Published:Updated:

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்
பிரீமியம் ஸ்டோரி
“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா

Published:Updated:
“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்
பிரீமியம் ஸ்டோரி
“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்
“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

ந்த வருட சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, ஜனவரியில் எட்டு நாட்களாக ஆறு திரையரங்குகள்; ஐந்து காட்சிகள்; 180 படங்கள் என்று காசினோ திரையரங்கை மையமாகக்கொண்டு நடந்து முடிந்துள்ளது. விழா என்று வருகையில், இத்தனைப் படங்கள் திரையிடப்படுவது இயற்கைதான். ஆனால், சினிமாவே உணவு என்று வாழ்பவரால்கூட, ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து படங்கள் என்றாலும் உச்சபட்சமாக நாற்பது படங்களைத்தான் பார்க்க இயலும். அதிலும், குறிப்பாக இரு படங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியையும் இரண்டு திரையரங்கு களுக்கு இடையிலிருக்கும் தூரத்தையும் சென்னையின் போக்குவரத்து நெரிசலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு தியேட்டரைவிட்டு இன்னொரு தியேட்டருக்குச் சென்று இரண்டையும் முழுதாகப் பார்ப்பது என்பது ஹெலிகாப்டர் இருந்தால் மட்டுமே சாத்தியம். இருந்தாலும், விழாவின் சுவாரஸ்யமே 180 திரைப்படங்களில்  எந்த 40 படங்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. திரையிடப் படுகிறவற்றில் எந்த சினிமாவைத்

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்பது  கிட்டத்தட்ட, வாழ்க்கை போலவே பெரிய சூதாட்டம்தான்.

பொதுவாகவே, சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் படங்களின் தரம் இறங்குமுகத்தில் இருக்கிறது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. இருப்பதற்குள்தானே படங்களைத் தேர்ந்
தெடுத்தாக வேண்டும் என்கிற நிர்வாகத் தரப்பின் நெருக்கடியையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், இந்த ஆண்டு படங்களின் தேர்வு கொஞ்சம் சுமார்தான். ஆனால், எப்பேர்ப்பட்ட விழாவிலும் ஏழெட்டுப் படங்களே சிறந்தவையாக இருக்கும் என்பதை நிறைய வருடங்களாக, உலகத் திரைப்படங்களுடன் காதலில் இருக்கிற எவரும் தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள்.

Ventoux Dir.: Nicole van Kilsdonk |Netherlands |2015 |104’-WC

30 வருடங்களுக்குமுன், படிப்பு முடித்த மாணவர்களாக மலை உச்சிக்குச் சென்ற அனுபவத்தை மீட்டெடுக்க நான்கு நண்பர்கள் ஒன்றுசேர்ந்து திரும்ப மேற்கொள்ளும் சைக்கிள் பயணம்தான் கதை. நால்வர் அப்போது ஐவராக இருந்தனர். அவர்களுடன் லாரா என்கிற அழகான சிநேகிதி ஒருத்தி இருந்தாள். ஐவரில், கவிஞனாக இருந்த பீட்டருக்கு அவள் காதலியாக இருந்தாள். எனினும், ஐவராலுமே அவள் விரும்பப்பட்டாள். மலை உச்சியை அடைந்ததும் பீட்டர் கவிதை வாசித்தான். பிறகு ஐவருமாகச் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். திரும்பி சரிவில் வேகமாக இறங்கும்போது சாலையில் இறந்து கிடந்தான் பீட்டர்.  இப்போது ஒன்று சேர்ந்திருக்கும் நால்வரில் இருவருக்கு இடையிலான இரவுப் பேச்சில், பீட்டரின் காதலியாக இருந்த லாரா, அந்தப் பயணத்தின்போது ஒருவனுடன் உடலுறவு கொண்டது இன்னொருவன் மூலம் வெளிப்படுகிறது. எவருக்குமே தெரியாது என நினைத்திருந்தது 30 வருடங்கள் கழித்து, மறுநாள் காலை மீதி இருவருக்கும் தெரியவந்துவிடுகிறது. யாருக்கும் தெரியாமல் நிகழ்ந்த அந்தச் சம்பவம்தான் பீட்டர் இறக்கவே காரணமோ... அப்படியென்றால் அப்போது நடந்தது விபத்து இல்லையோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் தோன்றுகிறது. இது நால்வருக்குள்ளாகக் கோபதாபப் பொறாமைப் பெருமையுடன் விவாதிக்கப்படுவதும் பழைய நினைவுகள், நிகழ்வுகள் காட்சிகளாக இடையிடையே வந்து செல்வதும், புதிரையும் சுவாரஸ்யத்தையும் கூட்டுகிறது. இறுதியில் வயதேறிப்போனாலும் அழகாகவே இருக்கும் லாரா, வளர்ந்த தன் மகனுடன் வந்து சேர்கிறாள். உண்மையில் என்ன நடந்தது, ஏன், எப்படி நடந்தது, என்பதை லாரா கூறும்போது, இதுவரையிலான நால்வரின் அனுமானங்களும் தலைகீழ் தவறு என்றாகி புதிர் விடுபடுகிறது.

