Published:Updated:

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' வின் டீசலுக்கு சவால் விடுகிறார் சல்மான் கான்! 'ரேஸ் 3' படம் எப்படி?

தார்மிக் லீ
ப.சூரியராஜ்
சுஜிதா சென்

சல்மான் கான் நடிப்பில், ரெமோ டி சோசா இயக்கத்தில் வெளியான ரேஸ் 3 பட விமர்சனம்!

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' வின் டீசலுக்கு சவால் விடுகிறார் சல்மான் கான்! 'ரேஸ் 3' படம் எப்படி?
'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' வின் டீசலுக்கு சவால் விடுகிறார் சல்மான் கான்! 'ரேஸ் 3' படம் எப்படி?

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களின் எட்டு பாகங்களையும் ராப்பகலாக கண்விழித்து வெறிக்க வெறிக்கப் பார்த்துவிட்டு வெறியாகி, அதை அப்படியே பாலிவுட் பக்கம் பாவ்பாஜியாக சுட்டால்... அதுதான் `ரேஸ் 3'.

நடிகர்கள் அமாவாசை சாமத்திலும் கூலிங் கிளாஸோடு சுற்றுவது, காப்பித்தூள் வாங்கக்கூட காஸ்ட்லி காரில் கிளம்புவது, துப்பாக்கியில் ஆரம்பித்து ஏவுகணை, பீரங்கி, அணுகுண்டுவரை அநாயசமாக வெடித்து வில்லன்களைப் போட்டுத்தள்ளுவது... இப்படி முந்தைய ரேஸ் படங்களின் அதே ஃபார்முலாவை இங்கேயும் பயன்படுத்தி கூட்டி, கழித்து கணக்கு போட்டிருக்கிறார்கள். என்ன, தப்புக் கணக்கு ஆகிவிட்டது!

சம்ஷீர் சிங் (அனில் கபூர்), சிக்கந்தர் சிங் (சல்மான் கான்), சஞ்சனா சிங் (டெய்சி ஷா), சூரஜ் சிங் (சாஹிப் சலீம்) மற்றும் யஷ் (பாபி தியோல்). அனைவரும் `ஆனந்தம்' படத்தில் வரும் குடும்பத்தைவிட அவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்குக் குறுக்கே பணம் எனும் அம்சம் பாயைப் போட்டு படுக்க, பாசக்காரர்கள் ஒருவருக்கொருவர் பகைவர்கள் ஆகிறார்கள்.  நீயா, நானா, யார் கெத்து, யார் வெத்து என இவர்களுக்குள் நடக்கும் ரேஸ்தான் படத்தின் கதை. இறுதியில் யார் `ரேஸ் கா சிக்கந்தர்' என்பதை யூ-டர்ன் போட்டு, டேபிளை பிரித்து, 98 கார்களை உடைத்து போதாக்குறைக்கு ஒரு பனைமரத்தையும் படத்தில் கொளுத்திவிட்டு பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரெமோ டி சோசா!

பைக்கை காம்பஸாய் பயன்படுத்தி மூன்று மீட்டர் விட்டத்தில் ஒரு வட்டம் வரைந்தபடி துப்பாக்கியால் சுடுவதாகட்டும், பத்து ஸ்டாப் தள்ளியிருக்கும் இடத்திற்குப் பறந்துசெல்வதாகட்டும், இறுதிக் காட்சியில் டாப் லெஸ்ஸாக நின்றுகொண்டு வில்லன்களை அடித்து நொறுக்குவதாகட்டும்... என்றும் பழைமை மறவாத மனிதருள் மாணிக்கமாக இருக்கிறார் பாய் ஆஃப் பாலிவுட் சல்லுபாய். அந்த பத்து கிலோ ப்ரெஸ்லெட்டையாவது மாத்துங்க சல்லு.

மற்ற நடிகர்கள் எல்லோரும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தி இருக்கின்றனர். பாபி தியோல் லாங் ஷாட்களில் பார்க்க சல்மான் கான் போலவே தெரிகிறார். வெயிலின் விளைவுகள் உக்கிரமானவை. ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு இந்த ரேஸில் முக்கியமான கதாபாத்திரம், தம்மால் முடிந்தளவு நடித்துக் கொடுத்திருக்கிறார். டெய்ஸி ஷா அழகாக இருக்கிறார். அவருக்கும் ஜாக்குலினுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சி, அபாரம்.

இப்படி படத்தில் ஆங்காங்கே சில நல்ல காட்சிகள் இருக்கின்றன. அது தரும் சுஹானுபம் நம்மை அடைவதற்குள், எங்கிருந்தோ ஓடிவந்து அதன் பொடனிலேயே அடித்து பத்திவிடுகின்றன பாடல்கள். பாகவதர் படங்களில் கூடப் பாடல்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும். இந்தப் படத்தில் தொட்டதற்கெல்லாம் பாட்டு பாட ஃபாரீனுக்கு கிளம்பிவிடுகிறார்கள்.

தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதுபோல், ஊருக்குள் எந்தக் காரையாவது, வீட்டையாவது, யாரையாவது, எதையாவது வெடிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், படத்தின் எந்த இடத்திலும் போலீஸ் சைரன் சத்தம் மட்டும் கேட்கவேயில்லை. 

பரபர ஸ்க்ரீன்ப்ளே, உயர்தர கார்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியான ஃபாரின் லோகேஷன்கள், வியக்கவைக்கும் ஸ்டன்ட் காட்சிகள்... என இதுதான் இதற்கு முன் வந்த இரண்டு ரேஸ் படங்களிலும் டெம்ப்ளேட்டாக இருக்கும். அது ஒருபக்கம் இருந்தாலும் ‘ரேஸ்’ படத்துக்கே உரித்தான சில 'ஸ்ட்ராங்' ட்விஸ்டுகளை வைத்திருப்பார்கள். இதில் வரும் ட்விஸ்டுகள் எல்லாம் டி.ராஜேந்தர் காலத்திலேயே காலாவதியாகிவிட்டன என்பதுதான் பெருங்கொடுமை! இதில் அப்ரஷன், சப்ரஷன், டிப்ரஷன் வகையறா வசனங்கள் வேறு. 

ரிச்சான ஒளிப்பதிவும், கச்சிதமான படத்தொகுப்பும், தாறுமாறான பின்னணி இசையும்தான் படத்தைக் கொஞ்சம் காப்ப்பாற்றுகின்றன. சல்மான்கான் நடமாடியிருக்கும் இந்த `ரேஸ் 3', அவர் ரசிகர்களுக்குப் பிடித்துப்போக வாய்ப்புண்டு. ஆனால் `ரேஸ்' ரசிகர்களை இந்தப் படம் நிச்சயம் ஜூஸ் பிழியும்!

‘சம்மோஹனம்’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.