Published:Updated:

`கொளஞ்சி' ரிலீஸாவதில் என்ன பிரச்னை..? முக்கோண மோதலின் முழு விபரம்!

`கொளஞ்சி'  ரிலீஸாவதில் என்ன பிரச்னை..? முக்கோண மோதலின் முழு விபரம்!
`கொளஞ்சி' ரிலீஸாவதில் என்ன பிரச்னை..? முக்கோண மோதலின் முழு விபரம்!

'மூடர்கூடம்' படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் நவீன் தன் நண்பரான தனராம் சரவணனின் 'கொளஞ்சி' என்ற படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், இன்றுவரை படம் வெளியாதவற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் தனராம் சரவணன் நம்மை தொடர்புகொண்டு சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அப்போது ஆவேசமாக பேசியவர்,

 ``39 லட்சத்துல ஒரு படம் பண்ணிக் கொடுத்திருக்கேன். அதை வித்து காசாக்கிட்டு ரிலீஸ் ஆகாதுனு சொன்னா நான் என்ன பண்றது? இந்தப் படம் ரிலீஸ் பண்ணவுடனே கொடுக்குறேன்னு சொல்லி மத்தவங்ககிட்ட காசு வாங்கியிருக்கார். ஆனா, ஆரம்பத்துல நான் படம் பண்ணலாம்னு சொன்னப்போ காசு இல்லேன்னு சொல்லிட்டார். அப்புறம், இந்தப் படத்துல நடிச்சிருக்க ராஜாஜிதான் 2 லட்சம் கொடுத்தார். அதை வெச்சுதான் ஷூட்டிங் போனேன். அந்தக் காசுல 45,000 ரூபாய்தான் படத்துக்கு செலவு பண்ணேன். மீதிக் காசை நவீன் தன் சொந்த விஷயங்களுக்காக செலவு பண்ணிட்டார். எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட உதவி கேட்டேன். அப்புறம் நவீன் அவருக்கு தெரிஞ்சவங்ககிட்ட பணம் வாங்கிக் மொத்த படத்தை 39 லட்சத்துல முடிச்சோம். படத்தை 2.75 கோடிக்கு வித்து, அதுல 1.25 கோடி நவீனுக்கு வந்திருக்கு. இந்தப் படம் வெளியானா வாங்கின பணத்தைத் திருப்பி கொடுக்கணுமேனு ரிலீஸ் பண்ணவிடமாட்றார். இதனால், என் கரியர் பாதிக்குது. இந்தப் படம் வெளியானாதானே அதை வெச்சு எனக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பாங்க. அதனால, நான் படம் பண்ண முடியாத சூழல் உருவாகி இருக்கு. இவங்களை மாதிரியான ஆளுங்ககிட்ட இருந்து சினிமாவை காப்பாத்தணும்" என்று தனது குற்றச்சாட்டை வைத்தார். 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் நவீனை தொடர்புகொண்டு பேசினோம். ``சரவணன் அவர் ஃபேஸ்புக்ல ஏதேதோ போஸ்ட் போட்டிருக்கார்னு என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. பல பேரோட கடுமையான உழைப்பைப் போட்டு படத்தை எடுத்திருக்கோம். ஆனா, படத்தை வாங்கியவர் அதைத் திருப்பித் தரமாட்டேங்கிறார். 'ஒண்ணு படத்தை ரிலீஸ் பண்ணுங்க, இல்லைன்னா திருப்பிக் கொடுங்க'னு சொன்னேன். எதுவும் நடக்கிற மாதிரி தெரியலை. நானும் தனராம் சரவணனும் 'இம்சை அரசன்' படத்துல இருந்து ஒண்ணா வொர்க் பண்ணதுனால அவரோட கமிட் ஆனேன். எல்லோரும் 'ஏன் இவர் படத்தை தயாரிக்கிற?'னு கேட்டாங்க. ஏன்னா, இவரைப் பத்தி எல்லோருக்கும் தெரியும்.  ஒரு நாள் அழுதுகிட்டே, 'இந்தப் படம் இல்லேன்னா தற்கொலை பண்ணுவேன்'னுலாம் சொன்னார். ஏற்கெனவே அவருக்கு ரெண்டு படம் ட்ராப் ஆகிருச்சு. அதுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் படம் தயாரிச்சேன். நான் இல்லாம ஷூட்டிங்கும் நடந்ததில்லை. 'நம்ம பேனர்ல ஒரு படம் வருதே'னு ரொம்ப கேர்ஃபுல்லா பண்ணேன். ஸ்பாட்ல உட்கார்ந்து நிறைய சீன்களை மாத்துனோம். இப்போ, படத்தை 'ராஜராஜேஸ்வரி ஸ்க்ரீன்ஸ்' தங்கவேல் வாங்கியிருக்கார். டெல்லியில இருந்து ஒருத்தர்கிட்ட வாங்குன பணத்துல ஒரு கோடி மட்டும் எனக்கு அட்வான்ஸா கொடுத்துட்டு படத்தை வாங்கினார். கடைசியில படமும் ரிலீஸ் ஆகலை, மீதிப் பணமும் என கைக்கு வரலை. அது வந்தாதான் நான் பணம் வாங்குனவங்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும். 