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

Clash |Eshtebak |Dir.: Mohamed Diab |Egypt |2016 |110’

எகிப்து நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெறும் ஒரு வேனுக்குள் நிகழ்த்திக்காட்டி அசத்தியிருக்கும் படம். கலகக்காரர்களைப் பிடிக்கும் போலீஸ் வேன் ஒன்றிலேயே முழுப் படமும் நடக்கிறது. ஒருவர்பின் ஒருவராக வேனுக்குள் அடைக்கப்படும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். எந்தத் தரப்பையும் சாராத சாதாரண மனிதர்கள் முதல், பயங்கரமான மதத் தீவிரவாதி வரை பல்வேறு தரப்புகளைச் சார்ந்தவர்கள். கிட்டத்தட்ட மினி எகிப்தே உள்ளே இருக்கிறது. தற்செயலாக போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்ததினால் கைதாகும் தந்தை, அவர் கைதாவதைப் பார்த்து அவருடனேயே உள்ளேவரும் பள்ளிப் மாணவன், அவர்கள் வேனுக்குள் அடைக்கப்படுவதைப் பார்த்து ஆர்ப்பாட்டம் செய்து உள்ளே வந்துவிடும் நர்ஸாக வேலைப் பார்க்கும் முக்காடு அணியாத அவனது தாய்... என இந்தக் குடும்பமே உள்ளே கிடக்கிறது. மதத் தீவிரவாதி, மதத் தீவிரவாதத்தைத் தீவிரமாக எதிர்க்கும் பத்திரிகையாளர், அவருடைய கேமராமேன், அவரது வாட்ச் கேமரா, மத நம்பிக்கையுள்ள வயதான தந்தை, தீவிர மதவாதத்தை ஆதரிக்கும் அவரின் முக்காடணிந்த சின்னப் பெண்... இதுபோல தனித்தனி அடையாளம்கொண்ட ஏராளமான சாதாரண நபர்கள் வேனுக்குள் அடைபட்டிருக்கிறார்கள். வெளியில் தீவிர மதவாதிகள், தீவிர மதவாத எதிர்ப்புவாதிகள் இரண்டு கும்பல்களுமே வெவ்வேறு இடங்களில் கலவரங்களில்  ஈடுபட்டிருக்கும் இரவில் இந்த வேன் செல்கிறது.  அந்த வேன்தான் எகிப்து என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்கு மதம், தீவிரவாதம், அதற்கு எதிரான ஆதரவு என இவர்கள் அடிக்கும் லூட்டியில் சிரித்துச் சிரித்து நம் வயிறு புண்ணாகிவிடும். அந்த வேன் செல்லும்போது தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் எதிராளிகள் என்று எதிரெதிர் தரப்புகளிடம் மாட்டிக்கொள்வது படத்தை வேறு நிலைக்கு எடுத்துச்செல்கிறது.

