Published:Updated:

`` `விசுவாசம்' படத்துல ஐந்து ஆக்‌ஷன்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்!" - திலீப் சுப்பராயன்

`` `விசுவாசம்' படத்துல ஐந்து ஆக்‌ஷன்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்!" - திலீப் சுப்பராயன்
`` `விசுவாசம்' படத்துல ஐந்து ஆக்‌ஷன்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்!" - திலீப் சுப்பராயன்

`செக்கச் சிவந்த வானம்', `விசுவாசம்' ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

`` `காலா' படத்துல, மழையில வர்ற ஃபைட் சீனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. 'கடைக்குட்டி சிங்கம்', 'அசுரவதம்', 'தமிழ் படம் 2.0'னு வரிசையா படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கு. தவிர, மணிரத்னம் சாரோட 'செக்கச் சிவந்த வானம்', தலயோட 'விசுவாசம்' படத்துல வொர்க் பண்ணிட்டு இருக்கேன்!" உற்சாகமாகப் பேசுகிறார், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். 

`` 'கொம்பன்', 'தீரன்' இப்போ 'கடைக்குட்டி சிங்கம்' கார்த்திக்கூட இந்த டிராவல் எப்படி இருக்கு?"

`` `கொம்பன்', `தீரன்' ரெண்டு படத்துக்குமே ஸ்டன்ட் போர்ஷனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். 'கடைக்குட்டி சிங்கம்' படம் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். ரொம்ப வருடத்துக்குப் பிறகு இந்தப் படத்துல ஒரு பரபரப்பான சண்டைக்காட்சி இருக்கு. அதை, கார்த்தி சாரை   எடுத்தது ரொம்ப சவால இருந்துச்சு.  ஏன்னா, இந்த ஸ்டன்ட் காட்சியை ஒன்மோர் சொல்லி எடுக்க முடியாது.  எங்களுக்கு தேவையானது கிடைக்க ரொம்பவே மெனக்கெட்டோம்.  இந்தக் காட்சியைப் படமாக்கும்போது சூர்யா சாரும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். அவருக்குப் படத்துல இந்த சண்டை காட்சி வர்றது சந்தோஷம். படத்துல இது ஒரு பதிவா இருக்கணும்னு சொன்னார். நான் ஸ்கிரிப்ட்டுக்குத் தேவையானதை மட்டும்தான் எடுப்பேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 

`` `செக்கச் சிவந்த வானம்' அனுபவம்?"

``மணிரத்னம் சாரோட 'நாயகன்', 'தளபதி'னு நிறைய படங்கள்ல எங்க அப்பா வொர்க் பண்ணியிருக்கார். எனக்கும் மணி சார் படத்துல வொர்க் பண்ணனும்னு ரொம்பநாளா ஆசை. அது, இந்தப்படம் மூலமா நிறைவேறிடுச்சு. மணி சார் ஒரு காலேஜ் மாதிரி. ஒரு சீனை எப்படி நேர்த்தியா கையாள்றதுனு அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய்னு நாலு பேரோட காம்பினேஷன்ல ஒரு ஃபைட் சீன் படத்துல இருக்கு. அது சூப்பரா இருக்கும். இவங்க எல்லோரையும் ஒன்னா பார்க்கும்போது அவ்ளோ அழகா இருக்கும். உண்மையிலேயே இந்தப் படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம். 120 கிமீ வேகத்துல போற காரை 'டிரிஃப்ட்' பண்ற சீனை ஈசிஆர்ல எடுத்தோம். அதைப் படத்துல பார்க்கும்போது சர்பிரைஸ் கன்ஃபார்ம்!"
 

``ஒவ்வொரு ஹீரோவுக்கும் தனியா ஸ்டன்ட் சொல்லிக்கொடுத்துட்டு, இப்போ மொத்தமா சொல்லிக்கொடுக்கும்போது எப்படி இருக்கு?"

``ஒரே காட்சியில நாலு பேரும் இருக்கும்போது, அவங்க அவங்களுக்கான முக்கியத்துவம் குறையாத மாதிரி பார்த்துக்கணும். அது ரொம்ப சவால்தான். ஸ்டன்ட் காட்சியா இருந்தாலும் இப்படித்தான் இருக்கணும்னு மணி சார் தெளிவா ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருப்பார். அதை நாம அப்படியே செஞ்சா போதும். நாலு பேருக்கும் காட்சியை விளக்கமா சொல்லிட்டுதான் ஷாட்டுக்குத் தயாராவார். அதைப் பார்க்கும்போது காலேஜ் பசங்களுக்கு ஒரு புரொஃபசர் பாடம் நடத்துற மாதிரியே இருக்கும்." 

