Published:Updated:

``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்!" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15

``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்!" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15
``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்!" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15

'அப்போ இப்போ' தொடருக்காக, நடிகை டிஸ்கோ சாந்தி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``சின்ன வயசுல நான் நல்லா படிப்பேன். டாக்டர் ஆகணும்ங்கிறதுதான் என் ஆசையா இருந்துச்சு. ஆனா, காலம் என்னை சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருச்சு!" என்கிறார், நடிகை டிஸ்கோ சாந்தி. 80, 90-களில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர். 

``என் அப்பா தமிழ் சினிமாவுல பெரிய நடிகர். அவர் அதிகமா படிக்காத காரணத்தால சம்பாதிச்ச பணத்தையெல்லாம் சுத்தி இருந்தவங்க ஏமாத்தி எடுத்துக்கிட்டாங்க. அதனால, எங்க குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படவேண்டிய சூழல் வந்துச்சு. குடும்ப கஷ்டத்தைப் போக்கத்தான் சினிமாவுல நடிக்க வந்தேன். 

எங்க வீட்டுல குழந்தைகளுக்குப் பஞ்சம் இல்லை. எனக்குக் கூடப் பிறந்தவங்க மொத்தம் பத்து பேர். நான் மூணாவது குழந்தை. ஸ்கூல் படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டு நடிக்க வந்துட்டேன். மலையாளத்துல நான் நடிச்ச முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடி ஆனேன். அமெரிக்காவுல 40 நாள் ஷூட்டிங் நடந்தது. ஆனா, இந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆயிடுச்சு. அப்போ, தமிழ் சினிமாவுல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடக் கூப்பிட்டாங்க. எனக்கும் டான்ஸுக்கும் ரொம்ப தூரம். பரதநாட்டிய டீச்சர் வீட்டுக்கு வந்தாலே பாத்ரூம் பக்கமா ஒளிஞ்சுக்குவேன். ஆனா, என் தங்கச்சி, அக்கா நல்லா பரதம் கத்துக்கிட்டாங்க. கொஞ்சம் குண்டா இருந்ததுனால, ஆடுனா மூச்சு வாங்கும். அதுக்காகவே, டான்ஸ் கத்துக்கலை. 

ஆனா, சினிமாவுல டான்ஸ் ஆடக் கூப்பிட்டப்போ, வேற வழியில்லாம போனேன். ஸ்பாட்ல எனக்கு டான்ஸ் ஆடவே தெரியலை. மாஸ்டர் என்னைத் திட்டாம, பக்கத்துல இருந்த ஒருத்தரைத் திட்டுறமாதிரி, என்னைத் திட்டிக்கிட்டு இருந்தார். 'ஊமை விழிகள்' படத்துல வர்ற 'ராத்திரி நேரத்துப் பூஜையில்...' பாட்டு செம ஹிட் ஆச்சு. அதனால தொடர்ந்து இந்தமாதிரி பாட்டுக்கு டான்ஸ் ஆடக் கூப்பிட்டாங்க. பணம் கிடைச்சது. வீட்டுல சாப்பாடு, பசங்க படிப்புக்குப் பிரச்னை இல்லாம இருந்தது. அதனால, தொடர்ந்து ஆடுனேன்.  

என் முதல் வருட சினிமா வாழ்க்கையில எனக்கு டான்ஸ் வரலை. பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிக்அப் ஆச்சு. குண்டா இருந்த உடம்பைக் குறைச்சேன். பத்து நிமிடம் கேப் கிடைச்சாலும், டான்ஸ் மூவ்மென்ட்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். எந்த மாஸ்டர்கிட்டேயும் திட்டு வாங்கக்கூடாதுனு காலையில 4 மணிக்கெல்லாம் எந்திரிச்சு டான்ஸ் கிளாஸுக்குப் போனேன்.  

தெலுங்குல என் முதல்படம் செம ஹிட். என் டான்ஸைப் பார்க்கவே நிறைய ஆடியன்ஸ் படத்துக்கு வர ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்னு எல்லா மொழிப் படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். என் ஒரிஜினல் பெயர் சாந்தகுமாரி. `டிஸ்கோ சாந்தி'னு பெயர் வெச்சது பத்திரிகை நண்பர்கள்தான். சினிமாவுல என்னோட வளர்ச்சிக்கு அவங்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கு. சினிமாவுல நடிக்க வந்ததுக்குப் பிறகு என் குடும்பத்துல இருக்கிறவங்களைப் படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். வீடு கட்டுனேன், பிளாட், கார் வாங்குனேன். அப்போதான், எனக்குக் காதல் மலர்ந்தது. 

தெலுங்கு சினிமாவுக்காக டான்ஸ் பண்ண ஹைதராபாத் போயிருந்தேன். அங்கேதான் என் கணவர் ஶ்ரீஹரியை சந்திச்சேன். அவர், அந்தப் படத்துல துணை வில்லன் கேரக்டர்ல நடிச்சுக்கிட்டு இருந்தார். பார்க்க அழகா இருந்தார். அவர்கூட எனக்கு டான்ஸ் மூவ்மென்ட் இருந்தது. அப்போ என் நகம் அவர் முதுகைக் கீறிடுச்சு. உடனே, நான் பதறிப் போய் 'ஸாரி' சொன்னேன். அவர், 'பரவாயில்லை'னு சொன்னார். இதுதான் எங்களுக்குள்ள நடந்த முதல் உரையாடல்.  