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

21 Nights With Pattie |21 Nuits Avec Pattie Dir.: Arnaud Larrieu, Jean-Marie Larrieu |France |2015 |115’ -TTF

எதைக் கதைக்களமாக எடுத்துக் கொண்டாலும் முழு நிர்வாணத்தை அசால்ட்டாகக் காட்டும் பிரெஞ்சு சினிமாவில், செக்ஸையே மைய விஷயமாக எடுத்துக்கொண்ட ஒரு படத்தில் முழுநிர்வாணக் காட்சி ஒன்றுகூட இல்லை என்றால் நம்ப முடிகிறதா? திரைப்பட விழாக்கள்மீது சினிமாவே பார்க்காதவருக்குக்கூட இருக்கும் அதீத கவர்ச்சியே, அவை சென்சாரே செய்யப்படாதப் படங்கள் என்பதுதான். இந்தப் படத்தில் இருக்கிற செக்ஸ், பார்வைக்கானது இல்லை; செவிக்கானது என்பதே இதன் தனிச் சிறப்பு. தனது தாய் தனியே வாழ்ந்த மலையகம் சார்ந்த கிராமம் ஒன்றுக்கு அவளின் இறுதிச்சடங்குக்காக வருகிறாள் நடுவயதுப் பெண் ஒருத்தி. ஆனால், தாயின் பிணம் காணாமல் போய்விடுகிறது. அவளுடைய தாயின் சிநேகிதியான வயது முதிர்ந்த ஒரு பெண்மணி, தனது செக்ஸ் அனுபவங்களை அப்பட்டமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தாயின் ஒரு காலத்துக் காதலனான பிரபல எழுத்தாளக் கிழவர் வேறு, அங்கே தேடிக்கொண்டு வந்திருக்கிறார். இளம் பையன் தன்னிடம் ஈர்க்கப்பட்டிருப்பதாக எண்ணி இவளே ஏமாற நேர்கிறது. துப்பறியும் கதையின் சுவாரஸ்யத்துடன், படம் முடிவதற்குள் அந்தக் கிராமத்தின் அத்தனைப் பாத்திரங்களுடனும் நம்மை வாழவைத்துவிடுகிறார் இயக்குநர்.

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

The Half |Yarim |Dir.: Cagil Nurhak Aydogdu |Turkey |2016 |98’-WC

ஏழைப் பெண்ணை மோழைக்குக் கட்டி வைத்துவிடுகிற கதை என்பது சினிமாவுக்குப் புதிதா என்ன? ஆனால், அதைக் காவியமாக்கி இருக்கிறது இந்தப் படம். இருவருக்கு இடையிலுமான அதீத இடைவெளியையும் மெள்ள மெள்ள உண்டாகும் நெருக்கத்தையும் இதைவிட இயல்பாக வேறு எப்படியும் காட்டியிருக்க முடியுமா என்கிற பிரமிப்பை உண்டாக்குகிற படம். முட்டாளாக நடித்திருப்பவரின் உடல்மொழி, நம்ப முடியாத அளவுக்குப் பிரமாதம். பெண்ணாக வருபவளோ தேவதை போல் இருக்கிற சிறுமி. நகைச்சுவைத் ததும்பும் யதார்த்தமான காட்சிகள், வசனங்கள் என கவிதையாகப் பின்னப்பட்டிருப்பது அற்புதம். முதல் தொடுகை, முதல் நெருக்கம் என்று எதிலுமே கொஞ்சம்கூட கிளர்ச்சிக் காட்சிகள் இன்றி படத்தைக் கொண்டுசென்று பரந்த இயற்கைவெளியில் இறுதிக்காட்சியை வைத்து நகைச்சுவையுடன் முடித்திருப்பது அபாரம்.

