Published:Updated:

ஓடுபவன் நின்றால்... எதிர்த்து திரும்பினால்... திரும்பி பயம் காட்டினால்!? - கோலிசோடா 2 விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஓடுபவன் நின்றால்... எதிர்த்து திரும்பினால்... திரும்பி பயம் காட்டினால்!? - கோலிசோடா 2 விமர்சனம்
ஓடுபவன் நின்றால்... எதிர்த்து திரும்பினால்... திரும்பி பயம் காட்டினால்!? - கோலிசோடா 2 விமர்சனம்

கோலிசோடா 2 திரை விமர்சனம்

 `என் வாழ்க்கையை முடிவு பண்ண நீ யார்' எனும் கோவம் ஒருவனுக்குள் கனன்றால், அதிகாரத்துக்குப் பயந்து ஓடுபவன் நின்றால், எதிர்த்து திரும்பினால், திரும்பி பயம் காட்டினால் என்னவாகும்? பதில் சொல்கிறது `கோலிசோடா 2'.

தாதா துறைமுகம் தில்லையிடம் டிரைவர் வேலைபார்க்கும் மாறன், அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி வேறு வேலைபார்த்து வாழ்க்கையை நகர்த்த முடிவு செய்கிறார். சொந்தமாக ஆட்டோ வைத்திருக்கும் சிவா, சொந்தமாக கார் வாங்கி வாழ்க்கையில் அடுத்த படியை எடுத்துவைக்க நினைக்கிறார். கூடைப்பந்தாட்ட வீரரான ஒளி, ஒரு கோப்பை தன் வாழ்க்கையை மாற்றிவிடும் என நம்புகிறார். இந்த மூவரின் முயற்சியும் கைகூடி வரும் நேரத்தில், யாரோ சிலர் தலையீடால் கைநழுவிப் போகிறது. யார் அந்த யாரோ சிலர், இவர்களின் வாழ்க்கையை மாற்ற, தட்டிப்பறிக்க யார் அவர்கள்? ஒற்றைப் புள்ளியில் இணையும் அவர்களை, மூவரும் ஆயுத எழுத்தாய் எதிர்த்து நிற்கிறார்கள். இறுதியில் வென்றது யார் என்பதை விறுவிறுப்பாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர்களில் முக்கால்வாசி பேர் புதுமுகங்கள். அத்தனை பேரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். கூடவே, சமுத்திரகனி, கௌதம் மேனன், சரவணன் சுப்பையா, செம்பன் வினோத் ஜோஸ் என நான்கு இயக்குநர்களின் நடிப்பும் பக்கா. செம்பன் வினோத் ஜோஸின் பின்னணிக் குரலும், சமுத்திரகனியின் ஒட்டுத்தாடியும் மட்டும் கொஞ்சம் உறுத்தல். படத்தில், ரோகினி மற்றும் ரேகாவுக்கு நடிக்க பெரிதாய் இடமில்லை. 

படத்தின் முதற்பாதியில் யதார்த்தமாக பயணிக்கிறது திரைக்கதை. இடைவேளைக்கு முன்பு மூன்று நாயகர்களும் இணையும் அந்த `ஹைப்பர் லின்க்' காட்சியில் நமக்கே அட்ரினலின் சுரக்கிறது. இரண்டாம் பாதியிலோ படத்திலிருந்த யதார்த்தம் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமலே போகிறது. முக்கியமாக சண்டைக் காட்சிகளில். வெறும் மூன்றே பேர் டீம் போட்டு, நூறு, இருநூறு பேரை அடித்து பந்தாடுகிறார்கள். விறுவிறுப்பாக பயணித்து நம்மை சீட் நுனிக்குக் கொண்டுவரும் திரைக்கதை, ஒரு கட்டத்தில் அட்வைஸும் அடிதடியுமாக மாறி மாறி அடித்து சீட்டிலேயே சரிய வைக்கிறது. 

`ஏழ்மையை ஒழிக்குறேன்னு ஏழைகளையே ஒழிக்குறாய்ங்க, இப்போலாம் ஏதாவது கரெக்டா இருந்தாத்தான் அதுல ஏதாவது தப்பு இருக்குமோனு பயம் வருது' என வசனங்கள் பல இடங்களில் நறுக். சாதியின் பெயரால் அரங்கேறும் வன்முறைகள் பற்றியும் படத்தில் பேசியிருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்படும் நாயகர்களும் சாதியை எதிர்த்து நிற்பதாய் காட்சி அமைத்திருக்கிறார்கள். ஆனால், முக்கியமான ஒரு காட்சியில் `எங்க பின்னாடியும் சாதி இருக்கு, சங்கம் இருக்கு' என `ஹீரோயிஸ' வசனம் பேசுகிறார்கள். என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே? வட சென்னையில்  மொத்தமே மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் முகமெல்லாம் முடியோடே சுற்றுகிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே?!

 விஜய் மில்டனின் கேமரா பரபரவென படம் பிடித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் தீபக்கும் தன்னால் முடிந்தளவு படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறார். அச்சு ராஜாமணியின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரும் பலம். `கிளம்பு' பாடல் நல்ல ப்ளேஸ்மென்ட். சுப்ரீம் சுந்தரின் சண்டை வடிவமைப்பு கொஞ்சம் ஓவர் டோஸ். இன்னமும் நம்பும்படியான சண்டைக் காட்சிகளாக வடிவமைத்திருக்கலாம். 

இரண்டாம் பாதியில் திரைக்கதையில் யதார்த்தம் கூட்டி, சொல்ல வந்ததை பொட்டில் அரைந்தாற்போல் சொல்லியிருந்தால், இன்னும் ஜிவ்வென இருந்திருக்கும் இந்த இரண்டாவது கோலிசோடா! 

அடுத்த கட்டுரைக்கு