``அர்விந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய்... நாலுபேர்ல செட்ல ஜாலியான கேரக்டர் யார்?" 

``வேற யாரு... சிம்புவும் விஜய் சேதுபதியும்தான்!. சிம்பு, விஜய் சேதுபதிக்கு ஊட்டி விடுற மாதிரி வெளியான போட்டோ, ஆக்‌ஷன் சீக்வென்ஸ் டைம்ல எடுத்ததுதான். ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி கலாய்ச்சுக்கிட்டே இருப்பாங்க. அப்போ யார் அந்தப் பக்கமா போனாலும் அவங்களை உட்காரவெச்சுப் பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அப்படி ஒருநாள் அவங்ககிட்ட நான் சிக்கிக்கிட்டேன். இப்படி ஜாலியா சுத்துற எல்லோரையும்  'ஓகே.. சீன் மோட் கம் ஆன் கைஸ்'னு அரவிந்த் சாமி சார்தான் வொர்க் மோடுக்குக் கூட்டிக்கிட்டு வருவார்." 
 

`விசுவாசம்' ஷூட்டிங் சுவாரஸ்யங்கள்?"  

``ஹைதரபாத்ல ஒரு ஷெட்யூல் முடிஞ்சிருக்கு. படத்துல மொத்தம் அஞ்சு ஆக்‌ஷன் இருக்கு. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். ஹைதராபாத்ல ஒரு காமெடி ஃபைட் எடுத்து முடிச்சிருக்கோம். மிச்சமிருக்கிற நாலு ஃபைட் சீன் வேற லெவல்ல இருக்கும். ரொம்பநாள் கழிச்சு அஜித் சார் படத்துல வொர்க் பண்றது ரொம்பவே ஹாப்பி. இந்தப் படம் 'சிறுத்தை' மாதிரி படம். ரொம்ப எமோஷனலா இருக்கும். நான் சினிமாவுல முதல்முதலா ஃபைட்டரா அறிமுகமானது, 'ஜி' படத்துலதான். பிறகு, பல படங்கள்ல ஃபைட்டரா வொர்க் பண்ணியிருக்கேன். இப்போ அஜித் சார் படத்துக்கே மாஸ்டரா வொர்க் பண்றதுல, அஜித் சாருக்கும் ஹாப்பி, எனக்கும் ஹாப்பி. படத்துல வர்ற ஆக்‌ஷன் எல்லாமே அடிச்சா பத்து பேர் பறக்கிற மாதிரி இல்லாம, லைவ்வா இருக்கும்." 

`` 'தமிழ் படம் 2.0' படத்துல எந்தெந்த படங்களோட சண்டைக் காட்சிகளையெல்லாம் கலாச்சிருக்கீங்க?" 

``நிறையவே இருக்கு. 'துப்பாக்கி', 'ஆம்பள' படங்களோட சண்டைக் காட்சிகளைக் கலாய்ச்சதை டீஸர்ல பார்த்திருப்பீங்க. இன்னும் பல படங்கள் இருக்கு. அது, சஸ்பென்ஸ். கேமரா ஆங்கிள், லொக்கெஷன்னு எல்லாத்தையும் சம்பந்தப்பட்ட படங்கள்ல இருந்த மாதிரியே எடுத்து ஸ்பூஃப் பண்ணி எடுக்கிறதுனால, இந்தப் படம் கொஞ்சம் சவாலா இருக்கு."
 

``மத்த மொழிகள்ல என்னென்ன படங்கள் வொர்க் பண்றீங்க?" 

``மலையாளத்துல 'காயங்குளம் கொச்சுண்ணி' படத்துல வொர்க் பண்ணியிருக்கேன். தெலுங்குல ரவிதேஜா சார் படத்துல வொர்க் பண்ணிட்டு இருக்கேன்" என்றபடி விடைபெற்றார், திலீப் சுப்பராயன்.

அடுத்த கட்டுரைக்கு