Load
|La Carga |Dir.: Alan Jonsson Gavica |Mexico |2016 |94’-WC


வலியோர் சிலர் எளியோர் தமை வதைத்துக் கொண்டிருப்பதே மனித நாகரிகத்தின் வரலாறு. பெரும்பாலும் மதமும் மதக் குருமார்களும் அதிகாரவர்க்கத்துக்கு நெருக்கமாக இருக்கிற பரிச்சயப்பட்ட வரலாற்றில், வித்தியாசமான பக்கமாக அறத்துக்காக உயிரையும் கொடுக்கும் ஃபாதரை இதில் பார்க்கிறோம். மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளை விலங்குகளைவிடக் கீழாய் நடத்தி, படைவீரர்களை வைத்துக்கொண்டு, கொன்று தீர்த்த ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராய் சாட்சி சொல்ல முன்வருகிறாள் அவளது மகள். தந்தையுடன் போகச் சம்மதித்துத் தந்திரமாய் வீட்டுக் காவலைவிட்டுத் தப்பி, சர்ச்சில் சரண் அடைகிறாள் சொந்த மகள். அவளைப் பாதுகாப்பாக, சுமந்துகொண்டுசென்று, தொலைதூரத்தில் இருக்கும் அரசவையில் சேர்த்தாக வேண்டிய பொறுப்பு, ஃபாதரால் பழங்குடித் தலைவனாக இருக்கும் இளைஞனுக்குக் கொடுக்கப்படுகிறது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மீதான வெறுப்புடனேயே அவன் அவளைப் பார்க்கிறான். துரத்தப்படும் படைவீரர்களிடம் இருந்து அவளைப் பாதுகாப்பாய் அரசவைக்குக் கொண்டு சேர்ப்பதற்கு இடையில் நிகழும் சாகச சம்பவங்களே படம். இவர்களை விடாமல் துரத்தும் படைவீரர் தலைவனுக்கு, வழக்கம்போல இந்தப் பெண்மீது காதல். ஆனால், வித்தியாசமான விஷயம், திக்குத்தெரியாத குதிரைப்படை வீரர்களுக்கு, இவர்கள் செல்லும் பாதையை, கால் தடம் நிலத்தின் சூடு போன்ற தடயங்களை வைத்துப் போட்டுக்கொடுப்பவன் இவனது உடன்பிறந்த சகோதரன் என்பதுதான். குதிரையில் தொடரும் வீரர்களுக்கு முன்னால் தலைச்சுமையாய் லோடு அடிப்பதைப்போல இந்த மேட்டுக்குடிப் பெண்ணைப் பழங்குடி இனத் தலைவன் சுமந்துகொண்டு ஓடுவதே படத்தின் முக்கியமான அம்சம். கதை நாயகனின் அசாதாரண உடல்வாகு எந்தச் சாகசத்தையும் நம்பவைக்கும்படியாக, பார்வையாளனைக் கட்டிப் போட்டுவிடுகிறது. 16-ம் நூற்றாண்டுப் பின்னணியில் விறுவிறுப்பாகச் செல்லும் படம்.

Loop |Hurok |Dir.: Isti Madarasz |Hungary |2016 |95’- WC

மருந்து மாஃபியாவை ஏமாற்றிவிட்டு, சரக்குடன் தப்பித்து விடுபட நினைக்கும் கடத்தல் தம்பதி. கணவன், கேங் தலைவனால் கொல்லப்படுவது வீடியோவில் பதிவாகியிருப்பதை மனைவி பார்த்துவிட்டு எச்சரிக்கிறாள். அவனின் கண் எதிரிலேயே வேகமாக வரும் வில்லனின் வண்டியில் சிக்கி அவள் இறக்கிறாள். இவ்வளவுதான் கதை. இடையில் நடக்கும் சம்பவங்களில் சில, கால இடைவெளியில், தொடர்ச்சியில் மாறினால் வேறு சம்பவக்கோவையுடன் இருவருமே தப்பிக்க வழி உண்டு. அது எப்படி நிகழ்கிறது என்பதைத் திரும்பத் திரும்ப லூப் போல நிகழ்த்திக்காட்டும் அசாதாரண த்ரில்லர்.

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

The Cut |The Cut |Dir.: Fatih Akin Germany|2014|138’-WC

1915-ல் நிகழ்ந்த, சிறுபான்மை அர்மேனிய இன அழிப்பு பற்றிய காவியம். ஒரு மனிதனின் சில வருட வாழ்க்கையில் இவ்வளவு சம்பவங்களா என மூச்சுமுட்ட வைக்கும் படம். இறப்பின் விளிம்புக்குப் போய், குரல் இழந்து தப்பிப்பிழைத்தவன், தன் குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இரண்டு மகள்கள் தப்பி உயிருடன் இருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்து பல நிலங்களைக் கடந்து, தன் மகளைக் கண்டடைகிற கதை.

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

Son Of Saul |Saul Fia |Dir.: Laszlo Nemes |Hungary |2015 |107’- WC

கொடுமையை அப்பட்டமாக இல்லாமல், பூடகமாகக் காட்டும்போது கொடூரம் பலமடங்காகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இந்தப் படம். நாஜி ஆக்கிரமிப்பின் கேஸ் சேம்பர். ரயில்களில் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்படுவ தற்காக யூதர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். சக யூதர்களைக் கொல்லும் இடத்தைச் சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடுத்தப் பட்டிருக்கும் யூதர்களும் இன்னும் சில மாதங்களில் கொல்லப்படுவார்கள். எனவே, அவர்கள் ஆயுதக் கிளர்ச்சிக்கு ரகசியமாகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு, இந்த ஆயுதக் கிளர்ச்சியைவிட, இறந்துபோன தன் மகனுக்கான இறுதிச்சடங்கைச் செய்து, அவன் உடலைக் கெளரவமாகப் புதைப்பதுதான் முக்கியமான காரியமாகப்படுகிறது. எனவே, மகனின் உடலைத் தங்குமிடத்தில் பதுக்கிவைத்துக்கொண்டு, சாவதற்காக வரும் யூதர்களிடையே மதச்சடங்கு செய்யும் ராபியைத் தேடித் திரிந்துகொண்டு இருப்பதுதான் கதை.