டெல்லியில இருந்து அவருக்குப் பணம் கொடுத்தவர் இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கார். இதுக்கு நடுவுல இருக்கிற தங்கவேல் சந்தோஷமா இருக்கார். இந்தப் படத்தை வித்துட்டு, அவர்கிட்டபோய் கெஞ்சுறதுலேயே ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு. 'மூடர்கூடம்' ரிலீஸாகி அஞ்சு வருஷம் ஆகப்போகுது. அதுல இரண்டரை வருஷம் இந்தப் படத்துக்காக செலவு பண்ணியிருக்கேன். இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாதான் எனக்குப் பணம் கொடுத்தவங்களுக்கு நான் திரும்பித் தர முடியும். 'கொளஞ்சி' ரிலீஸ் பிரச்னையால ரெண்டு படம் பண்ணாம இருக்கேன். இவ்வளவு நாள் ஆகிருச்சு, இந்நேரம் அவரே படம் பண்ணியிருக்கலாம். 'மீதி காசைக் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் பண்ணனும்; அதுக்கு நவீனை ஒப்புக்கொள்ள வைக்கணும்'னு சரவணனை தங்கவேல் தூண்டிவிட்டிருக்கார், இதுதான் உண்மை. இது சரவணனுக்குத் தெரியலை. அவர்கிட்ட இருந்து படத்தை எப்படி வாங்கி ரிலீஸ் பண்ணனும்னு எனக்குத் தெரியும். ஆனா, அதுவரைக்கும் படத்துக்கு எதுவும் கலங்கம் வரக்கூடாது." என்றார், நவீன். இறுதியாக, உண்மை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, படத்தை வாங்கிய விநியோகஸ்தர் தங்கவேலிடம் பேசியபோது, "அதை நீங்க தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப் போறீங்க? இது எங்க பிரச்னை. நீங்க என்ன மீடியேட்டரா. நாங்க படத்தை ரிலீஸ் பண்ணப்போறோம் அவ்ளோதான்" என்று ஆவேசமாக பேசி முடித்தார்.

இந்தப் படம் வெளியாவதில் உண்மையில் என்ன காரணம் என்பது இவர்கள் மூவருக்கு மட்டும்தான் தெரியும். எனவே, மூவரும் உட்கார்ந்து பேசியோ அல்லது  தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவோ இந்தப் பிரச்னையை பேசி முடித்து விரைவில் உங்கள் படைப்பை மக்களிடம் கொண்டுவந்து சேருங்கள். நல்ல படங்களை ஆதரிக்க மக்கள் எப்போதும் தயார்தான் !

அடுத்த கட்டுரைக்கு