்போ இளைச்சிட்ட மாதிரி தெரியுதே... சரி, உடம்பை ஏத்துங்க. நான் சொல்றேன்!''னு சொல்லிட்டார். ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் ரஞ்சித் சாரைப் பார்த்தேன். இன்னும் உடம்பை ஏத்தணும்னு சொன்னார். இன்னும் கொஞ்சநாள் கழிச்சு போய்ப் பார்த்தேன். போட்டோஷூட் பண்ணாங்க. அதுவரை எனக்கு 'காலா' படத்துல என்ன கேரக்டர்னு தெரியாது. ரஜினி சார் பையன்னு சொன்னதும், அவ்ளோ சந்தோஷமா இருந்தது. கிடைச்ச வாய்ப்பை நல்லவிதமா பயன்படுத்திக்கிட்டேன்னு நினைக்கிறேன்."

"படத்துல ரஜினிகூட உங்களுக்கு நிறைய காட்சிகள் இருந்தது. ரஜினி ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா?" 

"ஃபர்ஸ்ட் டைம் அவர்கூட ஒரு காட்சியில நடிக்கும்போது, ரொம்பப் பயமா இருந்தது. அவரே என்கிட்ட பேசி, ரிலாக்ஸ் பண்ணார். பிறகு அவர்கூட ஜாலியா நடிச்சேன். எந்த ஒரு காட்சியையும் ஈஸியா எடுத்துக்காம, ரொம்ப மெனக்கெட்டு நடிக்கிறதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமா இருந்தது. ரெண்டு மூணு வெரைட்டி காட்டி, 'எது ஓகே?'னு கேட்டு அசத்துவார், ரஜினி சார். அவர் கோபமா பேசுற வசனத்தை உண்மையிலேயே கோபமாதான் பேசுவார். அதேமாதிரி, மற்ற நடிகர்கள் ரீடேக் எடுத்தா, டென்ஷன் அகாம ரசிப்பார். பெரிய நடிகர், பெருந்தன்மையான மனிதர்!"

"நீங்க நடிச்சதிலேயே உங்களுக்குப் பிடித்த காட்சி எது?"

"கார் ஆக்ஸிடென்ட் சீன்ல 'அப்பா'னு கத்திக்கிட்டே எமோஷனலா ஓடி வர்ற காட்சி. அப்புறம், 'ஒத்தையில நிக்கேன்; மொத்தமா வாங்கலே' வசனத்தை ரஜினி சார் பேசுன பிறகு, நான் ஃபைட் பண்ற காட்சி ரொம்பப் பிடிக்கும். நாம நல்லா நடிச்சா, உடனடியா 'சூப்பர்... சூப்பர்'னு ரஜினி சார்கிட்ட இருந்து பாராட்டு வரும். அப்போ சந்தோஷத்தோட உச்சிக்குப் போயிடுவேன்!" 
 

"ஷூட்டிங் ஸ்பாட்ல ரஜினியைப் பார்த்து வியந்த விஷயம்?"  

"மழை பெய்யும்போது, பாலத்துல நடிக்கிற ஃபைட் சீன் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ கேரவன் இல்லை. ஒரு சேர், குடை போதும்னு ஷூட்டிங் நடக்கிற இடத்துல இருந்து கூப்பிடுற தூரத்திலேயே உட்கார்ந்திருப்பார் ரஜினி சார். உடம்பு முழுக்க நனைச்சிருக்குனு துவட்ட மாட்டார். ஏதாவது புத்தகம் படிச்சுக்கிட்டே இருப்பார். 'துவட்டிக்கலாமே சார்'னு சொன்னா, 'இல்லைப்பா... மறுபடியும் நடிக்கத்தானே போறோம். ஏன் துவட்டிக்கிட்டு, அதுபாட்டுக்கு இருக்கட்டும்'னு சொல்வார். ரஜினி சார் நினைச்சா அவருக்குத் தகுந்தமாதிரி அந்த இடத்தை மாத்திக்க முடியும். ஆனா, அந்த சூழலுக்கு அவர் தன்னை மாத்திக்கிறார். ரியலி கிரேட்!" 

"படத்தைத் தியேட்டர்ல பார்க்கும்போது எப்படி இருந்தது?"

"இந்தமாதிரி ஒரு படத்துல பவர்ஃபுல்லான ஒரு கேரக்டர் கிடைச்சிருக்கேனு நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. அதைப் படத்துல பார்க்கும்போது இன்னும் சந்தோஷம். என் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம் இது. ரஜினி சார், நானா சாரை பார்க்கிற வாய்ப்புகூட பலபேருக்குக் கிடைக்காது, நான் அவங்ககூட நடிச்சிருக்கேன்னு பெருமையா இருக்கு." 

"ரஜினியைவிட உங்களுக்குதான் ஆக்ஷன் காட்சிகள் அதிகமா இருந்தது...?" 

"அதுக்குக் காரணம் ரஞ்சித் சார்தான். அவருக்குத்தான் நன்றி சொல்லணும். ரஜினி சாரோட பெருந்தன்மைகூட இதுக்கு முக்கியமான காரணம். திலீப் சுப்பராயன் மாஸ்டர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா ஆக்ஷன் சீன்களை வடிவமைச்சார். ரொம்பப் பக்குவமான நபர். அவர் ஒவ்வொரு காட்சியையும் விவரிக்கிற விதம் அழகா இருக்கும். அவருக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கார். சீக்கிரம் இயக்குநர் ஆகிடுவார்னு நினைக்கிறேன்." 
 

"வீட்ல என்ன ரெஸ்பான்ஸ்?"

"என் அம்மா, மனைவி எல்லோருக்கும் ரொம்பவே சந்தோஷம். ஆனா, படத்துல நான் இறந்ததுதான் அவங்களுக்கு வருத்தம். 'என்ன இப்படி ஆகிடுச்சு?'னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. 'காலா'வுக்குப் பிறகு எனக்குக் கிடைச்சிருக்கிற கவனத்தை நல்லவிதமா பயன்படுத்திக்கணும்!"

வாழ்த்துக்கள் திலீபன்!

பின் செல்ல