On the other side
– Croatia |Serbia


செம படம். போரையே காட்டாமல், போர் நடந்து 20 வருடங்கள் கழித்து, கிழித்து எறியப்பட்டிருக்கும் ஒரு குடும்பத்தின், பழைய காயங்களைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில், விடுபடாதப் புதிராகக் காட்டியிருக்கும் படம். 20 வருடங்கள் முன்பாக செர்பிய ராணுவத்தில் இருந்த கணவன், குரேஷியப் படுகொலையில் பங்குபெற்றதால் தண்டிக்கப்பட்டு, அவமானத்தின் சின்னமாக எண்ணி, குடும்பத்தால் முழுவதுமாக மறக்கப்பட்டுவிட்ட கணவனிடம் இருந்து திடீரென போன் வருகிறது வயதான மனைவிக்கு. வேலை இல்லாதிருக்கும் மகளும் கோபக்காரனான மகனும் தந்தை பற்றிய நினைவுகளைத் திரும்ப எண்ணிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை. ஆனால், கணவனோ வெவ்வேறு தினங்களில் பெரும்பாலும் இரவுகளில் மனைவியிடம் தொடர்ந்து பழைய நினைவுகளைக் கிளறும் வண்ணமாக அன்புடன் பேசிக்கொண்டே இருக்கிறான். முதலில் கட்டோடு தவிர்க்கப் பார்த்த மனைவியால், தன்னோடு பெரும் அன்போடு இருந்தவன் அல்ல எனினும், ஒரு நிலைக்குமேல், தன் பிள்ளைகளைப்போல் கணவனைக் கட்டோடு புறக்கணிக்க முடிவது இல்லை. அவளது தனிமையும் வயதும் அவளை மெள்ளக் கரைக்கிறது. காயங்களைப் பேச்சு மெள்ள மெள்ள ஆறவைக்கிறது. நேரில் சந்திக்கவும் அவள் தயாராகிவிடுகிறாள். ஆனால், அப்போது தற்செயலாகத் தெரியவரும் உண்மையில் அவள், முற்றாக உடைந்துவிடுகிறாள். திடுப்பென முடியும் படத்தின், இறுதிக் காட்சியின் ‘மன்னித்துக்கொள்’ என்ற வார்த்தை, பார்வையாளனின் புரிதலுக்கு ஏற்ப பல பரிமாணங்களைக் கொடுக்கக்கூடியது.

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்உலக சினிமா என்பது பார்த்தும் கேட்டும் சப்டைட்டிலைப் படித்தும் அனுபவிக்கவேண்டியது. வெறுமனே படித்து அனுபவிக்கக்கூடியது அல்ல. ஆனால், ஒரு பத்திரிகையில் எழுதப்படும் கட்டுரையால், அதிகபட்சமாகச் செய்ய முடிகிற காரியமே படத்தைத் தேடிப்பார்க்க வைப்பதாகத்தான் இருக்கக்கூடும்.

எந்த விழாவாக இருந்தாலும் அதன் அடிப்படையே கொண்டாட்டம்தான். நாள் முழுக்க நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் இருட்டில் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் திரையில் வண்ணமயமாக அசையும் நிழலுருக்களுடன் உறவாடிக்கொண்டிருப்பது ஒரு பிரத்யேக அனுபவம்தான். ஒருமுறை இந்தப் அனுபவத்தை, டிராகுலா போல கடிபட்டு அடைந்துவிட்டால், பிறகு இந்தப் போதையிலிருந்து ஜென்மத்துக்கும் விடுதலை இல்லை. ஒவ்வொரு முறையும், இந்த முறை எல்லாப் படமும் சுமார் என்று புலம்பியபடியே, அடுத்த வருட சர்வேதசத் திரைப்பட விழாவுக்காக, உள்ளூர ஏங்கிக் கொண்டிருக்கும் மனம்.