பிறகு, வேறொரு காரணத்துக்காக எனக்கும் அந்தப் படத்தோட இயக்குநருக்கும் சண்டை. பேக் பண்ணிட்டு நான் கெளம்பிட்டேன். இதைப் பார்த்து, ஶ்ரீ எனக்கு போன் பண்ணார். 'நீங்க எப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவீங்க'னு கேட்டார். அவரோட இம்சை தாங்காம பலமுறை அவரைத் திட்டியிருக்கேன். கொஞ்சமும் அடங்காம, எங்கெல்லாம் எனக்கு ஷூட்டிங் இருக்கோ, அங்கெல்லாம் வந்துடுவார். வீட்டுக்கு அடிக்கடி போன் பண்ணிக்கிட்டே இருப்பார். எங்க அம்மாதான் எடுத்துப் பேசி, விசாரிச்சுட்டு கட் பண்ணி விடுவாங்க. 

ராஜமுந்திரில '420' படத்துக்காக ஷூட்டிங் போயிருந்தேன். அங்கேயும் வந்துட்டார். மதிய நேரம். திடீர்னு எல்லோரும் பரபரப்பா எங்கேயோ ஓடிக்கிட்டு இருந்தாங்க. என்னனு விசாரிச்சா, 'நம்ம பிரதமர் ராஜூவ் காந்தியை கொன்னுட்டாங்களாம்.. ஷூட்டிங் கேன்சல்'னு சொன்னாங்க. எங்க எல்லோரையும் ஹைதராபாத்ல இருக்கிற ஒரு ஹோட்டல்ல தங்க வெச்சாங்க. ஹரி மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த சிலரும் அந்த ஹோட்டல்ல தங்குனாங்க.

அடுத்த மூணுநாள் கழிச்சு டிரெயின் ஏறி, சென்னைக்கு வந்தோம். டிரெயின் கெளம்புற நேரத்துல ஶ்ரீஹரி ஏறி, என் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டார். 'உன்னைக் காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்'னு சொன்னார். எனக்கும் அவரைப் பிடிக்கும். எங்க அம்மாகிட்ட வந்து பேசுங்கனு சொல்லிட்டேன். நான் சென்னையில இருக்கிற என் வீட்டுக்குள்ள நுழையும்போது, எனக்கு முன்னாடியே இவர் என் வீட்டுல இருந்தார். அம்மாகிட்ட ஏற்கெனவே இவர்கிட்ட சொல்லியிருந்ததுனால, அம்மாவுக்கும் இவரைப் பிடிச்சிருந்தது. ஆனா, உடனடியா கல்யாணம் பண்ணிவைக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. எங்க குடும்பத்தோட பொருளாதார நிலையைப் புரிஞ்சுக்கிட்டதுனால, அவரும் சரினு சொல்லிட்டார். 

எங்க அக்காவோட குழந்தைக்கு மொட்டை அடிக்க சென்னை பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோட போனோம். அங்கே இவரும் வந்திருந்தார். கோவில் கருவறைக்குள்ள நின்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, டக்குனு என் கழுத்துல தாலி கட்டிட்டார். என்னால அதை மறக்கவே முடியாது. என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் அங்கே இருந்தாங்க. சாமிகிட்ட நான், எனக்கு நல்ல கணவர் கிடைச்சா, தாலியை உண்டியல்ல போடுறதா வேண்டியிருந்தேன். அதனால, அவர் கட்டுன தாலியை உண்டியல்ல காணிக்கையா போட்டுட்டேன். வெளியே போய் கருகமணி ஒன்னு வாங்கிட்டு வரச்சொல்லி, கழுத்துல போட்டுக்கிட்டேன்.

எனக்குக் கல்யாணம் முடிஞ்ச விஷயத்தை மீடியாகிட்ட, சினிமாவுல யாருகிட்டேயும் சொல்லலை. பிறகு என் குடும்பத்துல இருக்கிற எல்லோரும் நல்லா செட்டில் ஆனதுக்குப் பிறகு, ஏழு வருடம் கழிச்சு எல்லோருக்கும் அழைப்பு கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவுல நடிக்கிறதை நிறுத்திக்கிட்டேன். 

என் கணவர் எந்தக் குறையும் இல்லாம என்னையும், பசங்களையும் பார்த்துக்கிட்டார். ரொம்ப அன்பானவர். உடல்நிலை சரியில்லாம, சில வருடங்களுக்கு முன்னாடி இறந்துட்டார். பையனும், பொண்ணும் காலேஜ் படிக்கிறாங்க. நான் வீட்டுலதான் இருக்கேன். அவர் இறப்புல இருந்து என்னால மீண்டுவர முடியலை. கொஞ்சநாள் உடம்புக்கு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அப்போ என் தங்கச்சி லலிதா குமாரி, அவளோட கணவர் பிரகாஷ் ராஜ் ரெண்டுபேரும் வந்து பார்த்துட்டுப் போனாங்க.

எனக்கே தெரியாம, என் உடல்நிலை சரியில்லாம இருந்தப்போ பிரகாஷ்ராஜ் உதவி செஞ்சிருக்கார். மூணு வருடமா எனக்கு வேண்டிய உதவிகளை என் தம்பிகள் அருண்மொழி வர்மனும், பிரசன்னாவும் செஞ்சாங்க. இப்போ என் பொருளாதார சூழல் கஷ்டமான நிலையிலதான் இருக்கு. அதனால, மறுபடியும் சினிமாவுல நடிக்கலாம்னு தோணுது. ஆனா, நல்ல கேரக்டர் வந்தா மட்டும்தான் நடிப்பேன். இல்லைனா, என் பசங்க என்னைத் திட்டுவாங்க. என் வாழ்க்கையை அவங்களுக்காக வாழ்த்துக்கிட்டு இருக்கேன்!" என்று முடிக்கிறார், டிஸ்கோ சாந்தி.
 

அடுத்த கட்டுரைக்கு